ஜப்பானில் மிகச் சிறந்த திருடன் ஒருவன் இருந்தான். அவன் திருடுவதில் கைதேர்ந்தவன். அரசரின் கஜானாவில் கூட திருடுயிருக்கிறான். அவன் திருடிவிட்டு தனக்கான ஒரு அடையாளத்தை விட்டுச் செல்வான். இதனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அவனைப் பற்றி தெரியும். ஆனாலும் ஒருமுறை கூட அவன் பிடிபட்டதில்லை.
இப்போது அவனுக்கு வயதாகி விட்டது. அவனது மகன், "தந்தையே! உங்களுக்கு வயதாகி விட்டதால், இந்த திருடும் கலையை எனக்கு கற்றுத் தாருங்கள்" எனக் கேட்டான். தந்தை, "இந்தக் கலையை கற்றுக் கொடுக்க முடியாது. நீ புத்திசாலியாக இருந்தால் பார்த்து நீயாகவே தெரிந்து கொள்வாய். எனவே, இன்று இரவு என்னுடன் நீயும் திருட வா" என்றார் தந்தை.
அன்றிரவு, முதல் தடவை திருடப் போவதால் மகன் பயத்தோடு இருந்தான். ஆனால், அவன் தந்தை மிகச் சாதாரணமாக ஒரு மாளிகையின் சுவற்றை உடைத்து உள்ளே சென்றான். மகனும் பின் தொடர்ந்தான். தந்தை தன் சொந்த வீட்டிற்குள் செல்வது போல நடந்து சென்றான். மகன் சுற்றும் முற்றும் யாரும் வருகிறார்களா என கவனித்தபடி நடந்தான். தந்தைக்கு அந்த வீட்டின் எல்லா இடங்களும் தெரிந்திருந்தது. வீட்டின் உள்ளறையில் இருந்த பெரிய அலமாரியை நெருங்கினான்.
அலமாரியின் கதவை திறந்து, மகனை அழைத்து, "உள்ளே சென்று விலையுயர்ந்த பொருள்கள் இருக்கிறதா என்று பார்" என்றான். மகனும் உள்ளே சென்றான்.
தந்தை கதவை தாழிட்டு, "திருடன்! திருடன்! ஓடி வாங்க" என கத்தியபடி வந்த ஓட்டை வழியாக தப்பி ஓடிவிட்டான்.
மகனுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. "தந்தை ஏன் இவ்வாறு செய்தார்?" என குழம்பிப் போனான். வீட்டில் அனைவரும் முழித்துக் கொண்டனர். அலமாரியின் கதவும் தாழிட்டு உள்ளது. தான் பிடிபடுவது உறுதியாகி விட்டது. இத்தகைய சூழ்நிலையை அவன் கனவிலும் எதிர்பார்த்ததில்லை.
ஒருமணி நேரத்திற்குப் பிறகு, மகன் வீட்டை வந்தடைந்தான். அவனது தந்தை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். அவன் தந்தையை எழுப்பி, "என்ன மடத்தனம் இது?" என்றான். தந்தை, "நீ திரும்பி வந்துவிட்டாய். என்ன நடந்தது என்பதை நீ சொல்லத் தேவையில்லை. இப்போது உனக்கும் இந்த கலை தெரிந்துவிட்டது" என்றார். ஆனால் மகனோ என்ன நடந்தது என்பதை சொல்லியே தீர்வது எனப் பிடிவாதமாக இருந்தான். தந்தையும் கேட்கத் தொடங்கினார்.
"நான் அலமாரிக்குள் இருந்தேன். வீட்டிலிருந்த அனைவரும் திருடனை தேட ஆரம்பித்தனர். அந்த வீட்டின் வேலைக்காரி ஒரு விளக்கை கையில் வைத்துக் கொண்டு அலமாரி அருகே வந்ததை சாவி துவாரம் வழியாக பார்த்தேன். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. பூனையை போல் கத்தினேன். வேலைக்காரி பூனை அலமாரிக்குள் மாட்டியிருப்பதாக நினைத்து கதவை திறந்தாள். நான் விளக்கை அணைத்து, அவளை தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்தேன். அனைவரும் என்னை பின்தொடர்ந்து துரத்தி வந்தனர். அவர்கள் என்னை பிடிக்கும் அளவு நெருங்கி விட்டனர். அங்கே ஒரு கிணறு இருந்தது. அதன் ஓரத்தில் மிகப் பெரிய பாறை இருந்தது. சாதரணமாக என்னால் அந்த பாறையை அசைக்க கூட முடியாது. ஆனால் இன்று நான் அதை தூக்கி கிணற்றுக்குள் போட்டுவிட்டு ஒளிந்து கொண்டேன். துரத்திவந்தவர்கள் திருடன் கிணற்றில் விழுந்து விட்டதாக நினைத்து அங்கேயே நின்றுவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன்" என்று கூறி முடித்தான் மகன்.
தந்தை, "நான் உனக்கு கற்றுக் கொடுத்த பாடம் இதுதான். அபாயமான நிலையிலிருந்து, நீ தப்பிக்க வேண்டுமானால், உன்னால் சாதாரணமாக இருக்க முடியாது. உனக்குள் இருக்கும் முழு சக்தியும் வெளிப்பட்டுவிடும். இனி நீ உன் விருப்பம் போல் செயல்படலாம்" என்றார் தந்தை.