எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 31 அக்டோபர், 2016

தேவதூதர் எங்கே???

இமய மலையில் ஜென் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் சென்றார். அப்போது அவரிடம் "நான் ஒரு புகழ் பெற்ற மடாலயம் ஒன்றை நடத்தி வருகிறேன்" என்று கூறினார். குருவும் தன் மௌனத்தை கலைக்காமல் அவர் கூறியதை கேட்டு தலை அசைத்தார்.

மேலும் அந்த தலைவர் குருவிடம் "என் மனம் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளது. அதற்கான விடையை அறியவே உங்களைக் காண வந்தேன்" என்றும் கூறினான்.


குரு அதற்கு "என்ன குழப்பம்?" என்று கேட்டார். தலைவர் குருவிடம், "என் மடாலயம் மிகவும் அமைதியாக, பழைமை நிறைந்த புனிதமான இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தது. இதனை அறிந்து உலகின் பல பகுதிகளிலிருந்தும், இளைஞர்கள் வந்து தங்கி, பாடத்தை கற்றுக் கொண்டு செல்வர். ஆனால் இப்போதோ, யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் தான் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

அவ்வாறு வருத்தத்துடன் சொல்லும் போது, அவரது குரலில் வேதனை தெரிந்தது. அதன் பின் குரு தலைவரிடம், "இதற்கு அறியாமை தான் காரணம்" என்று சொன்னார். 

"அறியாமையா?" என்று கேட்டார் தலைவர்.

அதற்கு "ஆம், உங்கள் மத்தியில் தேவதூதர் ஒருவர் உள்ளார். அவரை நீங்கள் உணரவில்லை. அதனால் தான் இந்த குழப்பம்" என்று கூறி அனுப்பி வைத்தார்.

அவரும் யாராக இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே சென்றார். பின் தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களிடம் நடந்ததை சொன்னார். அவர்களும் யாரோ ஒருவர் தான் இங்கு தேவதூதர் என்பதை நினைத்து, ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள்.

பின் சிறிது மாதங்கள் கழித்து, அவரது மடாலயத்தில் கூட்டம் குவிந்தது. ஏனெனில் அவர்கள் இதுவரை எதையும் விரும்பி செய்யாமல், கடமைக்காக செய்ததால், யாரும் வரவில்லை. இப்போது அவர்கள் அனைவருக்கும் மரியாதைக் கொடுத்து, அனைத்தையும் மரியாதையோடு நடத்தினர்.
இவை அனைத்தையும் பார்த்த பிறகு தான் தலைவருக்கு, துறவி சொன்னது புரிந்தது. 

தேவ தூதர் வேறு எங்கும் இல்லை. அவரவர் மனதில் தான் இருக்கிறார். அதை நாம் உணர்ந்து, நம்மைப் போல மற்றவரையும் நேசித்தால், இறைவனை உணர முடியும் என்பது.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

நல்லவனா??? கெட்டவனா???

கடவுள் மிகவும் கோபக்காரர்.
ஒருநாள்  அவர் கோமோரா மற்றும் சோடாம் நகர
மக்கள் மீது கோபம் கொண்டு அந்த நகரங்களை அழிக்க முடிவு செய்கிறார். அப்போது ஒரு ஹசிடீஸ் ஞானி கடவுளை
அணுகி, "சோடாம் நகரத்தில் ஒரு நூறு நல்லவர்களும் ஒரு ஆயிரம் கெட்டவர்களும் இருப்பதாக வைத்துக்கொண்டால் நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த நூறு நல்லவர்களும் சேர்ந்து அழிந்து போவார்கள் அல்லவா?" எனக் கேட்டார்.

கடவுள் யோசித்தார். "நான் இப்படி
சிந்திக்கவில்லை. சரி போகட்டும், நான் அழிக்காமல் விடுகிறேன், ஆனால் நீ எனக்கு நூறு நல்லவர்களை காட்ட வேண்டும்" என்றார்.

ஞானி, "பொறுங்கள். என்னால் நூறு பேர்களை காட்ட முடியாமல் போகலாம். ஆனால் பத்து நல்லவர்கள் மட்டும் இருந்தால் அந்த நகரத்தை அழிப்பது முறைதானா? நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த பத்துபேரும் சேர்ந்து அழிந்து போவார்களே!" என்று கேட்டார்.

கடவுள், "நான் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். சரி நூறோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால் நீ எனக்கு பத்து நல்லவர்களை காட்ட வேண்டும்" என்றார்.

ஞானி, "சிறிது பொறுங்கள். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. ஒரே ஒரு நல்லவன் இருந்தால் நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நூறாயிரம் மக்களின் கெட்டதனத்தை விட ஒரே ஒரு நல்லவனின்
நல்லதன்மை மதிப்பு வாய்ந்தது அல்லவா? கேடு நினைப்பது ஒரு எதிர்மறையான குணம் அதற்கு
மதிப்பு கிடையாது. ஆனால் நல்லதன்மைக்கு மதிப்பு உண்டல்லவா? நீங்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடாது. அந்த ஒரு நல்லவனை நீங்கள் ஒதுக்கி விட
முடியாது" என்றார்.

கடவுள், "உன்னுடைய தர்க்கம்
சரியானதுதான். ஆயிரமோ, நூறோ, ஒரே ஒருவனோ, நான் நல்லவர்கள் பக்கம்தான். ஆனால் நீ ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதை நிரூபித்தாக வேண்டும்" என்றார்.

ஞானி, "இதோ நானிருக்கிறேன். நான் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை. என்னால் ஆயிரம் பேர்களையோ, நூறு பேர்களையோ கண்டு பிடிக்க
முடியாமல் போகலாம். நான் நல்லவனான கணத்திலிருந்து
யாரையும் நல்லவன் கெட்டவன் எனப்பிரிப்பதுப் பார்ப்பதை நான் நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும்
நல்லவரே! 

நான் யாரிடமும் கெட்டதனத்தை பார்ப்பதில்லை. ஏனெனில் கெட்டதன்மை என்பது ஒரு
நிழல் போன்றது. மேலும் அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது. கெடுதல் உண்டாக்கும்
செயல்களை அவன் செய்திருக்கலாம். ஆனால் அது அவனது இருப்பையே கெடுத்திருக்காது. நல்லவன் கெட்டவன் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்? 

தீர்மானிக்க வழியே இல்லை. சில நேரங்களில் மிக அழகானவர்களாக, நல்லவர்களாக,
புனிதர்களாக இருக்கும் மக்கள் செய்யும் செயல்கள் சில நேரங்களில் கெடுதலாக தோன்றுகிறது. மன்னிக்க
முடியாத விஷயமாக ஆகிறது. 

அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். நான் இரண்டு
நகரங்களிலும் இருக்கிறேன். வருடத்தில் பாதி நாள் அந்த நகரத்திலும் மீதி நாள் இந்த
நகரத்திலும் இருப்பேன். என்னையும் சேர்த்து நீங்கள் அழித்து விடப் போகிறீர்களா?"
எனக் கேட்டார்.

இதன்பின் கடவுள் அந்த இரண்டு
நகரங்களையும் அழிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டதாக ஹசிடீஸ் கதை கூறுகிறது.


நீ நல்லவனாகும்போது, நீ
தீர்மானிப்பதை விட்டு விடுகிறாய் மக்களை எடை போடுவதை விட்டு விடுகிறாய். ஏனெனில்
எடை போடுவது செயல்கள் மூலம்தான்.  
செயல்கள் நீர்மேல் வரையும் கோலம்
போன்றது. அதை நீ முடிக்கும் முன்னே அது அழிந்து விடும். இருப்பு செயல்களை கடந்தது.
அது அழியாதது. நீ செய்வதை பொறுத்தது அல்ல அது. நீ யார் என்பதே கேள்வி.


வெள்ளி, 28 அக்டோபர், 2016

கோபமும்... சந்தர்ப்பமும்...

ஒரு ஊரில், ஒரு செல்வந்தன் இருந்தான். அவனுக்கு, தான் என்ற அகங்காரம் அதிகம் உண்டு. மற்றவர்களை மிகவும் துச்சமாக மதிப்பான். அவன் ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைக் கண்டால் அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. அவர்கள் மேல் அவனுக்கு அப்படி ஒரு வெறுப்பு.

ஒரு நாள் அவன் ஒரு அவசர வேலை காரணமாக வேறு ஒரு ஊருக்குச் செல்ல நேரிட்டது. அந்த வேலை முடிந்து, சாப்பிடுவதற்காக, பக்கத்தில் உள்ள ஒரு பெரிய உணவகத்திற்குச் சென்றான். 

உள்ளே கூட்டம் அதிகமாக இருந்தது.  ஓரிரு இருக்கைகள் தவிர்த்து, அனைத்து இருக்கைகளிலும் மக்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
உள்ளே நுழைந்தவன் பார்வையில், ஒரு ஓரத்தில், அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது பகுதி மக்களில், ஒருவன் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்தான்.


அவனைக் கண்டவுடன், அவனையே அறியாமல் அவனுக்கு ஆத்திரமமும் வெறுப்பும் ஒரு சேர வந்தது. உடனே, அவன் அங்கிருந்த உணவு பரிமாறுபவனை அழைத்து, சத்தமாக, இந்த உணவகத்தில், அவனுக்குப் பிடிக்காத "அந்த ஒரு மனிதனைத் தவிர்த்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும், அவர்கள் சாப்பிடும் உணவுக்கான தொகையை நானே கொடுக்கிறேன்" மிகவும் சத்தமாக கூறினான்.

சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த செல்வந்தனுக்கும், அவனுக்குப் பிடிக்காத மனிதனைப் பழிவாங்கியதாக ஒரு பெரிய மகிழ்ச்சி வந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. இந்த செல்வந்தனுக்குப் பிடிக்காத அந்த மனிதன், எழுந்து, மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே அந்த செல்வந்தனுக்கு நன்றி கூறினான்.
இதைக் கண்ட அந்த செல்வந்தனுக்கு கோபம் அதிகமானது. 

நாம் அவனை அவமரியாதை செய்கின்றோம், ஆனால் அவன் அதைக் கண்டுகொள்ளாமால் திமிராக நன்றி சொல்கிறானே என்று எண்ணி, இன்னும் அதிகம் ஆத்திரப்பட்டு, உணவு பரிமாறுபவனை மீண்டும் அழைத்து, சத்தமாக, அவனுக்குப் பிடிக்காத மனிதனைக் காட்டி, "அந்த ஒரு மனிதனை தவிர்த்து, இங்கு உணவு உண்பவர்கள் அனைவருக்கும், இந்த மாதம் முழுவதும், அவர்கள் என்ன உணவு உண்டாலும் அதற்கான தொகையை நானே கொடுக்கிறேன்" என அறிவித்தான். அதற்காக உறுதியையும் அளித்தான். இதனால் அங்கு இருந்தவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்து அவனைப் பாராட்டினார்கள்.

அதனால் மிகவும் இறுமாப்புடன், தனக்கு பிடிக்காத மனிதனைப் பழிவாங்கிய மகிழ்ச்சியுடன் அவனை நோக்கினான். ஆனால், அந்தோ பரிதாபம், அந்த மனிதன் மீண்டும் எழுந்து, மிகவும் மகிழ்ச்சியுடன், தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டான். அதைக் கண்டவுடன், அந்த செல்வந்தனுக்கு கோபம் தலைக்கேறியது. 

உடனே அவனை நோக்கிச் சென்று, "உன்னை இவ்வளவும் அவமானப் படுத்தினேனே, உனக்கு சிறிது கூட கோபம் வரவில்லையே, ஏன்?" எனக் கேட்டான்.

அதற்கு அந்த மனிதன், "நான் ஏன் கோபப் படவேண்டும்.  உங்களைப் போன்ற வாடிக்கையாளர்கள் வந்தால் எனக்கு மிகவும் இலாபம் தானே, ஏனென்றால், இது என்னுடைய உணவகம், நான் தான் இதன் உரிமையாளர்" என்றான்!

கோபத்துடன் எழுபவன் நட்டத்துடன் அமரவேண்டும். முடிந்த வரை அடுத்தவர்கள் கோபத்திற்கு நாம் செவி சாய்க்க கூடாது. பகைவர்களின் கோபம் கூட நமக்கு நன்மை தரும் சந்தர்ப்பமாக மாறலாம். அதனால் எப்பொழுது பொறுமை இழக்காமல் எதையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.


வியாழன், 27 அக்டோபர், 2016

புத்தரின் வாழ்வில்...

புத்தர் ஞானத்தை பற்றி தெரிந்து கொள்ள கிளம்புவதற்கு முன்தினம்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தனது வாரிசை, கிளம்புவதற்குமுன் ஒருமுறை காண விரும்பினார். அதனால் அவர் தனது மனைவியின் அறைக்கு சென்றார். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். குழந்தை போர்வைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

அவர் போர்வையை விலக்கி குழந்தையின் முகத்தை ஒரு முறை காண நினைத்தார். ஏனெனில் அவர் திரும்ப வராமலும் போகலாம். அவர் புரிபடாத யாத்திரைக்குச் செல்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்று அவருக்கே தெரியாது.

ஆனால் அவர் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை. ஏனெனில் யசோதரா எழுந்து அழுது, "நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எதற்கு இந்த துறவறம்?
நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்று கதற தொடங்கிவிட்டால் என்ன செய்வது என்று பயப்பட்டார். அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும். தந்தை வந்துவிடுவார். எல்லாமும் முடிந்துவிடும். அதனால் அவர் நழுவி சென்றுவிட்டார்.


பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஞானமடைந்தபின் அவர் செய்த முதல் வேலை, தந்தையிடம், மனவியிடம், பனிரெண்டு வயதடைந்த மகனிடம் மன்னிப்பு கேட்க திரும்பி வந்ததுதான்.
அவர்கள் கோபமாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார். தந்தை மிகவும் ஆத்திரமாக இருந்தார். புத்தரை பார்த்தவுடன், அரைமணி நேரம் திட்டி தீர்த்தார். 

பின் திடீரென 'தான் கூறிய எந்த விஷயமும் தன் மகனை தொடவில்லை. அவன் ஒரு பளிங்குச்சிலை போல
நிற்கிறான்' என்பதை உணர்ந்தார்.
தந்தை தன்னை கவனித்தவுடன் புத்தர், “இதைத்தான் நான் விரும்பினேன். கண்ணீரை  துடைத்துக் கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். அரண்மனையை விட்டு சென்றபோது இருந்தவன் அல்ல நான். உங்களது மகன் முன்னரே இறந்து விட்டான். நான் தோற்றத்தில் உங்களது மகன்போல இருக்கலாம். ஆனால் எனது இருப்பு மிகவும் வேறுபட்டது. என்னைப் பாருங்கள்” என்றார்.

“நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அரைமணி நேரம் நான் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தேன். நீ எதுவுமே பேசவில்லை. நீ எவ்வளவு ஆத்திரக்காரன் என்று எனக்குத் தெரியும். உன்னால் அமைதியாக இருந்திருக்க முடியாது. இப்படி அமைதியாக இருந்தவிதமே நீ மாறிவிட்டாய்
என்பதை காட்டுகிறது. உனக்கு என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.

புத்தர், “சொல்கிறேன். அதற்குமுன் நான் போய் என் மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு வருகிறேன். நான் வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பார்கள்” என்றார்.

அவரை பார்த்தவுடன் அவர் மனைவி, “நீங்கள் மாறியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு வருடங்கள் மிகவும் துன்பமான காலங்கள். நீங்கள் சென்று விட்டதல்ல காரணம். நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்றதே காரணம். நான் உண்மையை தேட செல்கிறேன் என என்னிடம் கூறியிருந்தால் நான் உங்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் என நினைத்தீர்களா?

நீங்கள் என்னை கேவலப் படுத்தி விட்டீர்கள். நான் உங்களை தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேன்.  நான் நீங்கள் செல்ல அனுமதித்திருப்பேன். நான்
உங்களுக்கு விடை கொடுத்து, தேர் வரை வந்து வழியனுப்பி வைத்திருப்பேன்.
நீங்கள் அடைந்திருப்பது எதுவோ அதை இங்கிருந்தே அடைந்திருக்க முடியாதா என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் உங்களை நான் கேட்க துடித்துக் கொண்டிருந்த கேள்வி. இந்த அரண்மனை நீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா?” என்று கேட்டாள்.

இது மிக புத்திசாலித்தனமான கேள்வி. இதை கௌதம புத்தர் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. “நான் இங்கிருந்தே அடைந்திருக்கலாம். ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. இப்போது
என்னால் ‘இங்கிருந்தே அடைய முடியும், எந்த மலைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை, எங்கேயும் செல்ல
வேண்டியதில்லை’ என இப்போது சொல்ல முடியும். 

ஆனால் அப்போது இதைப்
பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே.
நான் உன்னைப் பற்றியோ உன் தைரியத்தைப் பற்றியோ சந்தேகபடவில்லை.  நீ
எழுந்துவிட்டாலோ, நம் குழந்தையை நான் பார்த்துவிட்டாலோ, “நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விடுவேன். என்னுடைய தந்தை விழித்துக் கொண்டு விட்டாலோ என்னால் போகவே முடியாது. நான் என்னைத்தான் நம்பவில்லை. உண்மையில் நான் என்னைப் பற்றித்தான் சந்தேகப்பட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று கூறினார்.

யசோதரா, “இதோ உங்கள் மகன், இவன் உங்களைப் பற்றிக் கேட்கும்
போதெல்லாம் நான், “பொறு, அவர் திரும்பி வருவார். அவரால் மனிததன்மையற்று, கருணையின்றி, கொடூரமாக நடந்து கொள்ள முடியாது. ஒரு நாள் அவர் திரும்பி வருவார். அவர் எதை உணர சென்றிருக்கிறாரோ அதற்கு நாள் பிடிக்கும். ஆனால் அதை உணர்ந்த உடனே அவர் செய்யும் முதல் விஷயம் இங்கே திரும்பி வருவதுதான்” என பதில் கூறுவேன். உங்களது மகனுக்கு நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்? அவனுக்கு உயிர் கொடுத்திருக்கிறீர்கள். வேறு என்ன அவனுக்கு கொடுக்கப் போகிறீர்கள்?”
என்று கேட்டாள்.

புத்தரிடம் பிச்சைப் பாத்திரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் தனது மகனை அருகில் அழைத்தார்.
ராகுலை அருகில் அழைத்து பிச்சைப் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்தார். “என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதுதான் என்னிடமுள்ள ஒரே விஷயம். இனிமேல் நான் என் கைகளையே பிச்சைப் பாத்திரமாக உபயோகப் படுத்தி பிச்சை எடுத்துக் கொள்வேன். இந்த
பிச்சைப் பாத்திரத்தை உனக்கு கொடுத்ததன் மூலமாக நான் உனக்கு சந்நியாசம் கொடுத்துவிட்டேன். நான் கண்டறிந்த மிகப் பெரிய அரிதான விஷயம் இதுதான். நீயும் இதை
கண்டறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றார்.

அவர் தனது மனைவியிடம், “நீயும் எனது சந்நியாசிகளின் கூட்டத்தில் ஒரு பாகமாக தயாராகு” என்றார். தனது மனைவிக்கும் தீட்சையளித்தார்.

புதன், 26 அக்டோபர், 2016

தேர்ந்தெடுங்கள்!!!

ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன. அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.

ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது.
அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்.


தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்னய்யா அநியாயம் இது..நான்பாட்டுக்கு சிவனேன்னு தானே மரத்துல இருந்தேன்..இப்படி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப் போறனே..அய்யய்யோ” என்று அழுதது.
அண்ணன் கிளை “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” என்றது.
தம்பி கிளை கடுப்பாகி விட்டது. ஆண்டவனில் ஆரம்பித்து அனைத்தையும் திட்டித் தீர்த்தது. "எவ்வளவு சொகுசா மரத்துல இருந்தேன், இப்படி பாறையிலயும் கரையிலயும் முட்டி மோதும்படி ஆயிடுச்சே" என்று புலம்பித் தள்ளியது. அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க்கொண்டிருந்தது.

கடைசியில் இரு கிளைகளும் கடலை நெருங்கின. தம்பி கிளை பதறியது. “அண்ணே, நம்ம கதை முடிஞ்சுச்சு. இந்த நல்லதண்ணில கரை ஒதுங்குனாக் கூட வேர் பிடிச்சு வளர வாய்ப்பிருக்கு. அங்கே கடலுக்குள்ள போனா கண்டிப்பா சாவு தான்” என்றது.

“ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமே” என்றது அண்ணன் கிளை. "தெரியுமா? அது தெரிஞ்சா சந்தோசமா வந்தே?” என்றது தம்பி கிளை.

“ஆமா, எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்காங்க தம்பி. அதனால் எப்படியும் நம்ம கதை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிஞ்சு போச்சு. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாத்து வெள்ளம். அப்போ நமக்கிருந்தது ரெண்டே வழி தான். ஒன்னு அதை அமைதியா ஏத்துகிட்டு, அந்த கஷ்டத்தையே ரசிக்கிறது. இன்னொன்னு அதை எதிர்த்துக்கிட்டு டென்சன் ஆகி சாவுறது. நான் முதல் வழியை தேர்ந்தெடுத்தேன். நீ இரண்டாவதை எடுத்தே. ரெண்டு பேருக்கும் ஒரே முடிவு தான். ஆனாலும் நான் சந்தோசமா சாவை நோக்கி வந்தேன். நீ அழுதுக்கிட்டே வந்தே. இங்க முடிவும், ஆரம்பமும் நம்ம கையில் இல்லை. இடைப்பட்ட பயணம்... அதுல நல்ல வழியை நாம தான் எடுத்துக்கணும்” என்றது.

தம்பி, “நீ சொல்றது சரி தான்ணே... நான் தப்பு பண்ணிட்டேன்”ன்னு சொல்லும்போதே கடல் வந்துவிட்டது. இருகிளைகளும் கடலில் சங்கமித்தன.

இதையே காப்மேயர் ‘மழை பெய்யட்டும்’ என்றார். எங்கோ அவசரமாகக் கிளம்புகிறீர்கள். மழை பிடித்துக்கொண்டது. இப்போது உங்களுக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான். ஒன்று, ’என்னய்யா மழை இது?’ என்று டென்சன் ஆவது. இரண்டாவது மழை பெய்யட்டும் என அமைதியாக மழையை ரசிப்பது. நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்?

செவ்வாய், 25 அக்டோபர், 2016

சுயநலம்...

ஒரு நாள் இரவு நண்பர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரு ஹோட்டலில் பெரிய விருந்து ஏற்பாடு செய்தனர். அவர்கள் விடியும்வரை நன்றாகக் குடித்து, உண்டு மகிழ்ந்தனர். அவர்கள் விருந்து முடிந்து போகும்போது அந்த ஹோட்டலின் முதலாளி, நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி கூறியபடி இருந்தார்.

இப்படிப்பட்ட கூட்டம் தொடர்ந்து வந்தால் தாங்கள் பணக்காரர்களாகிவிடலாம் என்று அவர் மனைவியிடம் கூறினார். அந்த விருந்தை ஏற்பாடு செய்தவர் ஹோட்டல் முதலாளியிடம், விருந்துக்கான தொகையைக் கொடுக்கச் சென்றார்.


அவரது வேண்டுதலைப் பார்த்து, 'தான் செய்கின்ற தொழிலும் சிறப்பாக நடைபெற வேண்டும்' என்று வேண்டிக் கொள்ளும்படி அந்த ஹோட்டல் முதலாளியிடம் கேட்டுக் கொண்டார். ஏனெனில் தான் செய்யும் தொழில் நன்றாக நடந்தால்தான் மீண்டும் மீண்டும் இந்த ஹோட்டலுக்கு வரமுடியும் என்றும் கூறினார்.

உடனே ஹோட்டலின் சொந்தக்காரர், “ அது சரி, உங்களது தொழில் என்ன ஐயா? ” என்று கேட்டார். அதற்கு அந்த விருந்து கொடுத்தவர், “நான் பார்ப்பது சுடுகாட்டில் வெட்டியான் வேலை. நிறைய பேர் செத்தால் தான் எனக்கு தொழில் நன்றாக நடக்கும் ” என்று கூறினான்.


திங்கள், 24 அக்டோபர், 2016

ரகசிய மந்திரம்!!!

ஒரு மனிதன் ஒரு வயதான குருவுக்குத் தினமும் சேவை புரிந்து வந்தான். உணவு தருவது, கிணற்றிலிருந்து நீர் இறைப்பது, கால்களை அமுக்கிவிடுவது போன்ற சேவைகள். வயதான குருவோ, “ஏன் உன் நேரத்தை வீண் செய்கிறாய்?“ என்று கூறுவது வழக்கம். ஏனெனில் அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ ஆசைதான் என்பது தெளிவாகப் புரிந்திருந்தது.

முடிவில் ஒருநாள் அந்த மனிதன்,  “நான் உங்களுக்கு சேவை புரியக் காரணம் – எனக்கு ஏதாவது ஓர் அதிசயம் செய்ய கற்றுக் தர வேண்டும்” என்றான்.
அதற்கு அந்த வயதான குரு, “எனக்கு எந்த அதிசயமும் செய்யத் தெரியாது. நீ உன் நேரத்தை தேவையின்றி வீண் செய்து விட்டாய். நீ வேறு யாராவது அதிசயங்கள் செய்ய தெரிந்தவரைப் போய் பார்” என்று கூறினார்.

ஆனால் அந்த மனிதனோ, "நீங்கள் எப்போதும் அதிசயங்களை நடத்திதான் வருகிறீர்கள். பிறர் என்னிடம் கூறியுள்ளார்கள் – நீ அவர் கூறுவதைக் கேட்காதே. அவருக்கு சேவை செய்துகொண்டே வா. ஒருநாள் அவர் உனக்கு ஏதாவது ரகசியம் கூறுவார். ஆனால் அதற்கு நீ ஏற்றவனாக இருக்கிறாயா என்று பார்த்துவிட்டுத்தான் கூறுவார் என்று கூறியுள்ளனர். ஒருவேளை நான் இன்னும் அதற்குத் தக்கவாறு கனியவில்லையோ என்னவோ?” என்று கூறினான்.

சில நாட்கள் கழித்து, அந்த வயதான குரு, இந்த மனிதன் இன்னும் தேவையேயின்றி வேலை செய்து வருவதைக் கண்டார். யாரோ இவன் மனதில் நான் அதிசயம் புரிபவன் என்ற எண்ணத்தை விதைத்து விட்டனர்.  “ஒருவேளை அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் அவை தாமாகவே நடப்பவை. நான் அவற்றை செய்வதில்லை” என நினைத்தார்

அந்த வயதான குரு, “நான் உனக்கு ஏதாவது ரகசியத்தைக் கூறினால் அன்றி நீ என்னை விட்டுப் போகமாட்டாய் போலிருக்கிறதே! நான் உனக்கு ஒரு ரகசிய மந்திரம் கூறுகிறேன்.  “ஓம் மணி பத்மீ ஹம் ” என்பதை எழுதித்தருகிறேன்” என்றார். இது முக்தி நிலை என்பதன் அர்த்தமாகும். 

அந்த வயதான குரு,  “முதலில் குளி. புத்தாடைகளை உடுத்திக்கொள். கதவுகளை மூடிக்கொண்டு தனியே ஓரிடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. பிறகு நீ எந்த அதிசயம் வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.

அந்த மனிதன் வேகமாக வெளியேறத் துவங்கினான். நன்றி என்று கூறக்கூட முயலவில்லை. உடனே கோயில் படிகளில் இறங்கி ஓடி விட்டான். அவன் பாதிதூரம் போனபோது, அந்த குரு, “நில்! ஒன்றைக் கூற மறந்து விட்டேன். இந்த மந்திரத்தைக் கூறும்போது குரங்கைப் பற்றி  நினைக்கவே கூடாது!“ என்று சத்தமாகக் கூறினார்.

அந்த மனிதன், “நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப் போகிறேன், என் வாழ்வில் இதுவரை நான் நினைத்ததே இல்லை” என்றான். குரு, “சரிதான், ஆனால் நினைவிருக்கட்டும்! குரங்கு மட்டும் கூடவே கூடாது. குரங்கின் நினைவு வந்தால் நீ மறுபடி ஐந்து தடவை மந்திரம் கூற வேண்டும்” என்றார்.


ஆனால் அவன் படிகளில் இறங்கத் துவங்கும் முன்பே குரங்குகளைப் பற்றி நினைக்கத் துவங்கி விட்டான். அவன், “அடக் கடவுளே! நான் இன்னும் மந்திரம் கூறக் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் குரங்குகள் வந்துவிட்டனவே!” என்று கூறினான். அவன் கண்களை மூடியபோதும் குரங்குகள் அவனைப் பார்த்து மூஞ்சியைக் காட்டின. 

அவன், “இது ஒரு விநோத மந்திரம்தான். நான் இன்னும் துவங்கவேயில்லை, அதற்குள்ளா?” என்றான்.
அவன் வீட்டைச் சென்றடைந்தபோது குரங்குகளால் சூழப்பட்டிருந்தான். அவன் எங்குப் பார்த்தாலும் குரங்கைத்தான் கண்டான். 

 அந்த மந்திரமான ஓம் மணி பத்மீ ஹம் என்ற நான்கு வார்த்தைகளை ஒரு முறை கூட முடிக்கவிட வில்லை. அத்தனை குரங்குகள். அன்றிரவு முழுவதும் அவன் முயன்றான். குரங்குகள் அவனை துரத்தின. கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போல் ஆகி விட்டது.

 அந்த மனிதன், “நான் எல்லா அதிசயங்களை பற்றியும் மறந்தே போய்விட்டேன். இந்த மந்திரத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு என்னை குரங்குகளிடமிருந்து விடுவியுங்கள். ஏனெனில் எனக்கு மந்திரம் போனாலும் குரங்குகள் போகாதோ என்று பயமாக இருக்கிறது. என்னால் இரவும் பகலும் அந்த குரங்குகளுடன் சண்டையிட முடியாது” என்று வேண்டினான்.

குரு, “அந்த மந்திரத்தை நீ என்னிடம் திருப்பி தந்து விட்டதால் இனிமேல் குரங்குகள் வராது. அவை மிகவும் நேர்மையானவை” என்றார். அந்த மனிதன் சென்று நாலாபக்கமும் பார்த்தபோது எங்குமே குரங்குகள் தென்படவில்லை.


சனி, 22 அக்டோபர், 2016

ESP என்னும் சக்தி!!!

1977 ம் வருடத்தின் துவக்கத்தில் பங்ளாதேஷ் நாட்டிற்கு அரசியல் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் திரு.புட்டோ அவர்கள் அங்கே மிகவும் பிரபலமாக இருந்த கிஸ்டி என்னும் மனிதரைச் சந்திக்க விரும்பினார். ஏற்பாடு செய்யப்பெற்றது. தனது பாதுகாவலர்கள் வெளியே நிற்க அவர் மட்டும் தனியாக உள்ளே சென்று கிஸ்டியின் முன் அமர்ந்தார்.

எதிரில் அமர்ந்திருப்பது சர்வ வல்லமை படைத்த ஒரு பிரதமர் என்றெல்லாம் கவலைப்படாமல் கிஸ்டி தன்னுடைய பேச்சை சாதாரணமாகத் துவக்கினார்
"மிஸ்டர், புட்டோ!"
புட்டோ உற்சாகமாகச் சொன்னார் "யெஸ்!"
அடுத்து கிஸ்டியின் வாயிலிருந்து வந்த வார்த்தை புட்டோவின் உற்சாகத்தையெல்லாம் பறிப்பதைப் போல இருந்தது.
"ஜாக்கிரதை! உங்களுக்குத் தூக்கு காத்திருக்கிறது!"

புட்டோ அதிர்ச்சியடைந்தாலும், கணத்தில் அதை மறைத்துக் கொண்டு, தொடர்ந்து சொன்னார்
"என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். எனக்கு மூளை இருக்கிறது!"

கிஸ்டி விடமல் சொன்னார் :
"தூக்கில் தொங்கும் போது உங்கள் மூளையும் சேர்ந்துதான் தொங்கப் போகிறது"
அதற்குப் பிறகு சற்று நேரம் மரியாதை நிமித்தமாக சில நிமிடங்கள் பேசி விட்டு புட்டோ திரும்பி விட்டார்.

கிஸ்டி சொன்னது அப்படியே இரண்டு வருடங்களுக்குள் பலித்தது. 4.4.1979ம் தேதியன்று புட்டோ பரிதாபமாகத் தூக்கில் தொங்க விடப்பட்டார். அப்போது லண்டனில் படித்துக் கொண்டிருந்த புட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ இதைக் கேள்வியுற்று, தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு கிஸ்டியைச் சென்று சந்தித்து அழுதார்.


அப்போது கிஸ்டி அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு, நடக்கப்போகின்ற இரண்டு விஷயங்களைச் சொன்னார்.
"பழங்கள் வெடித்துச் சிதறும்போது - நீங்கள் பிரதமர் ஆவீர்கள்" என்றார். 

அதேபோல ஜெனரல் ஜியா சென்ற விமானத்தில் பழக்கூடையில் வைக்கப்பட்டிருந்த
வெடிகுண்டு வெடித்ததால் விமானம் விபத்துக்குள்ளானது. ஜியா அகால மரணமடைந்ததால், பெனாசிர் பிரதமரானார்.

இவை அனைத்துமே துல்லியமாக அவைகள் நடக்கும் முன்பே கிஸ்டிக்கு எப்படித் தெரிந்தது?
அதுதான் ESP யின் சக்தி!

 சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP என அறியப்படுகின்றது. இந்த ESP சக்தியில் :
இறந்த காலத்தை சொல்பவர்கள்,
எதிர்காலத்தை சொல்பவர்கள்,
நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்,
பெளதீக விதிகளை மீறிய செயல்களை செய்து காட்டுபவர்கள் என
இன்னும் பலவகை உள்ளது.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

சிறந்த மனிதன்!!!

ஒரு பேராசிரியர் இருந்தார். பாரீஸ் பல்கலைக்கழகத்தின், தத்துவத் துறையின் தலைவர் அவர். ஒருநாள் தன் மாணவர்களிடம், "நான்தான் இந்த உலகத்திலேயே மிகச் சிறந்தவன்" எனக் கூறினார். மாணவர்களால் இதை நம்பமுடியவில்லை. 

பல்கலைக்கழகத்திலேயே மிக அலட்சியப்படுத்தப்பட்ட துறை அவர் துறை தான். அவரிடம் படிப்பதற்கு கூட யாரும் வரமாட்டார்கள். அவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டே, "நீங்கள் தான் உலகத்தில் மிகச் சிறந்தவரா? அப்படியானால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் எல்லோரும் சிறந்தவர்கள் இல்லையா?" எனக் கேட்டனர்.

அவர், "பொறுங்கள். நான் ஆதாரம்  இன்றி எதையும் சொல்லமாட்டேன். இதை நிரூபித்து காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார். மறுநாள் வகுப்பிற்கு உலகவரைபடத்தை கொண்டு வந்தார்.


மாணவர்களை அழைத்து, "உலகத்திலேயே மிகச் சிறந்த நாடு எது?" எனக் கேட்டார். 
"பிரான்ஸ்" என்றார்கள். காரணம் அவர்கள் அனைவரும் பிரெஞ்சுக்காரர்கள்.

"பிரான்ஸில் மிகச் சிறந்த நகரம் எது?" என்றார்.
"பாரிஸ்" என்றார்கள். அவர்கள் எல்லோரும் பாரீஸ் நகரத்தை சேர்ந்தவர்கள்.

"பாரீஸில் மிகச் சிறந்த இடம் எது?" என்றார்.
"பல்கலைக்கழகம்" என்றார்கள். பாரீஸின் புகழ் பெற்ற அறிவுக் கோவில் அது.

"பல்கலைக்கழகத்தில் சிறந்த துறை எது?" என்றார். 
"தத்துவத் துறை" என்றார்கள். அதுதான் மிகப் பழமையான துறை.

"நான்தானே அந்த துறையின் தலைவர். அப்படியானால் நான் தான் உலகின் மிகச் சிறந்த மனிதர்" என்றார்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள் தான். அதை உணர்ந்துவிட்டால், எத்தகைய சூழ்நிலையும் எதிர்கொள்ளும் சக்தி தானாக வந்துவிடும்.


வியாழன், 20 அக்டோபர், 2016

பார்வை

ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன். அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “ என்று கூறிவிட்டு இறந்து விடுகிறாள்.

அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல் வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால், அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள். அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் கூறுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள்.  இதனால், ஒவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்.  அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய்" என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்.

அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், “உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை, அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீ விடை சொல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன். அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.

"சரி, என்ன உன் கேள்வி?" என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய அள்ளி, ”என் கையில் எத்தனை கடலைகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான். அவ்வளவுதான், அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!

ஒரு கதை சொல்வதும் அதை புரிந்து கொள்வதும் ஒரு கலையாம். பெரும்பாலும் மக்கள், கதைகளில் வரும் வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின் அடிப்படைக் கருத்தை (மையக்க புரிந்துகொள்வதில்லையாம். அது எப்படி என்கிறீர்களா? 

உதாரணத்துக்கு இக்கதையையே எடுத்துக்கொள்வோம். இக்கதையைக் கேட்ட/படித்த சிலர் என்ன சொன்னார்கள் தெரியுமா? 
“யாருக்குமே எல்லாம் தெரிவதில்லை. பேய்களுக்கு கூடத்தான். சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல”

“அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது என்றால், எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது என்று அவன் எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள் எதிர்த்து நின்று தைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது”

“அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேய்! அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை”

”அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும் அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது”

”நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது”

இன்னும் சிலர்…..
“எனக்கு இந்தக் கதையின் முடிவு பிடிக்கவில்லை. நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் நான் இந்த கதையை படிக்கத் தொடங்கினேன். கடைசியில் சப்பென்றாகிவிட்டது”

ஒரே கதையை படித்தவர்களின் புரிதல்கள் எத்தனை விதத்தில் இருக்கிறதென்பதை கவனித்தீர்களா? ஆக, கதை ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில் கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது.

இதுபோலத்தான் நம் பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்! 

ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் பிரச்சனைக்கான தீர்வுகள் வேறுபடுகின்றன. பிறரிடம் பகிர்ந்து கொள்ளும்போது மட்டுமே பிரச்சனையின் பரிணாமமும், சரியான தீர்வும் புலப்படும்.

(படித்ததில் பிடித்தது)

புதன், 19 அக்டோபர், 2016

உண்மையான அமானுஷ்யம்!!!

"சொல்லும்மா, என்ன ஆச்சு?" நூற்று பத்து என்று காட்டிய தெர்மா மீட்டரை உதறிக் கொண்டே கேட்டார் டாக்டர்.
"இவரு என் புருஷங்க. ஊரை விட்டு பத்து மைல் தள்ளியிருக்கிற கரும்பாலையில வேலை பார்க்கிறாரு. தினமும் வீட்டுக்கு லேட்டாதான் வருவாரு. நேத்து ராத்திரி ரெண்டு மணி ஆயிட்டது. இவர காணும். நான் பதறிப் போய் நாலு பேர கூட்டிக்கிட்டு ரோட்ல தேடிக் கிட்டே போனா நல்லூர் கேட் பக்கத்துல இவரு ரோட்டுல விழுந்து கிடக்குறாரு. இவர பேய் அடிச்சிடுச்சுங்க" என்றாள்.

"என்னது, பேயா ?" அதிர்ந்தார் டாக்டர்.


மனைவி கொடுத்த தைரியத்தில், மெதுவாக பேச தொடங்கினான் அவன். "ஆமாம் டாக்டர். நேத்து பாக்டரியை விட்டு கிளம்ப பத்து மணி ஆயிருச்சுங்க.  வழியெல்லாம் கும்மிருட்டு. பாலத்துக்கிட்ட ஒரு வயசான கிழவி உட்கார்ந்தபடியே ரெண்டு கையாலும் நடந்துக்கிட்டே ரோட்டை கிராஸ் பண்ணிச்சு.  நெத்தில பட்டையா துண்ணூறு. வெத்தில போட்ட பல்லுன்னு பாக்கவே பயங்கரமா இருந்திச்சு. சரி, ராத்திரில கிழவி போகுதுன்னு மனசை தேத்திக் கிட்டு சைக்கிளை கிளப்புனேன். மனசுல அந்த கிழவி முகம் வந்துகிட்டே இருந்தது.

நம்ம நல்லூர் ரெயில் கேட் தாண்டி கொஞ்ச தூரம் போயிருப்பேங்க... சொன்னா நம்ப மாட்டீங்க, அந்த கிழவி மறுபடியும் ரோட்டை க்ராஸ் பண்ணுது. ஆனா இந்த முறை இடது வலமா! அப்படி கிராஸ் பண்றப்ப, ஒரு தடவ என்னய பார்த்து சிரிச்சுது பாருங்க... யம்மாடி! என் ஈரக்கொலையே வெளியில வந்த மாதிரி ஆயிட்டது. அப்ப அலறிக்கிட்டு சைக்கிளோட விளுந்தவன்தான்...!" எனக் கூறினான்.

"முருகன்! பேய், பிசாசெல்லாம் ஒண்ணுமில்லே! நீங்க ரொம்ப பயந்ததினால, பிரமை ஏற்பட்டிருக்கு. இந்த மாத்திரைகளை சாப்பிடுங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துக்குங்க. ரெண்டு நாள்ல சரியாயிடுவீங்க" என்றார் டாக்டர்.

மறுநாளும் காய்ச்சல் தொடர்ந்தது. உடனடியாக பேயோட்டுவதற்கு பூசாரி வரவழைக்கப்பட்டார். முருகனுக்கு வேப்பிலையடிக்கப்பட்டது.

ஒரு வார லீவுக்கு பிறகு, வேலைக்குச் சென்றான். அவன் நண்பன் விஷயம் தெரிந்து ஓடோடி வந்தான்.
"மடையா! அந்த கிழவி பேயுமில்லே. பிசாசுமில்லே! நல்லா உசுரோடதான் இருக்குது. நீ ரெண்டு இடத்துல பார்த்ததும் ஒரே கிழவிதான். மொதல்ல பார்த்தது அது பஸ்ல ஏறத்துக்கு முன்னால. அடுத்தது, அது பஸ்ஸை விட்டு இறங்கிப் போகும் போது" என்றான். முருகனுக்கு உடனே காய்ச்சல் விட்டுவிட்டது.

பயந்த சுபாவமுடியவர்களுக்கு இதைப் போன்ற சில அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
கண் முன்பாக ஏதேனும் ஒரு மனிதரின் உருவம் தோன்றுவது போல் இருப்பதற்கு "மென்டல் ஹலூசினேஷன்" என்று பெயர்.  பயத்தின் உச்சத்தில், அந்த கற்பனை உருவம் ஒரு முப்பரிமாண பிம்பமாக மாறி கண்முன் நிஜ உருவம் போல் தோன்றும்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

அதிர்ஷ்டமா??? வாய்ப்பா???

பெரிய பணக்காரன் ஒருவன் புதிய வீடு ஒன்றை கட்டினான். நான்கு அறைகள் போட்டு மாடி மேல் மாடி எழுப்பி, உச்சி பரணில் யாருக்கும் தெரியாமல் தங்க நகைகளையும், காசுகளையும் வைத்து மூடிவிட்டான். பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்று யாரிடமும் சொல்லாமல் இருந்தான். ஆனால் திடீரென்று இறந்துவிட்டான்.


நான்கு வருடங்கள் ஆனது. இரவு நேரங்களில் அந்த வீட்டில் "புடிச்சிக்கோ புடிச்சிக்கோ" என்று குரல் கேட்டது. பிள்ளைகள் பயந்து வீட்டை வாடகைக்கு விட்டனர். தொடர்ந்து இரவு நேரங்களில் "புடிச்சிக்கோ புடிச்சிக்கோ" என்று குரல் கேட்டது. வாடகைக்கு வந்தவர்களும் பயந்து வீட்டை காலி செய்தனர் . வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட முடிவு செய்து  விற்க முயன்றும் யாரும் வாங்க வில்லை. 

அந்த ஊரில் உள்ள ஏரிக்கரையில் ஒருவன் புதிதாக டீக்கடை வைத்து இருந்தான். மழைக்காலம் வந்தவுடன் அந்த வீட்டின் தாழ்வாரத்தில் கடை வைத்து கொள்கிறேன் என்று கேட்க,  'தாரளமாக வைத்துகொள்' என்று கூறி வீட்டு சாவியை   கொடுத்தனர். 

இரவு நேரம் வீட்டினுள் படுக்கும் பொது "புடிச்சிக்கோ புடிச்சிக்கோ" என்று குரல் கேட்டது. டீக்கடைக்காரன் மறுநாள் சாமியார் ஒருவரிடம் சென்று, நடந்ததை கூறினான். அவர் டீக்கடைக்காரனுக்கு தைரியம் கூறி, "இரவு நேரத்தில் 'புடிச்சிக்கோ புடிச்சிக்கோ' என்று சத்தம் கேட்கும் போது நீ, 'போடு புடிசிக்கிறேன்' என்று கூறி கையை நீட்டு" என்று கூறி அவன் கையில் திரூநீற்றைக் கொடுத்தார்.

அன்று இரவு அவன் சுவாமியை நினைத்து கொண்டு படுத்து இருந்தான். அப்போது 'புடிச்சிக்கோ புடிச்சிக்கோ' என்று சத்தம் கேட்டது. அவனும்  தைரியமாக, 'போடு பிடித்து கொள்கிறேன்' என்று கூறி கையை நீட்டினான். உடனே மேல் இருந்த சுவர் வெடித்து தங்க நகைகள் கீழே விழுந்தது. 

அதை அவன் யாருக்கும் தெரியாமல் அப்படியே வைத்து ஒரு வருடம் கழித்து அந்த வீட்டையே வாங்கி நன்கு தொழில் செய்தும் தான தருமங்கள் செய்தும் நன்கு வாழ்ந்தான்.

இதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம் அல்லது வாய்ப்பு என்றும் சொல்லலாம். ஆனால் அதை சரியான நேரத்தில் பயன்படுத்துவதில் தான் வாழ்க்கை உள்ளது.

திங்கள், 17 அக்டோபர், 2016

வண்ணமும்... எண்ணமும்...

அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூட வாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பலூன் வியாபாரி வண்ண வண்ண பலூன்களைப் பறக்கவிட்டிருந்தான். தன் வியாபாரம் குறையும் போதெல்லாம் கொத்துக் கொத்தாக சில பலூன்களை வானத்தில் பறக்க விடுவான். அதைப் பார்த்த குழந்தைகள் சந்தோஷமாக, கூட்டம் கூட்டமாக அவனை நோக்கி ஓடி வருவார்கள். வியாபாரம் பிரமாதமாக நடந்தது.

அவனிடம் பச்சை, நீலம், சிகப்பு, மஞ்சள், கருப்பு என பலவித வண்ணங்களில் பலூன்கள் இருந்தன. குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். ஆனால் எந்த குழந்தையும் கறுப்பு நிற பலூனை மட்டும் கேட்கவே இல்லை. அது சோகமாய் வண்டியிலேயே குதித்துக் கொண்டிருந்தது.


ஒரு குழந்தை பலூன் வியாபாரியை பார்த்து, "உயரத்தில் பறக்கும் மற்ற நிற பலூன்கள் மாதிரி இந்த கருப்பு பலூனும் பறக்குமா? அல்லது கறுப்பால் உயரமாக பறக்க முடியாதா?" எனக் கேட்டது.

வியாபாரி சிரித்துக் கொண்டே, "கறுப்பாக இருப்பது உயரப் பறப்பதற்கு ஒரு தடையே அல்ல. மற்ற வண்ண பலூன்களைப் போன்றே கறுப்பு பலூனும் உயரத்தில் பறக்கும். உள்ளே இருக்கும் காற்றுதான் முக்கியம்" என்றான்.

அந்த குழந்தை, "அப்படியானால் அந்த கறுப்பு பலூனை எனக்கு தாருங்கள்" என்று மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றது. 

அந்தக் குழந்தை யார் தெரியுமா?

அமெரிக்காவின் நிறவெறியை தகர்த்து உடைத்த மார்ட்டின் லூதர் கிங்.


உங்கள் நிறத்தை, அழகை, அறிவை மற்றவர்களோடு ஒப்பிட்டு, தாழ்வாக நினைத்திருக்கிறீர்களா?

தாழ்வு மனப்பான்மை என்னும் பூதம் உங்களுக்குள் இருந்தால், அதை கொன்று விட்டு வெளியே வாருங்கள். ஒரு அற்புதமான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது...



ஞாயிறு, 16 அக்டோபர், 2016

கணிப்போம்... புறக்கணிப்போம்...

கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டு விட்டு, ஆசையை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்ட பட்டினத்தாரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது.


ஒருநாள் பட்டினத்தார் வயல் வரப்பில் தலையை வைத்து படுத்திருந்தார். அந்த வழியாக இரண்டு பெண்கள் நடந்து வந்தார்கள். அவர்களில் ஒருத்தி, "யாரோ மகான் போல் உள்ளது" என்றபடி அவரை வணங்கி, வரப்பிலிருந்து இறங்கி கீழே நடந்தாள்.

மற்றொருத்தியோ, "தலையணை வச்சு தூங்குற சுகம் மாதிரி வரப்புல படுத்து தூங்குறான். ஆசை பிடிச்சவன். இவனெல்லாம் சாமியாரா?" என கடுமையாக தாக்கி பேசினாள். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்தார் பட்டினத்தார். "இந்த அறிவு இது நாள் வரை நமக்கு வரவில்லையே!" என நினைத்து வரப்பிலிருந்து இறங்கி, கீழே தலையை வைத்து படுத்தார்.

சற்று நேரம் கழித்து, மீண்டும் அந்த இரண்டு பெண்கள் அதே வழியில் வந்தனர். கீழே படுத்திருந்த பட்டிணத்தாரை பார்த்து, முதல் பெண் "நீ சொன்னதை கேட்டு, கீழே இறங்கி படுத்துட்டாரு. இவர் பெரிய மகான் தான்" என்றாள்.

ஆனால் மற்றொருத்தி, "தன்னைப் பத்தி யாரு என்ன பேசுறாங்கன்னு கேட்டு, அதைப் பத்தி கவலைப்படுறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?" என்றாள். இதைக் கேட்ட பட்டினத்தாருக்கு தலை சுற்றியது. 

நாம் எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும்.

தரமானவர்களின் விமர்சனங்களை மதிக்க வேண்டும். நாம் பாதிக்கப்பட வேண்டும் என்றே பிறர் செய்யும் விமர்சனங்களால் நாம் பாதிக்கப்படக் கூடாது. அப்படிப்பட்ட விமர்சனங்களை புறக்கணியுங்கள்.

சனி, 15 அக்டோபர், 2016

கனவுகள் மெய்படும்...

அவன் ஒரு உறுதியான இளைஞன். நிறைய சாதிக்க வேண்டும் என்ற வெறி அவனிடம் இருந்தது. ஆனால், அவன் அப்பா ஒரு சாதரண நெசவாளி. சராசரி அப்பாவின் மனநிலையில் தனது தொழிலில், தன் மகனையும் சிக்க வைக்க அவர் தீர்மானித்தார். அவனும் சிக்கிக் கொண்டான். அவன் கைகள் ஆடைகளை நெசவு செய்தபோதும் மனமோ கனவுகளை நெசவு செய்தது!

என்றாவது, எதிலாவது சாதிக்க வேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான். அவனுக்கு கடல் பயணம் மிகவும் பிடிக்கும். தன் நாட்டில் இருந்து, தரை மார்க்கம் தவிர, கடல் வழியாக இந்தியாவை அடைய வேண்டும் என்ற கற்பனையில் ஆழ்ந்தான். அதற்கான முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கினான்.


பல நாட்டு அரசர்களை சந்தித்தான். ஆனால் அவனுக்கு உதவ யாரும் தயாராக இல்லை. பத்து வருட போராட்டத்திற்கு பின், ஸ்பெயின் நாட்டு அரசி இஸ்பெல்லாவுக்கு அவன் மேல் நம்பிக்கை வந்தது. மூன்று கப்பலும், பயணத்திற்கு தேவையான பொருள்களையும் தந்து உதவினாள்.

அடுத்த பிரச்சனை ஆரம்பமாயிற்று. முன்பின் தெரியாத கடல்வழி பயணத்திற்கு, உயிரைப் பணயம் வைக்க எந்த கப்பல் மாலுமியும் தயாராக இல்லை. சிறை தண்டனைக் கைதிகளை அழைத்துப் போக தீர்மானித்தான். காற்றையும், கடலையும் கிழித்துக் கொண்டு அவன் கனவுப் பயணம் ஆரம்பமானது.

அடுத்த குழப்பம் தொடங்கியது. கிழக்கே இருக்கும் இந்தியாவை அடைய புறப்பட்ட பயணம் வழி தவறி மேற்கே நோக்கி சென்று விட்டது. ஆனால் அந்த தவறான பயணம் தான் 'அமெரிக்கா' என்ற நாட்டை கண்டுபிடிக்க காரணம் ஆயிற்று. அந்த ஏழை நெசவாளி - கொலம்பஸ் கண்ட கனவு நிஜமானது. ஒரு புதிய சரித்திரம் உருவானது.

நம்பிக்கை உள்ளவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதும் நிரூபணமாயிற்று.

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால், கொலம்பஸ் மாதிரி அமெரிக்காவை கண்டுபிடிக்க வேண்டாம்... உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கொலம்பஸை கண்டுபிடியுங்கள்...

வெள்ளி, 14 அக்டோபர், 2016

திருடனும் மகான் ஆகலாம்

ஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான். நள்ளிரவில் வீடுகளில் புகுந்து திருடுவது அவன் வழக்கம். திருடித் திருடி அவன் திருட்டுத் தொழிலில் தேர்ந்தவனாகி விட்டான்.
ஊரில் உள்ள எல்லா வீட்டிலும் அவன் திருடியிருக்கிறான். ஆனால் அரசனுடைய அரண்மனையில் மட்டும் அதுவரை அவன் திருடியதில்லை.

அரண்மனையில், அதுவும் அரசனிடத்தில் ஏதாவது திருடிவிட வேண்டும் என்று ஒரு நாள் தோன்றியது. அரசனுடைய பொருளைத் திருடிக்கொண்டு வந்துவிட்டால் தான் பெரிய திறமைசாலி என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று அவன் நினைத்தான்.

திட்டமிட்டபடி அவன் ஒரு நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்தான். எப்படியோ அரண்மனைக் காவலாளிகள் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்து விட்டான். அரசனுடைய படுக்கையறை அருகிலும் சென்று விட்டான். அப்போது அரசன் அரசியுடன் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் உறங்கும் வரை திருடன் வெளியே ஓர் இருட்டு மூலையில் ஒளிந்து காத்துக் கொண்டிருந்தான்.


அந்த அரசன் தெய்வபக்தியுடையவன். தெய்வபக்தியைக் காட்டிலும் அவனுக்கு அடியார் பக்தி அதிகம்.  அந்த அரசனுக்கு ஓர் அழகான மகள் இருந்தாள். அன்று இரவு, தன் மகள் திருமணத்தைப் பற்றி அரசனிடம் பேசத் தொடங்கினாள்.
“அரசே, நம் மகள் திருமண வயதையடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை ஒருவனைப் பார்க்க வேண்டுமே!” என்றாள் அரசி.
“ஆம்! நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்க வேண்டும்” என்றார் அரசர்.

”அப்படியானால்?” எனக் கேட்டாள் அரசி.
“நம் ஊர் ஆற்றங்கரையிலே சாமியார்கள் இருக்கிறார்கள்  அல்லவா? அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் பிறந்த நம் மகளைத் தெய்வபக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே விரும்புகிறேன்” என்றான் அரசன். அரசரை என்றுமே எதிர்த்துப் பேசியறியாத அரசியும் அதற்கு சம்மதித்தாள்.
"நாளையே நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றான் அரசன்.

வெளியில் ஒளிந்திருந்த திருடன் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். நான் இங்கு வந்த நேரம் நல்ல நேரம்தான். இளவரசியை மணம் புரியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் இப்போது திருட வேண்டியதில்லை. நாளை ஆற்றங்கரைக்குப் போய் சாமியார்களோடு சாமியாராய் உட்கார்ந்துவிட வேண்டியதுதான். வாய்ப்பு இருந்தால் இளவரசியின் கணவன் ஆகிவிடுவேன்” என்று எண்ணிக்கொண்டே திருடன் அங்கிருந்து கிளம்பினான்.

மறுநாள் அவ்வூர் ஆற்றங்கரையில் சாமியார் வேடத்துடன் போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். அரண்மனை அதிகாரிகள் வந்தார்கள். ஆற்றங்கரையில், மரங்களின் அடியில் ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டிருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்றார்கள். “ஐயா, தாங்கள் எங்கள் அரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டார்கள்.

குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் அரசருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக்கூறியும் அந்தச் சாமியார்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்துவிட்டதைக் கவனித்த திருடன், தான் உடனே ஒப்புக்கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முதலில் மறுத்து விட்டான்.

ஆனால் அதிகாரி மேலும் மேலும் வேண்டியபோது இப்பொழுது ஒப்புக் கொள்ளலாமா, இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக்கொள்ளலாமா?" என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந்தான்.
அதிகாரிகள் அரசனிடம் திரும்பிச் சென்றார்கள். “மன்னவா, எந்தச் சாமியாரும் இளவரசியைத் திருமணம் புரிய ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இளம் வயதுடைய ஒரு சாமியார் இருக்கிறார். தாங்களே நேரில் வந்து கேட்டுக்கொண்டால் ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளக் கூடும்” என்றார்கள். இதைக் கேட்ட அரசன் உடனே ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான்.

அதிகாரிகள் சுட்டிக்காட்டிய சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தான். தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான்.
திருடன் அப்பொழுது சிந்தித்தான்.
“சாமியார் வேடத்தில் இருக்கும் என்னை அரசனே வந்து கெஞ்சுகிறான். வேடத்தில் இருக்கும்போதே இவ்வளவு பெருமையிருந்தால், உண்மையான சாமியாராக இருந்தால் எவ்வளவு பெருமையுண்டாகும். அரசன் மகள் எனக்கு வேண்டாம். இன்று முதல் நான் உண்மையான சாமியாராகவே ஆகிவிடுகிறேன். இனி எனக்குக் கடவுளே எல்லாம்”
மனந்திருந்திய திருடன் பிற்காலத்தில் மகாத்மா ஆகிவிட்டான்.

 உயர்ந்தவர்களைப் போல் வேடம் போடுபவர்களுக்கு சில சமயங்களில் உயர்ந்த எண்ணங்களும் உண்டாகும்.
உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும்.


வியாழன், 13 அக்டோபர், 2016

வார்த்தையின் சக்தி

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.


பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். 

"வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என சொன்னார்.

இதைக் கேட்டதும் அவன், "நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலை குணிந்தான்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.

புதன், 12 அக்டோபர், 2016

எங்கே பொம்மை???

உழைக்க வேண்டும் என்ற விருப்பமே இல்லாத,  பெரிய சோம்பேறி அவன். எந்த வேலையுமே செய்யாமல் சொகுசாக வாழ்வதற்கு ஆசைப்பட்டான். "ஒரு நாள் அதிர்ஷ்டக் காற்று என் பக்கம் வீசும். அப்போது நான் பெரிய கோடீஸ்வரனாகிவிடுவேன்' என்று நினைத்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கு எதிர்பாராமல் ஒரு கஷ்டம் வந்தது. அதுவும் ஒரு பொம்மையால் வந்தது. அந்தப் பொம்மை அவனுடையது அல்ல. அவனது பக்கத்து வீட்டுக்காரன் தன் இடத்தை விற்று விட்டுச் செல்லும்போது பரிசாகக் கொடுத்த பொம்மை அது. ஒரு பொம்மையால் இப்படியொரு கஷ்டம் வருமென்று அவன் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. 

போகும்போது பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான்:
""என் நண்பனே, இந்த பொம்மையை சாதாரண பொம்மை என்று நினைத்துவிடாதே. என் முன்னோர்கள் இதைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். இன்று வரை நானும் இதை மிகவும் பாதுகாப்பாகத்தான் வைத்திருந்தேன். நீ என் நல்ல நண்பன் என்பதால் நான் உனக்கு இதைப் பரிசாகத் தருகிறேன். இதை நீ என் நினைவாக வைத்துக்கொள். இந்த பொம்மை உனக்கு அதிர்ஷ்டங்களைத் தேடித் தரும்''


அவனும் மகிழ்ச்சியுடன் பொம்மையை வாங்கிக்கொண்டான். "இத்தனைக் காலமும் எதிர்பார்த்திருந்த அதிர்ஷ்டம் இந்த பொம்மை உருவில் இப்போதாவது நம்மிடம் வந்ததே!' என்று ஆறுதலடைந்தான். தனக்கு ஒரு புதையல்  கிடைத்ததைப்போல அந்தப் பொம்மையைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். தனக்குப் பரிசாக இதைக் கொடுத்துச் சென்ற நண்பனின் தாராள மனதை நினைத்து நினைத்து வியந்தான்.

இரவானது. நமக்கு ஒரு அதிர்ஷ்ட பொம்மை வந்துவிட்டது. இனி நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் எதுவும் இருக்காது. விரும்பியதெல்லாம் கிடைத்துவிடும் என்று நினைத்தபடியே படுத்தான்.
வெகு நேரம் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. இனிய கற்பனைகளுடன் புரண்டு புரண்டு படுத்தான். கடைசியில் உறங்கத் தொடங்கினான். 

அப்போது பக்கத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது:
""இதோ பார்! இப்போது மேற்கூரை இடிந்து விழப்போகிறது! சீக்கிரம் வெளியே ஓடிவிடு!''
பதறித் துடித்தெழுந்த அவன், விளக்கேற்றி மேலே பார்த்தான். மேற்கூரை அப்படியேதான் இருந்தது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது ஒரு குரல் ஒலித்ததே! யார் பேசினார்கள்? எங்கிருந்து பேசினார்கள்? அவனுக்குப் புரியவில்லை. சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தான். அங்கே ஒருவரும் இல்லை. கடைசியில், தான் கனவுதான் கண்டிருப்போம் என்று நினைத்து நிம்மதியடைந்து, மறுபடியும் படுத்தான்.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும். அப்போது மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது:
""ஐயோ, திருடன்! திருடன்! இதோ, வீட்டிற்குள் திருடன் புகுந்துவிட்டான். பிடியுங்கள், பிடியுங்கள்!''
திடுக்கிட்டு எழுந்தான். உடனடியாக வாளை எடுத்துக்கொண்டு வீடு முழுவதும் சுற்றி திருடனைத் தேடினான். ஒரு இடம் விடாமல் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்து ஏமாற்றமடைந்தான். அங்கே எவருமே இல்லை. இந்த முறை தான், உண்மையாகவே அந்தக் குரலைக் கேட்டதாக, உறுதியாக நம்பினான். ஆனால் தேடிப் பார்க்கும்போது யாருமில்லை. என்ன இது மாயம்! அவன் அச்சமடைந்தான்.

திருதிருவென்று முழித்துக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தான். எவ்வளவு நேரம்தான் ஒரு மனிதனால் அப்படி அமர்ந்திருக்க முடியும். களைப்படைந்த அவன் மீண்டும் படுத்தான். அவன் படுத்த அதே நொடியில் அந்தக் குரல் ஒலித்தது:
""நீ இப்படிப் படுத்திருந்தால் ஐந்து நிமிடத்திற்குள் இறந்துவிடுவாய்!''
""அட ஆண்டவனே, இது என்ன கொடுமை!'' என்று உரக்க அலறியபடியே தூக்கிவாரிப்போட்டு எழுந்தான். அவனது உறக்கம் அந்த நொடியே பறந்துவிட்டது. அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று அப்போதும் அவனுக்குப் புரியவில்லை. 

அவன் பெரும் பதற்றத்துடன் வீடு முழுவதும் விளக்கேற்றி வைத்தான். எல்லா இடத்திலும் அரக்கப்பரக்கத் தேடினான். தற்செயலாக அந்தப் பொம்மையைப் பார்த்தான் அவன். அவனுக்குப் புரிந்துவிட்டது. கட்டிலின் அடியில் அந்தப் பொம்மை சிரித்துக்கொண்டு நிற்கிறது!

அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. இந்தப் பொம்மைதான் அடிக்கடி    இப்படிப் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது என்று அவனுக்குத் தெரிந்தது.  காற்றுகூட நுழைய முடியாத ஒரு பெட்டியில் அந்தப் பொம்மையைப் போட்டு அடைத்துவைத்தான்.  பெட்டிக்குள் இருந்த பொம்மை பெருங்குரலெடுத்து ஊளையிடத் தொடங்கியது.

இரவு முழுதும் உறங்காததால் மறுநாள் காலையில் மிகவும் களைப்புற்றிருந்தான். பெட்டிக்குள் அடைபட்டிருந்த பொம்மை அப்போதும் சத்தம்போட்டுக்கொண்டிருந்தது.   பொம்மையை வெளியே எடுத்து ஒரு தூணில் ஓங்கியடித்தான். தூண் உடைந்ததுதான் மிச்சம். அந்தப் பொம்மைக்கு எதுவும் ஆகவில்லை. அது மிகுந்த உற்சாகத்துடன் சிரித்துக்கொண்டிருந்தது.

அவனுக்கு அப்போது தான் புரிந்தது, "பக்கத்து வீட்டுக்காரன் இந்தப் பொம்மையைப் பரிசளித்து தன்னை நன்றாக ஏமாற்றியிருக்கிறான்' என்று.
எங்காவது எடுத்துச் சென்று இந்தப் பொம்மையைத் தொலைத்துவிட்டால் போதும் என்றிருந்தது அவனுக்கு. எனவே அதை அவன் நதிக்கு எடுத்துச் சென்றான். ஒரு சிறிய படகில் பொம்மையை வைத்துக் கட்டி நதியில் விட்டான்.

அந்த நேரம் பார்த்து நதிக் கரையில் உலவிக்கொண்டிருந்தார் அந்த நாட்டு ராஜா. ஒரு படகிலிருந்து இடிமுழக்கம்போல யாரோ  அலறுவதை கேட்டார். உடனே படகைக் கரை சேர்க்கும்படி உத்தரவிட்டார். கரைக்கு வந்த அந்தப் பேசும் பொம்மையைப் பார்த்து வியந்த அவர், அதைத் தன் அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.

அன்று இரவே அரண்மனையில் பெரிய பிரச்னைகள் ஏற்படத் தொடங்கின. "அதோ, எதிரிகள் தாக்க வருகிறார்கள். ஓடுங்கள் ஓடுங்கள்!'' என்று உரக்கச் சொன்னது ஒரு குரல். நொடியும் தாமதிக்காமல் ராஜாவும் படைவீரர்களும் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு  வெளியே பாய்ந்து ஓடினார்கள். வெளியே யாருமே இல்லை! என்ன இது என்று யோசித்த அவர்கள், எதுவும் புரியாததால் ஆயுதங்களையெல்லாம் வைத்துவிட்டு மீண்டும் உறங்கத் தொடங்கினார்கள். 

அப்போது மறுபடியும் குரல் கேட்டது:
""ஐயோ! அரண்மனையில் தீப்பிடித்துவிட்டது! எல்லோரும் வெளியே ஓடிவிடுங்கள்!''
அனைவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்தார்கள். நாற்புறமும் ஓடி ஓடிச் சென்று பார்த்தார்கள். ஆனால் எங்குமே, ஒரு தீப் பொறியைக்கூடக் காணவில்லை! எங்கும் இருட்டாகத்தான் இருந்தது.
அப்படியாக அந்த இரவு அரண்மனையில் யாரும் தூங்கவில்லை. 

மறுநாள் ராஜா தூக்கக் கலக்கத்துடன் தோட்டத்திற்குச் சென்றார். உடன் எடுத்துச் சென்றிருந்த பொம்மையை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, "நேற்றிரவு, அரண்மனையில் தீப்பிடித்திருக்கிறது என்று கத்தி ஏமாற்றியது யாராக இருக்கும்?' என்று யோசித்தார். அப்போது அவருக்குப்          பின்புறத்திலிருந்து அந்தக் குரல் மீண்டும் கேட்டது:
""ஓடுங்கள்! எங்காவது ஒளிந்துகொள்ளுங்கள்! ஆகாயம் இப்போது இடிந்து கீழே விழப்போகிறது!''
ராஜா பட்டென்று திரும்பிப் பார்த்தார். அந்த பொம்மை சிரித்தது. அப்போது ராஜாவிற்கு எல்லாம் புரிந்தது. அவர் உடனே பொம்மையை எரித்துவிடும்படிக்      கட்டளையிட்டார். ஆனால் அரண்மனையில் உள்ள எல்லா விறகையும் போட்டு எரித்தாலும் பொம்மைக்கு எதுவும் ஆகவில்லை. அது அப்படியே சிரித்துக்கொண்டிருந்தது.

களைப்படைந்த ராஜா கேட்டார்:
""உன்னை நதியில் விட்டது யார்?''
பொம்மை, பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தது. ராஜா ஆத்திரத்துடன் கத்தினார்:
""இப்போது நீ உண்மையைச் சொல்லவில்லை என்றால் நூறு அடிப் பள்ளம் தோண்டி உன்னைப் புதைத்துவிடுவேன்!''
இதைக் கேட்ட பிறகுதான் பொம்மைக்கு பயம் வந்தது. அது முதன் முறையாக உண்மையைச் சொன்னது.

பிறகு ராஜாவின் உத்தரவுப்படி படைவீரர்கள் அந்த சொம்பேறியைத் தேடிப் பிடித்தார்கள். அவனை ராஜாவிடம் அழைத்து வந்தார்கள்.
"இவனுக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இந்தப் பொம்மையை இவனிடமே ஒப்படைத்துவிடுங்கள்!'' என்று ராஜா உத்தரவிட்டார். 

உடனே அவன் சொன்னான்: "ராஜாவே, எனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நான் இப்போதே கட்டிவிடுகிறேன்! ஆனால் உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன், மறுபடியும் இந்தப் பொம்மையை என்னிடம் கொடுக்காதீர்கள்! தயவு செய்யுங்கள்!''
ஆனால் ராஜா, அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் செலுத்திவிட்டு, அந்தப் பொம்மையையும் எடுத்துக்கொண்டு வீடு வந்தான். 

பிறகு அவன் நேரத்தை வீணாக்கவில்லை. பக்கத்தில் வசிக்கும், அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவனிடம் பொம்மையைக்கொடுத்துவிட்டுச் சொன்னான்:
"இது மிகவும் அதிர்ஷ்டமான பொம்மை. இது உன்னிடமிருந்தால் நீ நினைத்ததெல்லாம் உனக்குக் கிடைக்கும். நீ விரைவில் கோடீஸ்வரனாகிவிடுவாய்! நான் சொல்வது உண்மை. எனக்கு இந்த பொம்மை அளவற்ற செல்வத்தைக் கொடுத்துவிட்டது. அது எனக்குப் போதும். என் நெருங்கிய நண்பன் என்பதால் இதை உனக்குக் கொடுக்கிறேன்.''
அந்தப் பக்கத்து வீட்டுக்காரனும் மிக்க சந்தோஷத்துடன் அதை வாங்கிக்கொண்டு நன்றி சொன்னான். பிறகு அவன், உடனடியாக வீட்டைக் காலி செய்து அந்த நாட்டைவிட்டே ஓடிவிட்டான்.

இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பொம்மை இப்போது யாரிடமோ இருக்கிறது! யாரிடம் இருக்கிறதென்று யாருக்குத் தெரியும்? உழைப்பையும், முயற்சியையும் நம்பாமல், அதிர்ஷ்டத்தை நம்புபவர்களின் பையில் ஒளிந்திருக்கலாம்.

திங்கள், 10 அக்டோபர், 2016

நீங்கள் யார்???


உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

பின்வரும் 10 கேள்விகளுக்கு இரண்டு நிமிடம் செலவழித்து பதில் அளியுங்கள்.

இந்த கேள்விகள் நீங்கள் வீட்டிலும், வெளியிலும் உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டது.


1) நான் எப்போதும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பவன்

A) சரி
B) நிச்சயமாக சரி
C) இருக்கலாம்
D) நிச்சயமாக இல்லை
E) இல்லை

2) உறவினர்கள், நண்பர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிகளை நான் மிகவும் விரும்புகிறேன்

A) சரி
B) நிச்சயமாக சரி
C) இருக்கலாம்
D) நிச்சயமாக இல்லை
E) இல்லை

3) எதுவும் துல்லியமாக இருக்க வேண்டும் என நினைப்பேன்

A) சரி
B) நிச்சயமாக சரி
C) இருக்கலாம்
D) நிச்சயமாக இல்லை
E) இல்லை

4) எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்ய விரும்புவேன்

A) சரி
B) நிச்சயமாக சரி
C) இருக்கலாம்
D) நிச்சயமாக இல்லை
E) இல்லை

5) துணிச்சலான செயல்களை செய்ய தயங்கமாட்டேன்

A) சரி
B) நிச்சயமாக சரி
C) இருக்கலாம்
D) நிச்சயமாக இல்லை
E) இல்லை

6) தவறு செய்தால் அதற்காக வெட்கப்பட மாட்டேன்

A) சரி
B) நிச்சயமாக சரி
C) இருக்கலாம்
D) நிச்சயமாக இல்லை
E) இல்லை

7) பிறரை பின்பற்றுவதை விட வழி நடத்தவை விரும்புவேன்

A) சரி
B) நிச்சயமாக சரி
C) இருக்கலாம்
D) நிச்சயமாக இல்லை
E) இல்லை

8) எங்கு சென்றாலும் 'நான் பொருத்தமற்றவனாக' உணர்கிறேன்

A) சரி
B) நிச்சயமாக சரி
C) இருக்கலாம்
D) நிச்சயமாக இல்லை
E) இல்லை

9) என் உணர்வுகளை பொது இடங்களில் காட்டிக் கொள்ள மாட்டேன்

A) சரி
B) நிச்சயமாக சரி
C) இருக்கலாம்
D) நிச்சயமாக இல்லை
E) இல்லை

10) எல்லோருக்கும் நன்மை பயக்கும் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்

A) சரி
B) நிச்சயமாக சரி
C) இருக்கலாம்
D) நிச்சயமாக இல்லை
E) இல்லை

நீங்கள் அளிக்கும் பதில்களில் 6-க்கு மேற்பட்டவை A அல்லது B ஆக இருந்தால், நீங்கள் தலைமை தாங்கி வழி நடத்துபவராகவோ, சூழ்நிலையோடு பொருந்தி வாழ்பவராகவோ இருப்பீர்கள்.

அதிக பதில்கள் C, D, E போன்றவை என்றால், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். உங்களையும், உங்களை சுற்றியுள்ளவர்களை பற்றியும் தெரிந்து கொள்ள முயலுங்கள்.