எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 12 செப்டம்பர், 2016

பிறரை மதிப்பிடுவது எப்படி???

அந்த ஊரின் எல்லைப் பகுதியில், பிரம்மாண்டமான தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட நுழைவு வாசல் இருந்தது. ஊருக்குள் யார் வந்தாலும் போனாலும், எல்லையில் உள்ள அந்த வாசலை கடந்து தான் செல்ல முடியும். அந்த வாசலின் முன்பாக எப்போதும் ஒரு பெரியவர் அமர்ந்திருப்பார்.

ஒருநாள் குதிரை வண்டியில் இளைஞன் ஒருவன் வந்தான். எல்லை வாசலில் இருக்கும் பெரியவரைப் பார்த்து, "ஐயா! இந்த ஊரில் உள்ள மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்?" எனக் கேட்டான். அந்த பெரியவர், "தம்பி! முதலில் நீ இதற்கு முன்பாக வசித்த ஊரைப் பற்றி எனக்கு சொல்" என்றார்.

அவன், "நான் இதற்கு முன்பு வசித்த ஊர் மிகவும் மோசமானது. அங்குள்ள மக்கள் அனைவரும் மோசமானவர்கள். நாகரீகமற்றவர்கள். பிறரிடம் சிறிதளவு கூட அன்பு காட்டமாட்டார்கள். அவர்களோடு வாழப் பிடிக்காமலே நான் இந்த ஊருக்கு வந்துள்ளேன்" என்றான்.

"நீ இதற்கு முன்னால் இருந்த ஊரை விட இது மிகவும் மோசமான ஊர். நீ வந்த வழியே செல்வது தான் நல்லது" என்றார் பெரியவர். அதைக் கேட்ட அவனும் திரும்பிச் சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்து, மாட்டு வண்டியில் இளைஞன் ஒருவன் வந்தான். அவனும் எல்லை வாசலில் இருக்கும் பெரியவரைப் பார்த்து, "ஐயா! இந்த ஊரில் உள்ள மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்?" எனக் கேட்டான். மீண்டும் அந்த பெரியவர், "தம்பி! முதலில் நீ இதற்கு முன்பாக வசித்த ஊரைப் பற்றி எனக்கு சொல்" என்றார்.

"ஐயா! நான் இதற்கு முன்னால் வசித்த ஊர் மிகவும் அருமையான ஊர். அங்கு வசிக்கும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள். உதவி எனக் கேட்டு வருபவர்களுக்கு கொடுத்து உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்கள். ஆனால், இப்போது அங்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், நான் வேலை தேடி இங்கு வந்திருக்கிறேன்" என்றான்.

பெரியவர், "நீ இதற்கு முன்னால் இருந்த ஊரை விட இது நல்ல ஊர். இங்குள்ள மக்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள். உன்னை இந்த ஊரின் சார்பாக நான் வரவேற்கிறேன்" என்றார் பெரியவர். அவனும் மகிழ்ச்சியோடு ஊருக்குள் சென்றான்.

நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் பெரியவரிடம் வந்து, "மாட்டு வண்டியில் வந்தவனிடம் நம் ஊரைப் பற்றி நல்ல முறையில் கூறிவிட்டு, குதிரை வண்டியில் வந்தவனிடம் ஏன் மோசமாக கூறினீர்கள்?" எனக் கேட்டான்.

பெரியவர் சிரித்துக் கொண்டே, "பிறரை எப்படி ஒருவன் மதிப்பிடுகின்றானோ, அப்படித்தான் அவன் குணம் இருக்கும்" என்றார்.

உலகில் வாழும் அனைவரும் நல்லவர்களே. தீயவர்களாக நீங்கள் யாரையேனும்  நினைத்தாலும், அவர்களிடம் உள்ள நல்ல குணங்களை கவனிக்க தவறாதீர்கள்.