போரில் பகைநாட்டு வீரர்களிடம் சிக்கிக்கொண்டான் ஒரு வீரன். அவனை சிறையில் அடைத்து, அவர்கள் பார்த்த பார்வையும், நடத்திய விதமும் பயத்தை ஏற்படுத்தின. அவர்கள் செய்திருந்த ஏற்பாடுகளைப் பார்த்தால், கூடிய சீக்கிரத்தில் தன்னை கொன்று விடுவார்கள் என்றே தோன்றியது. இன்னும் சற்று நேரத்தில் தன் வாழ்க்கை முடிந்துவிடும் என்பதை நினைத்தாலே அவனுக்கு உடல் நடுங்கியது.
சட்டைப் பையில் சிகரெட் இருக்கிறதா எனத் தேடினான். ஒரே ஒரு சிகரெட் கையில் கிடைத்தது. ஆனால் பற்ற வைப்பதற்கு தீப்பெட்டி இல்லை. சிறை கம்பிகளுக்கு வெளியே சிறை அதிகாரி ஒருவர் நின்றிருந்தார். இவன் அவரைப் பார்ப்பது தெரிந்தும் பார்க்காததைப் போல் இருந்தார். வேறு வழியின்றி குரலை உயர்த்தி, "ஐயா, தீப்பெட்டி இருக்கிறதா?" எனக் கேட்டான்.
சிறை அதிகாரி இவனைப் பார்த்தார். அருகில் வந்தார். தீக்குச்சியை எரிய விட்டு சிகரெட்டை பற்ற வைக்க மிக அருகில் வந்த போது அவனை உற்றுப் பார்த்தார். அவன் அதிகாரியைப் பார்த்து புன்னகைத்தான். அவரும் அவனை உற்றுப் பார்த்தபடியே இருந்தார். அவனும் அவர் கண்களைப் பார்த்து, புன்னகைத்தபடியே இருந்தான்.
அவனது புன்னகை அதிகாரியின் வெறுப்பை மறக்கச் செய்தது. இருவரும் ஒருவருக்கொருவர் புன்னகையை பரிமாற்றிக் கொண்டனர். அதிகாரி, "உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?" எனக் கேட்டார். அவன், "ஆம். அவர்கள் இப்போதும் என்னுடன் இருக்கிறார்கள்" என்றபடி பையில் இருந்த புகைப்படத்தை காட்டினான். குழந்தைகளின் மீதுள்ள அன்பையும், அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தன் கனவையும் சொன்னான். "என் குழந்தைகளை இனிமேல் பார்க்க முடியாமல் போய்விடுமோ என பயமாக உள்ளது" என்றான். அதைக் கேட்ட அதிகாரிக்கு கண்ணீர் பெருகியது.
அதிகாரி மறு நிமிடம் சிறை கதவை திறந்து விட்டு, தன் பின்னால் வரும்படி சைகை செய்தார். என்ன நடக்கிறது, எங்கு செல்கிறோம் என்பது தெரியாமலே அவனும் பின்னால் சென்றான். பின்பக்க கதவின் வழியாக வெளியே வந்தார்கள். வேகமாக நடந்தார்கள். நகரின் எல்லை பகுதி வந்தது. அதிகாரி அவன் கைவிலங்கை அவிழ்த்து, "சென்று வா" என விடை கொடுத்தார். கண்ணீரோடு நன்றி கூறிவிட்டு, ஓடிச் சென்று தன் படைகளோடு சேர்ந்து கொண்டான்.
'எப்படி பிழைத்தாய்?' என பலரும் கேட்டபோது, அவன் கூறியது இது தான் : "என் புன்னகை என்னைக் காப்பாற்றியது"
மிகப் பிரபலமான 'குட்டி இளவரசன்' (Little Prince) என்ற புத்தகத்தை எழுதிய சான்ட் எக்ஸ்யுப்பெரி என்ற எழுத்தாளரின் கதை இது. இதன் தலைப்பே "புன்னகை"தான்.
இந்த கதையின் ஆசிரியர், ரஷ்ய விமானப் படையில் போர்க் கப்பல் விமானியாக பணி புரிந்தவர். எனவே, இது கதை போல் இருந்தாலும் அவருக்கு நேர்ந்த உண்மை சம்பவம் என்று கூறப்படுகிறது.