Thursday, 1 June 2017

தலைவன்

ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார். அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார். பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப் பரிசுப் பொருளாக வழங்கப்படும்.


இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும் வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித் தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால் நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம் ரகசியமான குரலில் , "தம்பி. நாளை நடக்கும் போட்டியில் நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய். எனவே போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்" என்றான். அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

சமையல்காரன் மீண்டும் சொன்னான். "இதோ பார். நான் பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில் தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால் காலையில் எழுந்திருக்கவே முடியாது. ராஜா சோம்பேறியை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி. இதற்குப் பிரதிபலனாக , நீ பரிசாகப் பெறும் தங்கத்தை எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா?"  என்றான்.


சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன் அவசரமாய்ச் சொன்னான், "ஐயா. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய பதவி. தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே எனக்குத் தகுதி இருந்தால் நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி வேண்டாம். அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என் உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்" என்றான்.

சமையல்காரன் புன்னகைத்தபடி, "கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும். நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்காரனின் உதவியாளன், மற்றுமுள்ள போட்டியாளனிடம் அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான். ஆனால் அங்கே நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக் கொண்டான்.

போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும் கொஞ்சம் அதிக தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான். உதவி சமையல் காரனும், "காரியத்தை சிறப்பாக முடிப்பேன். நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி" என்றான். இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள். பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில் எழுந்து போட்டிக்குக் கிளம்பினான். அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட யாருமே வந்திருக்கவில்லை.


மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து, "புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் என்று சொல்லித் தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார். அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல் தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்துவிட்ட மகிழ்ச்சி. தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

மன்னர் அவனை அணைத்துக் கொண்டார். "மகனே! நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா? உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது. காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப் பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள். தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில் அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட விற்றுவிடுவார்கள். எனவே அவன் அதிகாலையிலேயே விரட்டப்பட்டான். அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ தேர்ந்தெடுக்கப்பட்டாய்" என்றார்.

தன் நலனை மட்டும் பார்க்காமல் பிறர் நலனையும் கருத்தில் கொண்டு வாழ்பவர்கள் சிறந்த தலைவன் ஆகிறார்கள்.


Thursday, 23 February 2017

உண்மை!!!

ஒரு ஊரில் நன்றாக படித்த ஒருவன் இருந்தான். வேலை கிடைக்காமல் திருடனாகி விட்டான். அவன் ஏதேச்சையாக ஒரு துறவியை சந்தித்தான். அவர் அவனை திருத்த பல நல்லுரைகளைச் சொன்னார். துறவியின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட திருடன், "சுவாமி, உங்களுக்காக ஒரேயரு நல்ல விஷயத்தை மட்டும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கிறேன்'' என்றான். 
"அப்படியானால், எந்த நிலையிலும் பொய்யே சொல்லாதே'' என்றார் துறவி. திருடனும் சத்தியம் செய்து கொடுத்தான். 

ஒருநாள் அவன் அரண்மனைக்கு திருடப் போனான். அங்கே இன்னொரு திருடனை சந்தித்தான். "இந்த அரண்மனையில் நான் வேலை பார்த்தவன். அதனால் உன்னை அரசரின் பொக்கிஷ அறைக்கே அழைத்துப்போகிறேன். நீ திருடு. நான் காவல் காக்கிறேன். திருடுவதில் ஆளுக்குப் பாதி'' என்றான். இவனும் 'சரி' என சம்மதித்தான். 

சுவர் ஏறிக்குதித்து கள்ளச்சாவி போட்டு திறந்து உள்ளே போனவனுக்கு ஆச்சர்யம். விலை உயர்ந்த ஆறு வைரங்கள் இருந்தன. 'ஆறு வைரங்களையும் எடுக்கக்கூடாது. தனக்கு இரண்டு, வழிகாட்டிய திருடனுக்கு இரண்டு, ராஜாவுக்கு இரண்டு விட்டுவிடுவோம்' என முடிவு செய்தான். அதன்படியே திருடிவிட்டு வெளியே வந்தான். வாசலில் காத்திருந்த திருடனுக்கு இரண்டை கொடுத்து விட்டு நடந்ததைக் கூறினான். 

அதைக் கேட்ட அவன், "பொய் சொல்லவில்லையே'' என்றான். உடனே முனிவருக்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தை கூறி, தன் முகவரியையும் தந்துவிட்டு இருளில் மறைந்து விட்டான். காவல் காத்த திருடன் உண்மையில் மாறுவேடத்தில் வந்திருந்த ராஜா. திருட்டிலும் நேர்மையாக நடந்து கொண்ட திருடனை வியந்தபடியே உறங்கச் சென்றார். 


மறுநாள் காலையில் அமைச்சரை அழைத்து பொக்கிஷ அறையை சோதிக்க அனுப்பினார். நான்கு வைரங்கள் திருட்டு போயிருந்ததை கவனித்த அமைச்சர், 'மிச்சமிருக்கும் இரண்டு வைரங்களையும் நாம் எடுத்துக் கொண்டு திருடன் மேல் பழி போட்டுவிடுவோம். யாருக்குத் தெரியப்போகுது?' என்று நினைத்து அமைச்சர் இரண்டு வைரங்களை திருடிக்கொண்டார். ராஜாவிடம், "ஆறு வைரங்களும் காணவில்லை'' என்றார். ராஜா அதிர்ச்சியடைந்தார்.

முகவரியை கொடுத்து நேற்றிரவு வந்த திருடனை பிடித்து வர உத்தரவிட்டார். திருடனும் நடந்தவற்றைச் சொல்லி, தன்னிடம் இருந்த இரண்டு வைரங்களை ராஜா எதிரில் வைத்தான். "நீ இன்னொரு திருடனுக்கு கொடுத்த இரண்டு வைரங்கள் இவைதானே'' என்று தன்னிடம் இருந்த இரண்டு வைரங்களை ராஜா காட்டினார். அதை பார்த்து திருடனும், அமைச்சரும் திகைத்து போயினர். இப்போது அமைச்சர் வசமாக மாட்டிக் கொண்டார். அவருடைய பதவியும் போனது. "பொய் சொல்லாத, பலசாலியான உன்னை அமைச்சராக்குகிறேன்'' என்று திருடனுக்கு பதவியும் கொடுத்தார் ராஜா. எத்தனை தப்புக்கு மத்தியிலும் பொய் சொல்வதில்லை என்கிற ஒரு நல்ல பழக்கம் திருடனை, அமைச்சராக்கியது.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் - வள்ளுவர்
பொய் சொல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; அது ஒருவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும்.


Wednesday, 22 February 2017

நம்மைச் சுற்றி...

அனைத்து செல்வ செழிப்பும் நிறைந்த ஒரு நாட்டின் அரசன் மிகவும் திறமையாக ஆட்சி செய்து வந்தான். அதனால் அந்த நாட்டு மக்கள் அனைவரும் கவலைகள் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அரசன் எப்போதும் அரண்மனை நாவிதன் ஒருவனிடம் சவரம் செய்து கொள்வான். அவ்வாறு ஒருநாள் சவரம் செய்து கொண்டிருந்த சமயத்தில், நாவிதனிடம் நாட்டு நிலைமை பற்றியும், மக்களின் நிலை குறித்தும் விசாரித்தான். 

அதற்கு நாவிதன், "மன்னா! உங்களின் ஆட்சியில் நாடு வளமாகவும், செழிப்பாகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் மக்களின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருக்கிறது" என்றான். இதைக் கேட்ட மன்னனுக்கு அதிர்ச்சி. நாவிதனிடம், "நான் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகின்றேனே! இருந்தும் அவர்களுக்கு என்ன குறை?" எனக் கேட்டான்.


"மன்னா! மக்களுக்கான திட்டங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. இருந்தும் என்ன பிரயோஜனம்? யாரிடமும் ஒரு குண்டுமணியளவு தங்கம் கூட இல்லையே!" எனக் கூறினான் நாவிதன். இதைக் கேட்ட மன்னனுக்கு ஒரு குழப்பம் ஏற்ப்பட்டது. நாவிதன் சென்றதும், மன்னன் தன் சேவகனை அழைத்து, "நீ இன்று இரவு நாவிதனுடைய வீட்டிற்கு சென்று நான் கொடுக்கும் தங்க கட்டியை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு வர வேண்டும்" என கட்டளையிட்டான். அவனும் அவ்வாறே செய்தான்.

சில நாட்களுக்கு பிறகு, மன்னனுக்கு சவரம் செய்ய அரண்மனைக்கு அதே நாவிதன் வந்தான். மீண்டும் மன்னன் நாட்டு நிலைமை பற்றியும், மக்களின் நிலை குறித்தும் விசாரித்தான். இப்போது நாவிதன் மகிழ்ச்சியுடன், "அரசே! நாடும் மக்களும் மிகுந்த செழிப்போடு இருக்கின்றனர். மக்கள் அனைவரிடத்திலும் ஒரு கட்டி தங்கம் உள்ளது. எந்தக் குறையும் இல்லை" என்றான். நாவிதன் சென்றதும், மன்னன் மீண்டும் தன் சேவகனை அழைத்து, "இன்று இரவு நீ நாவிதனுடைய வீட்டிற்கு சென்று நான் கொடுக்கும் இரண்டு தங்க கட்டியை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு வர வேண்டும்" என கட்டளையிட்டான். அவனும் அவ்வாறே செய்தான்.


அடுத்த சில நாட்களுக்கு பிறகு, மீண்டும் அரண்மனைக்கு வந்தான் நாவிதான். "இப்போது மக்களின் நிலைமை என்ன?" என்று கேட்டான் அரசன். நாவிதன், "மன்னா! நாட்டின் வளமையும், மக்களின் வளமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்போது அனைவரிடத்திலும் இரண்டு கட்டி தங்கம் இருக்கிறது" என்றான். அவன் சென்றதும், சேவகனை அழைத்தான் அரசன். "இன்று இரவு நீ நாவிதனுடைய வீட்டிற்கு சென்று நான் கொடுத்த அனைத்து தங்க கட்டியையும் யாருக்கும் தெரியாமல் எடுத்து வர வேண்டும்" என கட்டளையிட்டான். சேவகனும் அவ்வாறே எடுத்து வந்து மன்னனிடம் கொடுத்தான்.

மீண்டும் சில நாட்களுக்கு பின்னர், அரண்மனைக்கு வந்த நாவிதனிடம் மக்களின் நிலைமை குறித்து விசாரித்தான் மன்னன். மிகுந்த வெறுப்புடன் நாவிதன், "நாட்டின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. திருடர்களின் தொல்லை அதிகரித்து விட்டது. மக்கள் அனைவரும் வறுமையில் வாடுகின்றனர்" என பதிலளித்தான். இதைக் கேட்ட மன்னன் சிரித்துக் கொண்டே நடந்த உண்மையை கூறினான். நாவிதனுக்கு தன் தவறு புரிந்தது.

நாமும் பல சமயங்களில் இவ்வாறு தான் நடந்து கொள்கிறோம். நாம் கஷ்டப்படும் சூழ்நிலையில், 'எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?' எனப் புலம்புகிறோம். அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைக் கொண்டு 'இந்த உலகம் இப்படித்தான்' என முடிவு செய்து விடுகிறோம்.

Tuesday, 21 February 2017

மறைந்த மனித நேயம்!!!

ஒரு நாட்டின் ராஜா, நிர்வாகம், வீரம், மனிதாபிமானம், புத்திசாலித்தனம், நீதி மற்றும் நேர்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவன். மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்களின் பிரச்சனைகளை அறிந்து களைவது வழக்கமாக கொண்டிருக்கின்றான். ஒருமுறை, நகர்வலத்தின்போது, கால் ஊனமுற்ற ஒருவன் நடக்க முடியாமல், சிரமபட்டு கொண்டு இருப்பதை பார்த்து 'அவனுக்கு உதவலாமே' என்ற எண்ணத்தில், அவனையும் தன்னுடைய குதிரையில் அமர்ந்துகொள்ள அழைக்கின்றான். 

உண்மையில் அவன் ஒரு திருடன், வந்திருப்பது ராஜா என்றறியாமல் குதிரையை அபகரிக்கும் நோக்குடன், ஊனமுற்றவன்போல நடிக்கின்றான். திருடனும் ராஜவின் அழைப்பினை ஏற்று, ராஜாவை கீழே இறங்கி, குதிரை மேல் ஏற உதவுமாறு கேட்கின்றான். ராஜாவும் கீழேஇறங்கி அவனை ஏற்றிவிட்டு, அவர் ஏற எத்தனிக்கையில், திருடன் ராஜவின் குதிரையை ஓட்டிககொன்டு சென்றுவிடுகின்றான். ராஜா திகைத்து நின்றுவிட்டு, பிறகு நடந்தே அரண்மனைக்கு சென்றுவிடுகின்றார்.


பின்நாளில் அதே திருடன் வேறொரு குற்றத்திற்காக காவலர்களிடம் மாட்டி தண்டனைக்காக ராஜாவிடம் அழைத்து வரப்பட்டான். அவனை அடையாளம் கண்ட ராஜா, அவனுக்கு சிறை தண்டனை கொடுத்தார். பிறகு சிறைச்சாலைக்கு சென்று அவனிடம் தான் மாறுவேடத்தில் வந்தபொழுது தன் குதிரையை அவன் ஏமாற்றி திருடிச்சென்றதை சொன்னார். 

உடனே அந்த திருடன், ராஜாவின் கால்களில் விழுந்து 'மன்னியுங்கள்' என்று கதறினான், உடனே ராஜா அவனை மன்னித்துவிட்டதாக கூறி, படாரென அவன் காலில் விழுந்து, "கல்வி, கேள்வி, மனித நேயம் அனைத்திலும் சிறந்தவன் நான். அவைகளனைத்தும் என் நாட்டு மக்களிடையேயும் தழைத்தோங்க வேண்டும் என்று நினைப்பவன். யாரோ ஒருவன் கஷ்டப்படுபவன் போல ஏமாற்றி திருடிவிட்டான் என்று மக்கள் அறிந்தால், அடுத்து உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு, யாரும் உதவ மாட்டார்கள். மனித நேயம் மறைந்துவிடும், எனவே என்னிடம் குதிரையை திருடிய விதத்தினை யாரிடமும் கூறிவிடாதே!" என்று கெஞ்சுகின்றார். 


அந்த திருடன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு, "அடடா! இப்படிப்பட்ட மன்னனின் ஆட்சியிலா இப்படி ஒரு காரியம் செய்தோம்?" என வருந்தினான். அப்படியே கண்ணீர்விட்டு கதறி அழுது, "ராஜா! என்னை மன்னியுங்கள். இனிமேல் இப்படி செய்யமாட்டேன்" என்று சொல்லி, அக்கனம் முதல் திருந்தி நல்லவனாகிவிடுகின்றான்.

ஒருவர் நம்மை ஏமாற்றி விட்டால், இந்த உலகத்தில் உள்ள அனைவருமே ஏமாற்றுக்காரர்கள் என முடிவு செய்து விடுகிறோம். இதன் விளைவு இன்றைய காலக்கட்டத்தில் மனிதனை மனிதனாக மதிப்பதில்லை. ஒருவரை ஒருவர் நம்பும் சூழ்நிலை இல்லை. அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. மனித மனமானது அதிக வருமானம், பணம், பேராசை, பதவி மோகம், கேளிக்கை  என ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடி அலைகிறது. 

Monday, 20 February 2017

தாமதம்!!!

மாலை நேரம். அந்த பூங்காவில் இருந்த மர பெஞ்சில், ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்திருந்தனர். அந்த பெண் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள். ஆண் குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். அந்த பெண் மீண்டும் புத்தகத்தை படிக்கத் தொடங்கினாள்.

அவன் தன் கடிகாரத்தை பார்த்துவிட்டு, கொஞ்ச தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்தான். அந்த சிறுவனுக்கு ஆறு வயது இருக்கும். அவனிடம், "இன்னும் 5 நிமிஷம்" என்று கூறினான். அவனும் சிரித்துக் கொண்டே 'சரி' என்றபடி விளையாட்டை ரசிக்கத் தொடங்கினான். அருகில் அமர்ந்திருந்தவள் இதை கவனித்தாள்.


அவனிடம், "உங்கள் மகனா?" எனக் கேட்டாள். அவனும் "ஆம்" என்றான். அவள் அங்கே விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை காட்டி, "அது என்னுடைய மகள்" என்றாள். அந்த சிறுமியை பார்த்து விட்டு, "உங்கள் மகள் மிக அழகாக இருக்கிறாள்" என்றான் அவன். பிறகு இருவரும் தங்கள் குழந்தைகளைப் பற்றி பேசிக் கொண்டனர்.

சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் அவன் கடிகாரத்தை பார்த்து விட்டு, "வீட்டிற்கு போகலாம்" என்று தன் மகனை அழைத்தான். சிறுவன், "இன்னும் கொஞ்ச நேரம்..." என்றபடி அங்கிருந்து செல்ல மறுத்தான். அவனும், "சரி. விளையாடு. ஆனால் இதுதான் கடைசி முறை" என்றான். சிறுவன் மகிழ்ச்சியோடு விளையாட ஓடினான்.


இதைக் கேட்ட அவள், "உங்களுக்கு பொறுமை மிகவும் அதிகம்" என்றாள் அவனிடம். அவன், "போன வருடம், ஒருநாள் இதே போன்று என் மகனை பூங்காவில் விளையாட அழைத்து வந்திருந்தேன். அவன் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வருவதாக என்னிடம் சொன்னான். ஆனால், நான் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

பாதி தூரம் சென்றிருந்த சமயத்தில், ஒரு லாரி என் வண்டியில் மோதி விபத்து ஏற்பட்டது. எனக்கு காயம் அதிகமில்லை. ஆனால் என் மகனுக்கு தலையில் அடிபட்டது. மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் மருத்துவர்களால் அவனைக் காப்பாற்ற முடிந்தது. ஒருவேளை அன்று அவனை கொஞ்ச நேரம் விளையாட அனுமதித்திருந்தால், அந்த விபத்து ஏற்படாமல் இருந்திருக்கும்" என்றான்.

நீங்கள் விரும்பிய ஒன்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், கவலைப்படாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒன்று காத்திருக்கிறது என்று கருதுங்கள்