எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

விந்தையான வாழ்வு

ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி தனக்கு விருப்பமான சூபி துறவியைச் சந்திக்கச் சென்றார். பல ஆண்டுகளாக அவருடைய செய்திகளால் அவர் வசீகரிக்கப்பட்டிருந்தார்.

சூபி துறவியின் அறைக்குள் நுழைந்தார். அறைக்குள் நுழைந்த அவருக்கோ பெரும் வியப்பு. அந்த அறை முற்றிலும் காலியாக இருந்தது!

சூபி துறவி அறையின் மூலையில் உட்கார்ந்திருந்தார். அங்கே நாற்காலி எதுவும் இல்லை. ஒரு அமெரிக்கரால் நாற்காலிகள் இல்லாத அறையைக் கற்பனையே செய்ய இயலாது.


“இங்கே உட்கார்வதற்கு ஒரு நாற்காலி கூட இல்லையே?” என்றார் அமெரிக்கப் பயணி.

அந்த வயதான துறவி சிரித்துக்கொண்டே, "உன்னுடையது எங்கே?" என்று கேட்டார்.

“நான் இங்கே பயணியாக அல்லவா வந்தேன். நான் எப்படி நாற்காலியை எடுத்துவர முடியும்” என்று கேட்டார்.

சூபி துறவி பதிலளித்தார். “நானும் இங்கே சில நாட்களுக்குப் பயணியாகவே வந்துள்ளேன். அதற்குப் பிறகு போய்விடுவேன். உன்னைப் போலவே” என்றார்.

இந்த உலகம் சிறந்த யாத்திரைத் தலம். அவ்வளவுதான். சொந்தம் கொண்டாடுவதற்குரிய இடம் அல்ல.

வாழ்க்கை ஒரு விந்தை. ஒரு விந்தைக்கு முன்பாகக் கேள்விக்குறியை வைத்துவிட்டால், வாழ்க்கை முழுக்க அதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும். அது கிடைக்கவும் போவதில்லை. அது மிகுந்த விரக்தியையும் கொண்டுவரும்.

அதனால் எதையும் பிரச்சினையாக ஆக்காமல் சந்தோஷமாக இருங்கள். எதனையும் சொந்தம் கொண்டாடாமல் இருப்பது வாழ்க்கையின் மகத்தான அனுபவங்களில் ஒன்று. 

எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருப்பதும், எதன் அங்கமாகவும் உணராமல் இருப்பதும் கடந்துபோகும் பேருணர்வைத் தருவதாகும்.


வியாழன், 29 செப்டம்பர், 2016

வாழ்நாள்...

புத்தர் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் சீடர்கள், அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள். புத்தர் தம் சீடர்களை நோக்கி “ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார்.

எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“எழுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்.

“அறுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்.

“ஐம்பது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்
“தவறு“ என்றார் புத்தர்.

இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே! மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள்.


சில வினாடிகள் அமைதியாக இருந்தார் புத்தர். பிறகு அவர் “அது ஒரு மூச்சு“ என்றார்!

“வெறும் மூச்சுவிடும் நேரம்தானா?” என்று கேட்டார் ஒரு சீடர்.

புத்தர், "அப்படியல்ல.
வாழ்வு ஒரு கணமன்று.!
ஆனால் ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்.!
ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும்.!
கணம் கணமாக வாழவேண்டும்! என்றார்.
சிலர் நேற்றில் வாழ்கிறார்கள். நேற்றைய நினைவில் மூழ்கி இறந்தகாலத்தில் வாழ்கிறார்கள்.

சிலர் அறியப்படாத எதிர்காலத்தில், எதிர்காலக் கனவில், எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்கிறார்கள்.
அவர்கள் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறார்கள்.

எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள்.

கணத்திற்குக் கணம், நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும்.

புதன், 28 செப்டம்பர், 2016

எதிர்பாராத வெற்றி!!!

முற்காலத்தில் இங்கிலாந்தை ஆள்வதற்கு ராஜா யாரும் இல்லை. ஊர்ப் பெரியவர்கள் சேர்ந்துதான் ஒவ்வொரு பிரதேசத்தையும் நிர்வாகம் செய்து வந்தார்கள். தங்களுக்கு ஒரு வலிமையான ராஜா வேண்டும் என்று மக்களுக்குத் தோன்றியது.

வலிமையாக இருந்தால் மட்டும் போதாது. அறிவாளியாகவும், நேர்மையானவராகவும், மக்கள் நலனில் அக்கறை உடையவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்று மக்கள் ஆலோசனை செய்தார்கள்.

இதற்கு இடையே ஒரு நாள், நகர மையத்தில் ஒரு பாறை திடீரெனக் காட்சி அளித்தது. இது வரை யாரும் பார்த்திராத பாறை அது. அந்தப் பாறையில் ஒரு வாள் ஊன்றப்பட்டு இருந்தது. அந்த வியப்பான பாறையைக் காண்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.


''இந்தப் பாறை மிகவும் அதிசயமாக இருக்கிறதே! ஒரு வாள் வேறு இருக்கிறதே! இங்கே எப்படி வந்தது?'' என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். அந்த வாளை எடுப்பதற்காக முயற்சி செய்தார்கள். ஆனால், அது மிகவும் வலுவாகப் பாறையில் ஊன்றப்பட்டு இருந்தது. 'நமக்கான ராஜாவைத் தேர்ந்து எடுப்பதற்காக, கடவுளே இந்தப் பாறையையும் வாளையும் உருவாக்கி இருக்க வேண்டும்’ என்று மக்கள் நினைத்தார்கள். 'பாறையில் ஊன்றப்பட்டு இருக்கும் வாளை இழுத்து எடுப்பவரே அரசர் ஆவதற்குத் தகுதியானவர்’ என்றும் முடிவு செய்தார்கள்.

இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது. ராஜா ஆகும் எண்ணத்துடன் வாளை உருவப் பலரும் முயன்றார்கள். ஆனால், எவ்வளவுதான் முயன்றாலும் வாளை அசைக்கக்கூட முடியவில்லை.
பலசாலிகளான பலரும் முயற்சி செய்தும் பயன் எதுவும் ஏற்படவில்லை. பாறையும் பாறையில் இருக்கும் வாளும் எல்லோருக்கும் சவால்விட்டபடி நகரின் மத்தியில் பல மாதங்களாக இருந்தன.

இந்தச் சமயத்தில் ஆர்தர் எனும் பெயருடைய சிறுவன் ஒருவன் அங்கே வந்தான். ஆர்தரின் அண்ணன் ஒரு படைவீரன். வாளைப் பார்த்தபோது ஆர்தர் மகிழ்ச்சி அடைந்தான். அந்த வாளைப் பாறையில் இருந்து பிடுங்கி எடுத்தால் ராஜா ஆகிவிடலாம் என்பது அவனுக்குத் தெரியாது. அவன் எண்ணம் எல்லாம் வேறு ஒன்றாக இருந்தது.

'அடடா, எவ்வளவு அருமையான வாள்! இதை எடுத்துச் சென்று அண்ணனுக்குப் பரிசாக அளிக்கலாம். போருக்குப் போகும்போது அண்ணனுக்கு இந்த வாள் மிகவும் உபயோகப்படும்’ என்று நினைத்தான்.

ஆர்தர், வாளைப் பிடித்து ஒரு முறைதான் இழுத்தான். மிகச் சுலபமாக அவன் கையோடு அது வந்துவிட்டது.
''ஹா.... ஹா... ஹா... பிரமாதம்!'' திடீரென்று அங்கே வெடிச் சிரிப்பு கேட்டது. மந்திரவாதி மெர்லினுடைய சிரிப்புதான் அது. தன் மந்திர வித்தையால் பாறையையும் வாளையும் அங்கே உருவாக்கியது மெர்லின் தான்.

மந்திரவாதி சொன்னான், ''சிறுவனே! நான்தான் இவற்றை இங்கே ஸ்தாபித்தேன். நீ இப்போது செய்த செயலின் மூலமாக, இந்த நாட்டுக்கு ராஜாவாக ஆகி இருக்கிறாய். நீதான் இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதியானவன். வா! நான் எல்லா வித்தைகளையும் உனக்குக் கற்றுக்கொடுக்கிறேன்'' என்றான்.
ஆர்தர், மெர்லினுடன் சென்றான். 


மெர்லினும் ஆர்தருக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுத்தான்.
திறமை மிகுந்த சிறுவனான ஆர்தர் அனைத்தையும் வெகு விரைவில் கற்றுக்கொண்டான். சீக்கிரமே அவன் இங்கிலாந்தின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் ஆட்சி தர்ம நியாயத்தின்படி இருந்தது. மக்கள் எல்லா நலன்களுடன் வாழ்ந்தார்கள்.

ஆர்தர், எதிரிகளைத் துரத்தி அடித்தான். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தான். மக்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி அவன் வெகு காலம் ஆட்சி செய்தான். இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்களில் மிகச் சிறந்த ராஜா அவன்தான்.

ஒரு செயலை செய்யும் போது எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் ரசித்து செய்யுங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும்.


செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கார்டூன் கதை

மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற அற்புதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர்;  டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காக்களின் ஸ்தாபகர்; வால்ட் டிஸ்னி கம்பெனியின் நிறுவனர் வால்ட் டிஸ்னியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தச் சாதனைகளின் பின் உள்ள கொடுமையான சோதனைகள் பற்றிப் பெரும் பாலானவர்களுக்குத் தெரியாது.


அமெரிக்காவில் சிக்காகோ நகரில் 1901-ம் ஆண்டு பிறந்தார் வால்ட் டிஸ்னி. வறுமையான பின்னணியால் வால்ட் டிஸ்னி, தனது 10 வயதிலேயே பேப்பர் விநியோகிக்கும் கடுமையான வேலையில் ஈடுபட்டார். இதன்மூலம் அவருக்கு சொற்ப வருமானமே கிடைத்தது. இருந்தாலும், தனது வருமானத்தில் ஒருபகுதியை மறைத்துவைத்து சேமித்து, மெக்கின்லி பள்ளியில் படித்துவிட்டு, சிக்காகோ நுண்கலை அகாடமியில் இரவுநேரப் படிப்பில் சேர்ந்தார். பிற்காலத்தில் அவரது சாதனைப் பயணத்துக்கான படைப்பாற்றல் பயிற்சி அங்கே கிடைத்தது.

1918-ல், முதல் உலகப்போரின்போது ராணுவ வீரராகச் சேர்ந்து போரிட விரும்பிய வால்ட் டிஸ்னியால் அதில் சேர முடியவில்லை. எனினும், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராகச் சேர்க்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவரது ஆம்புலன்ஸ் மிகவும் பிரபலமாகியது. காரணம் அதில் வரைந்திருந்த கார்டூன்கள் தான்.


பிறகு அங்கிருந்து திரும்பியவர், பேஸ்மன் ரூபின் ஆர்ட் ஸ்டுடியோவுக்கான வேலைகள் செய்யும் பணி கிடைத்தது. அங்கே வியாபாரம் முடிந்தவுடன் துரத்திவிட்டர்கள்.
அந்த ஸ்டுடியோவில் வேலைபார்த்த ஐவர்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட்டுடன் சேர்ந்து ஐவர்க்ஸ் – டிஸ்னி வரைகலை நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் ஒருசில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை. வீட்டிலேயே செல்லுலாய்டு அனிமேஷன் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிசெய்த அவர், ஹர்மன் என்ற நண்பருடன் இணைந்து சிறிய அனிமேஷன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஈசாப் குட்டிக் கதைகள் பாணியில் “Newman’s Laugh-O-Grams” என்ற அனிமேஷன் தொடரை உருவாக்கினார்.

இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமானவர், 1921-ம் ஆண்டில் Laugh-O-Gram ஸ்டுடியோவைத் தொடங்கினார். பிரபலமான அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் கதையை அனிமேஷன் படமாகத் தயாரித்தார்.


12 நிமிட அனிமேஷன் படத்தைத் தயாரித்து முடிப்பதற்குள் பெரும் நிதிநெருக்கடிகளைச் சந்தித்த அந்த ஸ்டுடியோ நிறுவனம், 1923-ம் ஆண்டில் வால்ட் டிஸ்னியும் அவரது அண்ணன் ராய் டிஸ்னியும் இணைந்து வால்ட் டிஸ்னி கம்பெனியை ஹாலிவுட்டில் தொடங்கினார்கள். இதனை பழைய நண்பர்களுடன் ஒரு வலிமையான அனிமேஷன் பட நிறுவனமாக வளர்க்கத் தொடங்கினார்.

அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் தொடருக்கான பணிகள் 7 வருடங்கள் தொடர்ந்தன. அதில் சலிப்படைந்தவர், தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து Oswald the Lucky Rabbit என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கினார்.


இந்தத் தொடரினால் அதிக லாபம் பெற்ற பட விநியோக நிறுவனமான மின்ட்ஸ், உரிய பங்கினை டிஸ்னிக்குத் தர மறுத்தது. Oswald கதாபாத்திர உரிமை தன்னிடமே இருப்பதாக மிரட்டியது. டிஸ்னி நிறுவன ஊழியர்களை வெளியேறச் செய்து, தானே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில், அவர்களைப் பணிக்கு அமர்த்தி டிஸ்னிக்கு நெருக்கடி கொடுத்தது.

தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து ‘மிக்கி மவுஸ்’ என்ற அட்டகாசமான கதாபாத்திரத்தை 1928-ம் ஆண்டு உருவாக்கினார். முன்னர் திவாலாகிப்போன Laugh-O-Gram ஸ்டுடியோவில், தான் இரவுபகலாக உழைத்தபோது தன்னோடு விளையாடிய ஒரு செல்லமான எலியை மனதில்கொண்டே இந்தக் கதாபாத்திரத்தை வால்ட் டிஸ்னி உருவாக்கினார்.


மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் முதல் அனிமேஷன் படம் முடிவுற்றபோதும் உரிய விநியோகஸ்தர் கிடைக்கவில்லை. ஒருவழியாக, பவர்ஸ் சினபோன் என்ற விநியோக நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டு மிக்கி மவுஸ் படம் வெளியானது. படம் வெற்றிபெற்று, விநியோக நிறுவனம் லாபம் குவித்தது. லாபத்தில் உரிய பங்குத் தொகையை வழங்குமாறு டிஸ்னி நிறுவனம் கேட்டபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்த விநியோக நிறுவனம், வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பர் ஐவர்க்ஸை டிஸ்னி நிறுவனத்திலிருந்து வெளியேறச் செய்தது.

இப்படி அடுத்தடுத்த ஏமாற்றங்களைச் சந்தித்த வால்ட் டிஸ்னிக்கு நரம்புத் தளர்வு ஏற்பட்டது. நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, வெளிநாடுகளுக்குச் சென்றுவந்து தனது மனதைத் தேற்றிக்கொண்டார். புதுத் தெம்புடன் வந்த வால்ட் டிஸ்னி, கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் விநியோக ஒப்பந்தம் செய்துகொண்டார். இதனால் மிக்கி மவுஸ் படங்கள் உலக அளவில் பிரபலமாகின. விருதுகள் தேடிவந்தன. வால்ட் டிஸ்னிக்குப் பல வெற்றிகளைத் தந்தது.


1939ல் உலகப் போர் தொடங்கியதால், நிதி நெருக்கடி ஏற்பட்டது. 1944-ம் ஆண்டில் அமெரிக்க வங்கியில் டிஸ்னி நிறுவனத்தின் கடன் தொகை 40 லட்சம் டாலராக இருந்தது. பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட அனிமேஷன் படங்கள் சில, எதிர்பாராதத் தோல்வியைத் தழுவின. தோல்வி மேல் தோல்விகள். கடன் கொடுத்தவர்கள் துரத்திவந்து நெருக்கடி கொடுத்தார்கள். பின்வாங்குவதற்குப் பதிலாக விரிவாக்கம் பற்றிச் சிந்தித்தார்.


பொதுமக்கள் விடுமுறைகளைக் குதூகலமாகச் செலவிடுவதற்கான டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காவை பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டார். இதற்கு நிதி வழங்க வங்கிகள் மறுத்துவிட்டன. இந்தநிலையில், அப்போது தொலைக்காட்சியில் பிரபலமாகிவந்த டிஸ்னி லேன்ட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி, அதன்மூலமாக பெரும் நிதி திரட்டினார்.
கேளிக்கைப் பூங்காவை முதலில் ஆதரிக்காத மக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக ஈர்க்கப்பட்டு தேடிவரத் தொடங்கினர். கூட்டம் குவிந்தது.


இதுவரை சுமார் 70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அந்தப் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். உலகின் 14 இடங்களில் கிளைகள் விரிந்தன. தோல்விகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதில் வல்லவரான வால்ட் டிஸ்னி 1966-ம் ஆண்டில், அவரது 65-வது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார்.

எனினும், அவர் உருவாக்கிய டிஸ்னி நிறுவனம் ஆலமரமாய் தழைத்தோங்கியபடி இருக்கிறது. அதன் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதே வால்ட் டிஸ்னி விதைத்த நம்பிக்கை விதைகளின் வலிமையைப் பறைசாற்றுகிறது.


தோல்விகளின் வலி மிகுந்த தனது வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமானதாகத் தோற்றமளிப்பது பற்றி வால்ட் டிஸ்னி இப்படிக் குறிப்பிட்டார்.
“நான் தொட்ட காரியமெல்லாம் வெற்றி பெறுவதாகவும், நான் எடுக்கும் முடிவுகள் அபூர் வமாகவே தோற்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நான் எடுத்தத் தவறான முடிவுகளால் பல முறை படுதோல்வி அடைந்திருக்கிறேன். எனினும், நான் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டே இருப்பதால், தவறுகள் வெளியில் தெரியாதபடி அதிலிருந்து வேகமாக மீண்டு வந்திருக்கிறேன். என்னைப்போல நீங்களும் அடுத்தடுத்த ஏராளமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் சராசரி வெற்றி அதிகமாகவே இருக்கும்".


திங்கள், 26 செப்டம்பர், 2016

விளையாடப் பழகலாம்!!!

பழுதாகிப் போன தன் கணவரின் பெரிய வேனை சரி பார்த்து உபயோகிக்க முடிவு செய்தாள் அவரது மனைவி. கணவரும், அவரது தந்தையும் அலுவலகத்திற்கு சென்று விட்டனர்.

தன் கணவருக்கு போன் செய்த மனைவி வேனை தான் உபயோகிக்கப் போவதாக தெரிவித்தாள். இதைக் கேட்ட அவளது கணவர், "வேன் பின் டயரில் காற்று குறைவாக இருந்தது. நீ எதற்கும், கம்பரெஸரை எடுத்து ஹோஸ் பைப்புடன் இணைத்து அதை வேன் டயரில் சரியாக பொருத்தி காற்றை நிரப்பிக் கொள்" என்று கூறியவர் மேலும் "நீ இதற்கு முன்பு கம்பரெஸரை ஹோஸ் பைப்புடன் இணைத்தது இல்லையே! அது சற்று கடினமாயிற்றே! எதற்கும் டாமியை அழைத்து உதவச் சொல்" என்றார்.

நண்பரின் மனைவி அந்த வேனை பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே இன்னொரு போன் வந்தது. இப்போது அவரது மாமா போன் செய்திருந்தார். மருமகள் அந்த வேனை உபயோகிக்கப் போவதாக மகனிடமிருந்து போன் வந்ததால் இப்போது அவரும் கம்பரெஸரை எப்படி ஹோஸ் பைப்புடன் இணைப்பது என்று சொல்லிக் கொடுத்தார். முடிவில், "உனக்கு அது கடினமாக இருந்தால், டாமியை கேட்டு, உடனிருந்து மாட்டிக் கொடுக்கச் சொல்" எனக் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

பிறகு அவள் சென்று ஹோஸையும், கம்பரெஸரையும் மாட்ட முயற்சித்தார். ஆனால் மாட்ட முடியவில்லை. கடைசியில், டாமியை அழைத்து உதவி கேட்பது என முடிவு செய்தாள். வீட்டின் ஓர் அறையில் தன் விளையாட்டு சாமான்களை வைத்து டாமி விளையாடிக் கொண்டிருந்தான்.

ஆம்! டாமி அவரது ஐந்து வயது மகன்

குழந்தைகளிடமிருந்து உங்கள் வேலையின் தன்மையை எப்படி விளையாட்டாக மாற்றுவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

சனி, 24 செப்டம்பர், 2016

உன்னை அறிந்தால்...

இரவு ஒன்பது மணிக்கு டாக்டரிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கியிருந்த போதிலும், அந்த கிளினிக்கிற்கு அவர் மாலை ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டார். ஒரு மூலையின் ஒதுக்குப்புறமான நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல நோயாளிகள் வருவதும், போவதுமாக இருந்த இடத்தில் அவர் அமைதியின் உருவமாக எவ்வித பரபரப்புமின்றி இருந்தார். சற்று உற்று கவனித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அவர் அமைதியாக இல்லை, சோகமாக இருக்கிறார் என்று. 

அவரை கவனித்தவர்கள் அவர் உட்கார்ந்திருக்கும் விதத்தைப் பார்த்து, 'அவருக்கு ஏதோ வியாதி உள்ளது போல, அதனால் தான் வேதனையுடனும், மனச்சோர்வுடனும் இருக்கிறார்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். மெதுமெதுவாக கூட்டம் குறைந்து போனது. கடைசியில் அவர் மட்டும் அமர்ந்திருந்தார். டாக்டரின் அழைப்பு மணி அடித்தது. மெதுவாக எழுந்து, தளர்ந்த நடையுடன் டாக்டரின் அறையை நோக்கி சென்றார்.

டாக்டரும் பகலில் இருந்து பல நோயாளிகளை கவனித்து வந்ததால் மிகுந்த களைப்புடன் இருந்தார். ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், புன்சிரிப்புடன் அவரை வரவேற்று பரிசோதிக்க தொடங்கினார். இடையிடையே பல கேள்விகளை கேட்டார். எல்லா பரிசோதனைகளும் நிறைவடைந்த பிறகு, டாக்டருக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.


வந்தவருக்கு உடலில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. மனச்சோர்வின் காரணமாகவே இப்படி நோயாளி போல் காட்சியளிக்கிறார். இதற்கு மருந்து அவர் மனதை அமைதிபடுத்துவதை தவிர வேறில்லை என்பதை உணர்த்திய பின்பு, மேலும் தொடர்ந்தார்.
"முதலில் நீங்கள் உங்கள் மன இறுக்கத்தை போக்க வேண்டும். அதற்கு பக்கத்தில் உள்ள தியேட்டரில் பட்ஸ்பென்சர் என்னும் புதிய நகைச்சுவை நடிகர் நடித்த திரைப்படத்தை சென்று பாருங்கள். நன்றாக சிரித்தீர்கள் என்றாலே விரைவில் குணமடைந்து விடுவீர்கள்" என்றார்.

அதற்கு வந்தவர், "டாக்டர், அந்த பட்ஸ்பென்சரே நான்தான்" என்றார் பரிதாபமாக.

உன்னை நீ ரசிக்க பழகவில்லை என்றால், வேறு எந்த கலையையும் ரசிக்க முடியாது - நாஸ்ட்ராடாமஸ்

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

தேவை அறிவுரையா? அறிவா?

ஒரு ஊரில் இரக்க குணம் மிகுந்த மனிதன் ஒருவன் வாழ்ந்து வந்தான். உதவி என கேட்காதவர்களுக்கு கூட ஓடிச் சென்று உதவுவான். ஒருநாள் கடைத்தெருவில், பார்வையற்ற ஒருவன் வழி தெரியாமல் தவிப்பதை பார்த்தான். அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று, தன்னுடன் சில நாட்கள் தங்கும்படி வேண்டினான்.

பார்வையற்றவனும் அதற்கு சம்மதித்து, அவனோடு தங்கினான். சில நாட்கள் கழிந்தன. பார்வையற்றவனுக்கு தொடர்ந்து அங்கே தங்குவதற்கு சங்கடமாய் இருந்தது. தன்னை அழைத்து வந்தவனிடம் தான் கிளம்புவதாக கூறினான். அவன், "இன்னும் சில நாட்கள் தங்கலாமே!" என்றான். பார்வையற்றவன், "இல்லை ஐயா! நான் இங்கு தங்கினால் உங்களுக்கும் சிரமம். எனக்கும் சோம்பல் வந்திடும். நான் சென்று என் பிழைப்பை பார்க்கிறேன்" என்றான்.

அவனது பேச்சு இரக்க குணம் கொண்டவனை மெய்சிலிர்க்க வைத்தது. அவன், "சரி, இப்போது இருட்டி விட்டது. அதனால் நாளை காலை விடிந்ததும் புறப்பட்டுச் செல்லுங்கள்" என்றான். அதைக் கேட்ட பார்வையற்றவன், "நான் பார்வையற்றவன். இரவுக்கும் பகலுக்கும் எனக்கு என்ன வேறுபாடு தெரியப்போகிறது?" எனக் கேட்டான்.

அவனது பேச்சைக் கேட்டு வியந்தவன், "இந்த விளக்கை மட்டுமாவது உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்" என்றான். "கண் பார்வை இல்லாதவனுக்கு இந்த விளக்கால் மட்டும் என்ன நன்மை ஏற்படப் போகிறது?" எனக் கூறி விளக்கை வாங்க மறுத்தான் பார்வையற்றவன்.

அதைக் கேட்ட இரக்க குணம் படைத்தவன், "இந்த விளக்கால் உங்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போகலாம். ஆனால், உங்கள் எதிரே வருபவர்களுக்கு நீங்கள் வருவது தெரியும் அல்லவா?" எனக் கூறி விளக்கை அவனிடம் கொடுத்து அனுப்பினான். அதற்கு மேலும் மறுக்க முடியாமல் விளக்கை எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

அந்த ஊரைக் கடந்து சிறிது தூரம் சென்றிருப்பான். எதிரில் வந்த ஒருவன் பார்வையற்றவன் மீது மோதி கீழே விழுந்தான். "யாரது? கண் தெரியாமல் என் மீது மோதியது?" எனக் கத்தினான் பார்வையற்றவன். "நான் நேராக தான் வந்தேன். நீங்கள் தான் என் மீது மோதிவிட்டீர்கள்" என்றான் மற்றொருவன்.

பார்வையற்றவன், "எனக்குத்தான் கண் தெரியாது. உங்களுக்கும் கூடவா கண் தெரியாது?" என்றான். எதிரே வந்தவன், "நண்பரே! இந்த நள்ளிரவு இருட்டில் எனக்கு மட்டும் எப்படி வெளிச்சம் தெரியும்?" என வினவினான்.

"நீ கூறுவது சரிதான்! ஆனால் என் கையில் உள்ள விளக்கு கூடவா உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை?" எனக் கேட்டான். அவனது கையில் உள்ள விளக்கை பார்த்து விட்டு, "விளக்கு ஒன்றை நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் அது அணைந்து உள்ளதே!" என்றான்.

அது கேட்டு கோபம் தணிந்த பார்வையற்றவன், "தவறு என்னுடையதே! நாம் அனைவரும் அவரவர் சுய அறிவை பயன்படுத்த வேண்டும். இரவல் அறிவுரையால் எந்த பயனும் இல்லை" எனக் கூறி தன் கையிலிருந்த விளக்கே தூக்கி எறிந்துவிட்டு கைத்தடியை ஊன்றியவாறு நடக்கத் துவங்கினான்.

வியாழன், 22 செப்டம்பர், 2016

செய்யும் தொழிலே தெய்வம்


ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.

குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.
குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு, கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!” என்று கொட்டாவி விட்டான்.

அதற்கு வைர வியாபாரி சொன்னான் : “உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி? நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்” என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.

எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.
ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.

பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.
அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.
“உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?” என்று அவர்களிடம் கேட்டார்.

“எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!” பயத்துடன் பதில் சொன்னார்கள்.
“அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?” பெரியவர் கேட்டார்.
“களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்” என்று இருவரும் சொன்னார்கள்.

“உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்” என்று முடித்தார்.

புதன், 21 செப்டம்பர், 2016

நம்மால் முடியும்...

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால்
50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு,
"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு இவர், "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டது" என்றார்.
"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றால் அவர்.
"50 கோடி ரூபாய்" என்றார் இவர்.
"அப்படியா! நான் யார் தெரியுமா?" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் தொழிலதிபர்.
"சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் "ஆமாம். எல்லாம் சரியாகி விடும்" என்றார்.
பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி "இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் வேலைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஒத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியாக ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை நேரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம், "எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?" என்றார்.
அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன், "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்.
இவர், "இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார்.
அந்த பெண்மணி "இல்லை அய்யா. அவர் ஒரு பைத்தியம். சில வருடங்களுக்கு முன், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. 'செக்கு தருகிறேன்' என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார்.
ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை.

நம்மால் எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

இப்படியும் சில மனிதர்கள்...

ஒரு மிகப் பெரிய தொழிலதிபரின் வீடு. அந்த வீட்டின் வாயிற்காவலனாக அவன் வேலை பார்த்து வருகிறான். தொழிலதிபர் வீட்டிற்குள் வரும்போதும், வெளியே போகும்போதும் வணக்கம் கூறிவிட்டு கதவை திறந்து விடுவது அவன் வேலை. ஆனால் ஒருமுறை கூட அவரிடமிருந்து பதிலுக்கு வணக்கம் வந்ததில்லை. ஏன் ஒரு புன்னகை கூட கிடையாது. சம்பளம் தரும்போது கூட எதுவும் பேசமாட்டார். அவனும் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான். அந்த வீட்டில் வேலை செய்யும் பிறரிடம் கூட பேசமாட்டான். 'தான் உண்டு. தன் வேலை உண்டு' என்றிருப்பான்.

ஒருநாள் அவன் வேலையை முடித்து வீட்டிற்கு செல்லும் சமயத்தில் ஒரு பிளாஸ்டிக் பை வாசலுக்கு வெளியே இருந்ததைப் பார்த்தான். அதை எடுத்து பிரித்துப் பார்த்தான். உள்ளே சில காய்கறிகளும், பழங்களும் இருந்தன. யாரெனும் தவற விட்டிருக்கலாம் என்று நினைத்து அவன் வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்தான்.

ஆனால் அதற்கு அடுத்த நாளும் அதே போல் ஒரு பையில் காய்கறிகளும், பழங்களும் இருந்தன. அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அந்த பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்ததை சொன்னான். அவன் மனைவி, "யாரும் வேண்டுமென்றே தினமும் பையை வைக்க மாட்டார்கள். தெரியாமல் தவறவிட்டதாகத்தான் இருக்க வேண்டும்"  எனக் கூறினாள். அவனுக்கும் அது சரியெனப்பட்டது.

மறுநாள் அதேபோல் ஒரு பை இருந்தது. அந்த வீட்டிலிருந்த மற்ற வேலையாட்களிடம் கேட்டான். அதைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மீண்டும் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்தான். அவள், "தினமும் ஒரே இடத்தில் இந்த பை இருக்கிறது என்றால், அது நமக்காக யாரோ உதவி செய்வதற்காகத் தான் வைக்கிறார்கள். எனவே, அதை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறொன்றும் இல்லை" என்றாள்.

அவன் மனைவியின் வார்த்தை சரியெனப்பட்டாலும், முகம் தெரியாத ஒருவரின் உதவியை ஏற்றுக் கொள்ள தயங்கினான். தனக்கு உதவுபவர் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தான். ஆனால் அதை யார் வைக்கிறார்கள், எப்போது வைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

தினமும் அந்த இடத்தில் ஒரு பை இருப்பதும், அதை அவன் வீட்டிற்கு எடுத்துச் செல்வதும் வழக்கமாயிற்று. ஆனால், இப்போது சில நாட்களாக அந்த பை அங்கு இல்லை. தினமும் காய்கறியும், பழமும் இலவசமாக கிடைத்ததால், பணத்தை சேமித்து வந்த அவன் மனைவிக்கு இப்போது பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கணவனிடம், "சம்பளத்தை உயர்த்தி தரும்படி கேளுங்கள்" என வற்புறுத்தினாள்.

அவனும் அந்த தொழிலதிபரின் மனைவியிடம் சம்பளத்தை உயர்த்தி தரும்படி கேட்டான். அவள், "இத்தனை வருடங்கள் உனக்கு இந்த சம்பளம் போதுமானதாகத் தானே இருந்திருக்கிறது. இப்போது ஏன் உயர்த்தி தரச் சொல்லி கேட்கிறாய்?" என்றாள். அவனும் வேறு வழியின்றி, தினமும் வாசலில் இருக்கும் அந்த பையை பற்றிக் கூறினான்.

அவனிடம், "உனக்கு எப்போதிலிருந்து அந்த பை கிடைக்காமல் போனது?" எனக் கேட்டாள். அவன் தேதியை சொன்னான். சிறிது நேரம் யோசித்து விட்டு, திடீரென அழத் தொடங்கினாள் அவள்.

காரணம், அன்று தான் அவளது கணவன் இறப்பதற்கு முன்னால், நோய்வாட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நடந்தது மெல்ல மெல்ல அவனுக்கு புரியத் தொடங்கியது. வேறு எதுவும் பேசாமல் சென்று விட்டான்.

சில நாட்களில், தொழிலை அவரது மகன் கவனிக்க தொடங்கி விட்டான். தந்தையைப் போலவே தான் மகனும். வணக்கம் கூறினால், எதுவும் பதில் வணக்கம் சொல்லவும் மாட்டான்; புன்னகைக்கவும் மாட்டான். மீண்டும் வாசலில் காய்கறிகளும், பழங்களும் கொண்ட பை ஒன்று வைக்கப்படுவது வழக்கமாகி விட்டது.

இப்போது அவனுக்கு அந்த பையை வைப்பது யார் என்பது தெரியும். ஆனால், பாவம்!!! தந்தையைப் போல் மகனுக்கும் பேச முடியாது என்ற செய்தி மட்டும் தெரியாது...

உங்களிடம் மகிழ்ச்சியாக சிரித்து பேசும் அனைவரும் நல்லவர்கள் இல்லை; வெறுப்பையும், கோபத்தையும் பொழியும் அனைவரும் கெட்டவர்கள் இல்லை.

திங்கள், 19 செப்டம்பர், 2016

தற்காலிகமா? நிரந்தரமா?

அவன் ஒரு வைர வியாபாரி. தன்னிடம் உள்ள வைரங்களை விற்று விட்டு, பாலைவனத்தின் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தான். ஒட்டகத்தின் மேல் அமர்ந்து, பணப்பையை ஒட்டகத்தின் வயிற்றுப் பகுதியில் கட்டியிருந்தான்.

பாலைவனத்தில் ஒட்டக சவாரி செய்வதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. ஒட்டகம் திடீரென ஓர் இடத்தில் அமர்ந்துவிடும். அதை எழுப்பி மீண்டும் பயணத்தை ஆரம்பிப்பது என்பது சிரமமான காரியம். அப்படித்தான் அவன் ஒட்டகமும், பாலைவனத்தின் நடுவில் திடீரென நடப்பதை நிறுத்துவிட்டு உட்கார்ந்துவிட்டது.


வைர வியாபாரி ஒட்டகத்தை நடக்க வைக்க நிறைய முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் அந்த ஒட்டகம் எழுந்திரிப்பதாக இல்லை.  திருடர்கள் யாரேனும் வந்து தன்னிடமுள்ள பணத்தை திருடிவிடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம். இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும்.
பாலைவனத்தில் இரவு நேரங்களில் தட்பவெட்பம் தலைகீழாக மாறிவிடும் என்பது அவனுக்கு தெரியும். 'குளிரில் உறைந்து இறந்து விடுவோமோ?' என்ற பயம் ஒரு பக்கம் எழுந்தது.

அவன் 'என்ன செய்வது?' என தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தான். அப்போது வழிப்போக்கன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். வியாபாரியிடம், "உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா?" எனக் கேட்டான். முதலில் தயங்கியவன், பிறகு வேறு வழியின்றி அவனிடம் ஒட்டகத்தைப் பற்றி கூறினான்.

அவன், "இவ்வளவுதானா? எனக்கு  ஒரு மந்திரம் தெரியும். அந்த மந்திரத்தை சொன்னால், ஒட்டகம் எழுந்து நடப்பது என்ன? ஓடவே செய்யும். ஆனால்..." என இழுத்தான் வழிப்போக்கன். வியாபாரிக்கு அவன் பணத்திற்காகத் தான் அவ்வாறு இழுக்கிறான் என்பதை புரிந்தது. இக்கட்டான சூழ்நிலையில் இருந்ததால், "உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றான். வழிப்போக்கன், "எனக்கு நீங்கள் ஐந்து பொற்காசுகள் தந்தால் போதும்" என்றான்.

ஐந்து பொற்காசுகள் என்பது வியாபாரிக்கு மிகவும் சாதாரணம். மகிழ்ச்சியுடன் பொற்காசுகளை எடுத்துக் கொடுத்தான். வழிப்போக்கனும் ஒட்டகத்தின் காதில் அந்த மந்திரத்தைச் சொன்னான். ஒட்டகமும் எழுந்து ஓடத் தொடங்கியது. ஆனால் அவன் போக வேண்டிய பாதைக்கு நேர் எதிராக.

வியாபாரிக்கு முதலில் எதுவும் புரியவில்லை. பின்பு, சுதாரித்துக் கொண்டு ஒட்டகத்தின் பின்னால் ஓடினான். பணத்தை மட்டுமாவது எடுத்து விட முயற்சித்தான். மணற்பகுதி என்பதால் ஓட முடியவில்லை.

மீண்டும் வழிப்போக்கனிடம் வந்து, "தயவுசெய்து அந்த ஒட்டகத்தை நிறுத்த ஏதேனும் மந்திரம் இருந்தால் கூறுங்கள்" என்றான். "ஒட்டகத்தை நிறுத்த ஒரு மந்திரம் உள்ளது. ஆனால் அதை உபயோகிக்க வேண்டுமானால், நீங்கள் எனக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் தரவேண்டும்" என்ற வழிப்போக்கனின் பதிலைக் கேட்ட வியாபாரி மயங்கி விழுந்தான்.

நம் வாழ்வில் தற்காலிக பிரச்சனைகளுக்கான தீர்வைத் தேடி, நிரந்தர பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறோம்.

ஒரு தீர்வை தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், அது 'நிரந்தரமான தீர்வா?' என்பதை உறுதி செய்யுங்கள்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

அபாயம் நிகழும் நேரம்!!!

ஜப்பானில் மிகச் சிறந்த திருடன் ஒருவன் இருந்தான். அவன் திருடுவதில் கைதேர்ந்தவன். அரசரின் கஜானாவில் கூட திருடுயிருக்கிறான். அவன் திருடிவிட்டு தனக்கான ஒரு அடையாளத்தை விட்டுச் செல்வான். இதனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அவனைப் பற்றி தெரியும். ஆனாலும் ஒருமுறை கூட அவன் பிடிபட்டதில்லை.

இப்போது அவனுக்கு வயதாகி விட்டது. அவனது மகன், "தந்தையே! உங்களுக்கு வயதாகி விட்டதால், இந்த திருடும் கலையை எனக்கு கற்றுத் தாருங்கள்" எனக் கேட்டான். தந்தை, "இந்தக் கலையை கற்றுக் கொடுக்க முடியாது. நீ புத்திசாலியாக இருந்தால் பார்த்து நீயாகவே தெரிந்து கொள்வாய். எனவே, இன்று இரவு என்னுடன் நீயும் திருட வா" என்றார் தந்தை.

அன்றிரவு, முதல் தடவை திருடப் போவதால் மகன் பயத்தோடு இருந்தான். ஆனால், அவன் தந்தை மிகச் சாதாரணமாக ஒரு மாளிகையின் சுவற்றை உடைத்து உள்ளே சென்றான். மகனும் பின் தொடர்ந்தான். தந்தை தன் சொந்த வீட்டிற்குள் செல்வது போல நடந்து சென்றான். மகன் சுற்றும் முற்றும் யாரும் வருகிறார்களா என கவனித்தபடி நடந்தான். தந்தைக்கு அந்த வீட்டின் எல்லா இடங்களும் தெரிந்திருந்தது. வீட்டின் உள்ளறையில் இருந்த பெரிய அலமாரியை நெருங்கினான்.
அலமாரியின் கதவை திறந்து, மகனை அழைத்து, "உள்ளே சென்று விலையுயர்ந்த பொருள்கள் இருக்கிறதா என்று பார்" என்றான். மகனும் உள்ளே சென்றான். 

தந்தை கதவை தாழிட்டு, "திருடன்! திருடன்! ஓடி வாங்க" என கத்தியபடி வந்த ஓட்டை வழியாக தப்பி ஓடிவிட்டான்.
மகனுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. "தந்தை ஏன் இவ்வாறு செய்தார்?" என குழம்பிப் போனான். வீட்டில் அனைவரும் முழித்துக் கொண்டனர். அலமாரியின் கதவும் தாழிட்டு உள்ளது. தான் பிடிபடுவது உறுதியாகி விட்டது. இத்தகைய சூழ்நிலையை அவன் கனவிலும் எதிர்பார்த்ததில்லை.

ஒருமணி நேரத்திற்குப் பிறகு, மகன் வீட்டை வந்தடைந்தான். அவனது தந்தை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். அவன் தந்தையை எழுப்பி, "என்ன மடத்தனம் இது?" என்றான். தந்தை, "நீ திரும்பி வந்துவிட்டாய். என்ன நடந்தது என்பதை நீ சொல்லத் தேவையில்லை. இப்போது உனக்கும் இந்த கலை தெரிந்துவிட்டது" என்றார். ஆனால் மகனோ என்ன நடந்தது என்பதை சொல்லியே தீர்வது எனப் பிடிவாதமாக இருந்தான். தந்தையும் கேட்கத் தொடங்கினார்.

"நான் அலமாரிக்குள் இருந்தேன். வீட்டிலிருந்த அனைவரும் திருடனை தேட ஆரம்பித்தனர். அந்த வீட்டின் வேலைக்காரி ஒரு விளக்கை கையில் வைத்துக் கொண்டு அலமாரி அருகே வந்ததை சாவி துவாரம் வழியாக பார்த்தேன். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. பூனையை போல் கத்தினேன்.  வேலைக்காரி பூனை அலமாரிக்குள் மாட்டியிருப்பதாக நினைத்து கதவை திறந்தாள். நான் விளக்கை அணைத்து, அவளை தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்தேன். அனைவரும் என்னை பின்தொடர்ந்து துரத்தி வந்தனர். அவர்கள் என்னை பிடிக்கும் அளவு நெருங்கி விட்டனர். அங்கே ஒரு கிணறு இருந்தது. அதன் ஓரத்தில் மிகப் பெரிய பாறை இருந்தது. சாதரணமாக என்னால் அந்த பாறையை அசைக்க கூட முடியாது. ஆனால் இன்று நான் அதை தூக்கி கிணற்றுக்குள் போட்டுவிட்டு ஒளிந்து கொண்டேன். துரத்திவந்தவர்கள் திருடன் கிணற்றில் விழுந்து விட்டதாக நினைத்து அங்கேயே நின்றுவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன்" என்று கூறி முடித்தான் மகன்.

தந்தை, "நான் உனக்கு கற்றுக் கொடுத்த பாடம் இதுதான். அபாயமான நிலையிலிருந்து, நீ தப்பிக்க வேண்டுமானால், உன்னால் சாதாரணமாக இருக்க முடியாது. உனக்குள் இருக்கும் முழு சக்தியும் வெளிப்பட்டுவிடும். இனி நீ உன் விருப்பம் போல் செயல்படலாம்" என்றார் தந்தை.

சனி, 17 செப்டம்பர், 2016

பயணத்தின் முடிவு

ஒரு பள்ளத்தாக்கை ஒட்டிய கிராமத்தில் வசித்த துறவி ஒருவர், தனது மடத்திற்கு ஒரு துறவி தேவைப்படுவதாகவும், அவரை உடனே அனுப்பி வைக்கும்படியும் தலைமை மடத்துக்கு தகவல் அனுப்பினார். தலைமை மடத்தின் குரு, எல்லா துறவிகளையும் அழைத்து, "நான் உங்களில் ஐந்து பேரை அந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் போகிறேன்" என்றார்.

"ஒருவர் தானே தேவைப்படுகிறது. ஏன் ஐவர் செல்ல வேண்டும்?" என அனைவரும் கேட்டனர். அதற்கு குரு, "அது உங்களுக்கு இப்போது புரியாது. வெகு தூரம் செல்ல வேண்டியதிருக்கும். வழியில் பல தடைகள் ஏற்படும். ஒருவர் சென்று சேர்வது கூட நிச்சயமில்லை" என்று கூறிவிட்டு ஐவரை தேர்ந்தெடுத்து அனுப்பினார்.

முதல் நாள் பயணத்தில், ஐவரும் ஒரு கிராமத்தை அடைந்தனர். அந்த கிராமத்து மக்கள், "இந்த கிராமத்தில் இருந்த துறவி இறந்துவிட்டார். உங்களில் ஒருவர் இனி அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என வேண்டினார்கள். ஐவரில் ஒருவன், "கடவுளின் விருப்பம் இதுவாக இருக்குமானால், நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் நால்வரும் புறப்படுங்கள்" என்றான். நால்வரும் பயணத்தை தொடங்கினர்.

அடுத்த நாள், ஒரு நகரத்தின் வழியாக அவர்கள் பயணித்தனர். அப்போது அந்த நாட்டின் அரசன் குதிரையில் வந்தான். நால்வரில் ஒருவரிடம் வந்து, "நீங்கள் மிகவும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள். என் மகளை திருமணம் செய்து கொண்டு, இந்த நாட்டை ஆள வேண்டும்" என்றான். அவனும் அதற்கு சம்மதித்து, அரசனுடன் சென்றுவிட்டான். மற்ற மூவரும் பயணத்தை தொடங்கினர்.

அடுத்த நாள், மூவரும் காட்டின் வழியாக பயணித்தனர். காட்டின் நடுவில், அழகான இளம்பெண்ணொருத்தியை பார்த்தனர். அவள், "என் பெற்றோர் பக்கத்து ஊருக்கு சென்றுள்ளனர். திரும்பி வரும் வரை என்னை இங்கேயே நிற்கும்படி சொன்னார்கள். ஆனால் எனக்கு தனியாக இருக்க பயமாக உள்ளது" என்றாள். அவள் அழகில் மயங்கி காதல் வயப்பட்ட ஒருவன், "நான் இவளுக்கு துணையாக இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்" என்றான். வேறு வழியின்றி இருவரும் பயணத்தை ஆரம்பித்தனர்.

மறுநாள் இருவரும் நாத்திகர்கள் வாழ்ந்த பகுதியில் பயணித்தனர். இந்த இருதுறவிகளையும் பார்த்து, "கடவுள் இல்லை. நீங்கள் கடவுளின் பெயரைக் கூறி மக்களை ஏமாற்றுகிறீர்கள்" எனக் கூறினார்கள். இதைக் கேட்ட ஒரு துறவிக்கு கோபம் வந்து, "கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்து, உங்கள் அனைவரின் மனதையும் மாற்றுவேன்" என சபதம் மேற்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.

கடைசியில், அந்த ஒரு துறவி மட்டும் பயணம் செய்து பள்ளத்தாக்கில் உள்ள மடத்தை அடைந்தான். அப்போது அவனுக்கு தன் குருவின் செயலுக்கான அர்த்தம் விளங்கியது.

இலக்கு ஒன்றை நோக்கி செல்லும் வழியில், பல தடைகளை கடக்க நேரிடும். ஆனால் நாம் இலக்கை மறந்து விட்டு, தடைகளை பார்த்து பயந்து நின்றுவிடுகிறோம் அல்லது ஒரு தடையை கடந்ததை பெரிதாக எண்ணி நின்றுவிடுகிறோம்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மந்திரப் புன்னகை

போரில் பகைநாட்டு வீரர்களிடம் சிக்கிக்கொண்டான் ஒரு வீரன். அவனை சிறையில் அடைத்து, அவர்கள் பார்த்த பார்வையும், நடத்திய விதமும் பயத்தை ஏற்படுத்தின. அவர்கள் செய்திருந்த ஏற்பாடுகளைப் பார்த்தால், கூடிய சீக்கிரத்தில் தன்னை கொன்று விடுவார்கள் என்றே தோன்றியது. இன்னும் சற்று நேரத்தில் தன் வாழ்க்கை முடிந்துவிடும் என்பதை நினைத்தாலே அவனுக்கு உடல் நடுங்கியது.

சட்டைப் பையில் சிகரெட் இருக்கிறதா எனத் தேடினான். ஒரே ஒரு சிகரெட் கையில் கிடைத்தது. ஆனால் பற்ற வைப்பதற்கு தீப்பெட்டி இல்லை. சிறை கம்பிகளுக்கு வெளியே சிறை அதிகாரி ஒருவர் நின்றிருந்தார். இவன் அவரைப் பார்ப்பது தெரிந்தும் பார்க்காததைப் போல் இருந்தார். வேறு வழியின்றி குரலை உயர்த்தி, "ஐயா, தீப்பெட்டி இருக்கிறதா?" எனக் கேட்டான்.

சிறை அதிகாரி இவனைப் பார்த்தார். அருகில் வந்தார். தீக்குச்சியை எரிய விட்டு சிகரெட்டை பற்ற வைக்க மிக அருகில் வந்த போது அவனை உற்றுப் பார்த்தார். அவன் அதிகாரியைப் பார்த்து புன்னகைத்தான். அவரும் அவனை உற்றுப் பார்த்தபடியே இருந்தார். அவனும் அவர் கண்களைப் பார்த்து, புன்னகைத்தபடியே இருந்தான்.

அவனது புன்னகை அதிகாரியின் வெறுப்பை மறக்கச் செய்தது. இருவரும் ஒருவருக்கொருவர் புன்னகையை பரிமாற்றிக் கொண்டனர். அதிகாரி, "உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?" எனக் கேட்டார். அவன், "ஆம். அவர்கள் இப்போதும் என்னுடன் இருக்கிறார்கள்" என்றபடி பையில் இருந்த புகைப்படத்தை காட்டினான். குழந்தைகளின் மீதுள்ள அன்பையும், அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தன் கனவையும் சொன்னான். "என் குழந்தைகளை இனிமேல் பார்க்க முடியாமல் போய்விடுமோ என பயமாக உள்ளது" என்றான். அதைக் கேட்ட அதிகாரிக்கு கண்ணீர் பெருகியது.

அதிகாரி மறு நிமிடம் சிறை கதவை திறந்து விட்டு, தன் பின்னால் வரும்படி சைகை செய்தார். என்ன நடக்கிறது, எங்கு செல்கிறோம் என்பது தெரியாமலே அவனும் பின்னால் சென்றான். பின்பக்க கதவின் வழியாக வெளியே வந்தார்கள். வேகமாக நடந்தார்கள். நகரின் எல்லை பகுதி வந்தது. அதிகாரி அவன் கைவிலங்கை அவிழ்த்து, "சென்று வா" என விடை கொடுத்தார். கண்ணீரோடு நன்றி கூறிவிட்டு, ஓடிச் சென்று தன் படைகளோடு சேர்ந்து கொண்டான்.

'எப்படி பிழைத்தாய்?' என பலரும் கேட்டபோது, அவன் கூறியது இது தான் : "என் புன்னகை என்னைக் காப்பாற்றியது"

மிகப் பிரபலமான 'குட்டி இளவரசன்' (Little Prince) என்ற புத்தகத்தை எழுதிய சான்ட் எக்ஸ்யுப்பெரி என்ற எழுத்தாளரின் கதை இது. இதன் தலைப்பே "புன்னகை"தான்.

இந்த கதையின் ஆசிரியர், ரஷ்ய விமானப் படையில் போர்க் கப்பல் விமானியாக பணி புரிந்தவர். எனவே, இது கதை போல் இருந்தாலும் அவருக்கு நேர்ந்த உண்மை சம்பவம் என்று கூறப்படுகிறது.

வியாழன், 15 செப்டம்பர், 2016

நடப்பது நடக்கும்...

குறுநில மன்னர்களில் ஒருவன், விக்ரமாதித்த மன்னனை பார்க்க அரண்மனைக்கு வந்தான். விக்ரமாதித்தன், "நான் இப்போது தேவலோகத்திற்கு சுற்றுப் பயணம் செய்யப் போகிறேன். நீ மற்றொரு நாள் வந்து என்னைப் பார்" என்றார். அந்த மன்னன், "அரசே! நான் இதுவரை தேவலோகத்தை பார்த்ததில்லை. நீங்கள் அனுமதித்தால் நானும் உங்களோடு வரலாமா?" எனக் கேட்டான். விக்ரமாதித்தனும் அதற்கு சம்மதித்து உடன் அழைத்துச் சென்றார்.

இருவரும் தேவலோகத்திற்குள் நுழைந்தனர். அங்கே கரிய நிறத்தில், கோர பற்களோடு, பார்த்தாலே மிரளும் அளவிற்கு மிகப் பெரிய உருவத்தில் ஒரு பூதம் நின்றிருந்தது. அதைப் பார்த்த குறுநில மன்னனுக்கு பயத்தில் மயக்கமே வந்துவிடும் போல தோன்றியது.
பூதம் அந்த குறுநில மன்னனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

விக்ரமாதித்தனிடம் பூதத்தை காட்டி "இது யார்?" எனக் கேட்டான் மன்னன். "இவன்தான் இங்குள்ள பூதங்களின் தலைவன். எமதர்மனின் கட்டளையை நிறைவேற்றுவதே இவன் வேலை" என்றான் விக்ரமாதித்தன்.
இப்போது அந்த மன்னன் பயத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். விக்ரமாதித்தனிடம் தன்னை மீண்டும் பூலோகத்தில் கொண்டுபோய் விடும்படி கெஞ்சினான். விக்ரமாதித்தன் அவனது பயத்தை போக்க, பல செயல்களை செய்தார். ஆனாலும் அவன் கேட்பதாக இல்லை. கடைசியில் தேவர்களை அழைத்து அந்த மன்னனை பூலோகத்தில் விட்டு வரும்படி கூறினான். அவர்களும் அவனை தூக்கிக் கொண்டு போய் அரண்மனை மாடியில் விட்டு வந்தனர்.

விக்ரமாதித்தன் கோபத்தோடு அந்த பூதத்தை பார்த்து, "எதற்காக நீ அந்த மன்னனை கோபமாக பார்த்தாய்?" எனக் கேட்டான். அதற்கு அந்த பூதம், "அரசே! நான் அந்த மன்னனை கோபமாக பார்க்கவில்லை. ஆச்சரியமாகவே பார்த்தேன். இன்று எமதர்மர் என்னை அழைத்து, 'இந்த மன்னனின் ஆயுள் முடிந்து விட்டது. இவனை பூலோகத்திற்குச் சென்று அழைத்து வா' எனக் கட்டளையிட்டார். ஆனால் நான் அழைத்து வருவதற்கு முன்பே, தேவலோகத்தில் இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். 'எமதர்மரின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ?' என நான் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், அவன் மீண்டும் பூலோகத்திற்கே சென்றுவிட்டான். இப்போது என் வேலை சுலபமாயிற்று" எனக் கூறியது.

சிறது நேரத்தில், "அரண்மனை மாடியில் இருந்து இறங்கும் போது, தவறி விழுந்த குறுநில மன்னன் இறந்தான்" என்ற செய்தி விக்ரமாதித்தனுக்கு வந்தது.

எது நடக்க வேண்டும் என விதித்திருக்கிறதோ, அது நிச்சயம் நடந்தே தீரும்.

புதன், 14 செப்டம்பர், 2016

அதிசயத்தை நிகழ்த்த வேண்டுமா???

'மிகச் சிறந்த வில்லாளன்' என்ற பட்டத்தைப் பெற்ற இளைஞன் ஒருவன், அரசவைக்கு வந்தான்.
அரசரிடம், "அரசே! நான் பல நாடுகளில் நடைபெற்ற வில் வித்தை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். உங்கள் நாட்டில் என்னை தோற்கடிக்கும் திறமை யாருக்காவது இருக்கிறதா? அப்படி யாரும் இல்லாவிட்டால் நானே சிறந்த வில்லாளன் என உங்கள் நாடு முழுதும் அறிவிக்க வேண்டும்" என்றான்.

கண்களை கட்டிக் கொண்டு வானத்தில் பறக்கும் பறவையை வீழ்த்தும் அளவு திறமை பெற்றிருந்தான் அந்த வீரன்.
அவனது திறமைகளைப் பற்றி அறிந்த அரசன் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தான். அமைச்சர் ஒருவர் அரசனிடம், "அரசே! நாம் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள மலையில், வயதான கிழவர் ஒருவர் இருக்கிறார். அவரைப் போன்று வில் வித்தையில் சிறந்தவர் உலகிலேயே யாரும் கிடையாது. இந்த வீரனை அவரிடம் அனுப்புங்கள்" என்றார்.

அரசனும் இதை அந்த வீரனிடம் சொன்னான். வீரனும் அந்த பெரியவரை பார்க்கச் சென்றான். அந்த பெரியவருக்கு கிட்டத்தட்ட தொன்னூற்று ஐந்து வயதிற்கு மேல் இருக்கும். மலை உச்சியில் உள்ள குகையில் வாழ்ந்து வந்தார் அவர். ஆனால் அந்த குகையில் வில் அம்பு எதுவும் இல்லை.

பெரியவர், "நீ வருவாய் என்ற தகவல் கிடைத்தது. நான் உனக்கு ஒரு சோதனை வைக்கப் போகிறேன். அதில் நீ தேர்ச்சி பெற்றால் 'நீதான் இந்த உலகின் சிறந்த வில்லாளன்' என ஒத்துக் கொள்கிறேன்" என கூறி மலை உச்சிக்கு அவனை அழைத்துச் சென்றார்.
பாதம் பாதி வெளியே இருக்கும்படி மலையின் விளிம்பில் சாதாரணமாக நின்றார். இளைஞனைப் பார்த்து, "என் அருகில் வந்து நில்" என்றார். அவன் பயந்து கொண்டே இரண்டு அடி எடுத்து வைத்தான். கீழே குனிந்து பார்த்தான். கால்கள் நடுங்கத் தொடங்கின.  பெரியவரிடம், "என்னால் முடியாது. சற்று கவனம் சிதறினாலோ, காற்று பலமாக வீசினாலோ கீழே விழுந்து இறந்து விடுவேன்" என்றபடி பின்னால் சென்று விட்டான்.

"வில் வித்தை மனிதனுக்கு கற்றுத் தருவது அசையாத நம்பிக்கை. தளராத இதயம். எனக்கு வில்லும் அம்பும் தேவையில்லை. என் திறமையை பார்" என்றார் பெரியவர். வானத்தில் சில பறவைகள் பறந்து கொண்டிருந்தன. அவற்றை உற்றுப் பார்த்தார். சில நிமிடங்களில் அவை கீழே விழுந்து இறந்தன.

பெரியவர் திரும்பி அந்த இளைஞனைப் பார்த்து, "நீ அசையாமல் இருந்தால் பார்வையே போதும். அம்பு தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இது குழந்தைகளின் விளையாட்டு. நீ திரும்பிச் சென்று பயிற்சி செய். ஆழ்ந்த பயிற்சியின் மூலம் நீ சிறந்த வில்லாளன் ஆகலாம்" என்றார்.

'பிடித்த கலையை கற்றுக் கொள்வது முடிவு இல்லை. அதனுள் ஆழமாக செல்ல வேண்டும். ஒவ்வொரு கலையும், படைப்பும் உங்களை, எங்கே மௌனமும் அமைதியும் இருக்கிறதோ அங்கே கொண்டு சேர்க்கும். அதன் மூலம் உங்களால் பார்க்க முடியாததையும் பார்க்க முடியும்'
- ஓஷோ

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

உன்னை நீ சரி செய்து கொள்!

அந்த ஊருக்கு துறவி ஒருவர் வந்திருந்தார். மக்கள் அனைவரும் அவரை சந்தித்து, தங்கள் பிரச்சனைகளை கூறினர். அவர்களின் பிரச்சனைகள் தீர்வதற்கான வழிமுறைகளை கூறுவார். அந்த ஊர் மக்கள் அனைவரும் நல்ல முறையில் உபசரித்து வந்தனர்.
ஒருநாள் அந்த துறவியைப் பார்க்க, ஒரு அம்மா தனது எட்டு வயது மகனுடன் வந்திருந்தார். துறவியிடம், "சுவாமி! என்னுடைய மகன் மிக அதிகமாக இனிப்பு பண்டங்களை சாப்பிடுகிறான். சிறுவயதில் இவன் இனிப்பு பதார்த்தங்களை விரும்பி சாப்பிடும் போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது இவன் ஆரோக்கியத்தை நினைத்தால், எனக்கு கவலையாக இருக்கிறது. நான் சொன்னால்கேட்க மாட்டான். நீங்கள் தான் இவனுக்கு புத்திமதி கூற வேண்டும்" என்றார் அந்த அம்மா.
துறவி, "நீங்கள் பத்து நாட்கள் கழித்து உன் மகனை அழைத்துக் கொண்டு இங்கே வாருங்கள்" என்றார். அந்த அம்மாவும் அதே போல், பத்து நாட்கள் கழித்து தன் பையனுடன் துறவியைப் பார்க்க வந்தாள்.
துறவியிடம் தன் பிரச்சனையைக் கூறினாள். அவர், "மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள்" என்றார். துறவி சொன்னதை ஏற்று, அவளும் மூன்று நாட்களுக்குப் பின் குழந்தையுடன் வந்தாள். பிரச்சனையை சொன்னதும், "இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள்" என்றார் துறவி.
இரண்டு நாட்களுக்கு பிறகு வந்த அந்த அம்மாவிடம், "நம்பிக்கையோடு நாளை வாருங்கள். உங்கள் மகனிடம் நான் பேசுகிறேன்" என்றார் துறவி. அதேபோல் மறுநாள் மகனை அழைத்துக் கொண்டு வந்தாள் அந்த அம்மா. துறவி அந்த சிறுவனிடம், "தம்பி, இனிப்பு உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதிகம்  சாப்பிட்டால் அது உடல் நலத்தை பாதிக்கும்..." என நீண்ட அறிவுரையை கூறி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த துறவியின் சீடன் ஒருவன் குழப்பமடைந்தான். தன் குழப்பத்தை தீர்க்க துறவியிடம் சென்று, "குருவே! இனிப்பு சாப்பிடக் கூடாது என்ற அறிவுரையை நீங்கள் அவர்கள் வந்த முதல் நாளிலேயே அந்த பையனிடம் சொல்லியிருக்கலாமே! ஏன் இத்தனை நாட்கள் அவர்களை அலைக்கழித்தீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு துறவி, "நான் ஒருவருக்கு அறிவுரை வழங்க வேண்டுமானால், முதலில் நான் அதனை பின்பற்றி இருக்க வேண்டும். இனிப்பு அதிகம் சாப்பிடும் நான் எவ்வாறு அந்த சிறுவனுக்கு அறிவுரை கூற முடியும்? நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டன. அதனால் தான் அவர்களை சில நாட்களுக்குப் பிறகு வர சொல்லி அறிவுரை கூறினேன்" என்றார்.

திங்கள், 12 செப்டம்பர், 2016

பிறரை மதிப்பிடுவது எப்படி???

அந்த ஊரின் எல்லைப் பகுதியில், பிரம்மாண்டமான தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட நுழைவு வாசல் இருந்தது. ஊருக்குள் யார் வந்தாலும் போனாலும், எல்லையில் உள்ள அந்த வாசலை கடந்து தான் செல்ல முடியும். அந்த வாசலின் முன்பாக எப்போதும் ஒரு பெரியவர் அமர்ந்திருப்பார்.

ஒருநாள் குதிரை வண்டியில் இளைஞன் ஒருவன் வந்தான். எல்லை வாசலில் இருக்கும் பெரியவரைப் பார்த்து, "ஐயா! இந்த ஊரில் உள்ள மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்?" எனக் கேட்டான். அந்த பெரியவர், "தம்பி! முதலில் நீ இதற்கு முன்பாக வசித்த ஊரைப் பற்றி எனக்கு சொல்" என்றார்.

அவன், "நான் இதற்கு முன்பு வசித்த ஊர் மிகவும் மோசமானது. அங்குள்ள மக்கள் அனைவரும் மோசமானவர்கள். நாகரீகமற்றவர்கள். பிறரிடம் சிறிதளவு கூட அன்பு காட்டமாட்டார்கள். அவர்களோடு வாழப் பிடிக்காமலே நான் இந்த ஊருக்கு வந்துள்ளேன்" என்றான்.

"நீ இதற்கு முன்னால் இருந்த ஊரை விட இது மிகவும் மோசமான ஊர். நீ வந்த வழியே செல்வது தான் நல்லது" என்றார் பெரியவர். அதைக் கேட்ட அவனும் திரும்பிச் சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்து, மாட்டு வண்டியில் இளைஞன் ஒருவன் வந்தான். அவனும் எல்லை வாசலில் இருக்கும் பெரியவரைப் பார்த்து, "ஐயா! இந்த ஊரில் உள்ள மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்?" எனக் கேட்டான். மீண்டும் அந்த பெரியவர், "தம்பி! முதலில் நீ இதற்கு முன்பாக வசித்த ஊரைப் பற்றி எனக்கு சொல்" என்றார்.

"ஐயா! நான் இதற்கு முன்னால் வசித்த ஊர் மிகவும் அருமையான ஊர். அங்கு வசிக்கும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள். உதவி எனக் கேட்டு வருபவர்களுக்கு கொடுத்து உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்கள். ஆனால், இப்போது அங்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், நான் வேலை தேடி இங்கு வந்திருக்கிறேன்" என்றான்.

பெரியவர், "நீ இதற்கு முன்னால் இருந்த ஊரை விட இது நல்ல ஊர். இங்குள்ள மக்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள். உன்னை இந்த ஊரின் சார்பாக நான் வரவேற்கிறேன்" என்றார் பெரியவர். அவனும் மகிழ்ச்சியோடு ஊருக்குள் சென்றான்.

நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் பெரியவரிடம் வந்து, "மாட்டு வண்டியில் வந்தவனிடம் நம் ஊரைப் பற்றி நல்ல முறையில் கூறிவிட்டு, குதிரை வண்டியில் வந்தவனிடம் ஏன் மோசமாக கூறினீர்கள்?" எனக் கேட்டான்.

பெரியவர் சிரித்துக் கொண்டே, "பிறரை எப்படி ஒருவன் மதிப்பிடுகின்றானோ, அப்படித்தான் அவன் குணம் இருக்கும்" என்றார்.

உலகில் வாழும் அனைவரும் நல்லவர்களே. தீயவர்களாக நீங்கள் யாரையேனும்  நினைத்தாலும், அவர்களிடம் உள்ள நல்ல குணங்களை கவனிக்க தவறாதீர்கள்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

ஒரு நிமிட பயம்!!!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.
குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்" என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்கள்? உங்களிடம் நான் உதவி தானே கேட்டேன்? " என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி... நான் உனக்கு உதவிதான் செய்தேன். நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன் " என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

ஒரு நிமிடம் பயமின்றி நிதானமாக யோசித்தால் உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

சொர்க்கமா? நரகமா?

ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில், "நான் செய்த
பாவங்களுக்கு நரகத்திற்குத்தான் செல்ல
வேண்டியிருக்கும்" என நினைத்தார். ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு
அனுப்பப்பட்டார். அவருக்கு ஒரே வியப்பு. ஏதோ தவறு
நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அங்கிருந்தவர்களிடம்,"வாழ்நாள் முழுவதும் நான்
நல்ல செயல்கள் எதுவும்
செய்ததில்லை. எப்படி சொர்க்கம் வந்தேன்?" என்று கேட்டார்.

அவர்கள்,"வாழ்நாள்
முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய். அதனால்
உனக்கு சொர்க்கம்
அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீ இருந்தது ஒரு நவீன
நரகம். இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது. இன்னும் இங்கே
பழைய தண்டனைகளையே
அளித்துக் கொண்டு இருக்கிறோம். பூமியில் நீங்கள்
அதையெல்லாம் நவீனமாக
மாற்றிவிட்டீர்கள். உன்னை நரகத்தில் போட்டால், 'இது தான்
நரகமா?' என்று எங்களைப்
பார்த்து சிரிப்பாய். அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்" என்றார்கள்.

மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். நாம் வாழ்வதே நரக வாழ்க்கை தான். இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது.

ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

சனி, 10 செப்டம்பர், 2016

துன்பம் உங்களை துரத்துகிறதா?

அன்று வழக்கத்திற்கு மாறாக மாவீரன் அலெக்ஸாண்டர் மிகுந்த கவலையோடு இருந்தார். அவரின் முகம் சோகத்தில் வாடியிருப்பதை அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் கவனித்தனர். ஆனால் அதன் காரணம் யாருக்கும் தெரியவில்லை.

சற்று நேரத்திற்கு முன்னர் தான், இந்தியாவில் கிடைத்த முதல் வெற்றியின் செய்தி அவருக்கு கிடைத்திருந்தது. சந்தோஷமாக இருக்க வேண்டிய சமயத்தில் அவர் கவலையுடன் இருப்பது அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

அனைவரும் வருவதற்கு முன்னால், அலெக்ஸாண்டர் தன் அறையில் ஒரு முதியவருடன் பேசிக் கொண்டிருப்பதாக சிலர் கூறினார்கள். அந்த பெரியவரிடம் கேட்டால், ஒருவேளை அலெக்ஸாண்டரின் சோகத்திற்கான காரணம் தெரியும் என அவரைத் தேடிச் சென்றனர்.

ஒருவழியாக அவரைப் பிடித்து, "நீங்கள் மாவீரரிடம் என்ன சொன்னீர்கள்? இந்தியாவில் கிடைத்த வெற்றியைக் கூட கொண்டாடாமல் ஏன் சோகத்தில் இருக்கிறார்?" எனக் கேட்டனர்.

அந்த பெரியவர், "நான் உங்கள் மாவீரரிடம் அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லிவிடவில்லை. அவரிடம் 'நீங்கள் இதுவரை ஒன்றைப் பற்றி சிந்தித்ததுண்டா?' எனக் கேட்டேன். அதற்கு அவரும் 'எதைப் பற்றி?' என்று கேட்டார்.

நான் 'இன்னும் சிறிது நாட்களில் இந்தியா முழுதும் வென்றுவிடப் போகிறீர்கள். அவ்வாறு நடந்தால், நீங்கள் இந்த உலகத்தையே வென்றவர் ஆவீர்கள். ஆனால், அதன் பிறகு என்ன செய்வீர்கள்? ஒரு உலகம் தானே இருக்கிறது!' என்று கேட்டேன்.

அதற்கு அவரும் 'ஆம்! ஒரு உலகம் தானே இருக்கிறது. பிறகு நான் எந்த உலகத்தை வெற்றி கொள்வது? இதை நினைத்தால் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது' என்று கூறி, அப்போதிலிருந்து சோகத்துடன் இருக்கிறார். வேறு எதுவும் பேசவில்லை" என்றார்.

உலகமே நமது காலடியில் இருந்தாலும், சிகரத்தின் உச்சியில் இருந்தாலும் ஏதாவது ஒன்று நம்மை துன்புறுத்திக் கொண்டே இருக்கும்.

மாத்தி யோசி!!!

நண்பர்கள் இருவர் வேலை நிமித்தமாக ஆப்பிரிக்காவிற்கு பயணம் செய்தனர். இருவரும் இருவேறு ஷூ தயாரிக்கும் நிறுவனங்களில்,விற்பனைப் பிரிவின் அதிகாரிகளாக வேலை பார்த்து வந்தனர். அதில் ஒன்று அமெரிக்க கம்பெனி. மற்றொன்று இங்கிலாந்து கம்பெனி.

இரு அதிகாரிகளும் தங்கள் கம்பெனி ஷூக்களை ஆப்பிரிக்காவில் விற்பனை செய்ய முடியுமா என ஆராய்ச்சி செய்யவதற்காக செல்கின்றனர். கப்பல் ஆப்பிரிக்காவைச் சென்றடைந்தது. ஊருக்குள் நுழைந்த இருவருக்கும் அங்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதன் காரணம், அங்குள்ள பெரும்பாலான மக்கள் வெறும் கால்களுடனேயே நடமாடினர். ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் சென்று பார்த்தனர். எல்லா இடத்திலும், மக்கள் காலணிகள் கூட இல்லாமல் வெறும் காலுடனே இருந்தனர்.

ஏமாற்றத்தினால் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அலுவலகத்திற்கு என்ன பதில் சொல்வது என்ற சிந்தனையிலேயே இருந்தனர். மறுநாள் அமெரிக்க கம்பெனி அதிகாரி சற்று உற்சாகமாக காணப்பட்டார். ஆனால், இங்கிலாந்து கம்பெனி அதிகாரியோ சோர்வுடனே இருந்தார்.

பிறகு, இங்கிலாந்தில் இருக்கும் தன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, "சார், நீங்கள் எந்த சரக்கையும் அனுப்ப வேண்டாம். இங்கிருக்கும் ஆப்பிரிக்கர்கள் யாரும் செருப்பே அணிவதில்லை.  எப்படி ஷூ போடுவார்கள்?" எனக் கூறி விட்டார்.

அமெரிக்க அதிகாரி அதே வேளையில் தன் மேலாளரிடம், "சார், உடனே இரு மடங்கு சரக்குகளை அனுப்பி வையுங்கள். செருப்பே போடாதவர்களுக்கு ஷூவை அறிமுகம் செய்வது மிகவும் எளிய காரியம். போட்டியே இல்லாததால், நாம் சொல்வதுதான் விலை. நமக்கு நல்ல எதிர்காலம் உள்ளது" என்றார்.

பிரச்சனைகளை ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தால், அது எப்போதும் சிக்கலாகவே தெரியும். மாறுபட்டு சிந்தியுங்கள். எளிதில் தீர்வு கிடைக்கும்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

அன்பின் அடையாளம்

பள்ளி ஒன்றில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அன்பு சம்மந்தப்பட்ட தலைப்பை பற்றி ஆசிரியரும் மாணவர்களும் விவாதித்தனர். அப்போது வகுப்பிலிருந்த மாணவன் ஒருவன்,  "நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது?" என்று ஒரு கேள்வியை எழுப்பினான்.

ஆசிரியர், "உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா? சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை நீயே புரிந்துக் கொள்வாய்.

நம் பள்ளி மைதானத்திற்குச் செல். அங்கு இருக்கும் புற்களை கீழ் நோக்கி பார்த்தவாரே நட. அதில் மிக அழகாக காட்சியளிக்கும் ஒரு புல்லை தேர்வு செய்து கொண்டு வா. ஆனால் நீ நடந்து முடித்த பாதையை திரும்பி பார்க்காதே. உன் முன்னால் இருக்கும் புல்லை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்" என்றார்.

சில மணி நிமிடங்கள் கழித்து, மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்தான் அம்மாணவன். ஆனால் அவன் கையில் எந்த ஒரு புல்லும் இல்லை.
ஆசிரியர், "நான் கொண்டு வரச் சொன்ன புல் எங்கே?" எனக் கேட்டார்.

மாணவன், "நான் புற்களை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய அழகான புற்கள் தென்பட்டன. ஆனால் நீங்கள் கேட்டதோ மிக அழகான புல். ஆகையால் நான் தொடர்ந்து நடந்தேன். என் முன்னால் இருந்ததை விட, பின்னால் இருந்த புற்கள் சில அழகாக இருந்தன. ஆனால் நிபந்தனை படி நான் பின் நோக்கிப் பார்க்கக் கூடாது. மைதானம் முழுவதும் பார்த்தும் என்னால் எந்தப் புல்லையும் தேர்வு செய்ய முடியாமல் போனது" என்றான் சோகத்துடன்.

"அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில். நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நம் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது. அவர்களின் பாசத்திற்கு மரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்து பாசத்தை எடை போட கூடாது.

இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. ஆனால், நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள முடியும். அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய முடியும். நம் மீது அன்பு செலுத்த பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு நம் மீது பாசம் காட்டுபவருக்கு, நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்" என்றார் ஆசிரியர்.

அழகின் ரகசியம்

துறவி ஒருவர் தன் சீடர்களோடு பயணம் செய்தார். இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் சத்திரம் ஒன்றில் தங்குவதற்கு முடிவு செய்தனர். அந்த சத்திரத்தில் இருந்த வாயிற்காவலன் மிகவும் சோகமாக காணப்பட்டான்.

அதை கவனித்த துறவி, அவனை அழைத்து அவன் சோகத்திற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அவன், "எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி மிகவும் அழகாக இருப்பாள். மற்றொருத்தி மிகவும் அசிங்கமாக இருப்பாள். ஆனால் எனக்கு அசிங்கமாக இருப்பவளையே பிடிக்கும். அழகாக இருப்பவளை பார்த்தால் எரிச்சலாக இருக்கும்" என்றான்.

துறவிக்கு சற்று குழப்பமாக இருந்தது. இருவரின் குணாதிசயங்களைப் பற்றியும் கேட்டுவிட்டு, "அழகானவளுக்கு தான் அழகு என்ற கர்வத்தில் இருப்பதால், அவள் முகமும், செயலும் அசிங்கமாக தெரிகிறது. ஆனால், அசிங்கமானவளோ தான்  அசிங்கம் என்ற எண்ணத்தால் மிகவும் எளிமையாக இருக்கிறாள். அது அவள் முகத்திலும், செயலிலும் வெளிப்பட்டு அழகாக தெரிகிறது" என்றார்.

இதைக் கேட்ட காவலன், தன் பிரச்சனை தீர்ந்ததைப் போல் உணர்ந்தான். மறுநாள் துறவி தன் சீடர்களுடன் பயணத்தை தொடங்கினார். பல வருடங்களுக்கு பிறகு, துறவி மீண்டும் அந்த சத்திரம் வழியாக வந்தார். அப்போதும் அந்த வாயிற்காவலன் சோகமாகவே இருந்தான். அவனை அழைத்து இப்போது மீண்டும் அவன் சோகமாக இருப்பதன் காரணத்தைக் கேட்டார்.

அவன், "சாமி, நீங்கள் என்னிடம் சொன்னதை நான் என் மனைவிகளிடம் சொன்னேன். அன்றிலிருந்து அழகானவளுக்கு தன் அழகின் மீதிருந்த கர்வம் நீங்கி எளிமையாகி விட்டாள். அது அவளை முன்பு இருந்ததை விட அதிக அழகாக்கி விட்டது. ஆனால், அசிங்கமானவளுக்கு எளிமையாக இருப்பதால் கர்வம் உண்டாகி, மிக அசிங்கமாக தெரிகிறாள். இப்போது என்ன செய்வது?" எனக் கேட்டான்.

"வேண்டாமப்பா! நான் ஒன்று சொல்ல, அது மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்துவிடப் போகிறது" என்றபடி நடக்க ஆரம்பித்தார் துறவி.

'முட்டாள் தன்னை முட்டாள் என உணரும் பட்சத்தில் புத்திசாலி ஆகிறான். புத்திசாலி தன்னை புத்திசாலி என உணரும் பட்சத்தில் முட்டாள் ஆகிறான்' - A.P.J.   அப்துல்கலாம்.

வியாழன், 8 செப்டம்பர், 2016

தீதும்... நன்றும்...

காலை ஏழு மணி. அந்த மிகப் பெரிய தொழிலதிபர் வீட்டுக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தார். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவர் விமான நிலையத்தில் இருந்தாக வேண்டும்.

காலை ஆறு மணிக்கு வர வேண்டிய டிரைவர் இன்னும் வரவில்லை. அவர் புலம்பிக் கொண்டிருந்த போதே வாசலில் டிரைவர் வரும் சத்தம் கேட்டது. டிரைவரை திட்டியவாரே வண்டியில் ஏறினார். பாதி தூரத்தில் வண்டி திடீரென நின்று விட்டது. தொழிலதிபருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது.

டிரைவரைப் பார்த்து, "எனக்கென எமன் போல் வந்து தொலைத்தாயே! உன்னால் எனக்கு பல கோடி இழப்பாகப் போகிறது" என்று திட்டினார்.

அப்போது அந்த தொழிலதிபரின் நண்பர் தற்செயலாக அந்த வழியில் வந்தார். தான் விமான நிலையம் வழியாகத் தான் போவதாகவும், வழியில் இறக்கி விடுவதாகவும் கூறினார். அவரும் ஏறிக் கொண்டார்.

விமான நிலையம் வந்தது. தொழிலதிபர் தன் நண்பரிடம், "கடவுள் போல் சரியான நேரத்தில் வந்து உதவி செய்தாய். இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்" என்றார்.

பயணம் தொடங்கிய சில மணி நேரத்தில், விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதாக ஒரு அறிவிப்பு வந்தது. பயணிகள் அனைவரும் பயத்தின் உச்சத்தில் இருந்தனர்.

"தாமதமாக வந்து அந்த டிரைவர் கடவுள் போல் என்னை காப்பாற்ற முற்பட்டிருக்கிறான். ஆனால், இடையில் வந்த நண்பன் எமன் போல் இந்த விமானத்தில் ஏற்றி விட்டானே!" என புலம்பினார்.

அரை மணி நேரத்திற்குள் கடவுளாகத் தெரிந்தவர் எமனாகி விட்டார். எமனாக தெரிந்தவர் கடவுளாகி விட்டார்.

நன்மை தீமையாக மாறுவதும், தீமை நன்மையாக மாறுவதும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைச் சார்ந்தது.

மனதின் மந்திரம்

கடவுளிடம் ஒருவன் பல ஆண்டு காலம் தவமிருந்து வணங்கி வந்தான். ஒருநாள் கடவுள் அவன் எதிரே தோன்றினார். அவன், "கடவுளே! நான் எதைக் கேட்டாலும் அது உடனே நிறைவேறும்படி வரம் தாருங்கள். இதற்காகவே நான் இத்தனை ஆண்டுகள் தவமிருந்தேன்" என்றான்.

கடவுள் அவனிடம் ஒரு அழகான சிப்பியைக் கொடுத்து, "இந்த சிப்பியிடம் எதை வேண்டுமானாலும் கேள். உடனே நீ கேட்டது கிடைத்துவிடும்" எனக் கூறி மறைந்தார்.

சிப்பியை பெற்றுக் கொண்ட அவன், அதை சோதித்துப் பார்த்தான். நல்ல சாப்பாடு கேட்டான். கிடைத்தது. மிகப் பெரிய மாளிகை ஒன்றைக் கேட்டான். கிடைத்தது. தனக்கு சேவை செய்ய சேவர்களை கேட்டான். உடனே கிடைத்தார்கள். அன்றிலிருந்து அவன் வெகு ஆடம்பரமாக வாழத் தொடங்கினான்.

ஒருநாள் சந்நியாசி ஒருவர் தங்குவதற்கு இடம் கேட்டு அவன் மாளிகைக்கு வந்தார். அவனும் இடம் கொடுத்தான். இரவில் இருவரும் சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்நியாசி அவனிடம், "உன்னிடம் உள்ள சிப்பியைப் பற்றி எனக்கு தெரியும். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை. நானும் பல வருடங்கள் தவமிருந்து கடவுளிடம் வரம் பெற்றேன். அதன் பயனாக கடவுள், எனக்கும் ஒரு பெரிய சிப்பியை கொடுத்தார். நாம் எதைக் கேட்டாலும் இரண்டு மடங்கு தரும் சக்தி வாய்ந்தது" என்றார்.

அவனிடம் உள்ள ஒரு சிப்பியிலேயே இரண்டாவது முறை கேட்டால் கிடைத்துவிடும். ஆனால், பேராசை என்னும் பூதத்தின் பிடியில் சிக்கியதால் அதையெல்லாம் யோசிக்கும் அறிவு அவனுக்கு வேலை செய்யவில்லை.

சந்நியாசியிடம், "நாம் சிப்பிகளை மாற்றிக் கொள்வோமா? நீங்களோ சந்நியாசி. எதுவும் வேண்டாம் என்று துறவை மேற்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சிறிய சிப்பியே போதுமானது தானே" என்றான்.

அதற்கு அந்த சந்நியாசியும் சம்மதித்தார். இருவரும் சிப்பிகளை மாற்றிக் கொண்டார்கள். மறுநாள் காலையில், அவன் அந்த பெரிய சிப்பியிடம் "எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்" எனக் கேட்டான். சிப்பியோ, "அது என்ன ஒரு லட்சம்? நான் உனக்கு இரண்டு லட்சம் தருகிறேன்" என்றது.

அவனுக்கு ஒரே ஆனந்தம். "அதுவும் நல்லது தான். இரண்டு லட்சமே தா" என்றான்.

"அது என்ன இரண்டு லட்சம்? நான் உனக்கு நான்கு லட்சம் தருகிறேன்" என்றது சிப்பி.

அவனுக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது. "சரி, நான்கு லட்சம் தா" என்றான்.

சிப்பி, "அது என்ன நான்கு லட்சம்? நான் உனக்கு எட்டு லட்சம் தருகிறேன்" என்றது.

இப்படி பேசிக் கொண்டே இருந்ததே தவிர எதுவும் தரவில்லை. அவன் சிப்பியை எடுத்துக் கொண்டு சந்நியாசியிடம் ஓடினான். அவரோ விடிவதற்கு முன்பே அங்கிருந்து கிளம்பி போய்விட்டார்.

நம் மனமும் இந்த பெரிய சிப்பியை போல் தான் செயல்படும். ஒரு செயலைச் செய்ய முற்படும் போது, மனம் "நாளை செய்து கொள்ளளாம்" என்று சொல்லும். நிறைய வாக்குறுதிகள் தரும்.

ஆனால் அந்த 'நாளை' என்பது வருவதே இல்லை. மெதுமெதுவாக நம்பிக்கையே வாழ்க்கை ஆகி விடுகிறது. அந்த நம்பிக்கையும் நிறைவேறுவதில்லை.

புதன், 7 செப்டம்பர், 2016

தவறு செய்தால்...

சங்கரன்பிள்ளை என்பவர் தன் பக்கத்து வீட்டுக்காரர் தோட்டத்தில் பழங்கள் நிறைய கனிந்து தொங்குவதைப் பார்த்தார். கோணிப்பையை எடுத்து வந்தார். வேலி தாண்டிக் குதித்தார். மரத்திலிருந்த பழங்களைப் பறித்து  பையில் போட்டுக் கொண்டார். மீண்டும் வேலியைத் தாண்டி குதிக்கும் நேரத்தில், அந்த தோட்டத்தின் உரிமையாளரிடம் மாட்டிக் கொண்டார்.

"யார் அனுமதியுடன் இதைப் பறித்தாய்?"

"நான் பறிக்கவில்லை. பெரும் காற்று வீசியது. அப்போது இந்தப் பழங்கள் கீழே விழுந்து விட்டன" என்றார் சங்கரன்பிள்ளை.

"அப்படியானால் இந்த பையை எதற்காக எடுத்து வந்தாய்?"

"இதுவும் காற்றில் எங்கிருந்தோ பறந்து வந்தது"

"காற்றிலே பழங்களும், கோணிப்பையும் பறந்து வந்திருக்கட்டும். பழங்களை கோணியில் நிரப்பியது யார்?" என்று உரிமையாளன் கோபத்தில் கத்தினான்.

அதற்கு சங்கரன்பிள்ளை கலங்காமல் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு, "அதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது" என்றார்.

தவறு செய்யும் நம்மில் பலரும் இப்படித்தான். கையும் களவுமாக பிடிபட்டாலும், தவறை ஏற்காமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் போராடுவோம்.

உறவினர்கள், நண்பர்கள், மேலதிகாரி, சக ஊழியர்கள், முன்பின் அறிமுகமில்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல், தவறு செய்யும் போது அதை ஏற்க துணியுங்கள். அது உங்களைப் பற்றிய நன்மதிப்பையே உண்டாக்கும்.

தவறுகளை ஏற்றுக்கொள்வது என்பது எதிரிகளையும் நண்பர்களாக்கும். வாழ்க்கையின் அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்லும்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

எது உங்கள் இடம்?

அமெரிக்காவிற்கு ஒருமுறை போப் வந்திருந்தார். அவரை அழைத்து வர மிக உயர்ந்த கார் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். போப் பயணிக்கும் கார் என்பதால் அதில் வேறு யாரும் பயணிக்கவில்லை.

அது மிகவும் விலை உயர்ந்த சொகுசுக் கார். இதுவரை அப்படியொரு காரில் அவர் பயணம் செய்ததில்லை. நெடுஞ்சாலைக்கு வந்ததும், அந்தக் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

முதலில் தயங்கிய டிரைவர், போப் கேட்கும் போது மறுக்க முடியாமல் சம்மதித்தான். போப் காரை ஓட்ட ஆரம்பித்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்ட அந்த கார் சீறிப் பாய்ந்து சென்றது.

நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக சென்ற காரைப் பார்த்ததும், காவலர்கள் துரத்த ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் போப் சென்ற காரை மடக்கிப் பிடித்தனர். விசாரிக்கச் சென்ற காவல் அதிகாரி, போப்பை பார்த்ததும் பின் வாங்கினார். தனியே சென்று மேலதிகாரிக்கு போன் செய்தார்.

"சார், ஓவர் ஸ்பீடு கேஸ் ஒன்று உள்ளது. ஆனால் வண்டியில் இருப்பவரை விசாரிக்க தயக்கமாக உள்ளது"

"ஏன்? அவர் கென்னடி குடும்பத்தைச் சேர்ந்தவரா?

"இல்லை சார்"

"கிளின்டன் உறவினரா?"

"இல்லை சார்"

"புஷ்ஷிற்குத் தெரிந்தவரா?"

"பின்னால் அமர்ந்திருக்கும் அந்த வி.ஐ.பி யார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், அவரை போப்பையே தனக்கு டிரைவராக வைத்திருக்கிறார் சார்"

இப்படித்தான் யார் எந்த இருக்கையில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே சமூகத்தில் நம் அந்தஸ்து அமைகிறது.

உங்களுடைய சில திறமைகள் உங்கள் மேலதிகாரியிடம் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் தலைமைப் பண்பு அவரிடம் இருந்திருக்கக் கூடும்.

எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் முழுமையாக இருங்கள். மனப்பூர்வமாக செயலாற்றுங்கள். உங்கள் திறனுக்கேற்ற உச்ச இடத்தை சென்றடையலாம்.

திங்கள், 5 செப்டம்பர், 2016

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

விவசாயி ஒருவன் கடவுளிடம், "உனக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்த போது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீச செய்கிறாய். உன்னால் மிகவும் தொந்தரவாக உள்ளது. பேசாமல், இந்த வேலைகளை வேறு யாரிடமாவது கொடுத்து விடு" எனக் கூறி குறைபட்டுக் கொண்டிருந்தான்.

அவனது பேச்சைக் கேட்ட கடவுள், "இன்று முதல் வெளிச்சம், காற்று, மழை ஆகியவை உன் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்" என வரம் அளித்துவிட்டுப் போய்விட்டார்.

அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மழை, வெயில், காற்று எல்லாம் அவன் கட்டுப்பாட்டில் இயங்கியது. அடுத்த பருவத்தில், அவன் சொன்ன போது மழை பெய்தது; நிறுத்தச் சொன்ன போது நின்றது. ஈரமான நிலத்தை உழுது, சரியான வேகத்தில் காற்றை வீசச் செய்து விதைகளைத் தூவினான். பயிர்களும் நன்கு வளர்ந்து, அழகாக காட்சியளித்தன.

அறுவடைக் காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்துப் பார்த்துவிட்டு அதிர்ந்தான். உள்ளே தானியமே இல்லை. பிறகு ஒவ்வொரு கதிராக அறுத்துப் பார்த்தான். எதிலுமே தானியங்கள் இல்லை.

கோபத்தோடு கடவுளிடம் வந்து, "மழை, வெயில், காற்று அனைத்தையும் சரியான அளவில் பயன்படுத்தியும், பயிர் நன்கு விளையாதது ஏன்?" எனக் கேட்டான்.

கடவுள் புன்னகைத்துக் கொண்டே சொன்னார் : "நான் காற்றை வேகமாக வீசச் செய்யும் போது, கதிரெல்லாம் வேர்களை ஆழமாக பூமிக்குள் அனுப்பி நிலத்தைப் பிடித்துக் கொள்ளும். மழை குறைந்தால் வேர்களை தண்ணீர் இருக்கும் பக்கம் அனுப்பும். போராட்டம் இருந்ததால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வலுவாக வளர்ந்தன.

ஆனால், நீ வசதியாக எல்லாமே அமைத்துக் கொடுத்ததால் அதற்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. நன்கு வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அதற்குத் தெரியவில்லை".

நீங்கள் எதிர்பார்த்திராத பிரச்சனை ஏற்படும் போது, அதை அனுபவித்து கற்றுக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக எண்ணுங்கள். உங்கள் வளர்ச்சிக்கு அந்த அனுபவத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்கள்.

சிக்கல் வரும்போது தான், நம் திறமை என்ன, நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிய இயலும்.

வாழ்க்கை எல்லா விதத்திலும் நமக்கு ஏற்றார் போல் அமைந்து விட்டால், அதைப் போன்ற வெறுமை வேறு எதுவும் இல்லை.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

கோபத்தை வெளிப்படுத்துங்கள்

மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் ஒருவருக்கு வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. விமான நிலையத்திற்கு வந்து விமானத்தின் வருகைக்காக காத்திருந்தார்.

அப்போது விமானம் வர ஒரு மணி நேரம் தாமதமாகும் என்ற அறிவிப்பு வந்தது. அதற்கு மார்க்கெட்டிங் மேலாளர் "நல்லது"  என்றார். அதைக் கேட்ட அருகிலிருந்த சக பயணி ஒருவர், "விமானம் தாமதமாக வருவதற்குப் போய் நல்லது என்கிறீர்களே!" என்றார்.

அந்த மேலாளர், "எனக்கு வானிலை மோசமாக இருந்தாலோ, இயந்திர கோளறாக இருந்தாலோ விமானத்தில் பயணம் செய்வது பிடிக்காது. ஒருவேளை நாம் பயணம் செய்யப் போகும் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் அல்லது வானிலை மோசமாக இருக்கலாம். அதன் காரணமாகவே விமானம் தாமதமாக வர நேர்ந்திருக்கிறது. எனவே தான், நான் நல்லது எனக் கூறினேன்" என விவரித்தார்.

அவர் பேச்சைக் கேட்ட சக பயணி அமைதியடைந்தார். ஒரு மணி நேரம் கழிந்த பிறகு, விமானம் வர இன்னும் இரண்டு மணி நேரமாகும் என மற்றொரு அறிவிப்பு வந்தது. இப்போது அந்த மார்க்கெட்டிங் மேலாளர் "மிக்க நன்று" என்றார்.

சக பயணி, "இப்போதும் உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது? ஏன் மிக்க நன்று என சொன்னீர்கள்?" எனக் கேட்டார்.

"நான் வெளிநாட்டில் என் அலுவலகம் சார்பாக ஒரு கலந்தாய்வில் பங்கேற்கப் போகிறேன். அதில் நான் பேச வேண்டியவற்றை படித்து பயிற்சி செய்ய இப்போது எனக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால் தான் மிக்க நன்று எனக் கூறினேன்" என்றார் மார்க்கெட்டிங் மேலாளர்.

சற்று நேரத்திற்குப் பிறகு, மீண்டுமொரு அறிவிப்பு வந்தது. விமானம் வர இன்னும் தாமதமாகும் என்று. பயணிகள் அனைவரும் வெறுப்பின் உச்சத்தில் மிகுந்த கோபத்தில் இருந்தனர். சக பயணி மேலாளரிடம் வந்து, "இப்போதும் உங்களுக்கு கோபம் வரவில்லையா?" என்றார்.

மேலாளர், "அட போங்க சார்! முதல் இரண்டு அறிவிப்பு வந்த போது நான் நல்லது எனக் கூறியதே என் கோபத்தை குறைப்பதற்காக கையாண்ட யுக்தி தான்" என்றார் சலிப்புடன்.

நாம் கோபத்தில் இருக்கும் போது வெளியிடும் வார்த்தைகள் நம்மை மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் ஆற்றல் கொண்டது.

கோபமாக இருக்கும் நேரத்தில், உங்கள் கோபத்தை வெளிப்படுத்த இழி சொற்களைப் பேசாமல் எதிர்மறை வார்த்தைகளை உபயோகிக்க முயலுங்கள்.
இதன் மூலம் உங்களால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இலக்கை நோக்கி

இந்தியர்களின் பாரம்பரிய மிக்க கலைகளில் ஒன்றான வில் வித்தையை கற்க, வெளிநாட்டுக்காரர் ஒருவர் மிகுந்த ஆவல் கொண்டார். வில் வித்தையில் சிறந்து விளங்கும் குரு ஒருவரிடம் வந்து, "எனக்கு வில் வித்தையை கற்றுக் கொடுக்க முடியுமா?" எனக் கேட்டார்.

"என்னை நன்கு கவனித்து வில் வித்தையை கற்றுக் கொள். நீ எவ்வளவு ஆழமாக கவனிக்கிறாய் என்பதைப் பொறுத்தது நீ கற்றுக் கொள்வது" என்று குரு சொன்னார்.

முதல் நாள், "இலக்கை குறி வைத்து அம்பு எய்வது எப்படி?" என்பதை செய்து காட்டினார். பிறகு மாணவர்களை அழைத்து முயற்சி செய்ய சொன்னார். ஆனால் அந்த வெளிநாட்டுகாரருக்கு குறி தப்பிக் கொண்டே இருந்தது. பல நாட்கள் குரு செய்வதைப் பார்த்து அப்படியே செய்தாலும் குறி தவறவே செய்தது.

ஒருநாள் அவன் குறி தவறாமல் அம்பு எய்திவிட்டான். அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. குருவிடம் சென்று, "குருவே, நான் வில் வித்தையை கற்றுவிட்டேன்" என்று கூறி வில்லையும் அம்பையும் எடுத்து குறி பார்க்க தொடங்கினான். குரு, "நீ இன்னும் தேர்ச்சி பெறவில்லை" எனக் கூறினார்.

அம்பு எய்வதற்கு முன்பே ஏன் குரு அவ்வாறு கூறினார் என்று அவன் யோசித்தான். கடைசியில் தனக்கு வில் வித்தை கற்கும் திறமை இல்லை என முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினான். புறப்படுவதற்கு முன்னால் குருவிடம் சென்று அவர் சொல்லிக் கொடுக்கும் விதத்தை உற்று நோக்கினான். இதுவரை கவனித்திராத ஒன்றை அப்போது பார்த்தான்.

குருவிடம் சென்று, "இப்போது நான் வில் வித்தையை கற்றுவிட்டேன்" எனக் கூறி, வில் அம்பை எடுத்து குறி பார்க்க ஆரம்பித்தான். அம்பு சரியாக இலக்கில் பாய்ந்தது. இதை கவனித்த குரு, "நீ இப்போது தேர்ச்சி பெற்றுவிட்டாய்" என்றார்.

இலக்கை நோக்கி சரியாக அம்பை எய்வதை விட, இலக்கை நோக்கி வைக்கும் குறி மிக முக்கியமானது என்பதை உணர்ந்தான் அந்த வெளிநாட்டுக்காரன். இலக்கின் மீது தெளிந்த மனதோடு குறி வைப்பதே வில் வித்தை கலை.

இதே போல், நம் வாழ்க்கையிலும் பல இலக்குகள் இருக்கலாம். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது : நம் இலக்குகளை எந்தச் சூழ்நிலையில் அடைய முயல்கிறோம்? இலக்கை அடைய நாம் அமைதியான, மன ஓய்வுடன் இருக்கிறோமா? என்பதைத்தான்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

நல்ல ஈகோ... கெட்ட ஈகோ...

பிரம்மச்சாரி ஒருவன் பூனை ஒன்றை ஆசையாக வாங்கினான். அது மிகவும் துறுதுறுவென சுற்றித் திரிந்தது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தான்.

அப்போது அவனுக்கு நன்கு பழக்கப்பட்ட யோகி ஒருவரின் நினைவு வந்தது. உடனே பூனையை தூக்கிக்கொண்டு அந்த யோகியிடம் சென்றான்.

பூனையின் நடவடிக்கைகளைப் பார்த்த யோகி, "இது மிகவும் தந்திரமான பூனையாக இருக்கிறது. ஆகவே இதற்கு ஈகோ எனப் பெயர் வை" என்றார். யோகியின் யோசனைப்படி அந்தப் பூனைக்கு ஈகோ என்றே பெயரிட்டான்.

ஒரு சில மாதங்கள் கடந்தன. ஈகோவின் ஆட்டம் அதிகரித்து விட்டது. அவன் தூங்கும் நேரம் வயிற்றில் அமர்ந்து கத்தியது. அவன் கைகளைப் பிராண்டியது. ஓயாமல் கத்திக் கொண்டே அவனைச் சுற்றிச் சுற்றியே வந்தது.

எப்பொழுதும் அமைதியான சுழலில் வாழ்ந்து பழகிய அவனால், இதன் அட்டகாசத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனக்கு மனைவி இருந்தால் கூட இந்த அளவு கொடுமை செய்ய மாட்டாள் என நினைக்கும் அளவு துன்பத்தை அனுபவித்துவிட்டான் அவன்.

கடைசியில் பொறுமையை இழந்து, யோகியிடம் சென்று, "ஈகோவால் எனக்கு மிகுந்த தொல்லையாக உள்ளது" எனக் கூறினான். அவர், "அதை தூரமாக சென்று விட்டுவிடு" என்றான்.

அவன், "நான் விட்டாலும் அது மீண்டும் என்னிடமே வந்துவிடுகிறது" என்றான். யோகி, "அப்படியானால் அடர்ந்த காட்டிற்குள் சென்று விட்டுவிடு" என்றார்.

அவனும் பூனையை தூக்கிக் கொண்டு காட்டிற்கு சென்றான். நடுகாட்டிற்கு சென்ற பிறகு தான் பாதை மாறி வந்ததை உணர்ந்தான். அடர்ந்த காடு என்பதால், அவனுக்கு திரும்பும் வழி தெரியவில்லை; மிருகங்களை நினைத்து பயமும் உண்டானது.

கடைசியில், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பூனையை கீழே இறக்கி விட்டான். அது சரியான பாதையில் ஓடத் தொடங்கியது. அதைப் பின்பற்றிக் கொண்டே வீட்டிற்கு சென்றுவிட்டான். மறுநாள் யோகியிடம் சென்று காட்டில் நடந்ததைக் கூறினான்.

அதைக் கேட்ட யோகி சிரித்துக் கொண்டே, "உன் பூனைக்கு ஈகோ என்ற பெயர் பொருத்தமாக உள்ளது. மனதில் உள்ள ஈகோவும் இப்படித் தான் மனிதர்களை ஆட்கொண்டு இருக்கிறது. அவர்களே அதை அழிக்க முயன்றாலும் முடிவதில்லை. சில சமயம் அது மனிதர்களைத் துரத்துகிறது; சில சமயம் மனிதர்கள் அதைத் துரத்தும் நிலைக்கு ஆளாகிறார்கள். இந்த பூனை ஈகோவினால் சில நன்மைகள் நேரலாம். ஆனால், மனதில் உள்ள ஈகோ என்னும் குணத்தால் துன்பத்தை தவிர வேறு எதுவும் ஏற்படப் போவதில்லை" என்றார்.