எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 31 ஆகஸ்ட், 2016

திகில் வாழ்க்கை

ஒரு தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றினார். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் அந்த தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார்.

ஒருநாள் அவரது பேரன், "தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று கேட்டான்.
''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' எனக் கூறி சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது?

எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது.

'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்றுவான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை'‘என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

- சுவாமி சுகபோதானந்தா.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

உண்மையான சாதனை

மனிதர்கள் அனைவருக்கும் இயல்பாக இருக்கும் ஆசை என்ன தெரியுமா?

ஏதாவதொரு விதத்தில் மற்றவர்களைக் காட்டிலும் தனித்திருக்க வேண்டும் என்பதே. இதற்காக அவர்களுக்கு தெரிந்த வித்தைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற தங்கள் உடல், மூச்சு, சக்தி, திறன் அனைத்தையும் செலவளிப்பார்கள். கடைசி வரை போராடி ஒரு கட்டத்தில் அலுத்துப் போய்விடுவார்கள். சிலர் தாம் செய்த சாதனை தான் உலகத்தில் பெரிது என தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.

இப்படிப் பலரும் அதிசயங்களை நிகழ்த்த முயற்சித்தும், பெருமையும் பேசிக் கொண்டிருக்கையில், இந்த உலகத்தில் எதுவுமே நிகழாதது போல் சிலர் இருப்பார்கள். அவர்கள் சாதனை செய்பவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். அவர்கள் உண்டு, அவர்கள் வேலை உண்டு என மிகச் சாதாரணமாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை சாதனை நிகழ்த்த துடிப்பவர்கள் கேலியும், கிண்டலும் செய்வர். ஆனாலும் அவர்கள் இயல்பாகவே இருப்பர்.

இந்த இரு பிரிவினரில் உண்மையான சாதனையாளர் யார்?

இதற்கு பதில் தருகிறது ஜென் கதை ஒன்று :

ஒரு ஊரில் இரண்டு ஜென் குருக்கள் வாழ்ந்தனர். இருவருக்கும் நிறைய சீடர்கள். அதில் இரு சீடர்கள் தனியே சந்தித்து, தங்கள் குருவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு சீடர் சொன்னார் : "எங்கள் குரு மிகவும் சக்தி வாய்ந்தவர். ஆற்றின் மீது நடந்து செல்வார். எரியும் நெருப்பின் உள்ளே செல்வார். காற்றில் பறக்கும் திறன் கொண்டவர். இப்படி பல சாதனைகளைப் புரிந்துள்ளார்" என தன் குருவின் பெருமை பாடி விட்டு, மற்றொரு குருவைப் பற்றி அந்த சீடனிடம் கேட்டான்.

மிகுந்த யோசனைக்குப் பிறகு, அந்த சீடன் சொன்னான் : " நீ சொல்வதைப் போல் எதுவும் என் குரு செய்து காட்டியதில்லை. பசிக்கும் போது சாப்பிடுவார். தூக்கம் வரும் போது தூங்குவார்"

இதைக் கேட்டதும் அந்த சீடன் ஏளனமாக சிரித்தான். அவமானத்துடன் அந்த சீடன் குருவிடம் சென்று நடந்ததைச் சொன்னான்.

அதற்கு அந்த குரு, "மற்றவர்களைவிட ஏதோ ஒரு விதத்தில் தனித்து, சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவர்கள் மிகச் சொற்ப அளவே. சாதனை நிகழ்த்தியவர்கள் சில நாட்களுக்குப் பிறகு துவண்டு போய் இருக்கும் போதும், சாதாரணமானவர்கள் முதலில் இருந்ததைப் போன்று இயல்பாகவே இருப்பார்கள். எனவே, அதிசயம் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பது தான் அதிசயத்திலும் அதிசயம்" என்றார்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

நீ நீயாக இரு

துறவி ஒருவர் தன் சீடர்களோடு காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தார். ஒரு பெரிய அரண்மனை கட்டுவதற்கான வேலை நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். காடு முழுதும் வெட்டப்பட்டுவிட்டது.
ஒரு பிரம்மாண்டமான மரம் மட்டும் அப்படியே இருந்தது.

நூறு பேருக்கும் அதிகமாக அதன் நிழலில் உட்காரலாம். அவ்வளவு பெரிய மரம் அது. இதைப் பார்த்த துறவி தன் சீடர்களை அனுப்பி, காட்டில் இருந்த மரங்கள் முழுதும் வெட்டிய பின், இந்த ஒரு மரத்தை மட்டும் வெட்டாமல் விட்டு வைத்திருக்கும் காரணத்தை தெரிந்துவரச் சொன்னார்.

அவர்களும் போய், "ஏன் இந்த மரத்தை மட்டும் விட்டு வைத்திருக்கிறீர்கள்?" எனக் கேட்டனர். அதற்கு அவர்கள், "இது உபயோகமில்லாத மரம். கிளைகள் அனைத்தும் வளைந்து நெளிந்து உள்ளது. என்ன செய்வது இதை வைத்துக்கொண்டு? நேராக இருந்தாலாவது தூண்கள் செய்யலாம். அதுவுமில்லை. சிறிய மரச்சாமான்கள் செய்வதும் சிரமம். வெட்டி எரிக்கலாம் என்றால் வெளிவரும் புகையில் கண் கெட்டுப் போகும். இந்த மரத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அதனால்தான் இதை வெட்டவில்லை" என்றனர்.

சீடர்கள் இந்த பதிலை துறவியிடம் சென்று சொன்னார்கள். அதைக் கேட்ட துறவி,  "பிழைத்திருக்க வேண்டுமானால் இந்த மரத்தைப் போலத்தான் இருக்க வேண்டும். நேராக இருந்தால் வெட்டி தூண் செய்திருப்பார்கள். அழகாக இருந்தால் சந்தையில் விற்றுவிடுவார்கள். நீ நீயாக இரு. பிரயோசனம் இல்லாதவனாக இருந்து அனுபவி. இந்த மரத்தைப்போல் பிரயோசனம் இல்லாமல் இருந்துவிட்டால் யாரும் எந்த தொந்தரவும் செய்யமாட்டார்கள். நன்றாக வளரலாம். நூற்றுக்கணக்கானோர் உன் நிழலில் இளைப்பாறலாம்" என்றார்.

பயனுள்ளதாக வாழ்வதைப் பற்றி நினைக்காதீர்கள். ஆனந்தமாக இருப்பதை எண்ணிப் பாருங்கள். ஆனந்தமாக இருங்கள். அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு கவிதையைப் போல், பாடலைப் போல், நடனத்தைப் போல், சாலையோர பூக்களைப் போல் இருக்க வேண்டும். பிறருக்காக இல்லாமல், தன்னையே அனுபவித்துக் கொண்டு தனக்காகவே வாழ வேண்டும்.

(வெற்றியின் அபாயம்)

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

மனச்சிதைவு

மனிதனின் மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிற் சாலை போன்றது. தூக்கத்தில் கூட கனவுத் தொழிற்சாலை போல மனம் இயங்குவதால் மனதுக்கு ஓய்வு என்பதே கிடையாது. மனம் இருக்கும் இடமும் மூளைதான்.

மூளையின் செயல்பாடுகளில் சிதைவு ஏற்படும்போது நிச்சயமாக ஒரு மனிதனின் மனநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அப்படி உருவாகும் ஒரு வகை மனநோய் ஸ்கிசோபிரினியா (Schizophrenia) என்றழைக்கப்படும் மனச்சிதைவு நோய்.

மனச்சிதைவு நோய்க்கு பல காலகட்டங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நவீனகால அறிவியல் முன்னேற்றங்கள் மரபணுக்களில் எற்படும் மாற்றங்களே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. சாதகமற்ற வாழ்க்கைச்சூழல், மனஅழுத்தம், குழந்தைப் பருவத்தில் மனம் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள், போதைப் பழக்கங்கள், கலாசார மாற்றங்கள் போன்றவை இந்த மரபணு மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மனச்சிதைவு நோய் மருந்து களால் குணப்படுத்தக்கூடியதே. ஆரம்பகட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டால் எளிதில் கட்டுப்படுத்தலாம். பல புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பு நோயை குணமாக்கும் சதவீதத்தை அதிகரித்துள்ளதுடன் பக்கவிளைவுகள் குறைந்து காணப்படுவதால் நோயாளிகள் பயமின்றி உட்கொள்ளவும் உதவியாக உள்ளது. சரியான முறையில் மருந்துகளை சாப்பிடுவோர் சுமார் எழுபது சதவீதத்துக்கும் அதிகமானோர் நல்ல முன்னேற்றம் பெற்று சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

போபியாவாக மாறும் பயம்

“பெரும்பாலான மனநலப் பிரச்னைகளுக்கு சிறு வயதில் நடந்த சம்பவங்கள் தான் காரணமாக இருக்கிறது. அந்த வகையில், ஃபோபியா வருவதற்கும் சிறு வயது தாக்கம் முக்கியக் காரணமாக இருக்கலாம்” என்று உளவியல் பகுப்பாய்வு நூலில் சிக்மண்டு பிராய்டு தெரிவித்துள்ளார்.

சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம் போபியா என்பது பயம்தான் என்று. போபியா என்பது வேறு. பயம் என்பது வேறு. பயம் என்பது இயல்பானது. போபியா என்பது அளவுக்கு மீறிய பயம்.

சுருக்கமாக சொன்னால் இயற்கைக்கு மாறான பேரச்சம் என்று சொல்லலாம்.
பயம் அவசியம். போபியா அநாவசியம். ஆனால் வாழ்க்கையில் நேரிடும் சில அசாதாரண சம்பவங்களினால் சிலர் இந்த போபியாக்களை தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு மனநோய்தான்.

சில போபியாக்கள் ஆபத்தானவை. உதாரணமாக நீங்கள் கார் அல்லது பைக் ஓட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு மலைப்பகுதியில் பெரிய மேட்டைக் கடந்து போக வேண்டி இருக்கிறது. ஆரம்பத்தில் இலேசாக இருக்கும் பயம் நாளடைவில் டிரைவிங்கே வேண்டாம் என்று முடிவெடுத்து விடுகிறீர்கள் என்றால் அங்கேதான் அது போபியா எனப்படுகிறது.

இது நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது. சிலருக்கு இந்த போபியாவினால் அளவுக்கு மீறி பிரச்சினை ஏற்பட்டு இதய வியாதி வரை கொண்டு போய்விடும்.

போபியா என்பது வியாதியல்ல. ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளால் வேறு பாதிப்புகள் வர வாய்ப்பு அதிகம். ஆண்களை விட, பெண்களுக்கு தான் போபியா வர அதிக வாய்ப்பு உள்ளது. காரணம்,பெண்களுக்கு அடிப்படையிலேயே பய உணர்வு அதிகம்.

சில வகை போபியாக்கள், பரம்பரையாக தொடர் கிறது. பெரும்பாலும் ஐந்து வயதில் போபியா ஆரம்பிக்கும். பூச்சிகளை பார்த்தால், இருட்டை பார்த்தால், யாராவது அதிர்ந்து பேசினால், குழந்தைகள் பயப்படும். பள்ளியில் முரட்டுத்தனமான வாத்தியாரை பார்த்தால் பிடிக்காது. வாகன சத்தம் பிடிக்காது. இதுபோன்ற விஷயங்களில் அடிக்கடி பயம் ஏற்பட்டால், அது போபியாவாக மாற வாய்ப்பு உள்ளது.

போபியாவிற்கு தகுந்த மனநல சிகிச்சையும் மருந்துகளும் எடுத்துக்கொண்டால் எளிதில் குணமடையலாம்.

சனி, 20 ஆகஸ்ட், 2016

மன(ம்)நலமா?

உலகம் முழுசும் கோடிக்கணக்கான மக்கள் மனநோயால பாதிக்கப்படுறாங்க. உலகத்தில இருக்கிற, 25 சதவீத மக்களுக்கு வாழ்க்கையில ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில மனநோய் வருது. நிறைய பேர் மனச்சோர்வால (Depression) கஷ்டப்படுறாங்க. மனச்சிதைவும் (Schizophrenia) பைபோலார் டிஸாடரும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். நிறைய பேர் மனநோயால பாதிக்கப்பட்டாலும், அந்த நோயை பத்தி வெளில சொல்றதில்ல, சிகிச்சையும் எடுக்கிறதில்ல. மக்களும் மனநோய் வந்தவங்களை ஒதுக்கி வைச்சிடுறாங்க—உலக சுகாதார அமைப்பு (WHO).

நிறைய விதமான மனநோயை குணப்படுத்த முடியும். இருந்தாலும், நிறைய பேர் அதுக்கு சிகிச்சை எடுக்கிறதில்லை. அமெரிக்காவுல, மனநோயால பாதிக்கப்பட்ட 60 சதவீத பெரியவங்களும் 50 சதவீத இளைஞர்களும் (8-15 வயசு) சிகிச்சை எடுத்துக்கிறதில்லை—நேஷ்னல் அலயன்ஸ் ஆன் மென்டல் இல்னஸ்.

மனநோய் என்பது என்ன?

 மனநோய் இருக்கிறவங்களால உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது; சரியா யோசிக்க முடியாது; மத்தவங்களோட சகஜமா பழக முடியாது. தினம் தினம் வாழக்கையை ஓட்டுறதே அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்.

மனநோய் இருக்கிற எல்லாருக்கும், ஒரே மாதிரி அறிகுறிகள் இருக்காது. சிலருக்கு அந்த அறிகுறிகள் அதிகமா தெரியும், சிலருக்கு அந்தளவுக்கு தெரியாது; சிலர் ரொம்ப நாள் கஷ்டப்படுவாங்க, சிலருக்கு கொஞ்ச நாள்லயே சரியாயிடும். அவங்களுக்கு வந்திருக்கிற மனநோயை பொறுத்தும் அவங்களோட சூழ்நிலையை பொறுத்தும் அந்த அறிகுறிகள் மாறும்.

ஒருத்தர்கிட்ட கெட்ட குணங்கள் இருக்கிறதுனாலயோ, பலவீனங்கள் இருக்கிறதுனாலயோ அவருக்கு மனநோய் வரும்னு சொல்ல முடியாது.

மனநோயால பாதிக்கப்பட்டவங்க சரியான சிகிச்சை எடுக்கும்போது எல்லார் மாதிரியும் சந்தோஷமா வாழ முடியும்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

உண்மையான தீர்வு

வாழ்க்கையில் துன்பம் நேரும்போது முதலில் அனைவரும் பிரச்சனையை ஆராய்ந்து சரியான தீர்வை கண்டுபிடிக்கவே முயல்வோம். இதில் பிரச்சனைகளில் கவனத்தை செலுத்துவது, தீர்வுகளில் கவனம் செலுத்துவது என இரண்டு வகை உள்ளது. ஆனால் இவை இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இதற்கான உதாரணத்தைப் பாருங்கள் :

ஜப்பானிய அழகு சாதனத் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த சம்பவம் இது. வாடிக்கையாளர் ஒருவர், தான் வாங்கிய சோப்பு பெட்டியில் சோப்பு இல்லாமல், காலியான பெட்டி மட்டுமே இருந்ததாக நிறுவனத்திற்கு புகார் செய்தார்.

அது நிறுவனத்தின் அசெம்பிளி லைனில் தோன்றிய பிரச்சனை என்பதை கண்டுபிடித்தனர் அதிகாரிகள். அங்கிருந்துதான் சோப்பு பெட்டிகள் சிப்பமிடப்பட்டு டெலிவரிக்கு அனுப்பி வைக்கப்படும். ஏதோ ஒரு தவறால் காலிப் பெட்டி போய்ச் சேர்ந்துவிட்டது.

நிர்வாகம் பொறியாளர்களை அணுகி பிரச்சனையை தீர்க்கச் சொல்லி கேட்டது. அவர்கள் 'எக்ஸ்-ரே' மிஷின் ஒன்றை கடுமையாக உழைத்து வடிவமைத்தனர். அதன் மானிட்டர்களை கவனிக்க இரண்டு பணியாளர்களையும் நியமித்தனர்.

இதே பிரச்சனை ஒரு சிறிய நிறுவனத்தில் ஏற்பட்ட போது அவர்கள் வேறுவித தீர்வை கண்டுபிடித்தனர். அந்த நிறுவன தலைவர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய 'ராட்சத மின்விசிறி' ஒன்றை வாங்கி அசெம்பிளி லைனில் பொருத்தினார். சோப்பு பெட்டி வரிசையில் நகரும் போது மின்விசிறி வேகமாக சுற்றும். வெற்றுப் பெட்டி இருந்தால் அது வரிசையில் இருந்து தூக்கி வீசப்படும்.

பிரச்சனைக்கு தீர்வு காணும் போது  நடைமுறையில் சாத்தியம் உள்ள எளிய தீர்வைக் கண்டுபிடியுங்கள். எப்போதும் பிரச்சனையில் கவனத்தை செலுத்தாமல் தீர்வுகளைக் கவனியுங்கள். பிரச்சனை எவ்வளவு சிக்கலாக இருந்தாலும் தீர்வுகள் எளிதாய் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

99-கிளப் உறுப்பினர்கள்

(99-கிளப்பில் நீங்கள் உறுப்பினராக இருக்கிறீர்களா? இதைப் படித்ததும் அதிலிருந்து வெளியேறிடுங்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பிரேவிசிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள்)

முன்னொரு காலத்தில் வாழ்ந்த அரசன் ஒருவன் தன் நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தான். எல்லா வளங்களும் நிறைந்திருந்த போதும் அவனுக்கு மன நிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படவில்லை.

ஒருநாள் அவன் அரசவை பணியாளன் மகிழ்ச்சியோடு பாடியபடி வேளை செய்வதை பார்த்தான். ஒரு நாட்டின் தலைவனான நான் மகிழ்ச்சியற்று மனச்சோர்வுடன் இருக்கும்போது, ஒரு சாதாரண வேலையாளோ மிகவும் மகிழ்ச்சியாக இருக்க எப்படி முடிகிறது என்று தோன்றியது. அதை அவனிடம் சென்று கேட்டான்.

அதற்கு அவன், "அரசே, எனக்கோ என் குடும்பத்திற்கோ பெரிதாக எதுவும் தேவைப்படவில்லை. நாங்கள் தங்குவதற்கு ஒரு வீடும், உணவும் இருந்தாலே போதுமானது" என்று சென்னான். ஆனால் அவனுடைய பதில் அரசனுக்கு திருப்தியாக இல்லை. அரசவை அமைச்சர் ஒருவனிடம் நடந்ததைக் கூறினான் அரசன்.

அதைக் கேட்ட அமைச்சர், "அரசே, அந்த வேலைக்காரன் இன்னும் 99-கிளப்பில் பங்குபெறவில்லை என நினைக்கிறேன்" என்றான்.
"99-கிளப்பா? அது என்ன?" என்று அரசன் விசாரித்தான். அமைச்சர் "அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், 99 தங்க காசுகளை ஒரு பையில் போட்டு அந்த வேலைக்காரன் வீட்டு வாசலில் வைக்கச் சொல்லுங்கள்" என்றான். அரசனும் அவ்வாறே செய்தான்.

தன் வீட்டு வாசலில் பையைக் கண்ட வேலைக்காரன், அதை வீட்டிற்குள் எடுத்துச் சென்று திறந்து பார்த்தான். உள்ளே இருந்த தங்கத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சி பொங்கியது. அவற்றை எண்ணத் தொடங்கினான். மொத்தம் 99 காசுகள் இருந்தது. "யாரும் 99 காசுகளை மட்டும் வைத்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அந்த நூறாவது கடைசி தங்க காசு எங்கே போனது?" என சிந்தித்தான். வீடு முழுவதும் தேடினான். ஆனால் அவனுக்கு அந்த கடைசி தங்க காசு கிடைக்கவில்லை.

களைத்து சோர்ந்தவன் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். எப்படியாவது உழைத்து ஒரு தங்க காசை சம்பாதித்து தன் சேகரிப்பை பூர்த்தி செய்து விட வேண்டும் என தீர்மானித்தான்.

அன்று முதல் அந்த வேலைக்காரனின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவன் அதிகமாக உழைத்தான். அந்த நூறாவது தங்க காசை உருவாக்க தன் குடும்பத்தினர் யாரும் உதவவில்லை என குற்றம் கூறினான். இப்போதெல்லாம் அவன் வேலை செய்யும் போது பாடுவதே இல்லை.

இந்த மாற்றத்தைக் கண்ட அரசன் திகைத்துப் போனான். இதைப் பற்றிஅமைச்சரிடம் கேட்டான்.

"அரசே, இப்போது அவன் 99-கிளப்பில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்துவிட்டான். 99-கிளப் என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வசதி படைத்தும் மன நிறைவு காண முடியாதவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராகும். அவர்கள் எப்போதுமே கூடுதலான 1-ல் ஆசை வைப்பவர்கள். 'கடைசியாக அந்த ஒன்னு மட்டும் கிடைக்கட்டும். பிறகு நான் மகிழ்ச்சியாக வாழ்வேன்' என தங்களுக்குள் சொல்லிக் கொள்வார்கள்" என விளக்கமளித்தார் அமைச்சர்.

நம் வாழ்வில் உள்ள மிகச் சிறியதை வைத்துக் கொண்டும் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

ஆனால் கொஞ்சம் பெரிதாய், சிறப்புடையதாய் வேறொன்று கிடைத்ததும் நாம் அந்த அதிகத்திற்கு ஆசைப்பட தொடங்கி விடுவோம்.

நாளுக்கு நாள் வளரும் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் நம் தூக்கத்தை, சந்தோஷத்தை இழக்கிறோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களை துன்புறுத்துகிறோம்.

இந்த '99-கிளப்'பில் நீங்களும் இருந்தால், உடனடியாக வெளியேறிடுங்கள்.

புதன், 17 ஆகஸ்ட், 2016

பயன்துக்கார் செய்த உதவி

வீடு வீடாகச் சென்று பொருள்களை விற்கும் ஏழைச் சிறுவன் ஹோவார்டு கெல்லி. ஒருநாள் பள்ளிக்கூடத்தின் வழியே மிகுந்த பசியோடு நடந்து சென்று கொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த வீட்டிற்கு சென்று சாப்பாடு கேட்கலாம் என தீர்மானித்தான். அழகான இளம் பெண்ணொருத்தி அந்த வீட்டில் இருந்து வெளிப்பட்டதை பார்த்ததும் சாப்பாடு கேட்க மனமின்றி குடிநீர் மட்டும் கேட்டான்.

அவன் பசியில் களைப்படைந்ததை அறிந்த அவள் பெரிய கண்ணாடி தம்ளரில் பால் கொண்டுவந்து கொடுத்தாள். அவன் பாலை குடித்துவிட்டு, "நான் உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்?" எனக் கேட்டான். அவள் "அன்பு காட்ட பணம் பெறும்படி என் அம்மா கற்பிக்கவில்லை" என பதிலளித்தாள். அவன் மனதார நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

பல வருடங்களுக்குப் பிறகு, அந்த பெண் குணப்படுத்த முடியாத ஓர் அரிய நோய்க்கு ஆளானாள். அவளுடைய அரிய வகை நோயை கண்டறிவதற்கு தலைசிறந்த மருத்துவர்கள் பலர் அழைக்கப்பட்டனர்.

டாக்டர். கெல்லியின் உதவியை நாடினர் மற்ற மருத்துவர்கள். கெல்லி அவளைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். அவளுடைய உயிரை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என தீர்மானித்தார். அவளுக்கு அளிக்கும் சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்தினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த நோயை குணப்படுத்தும் வழியை கண்டுபிடித்தார்.

அந்தப் பெண்ணின் சிகிச்சை கட்டணத்திற்கான ரசீதில் எதையோ எழுதி அவளுடைய அறைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவக் கட்டணம் அதிகமாக இருக்கும் என நினைத்துக்கொண்டே அதைப் பிரித்தபோது அந்த குறிப்பு அவள் கண்ணில் பட்டது.

அதில் "ஒரு கோப்பை பாலைக் கொண்டு உங்கள் கட்டணம் செலுத்தப்பட்டுவிட்டது" என எழுதி கீழே டாக்டர். ஹோவர்டு கெல்லி கையெழுத்தைப் பார்த்தாள்.

பிறருக்கு உதவ பணம் தேவையில்லை. உங்களிடம் உள்ள பொருள்களைக் கூட உபயோகப்படலாம்.

நீங்கள் செய்யும் எதிர்பாராத உதவி தக்க சமயத்தில் உங்களுக்கோ உங்கள் அன்பிற்குரியவர்களுக்கோ விரைவில் பயனளிக்கும்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

உண்மையான வாழ்க்கை

அவர் ஒரு நடுத்தர வயதுள்ள டாக்டர். நல்ல கைராசிக்காரர் என அனைவரும் புகழும்படி பெயர் எடுத்தவர். ஆனால் அவரது குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை.

அவரது மனைவியும் ஒரு டாக்டர். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்த வண்ணம் இருந்தது. இது நாளடைவில் விரிசலாகி,கடைசியில் விவாகரத்தில் முடிந்தது.

அந்த டாக்டருக்கு சொந்தம் என யாரும் இல்லை. மறுமணம் செய்வதிலும் விருப்பமில்லை.
தனிமையில் வாடியவர் மெல்ல மெல்ல குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ஆரம்பத்தில் இரவு நேரங்களில் மட்டுமே குடித்தவர், பின்பு காலையிலேயே குடிக்கத் தொடங்கிவிட்டார்.

எந்நேரமும் போதையிலேயே இருப்பதால், அவரிடம் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அவர் உடலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

நுரையீரல் மிகவும் சேதமடைந்ததால், குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இதை அறிந்த அவரது நண்பர் ஒருவர், "டாக்டரான நீங்களே இப்படி செய்யலாமா? உங்களுக்கு தெரிந்தே குடிக்கலாமா?" என்று கேட்டு அவர் குடியிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தை கூறினார்.

இதைக் கேட்டு மனம் வருந்திய டாக்டர், "இனி தெரிந்தே இந்த தப்பை செய்ய மாட்டேன்" என நண்பருக்கு உறுதியளித்து விட்டு, தான் எப்போதும் போகும் பாருக்கு சென்றார்.

மதுவை ஊற்றிக் கொடுக்கும் நபரிடம் எலுமிச்சை சாறு கொடுக்கும்படி கேட்டார். அந்த நபருக்கு ஆச்சரியம். அப்படியே செய்யப் போனார். அப்போது டாக்டர் மெதுவாக, "நான் பார்க்காதபோது, எனக்கு தெரியாமல் கொஞ்சம் விஸ்கியை கலந்துவிடு" என கூறிவிட்டு தன் மேஜையில் சென்று அமர்ந்து கொண்டார்.

இதை போலவே நாமும் பல சந்தர்ப்பங்களில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். அது பிடித்த பொருளாகவோ, நபராகவோ, வேலையாகவோ இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை பிடிக்காதது போல் நடந்து கொள்வோம் அல்லது பிடிக்காததை பிடித்தது போல் காட்டிக் கொள்வோம்.

உங்கள் வாழ்க்கையினை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உண்மையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், உங்கள் வாழ்க்கைக்கே நீங்கள் உண்மையாக இல்லையென்றால் மற்றவர்களுக்கு எப்படி உண்மையாக இருக்க முடியும்?


(ஞானத்தின் விளிம்பிலிருந்து)

சனி, 13 ஆகஸ்ட், 2016

ஓய்வு எடுக்கலாம்

ஓய்வு என்பது என்ன?
நல்ல தூக்கம் ஓய்வா? ஆம். தூக்கம் உடலுக்கு நல்ல ஓய்வு தான். ஆனால் மனதிற்கு எது ஓய்வு?

உங்களது தினசரி பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபட்டு உங்களுக்கு விருப்பமானதை செய்யும்போது கிடைக்கும் மனநிறைவே ஓய்வு.

அது சிலருக்கு பாட்டு பாடுவதாக இருக்கலாம்; சிலருக்கு நடனமாடுவதாக இருக்கலாம்; சிலருக்கு புத்தகம் படிப்பதாக இருக்கலாம்; வேறு ஊர்களுக்கு செல்வதாகவும் இருக்காலாம்.

எதுவாக இருந்தாலும் அதன் மூலம் நிம்மதி கிடைக்க வேண்டும். மாறாக மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடாது.

வசந்தின் அலுவலகத்தில் இயந்திர கோளாறு காரணமாக இரண்டு நாள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் ஊட்டிக்கு செல்வது என தீர்மானித்தான்.

வீட்டிற்கு வந்து அனைவரையும் அவசரம் அவசரமாக கிளப்பி, வாடகை காரை ஏற்பாடு செய்தான். ஊட்டியை சென்றடைந்ததிலேயே பாதி நாள் கழிந்து விட்டது.

திடீரென கிளம்பியதால், தங்கும் இடத்தை முடிவு செய்யவில்லை. ஒரு நல்ல விடுதியை தேடிப்பிடித்து பதிவு செய்தான். இதற்குள் அனைவரும் களைத்துவிட்டனர். இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டனர்.

மறுநாள் காலையில் எழுந்த வசந்த், ஊரை சுற்றி பார்க்க வேண்டும் எனக் கூறி அனைவரையும் அவசரமாகக் கிளப்பினான். அவர்களும் வேண்டா வெறுப்பாக கிளம்பி அவனுடன் சென்றனர். ஒரே நாளில் அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு, மாலையில் வாடகை கார் பிடித்து ஊருக்கு திரும்பினர்.

அடுத்த நாள், காலையில் பயண களைப்புடன் அலுவலகத்திற்கு கிளம்பினான். அன்றைய தின வேலையுடன் முந்திய இருநாட்களின் வேலையும் சேர்ந்து கொண்டன.

கவனக்குறைவால் வேலையில் சில தவறுகள் நடந்துவிட்டன. அதற்கு மேலதிகாரியிடம் "விடுமுறை என்றால் ஊர் சுற்ற தெரிகிறது. ஆனால் சரியாக வேலை பார்க்க தெரியவில்லை" என்ற அர்ச்சனையை வாங்கினான்.

பாவம்... அவனால் விடுமுறையையும் நன்றாக கழிக்க முடியவில்லை; வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

இப்படிப்பட்ட விடுமுறையும் ஓய்வும் மன நிம்மதியை கெடுக்க கூடியதாக இருக்குமே தவிர மனதிற்கு ஓய்வு தருவதாக இருக்காது.

சரியான திட்டமிட்டு விடுமுறையை செலவிடுங்கள்; உடலோடு மனதிற்கும் ஓய்வு கொடுங்கள்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

வெற்றிக்கு செல்லும் வழி

நீங்கள் அவமதிக்கப்பட்டவரா? பிறரால் அலட்சியப்படுத்தப்பட்டவரா? அவமானங்களை சந்தித்திருக்கிறீர்களா?

இந்த கேள்விக்கெல்லாம் பதில் 'ஆம்' என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. முன்னேற்றத்திற்கான மூலப்பொருள் உங்களிடம் உள்ளது.

அவமதிப்பு... அலட்சியம்... அவமானம்... இவை நெஞ்சில் நின்று எரியும் நெருப்புகள். அவமதிப்பை வெற்றிக்கான வழியாக்குங்கள்.

அவமதித்தவர்களை பழிவாங்க நினைப்பது அறிவீனம். அவமதித்தவரும் ஏற்கும்படியாக வளர்வதே அங்கீகாரம்.

கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது மகன் காந்தி கண்ணதாசன் சொன்ன செய்தி இது :

தனது பதினான்கு வயதில் சினிமாக் கனவுகளோடு சென்னை வந்தார் கண்ணதாசன். அன்று இரவு, தங்க இடம் இல்லாமல் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே படுத்து உறங்கி இருக்கிறார்.

நள்ளிரவில் ரோந்து போலீசார் அவரை எழுப்பி விசாரித்துள்ளனர். ஒருநாள் மட்டும் தங்க அனுமதி தரும்படி கெஞ்சி கேட்டுள்ளார் கண்ணதாசன்.

'இங்க தங்கனும்னா நாலணா காசு கொடு' என கேட்டிருக்கிறார் காவலர். கொடுப்பதற்கு காசு இல்லாமல் அழுதுகொண்டே சென்றுள்ளார் அவர்.

பின்னர் வளர்ந்து கவியரசாகி 'சுமைதாங்கி' என்கிற சொந்த படத்தை எடுத்தார். அதில் கதாநாயகன் தனியாக நடந்து வருவது போல் ஒரு காட்சி அதே காந்தி சிலை அருகே படமாக்கப்பட்டது.

நள்ளிரவில் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் இரவு ஏழு மணி போல் காட்டவேண்டும் என்பதற்காக வரிசையாக ஏழு கார்களை நிற்க வைத்து காட்சியை எடுத்து முடித்துவிட்டனர்.

வீட்டில் படத்தை பார்த்துக் கொண்டிருந்த கண்ணதாசன் தன் பிள்ளைகளிடம், "இந்த காட்சியில் வரும் கார்கள் அனைத்தும் நம்முடைய கார்கள். வாழ முடியும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்த என்னை நாலணா இல்லை என்பதற்காக போலீஸ் நடக்க வைத்தது. ஆனால் இன்று, அதே இடத்தில் என் கார்களை ஓடவிட்டு படம் எடுத்துள்ளேன். என் நம்பிக்கை ஜெயித்துவிட்டது" என்று கூறியுள்ளார்.

எங்கு அவமானப்பட்டாரோ அங்கேயே தன் வெற்றியை அரங்கேற்றியுள்ளார் கவிஞர்.

அவமானம் என்பது மூலதனம். இதைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.


(வெற்றி நிச்சயம்)

புதன், 10 ஆகஸ்ட், 2016

நன்றி சொல்வோம்

பிறர் நமக்கு ஏதேனும் வகையில் உதவி செய்ததை, மனதார ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தும் வார்த்தையே "நன்றி".

ஆனால் இன்று, இயந்திரத்தனமாக நாவிலிருந்து உச்சரிக்கப்படும் வார்த்தையாக உள்ளது.

இதயப்பூர்வமாக சொல்லப்படும் நன்றி, உடல் மொழியாக மாறி கேட்பவரின் இதயத்தை சென்றடையும்.

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற உண்மை கதை இது. இதனைப் படிக்கும் போது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நன்றாக சிந்தித்துப் பார்த்தால்,  சாதரணமாக நன்றி சொல்வதற்கும், மனமார வெளிப்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு விளங்கும்.

ஒரு சிறிய ஓட்டல் முதலாளி அவர். காலை எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை வேளை இருக்கும். ஆனால் அவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். தன் வாழ்வில் ஒருமுறையாவது ஜென் துறவியை சந்திக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். இது அவர் கடையின் வேலையாட்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.

ஜென் துறவிகள்  சாதாரணமான குடிமக்களைப் போன்றே உடையணிவார்கள். எனவே அவர்களைக் கண்டுபிடிப்பது கடினம்.

வழக்கம்போல வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டீடிருந்த முதலாளி, இருவர் டீ குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே அவருக்குள் உற்சாகம் கரை புரண்டோடியது. அவர் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த ஜென் துறவிதான் அவர்கள் இருவரும்.

முதலாளியின் ஆர்வத்தைப் பார்த்த துறவிகள், அவரை தங்கள் சீடனாக ஏற்றுக் கொண்டனர். ஓட்டல் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்துவிட்டு துறவிகளோடு செல்ல தயாரானார். அப்போது வாடிக்கையாளர் ஒருவர், "உங்களால் எப்படி இந்த ஜென் துறவிகளை கண்டுபிடிக்க முடிந்தது?" எனக் கேட்டார்.

அதற்கு அவர், "இருகைகளாலும் டீக்கோப்பையைப் பிடித்து, நன்றிப்பெருக்கோடு அருந்தும் விதத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிட்டேன்" என்றார் அவர்.

அந்த முதலாளி பிற்காலத்தில் ஜென் துறவியாக மாறி, தன் அறிவுக் கண்ணை திறந்ததன் விளைவாக, "ஜென் டீ மெடிட்டேஷன்" என்ற தியான முறையை உருவாக்கினார்.  ஜப்பான் நாட்டில் இதனை 'ஜென் டீ திருவிழா' என இன்றும் கொண்டாடுகிறார்கள். இதில் கோப்பை டீயை நன்றிப்பெருக்கோடு இருகைகளில் ஏந்தி ரசித்துக் குடிப்பார்கள்.


(மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்)

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

கதை சொல்லும் பாடம்

ஒருவனுக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். படிப்பது மட்டுமின்றி புதுவித புத்தகங்கள் பலவற்றை சேகரித்தும் வந்தான்.

பிரபல நாளிதழ் ஒன்றில், புதிதாக வெளியான நாவல் பற்றிய கருத்து ஒன்றை அவன் படிக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கிவிட்டான். ஆனால் உடனே அதை படிக்கும் சூழ்நிலை அவனுக்கு கிடைக்கவில்லை.

அவனுடைய புத்தக அலமாரியில், பல புத்தகங்களுக்கு இடையே இந்த புத்தகமும் மாட்டிக் கொண்டது.

வருடங்கள் பல கடந்தன. தன் புத்தக அலமாரியிலிருந்து தற்செயலாக அந்த புத்தகம் அவனுக்கு கிடைத்தது. உடனே அதை படிக்கத் தொடங்கினான். அந்த நாவலைப் படிக்க படிக்க 'உலகத்திலேயே மிகச் சிறந்த நாவல் இதுதான்' என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.

அந்த நாவலின் எழுத்தாளர் எழுதிய மற்ற நாவல்களை படிக்கும் ஆவல் ஏற்ப்பட்டது. அதைப் பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கியபோது அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைத்தது.

அந்த எழுத்தாளர் இந்த புத்தகத்தை தவிர வேறு புத்தகம் எதுவும் எழுதவில்லை. "மிகச் சிறந்த எழுத்தாளர் வேறு புத்தகம் எதுவும் எழுதாததற்கு காரணம் என்ன?" என்று யோசித்தான்.

அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க அந்த எழுத்தாளரைத் தேடத் தொடங்கினான். புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம், செய்தித்தாளில் அந்த புத்தகத்தைப் பற்றிய கருத்தை எழுதியவர் என அனைவரிடமும் விசாரித்தான்.

கிடைத்த ஒவ்வொரு தகவல்களும் அவனுக்குள் எழுத்தாளரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகரித்தது. கடைசியாக, அந்த எழுத்தாளரைக் கண்டுபிடித்து தன் மனதில் இருந்த கேள்வியைக் கேட்டான்.

அதற்கு அவர், "எழுத்தாளர் அனைவருக்கும் தங்கள் எழுத்துக்களின் மீது தனிப்பிரியம் இருக்கும். அது தனக்கான அங்கீகாரம் கிடைக்கும்போது மட்டுமே ஏற்படும். பாராட்டு என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. ஒரு வாசகனின் பார்வையில் புத்தகம் எப்படிப்பட்டது என்பதை அறிவதற்கான வழி. எனக்கான அங்கீகாரம் அப்போது கிடைத்திருந்தால் நான் மேலும் பல புத்தகங்களை வெளியிட்டிருப்பேன்" என்று பதிலளித்தார்.

பாராட்டு என்பது கலைஞர்களின் வெற்றியின் அடையாளம். உங்கள் மனதிற்கு பிடித்தது எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பாராட்டுங்கள். ஏனென்றால், சாதாரணமாக நாம் நினைக்கும் ஒரு நிகழ்வின் பின்னால் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி இருக்கலாம்.

(இது "The stone reader" என்னும் டாக்குமென்ட்ரி படத்தின் கதை. கதாநாயகன் படித்த புத்தகத்தின் பெயர் "The stones of summer". இப்புத்தகம் பல பதிப்புகளைக் கடந்து இன்றும் விற்க்கப்படுகிறது)


திங்கள், 8 ஆகஸ்ட், 2016

புரியாத பதில்

ஒரு ஊரில் இரண்டு துறவிகள் அவர்களுடைய சீடர்களுடன் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சீடர்கள் இருவரும் வெளியே நடந்து சென்றனர்.

அப்போது ஒரு சீடன் மற்றொருவனிடம் "நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டார்.

அதற்கு மற்றவன், "காற்று எங்கே இழுத்துச் செல்கிறதோ அங்கே" என்றான்.

அதன் அர்த்தம் புரியாத சீடன், குருவிடம் சென்று நடந்ததைக் கூறினான். தன் சீடன் முட்டாளாக்கப்பட்டதை அறிந்த குரு, "நாளையும் நீ அவனிடம் இதே கேள்வியைக் கேள். அவன் இதே பதிலைக் கூறுவான். அப்போது நீ, 'காற்று வீசாத போது என்ன செய்வாய்?' எனக் கேள்" என்று சொன்னார்.

அதே போல் மறுநாள் இரு சீடர்களும் சந்தித்தனர். தன் குரு சொன்னதைப் போல, இன்றும் அதே பதிலைச் சொல்வான் என்ற நம்பிக்கையில், "நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டான்.

ஆனால் அந்த சீடன் மாறாக, "என் கால்கள் எங்கே செல்கிறதோ அங்கே" என்றான்.

சீடனுக்கு ஏமாற்றமாகப் போயிற்று. குருவிடம் நடந்ததைக் கூறினான். மீண்டும் தன் சீடன் முட்டாளாக்கப்பட்டதை அறிந்த குரு, "நாளையும் நீ அவனிடம் இதே கேள்வியைக் கேள். அவன் இதே பதிலைக் கூறுவான். அப்போது நீ, 'நீ கால்களின்றி ஊனமாகிவிட்டால் என்ன செய்வாய்?' எனக் கேள்" என்று சொன்னார்.

சீடனும் மறுநாள் அந்த சீடனை சந்தித்து, "நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டார்.

இன்றும் நேற்று கூறிய பதிலைச் சொன்னால், தன் குரு சொன்ன பதிலைச் சொல்ல வேண்டும் என நினைத்த சீடனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஏனென்றால், "காய்கறி வாங்க சந்தைக்கு போகிறேன்" என பதில் சொன்னான் அந்த சீடன்.

இதுதான் உண்மையான வாழ்க்கை. ஒவ்வொரு விநாடியும் வாழ்வியல் முறைகள் மாறிக்கொண்டே வருகிறது. நாமோ இதை கவனிக்காமல் தயாரான பதிலை வைத்துக்கொண்டு பயணிக்க நினைக்கிறோம்.

எதிர்காலத்தை நீங்கள் கணிக்க வேண்டாம். அது எப்படி இருக்கும் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது.

நீங்கள் நீங்களாக இருங்கள். இன்றைய உலகைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப உங்கள் பயணத்தை வழிவகுத்துக் கொள்ளுங்கள்.


(ஜென் கதைகள்)

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

சிரிக்கப் பழகுவோம்

"இன்னைக்கு நிறையவே சிரிச்சுட்டேன். நாளைக்கு எதாவது  மோசமா நடக்காமல் இருந்தால் சரிதான்"

இப்படி சிரிக்கும் போதெல்லாம் நினைப்பவர்கள் பத்தில் ஐந்து பேர் இருப்பார்கள். இதற்கு கட்டுப்பட்டே சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்கத் தயங்குபவர்கள் பலர்.

ஆனால் கஷ்டம் வரும்போது நாளை வரவிருக்கும் சந்தோஷத்தைப் பற்றி நினைப்பதில்லை.

வரப்போகிற துன்பத்தை நம்மால் தடுக்க முடியாது என்றால் சிரிக்கும் நேரத்தில் கவலையின்றி ரசித்து சிரிக்கலாமே!

குழந்தைகள் பசித்தால் அழுவார்கள்; யாராவது விளையாட்டு காட்டினால் சிரிப்பார்கள். அவர்களுக்கு அழுகை, சிரிப்பு இரண்டும் ஒன்றுதான். விரும்பி அழுவதும் இல்லை; ரசித்து சிரிப்பதும் இல்லை.

உண்மையில் பார்த்தால் நம் அக்கறை சிரிக்கக் கூடாது என்பதில் இல்லை; அழக்கூடாது என்ற அச்சத்தின் மீதுதான் இருக்கிறது.

"இந்த உலகத்தில் சந்தோஷங்கள் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் அனுபவிக்கும் நிலையில் மனிதர்கள் இல்லை" என்கிறது சீனப் பழமொழி. துன்பங்களை தேடிக் கண்டுபிடித்து கவலைப்படத் தெரிந்த நமக்கு, கண்களுக்கு எதிரே உள்ள சந்தோஷங்களைப் பார்க்கத் தெரிவதில்லை.

சிரிப்பு வந்தால் சிரியுங்கள். நாளை அழுகை வந்தால் அழுது கொள்ளளாம். கொஞ்சமாக சிரித்து... கொஞ்சமாக அழுவதை விட, நிறைய சிரித்து... நிறைய அழப் பழகலாமே...


(ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க)

நேர்படப் பேசு

ஒரு நாட்டின் மன்னனுக்கு தன் பக்கத்து நாட்டு மன்னனிடம் இருந்து ஒரு தூது வந்தது. அதில் "நெற்றியில் நட்சத்திர குறியுடன், உடல் வெள்ளை நிறத்தில் வால் நீளமாக உள்ள குதிரை உங்கள் நாட்டில் எங்கிருந்தாலும் உடனடியாக அனுப்பி வைக்கவும். இல்லாவிட்டால்..." என எழுதியிருந்தது.

இதைப் படித்ததும் அந்த மன்னனுக்கு மிகுந்த கோபம் வந்தது. உடனே பதிலுக்கு மற்றொரு ஓலையில் "நீங்கள் கூறிய அடையாளங்களை உடைய குதிரை என் நாட்டில் இல்லை. இருந்திருந்தால்..." என்று எழுதி அனுப்பினான்.

இதை படித்ததும் பக்கத்து நாட்டு மன்னன் தன்னை அவமதித்ததாக எண்ணி போர் தொடுத்தான்.

போர் பல நாட்கள் நீடித்தது. பல வீரர்கள் மாண்டனர். ஆனால் முடிவுக்கு வருவதைப்போல் தெரியவில்லை. இறுதியில் இரு நாட்டு அரசர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர்.

அப்போது பக்கத்து நாட்டு அரசன் மற்றொரு அரசனிடம், "நீங்கள் நெற்றியில் நட்சத்திர குறியுடன், உடல் வெள்ளை நிறத்தில் வால் நீளமாக உள்ள குதிரை உங்கள் நாட்டில் எங்கிருந்தாலும் உடனடியாக அனுப்பி வைக்கவும். இல்லாவிட்டால்... என எழுதி இருந்தீர்களே அதன் முழுப்பொருள் என்ன?" என்று கேட்டான்.

அதற்கு "இல்லாவிட்டால் வேறு நல்ல குதிரையை அனுப்பி வைக்கும்படி கூறினேன்" என பதிலளித்துவிட்டு,

" நீங்கள் கூறிய அடையாளங்களை உடைய குதிரை என் நாட்டில் இல்லை. இருந்திருந்தால்... என நீங்கள் பதில் சொன்னதன் அர்த்தம் என்ன?" என்று வினாவினான்.

"இருந்திருந்தால் உடனே உங்களுக்கு அனுப்பி இருப்பேன்" என்றான் மற்றொரு மன்னன்.

இதைப் போன்ற ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்.

உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என யாராவது ஒருவர் உங்கள் கருத்தை தவறான பொருளில் புரிந்து கொண்டிருக்கலாம். அல்லது நீங்கள் அவர்களை தவறாக எண்ணி இருக்கலாம்.

நாம் பேசும் வார்த்தைகளின் பொருள் கேட்பவரின் மனநிலைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடும் என்பதை உணருங்கள்.

மனம் விட்டு பேசுவது ஒன்றே எல்லாப் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு.


சனி, 6 ஆகஸ்ட், 2016

கடவுள் பாதி... மிருகம் பாதி

வன்முறையாளர்களுக்கும் சாமானியர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகச் சிறியது. அதாவது கொடூரமான தீய எண்ணங்கள் இல்லாத ஒரு மனிதனை யாராலும் பார்க்க முடியாது.

உங்களிடம் ஒரு ரிமோட் இருக்கிறது. அதன் பட்டனை அழுத்தினால், உங்களுக்கு பிடிக்காத ஒருவர் இயற்கையாகவே இறந்துவிடுவார். அவர் உங்களுக்கு பிடிக்காத மேலதிகாரியாக இருக்கலாம்; தரக்குறைவாக நடத்தும் உறவினர்கள் அல்லது வேண்டாதவர்களாகக் கூட இருக்கலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

அதீத கோபத்தால், கொலை செய்யும் அளவிற்கு போகாவிட்டாலும்,
பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காப்பீர்கள் என்பதுதான் உண்மை.

மனோதாத்துவ மேதை சிக்மண்ட் ப்ராய்டு "எல்லா மனிதர்களுக்கும் வன்முறை எண்ணங்கள் புதைந்திருக்கும். அதை கட்டுப்படுத்துவது சமுதாய கோட்பாடுகளும், சட்ட திருத்தங்களும், குற்ற உணர்ச்சிகளும் தான்" என்கிறார்.

மொத்தத்தில் நாம் நல்லவர்களும் அல்ல; கெட்டவர்களும் அல்ல. வெளியே மனிதன், உள்ளே மிருகம்...


(மனிதனுக்குள் மிருகம்)

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

வாழ்வின் முதல் பாடம்

கடலில் ஒரு முதியவரும், இளைஞன் ஒருவனும் படகு பயணம் செய்தார்கள். பெரியவர் படகினை ஓட்ட, இளைஞன் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தான்.

பயணம் முடிந்து திரும்பும் வழியில், இளைஞன் அந்த பெரியவரிடம் "கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள் இருந்ததே, ஆனால் எதிலும் மோதாமல் எப்படி உங்களால் படகை ஓட்ட முடிந்தது?" எனக் கேட்டான்.

அதற்கு அந்த பெரியவர், "அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் ஏற்கனவே இடித்து பழகிவிட்டேன்" என்றார்.

நாம் யாரும் பிறந்தவுடனேயே நன்றாக பேசவோ, நடக்கவோ பழகவில்லை. அனுபவம் என்னும் முதல் பாடத்தின் வழியாகவே கற்றுவந்துள்ளோம்.

வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு துன்பங்களிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்வதோடு, அதைக் கண்டு ஓடாமல் எதிர் கொள்ளும் திறன் உள்ளவர்களுக்கே, வாழ்க்கை சிறப்பாக அமையும்.

சிலருக்கு வாழ்க்கை எளிதாக அமைந்துவிடலாம். ஆனால் உங்களுக்கு பலவித பிரச்சனைகள் ஏற்படலாம். போராடி பாருங்கள் - உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்வீர்கள்; அவர்களும் உணர்வார்கள்.


(இதையும் படியுங்க : 19)

குப்பைகளைச் சேர்க்காதீர்

அறிவியல் புரொபசர் வீட்டில் ஒரு எலி அங்கும் இங்கும் ஓடுவதைக் கண்ட மாணவன், "எலிகளை இப்படி விட்டு வைத்திருக்கிறீர்களே. இதனைப் பிடித்து அப்புறப்படுத்தக் கூடாதா?" என்று கேட்டான்.

அதற்கு அந்த புரொபசர், "எலிகள் என் புத்தகங்களை கடித்து சிதைக்கும் என்பது உண்மை தான். ஆனால், நான் அதனைப் பிடிக்க நினைத்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதை வேட்டையாடுவதிலேயே என்னுடைய வாழ்க்கை முடிந்துவிடும். மாறாக, புத்தகங்களை அலமாரியில் வைத்து பூட்டிவிட்டால், தரையில் கிடக்கும் தேவையற்ற காகிதங்களை அது தின்றுவிட்டு போய்விடும். அந்த விதத்தில், அது கடைசி வரையில் அற்ப எலியாக மட்டுமே இருக்கிறது. பெரும்பூதமாகி என் நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்வதில்லை" என்றார்.

ஆனால் நாம் பல தேவையற்ற நினைவுகளையும் சிந்தனைகளையும் மனதில் வைத்துக்கொண்டு, பல்வேறு குழப்பங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகின்றோம்.

தேவையற்றவற்ற நிகழ்வுகளை சேகரிக்கும் குப்பைத்தொட்டி இல்லை நம் மனம்.

உங்களுக்கு நேர்ந்த மகிழ்ச்சியற்ற அனுபவம் உங்களைக் காயப்படுத்திச் செல்வதும், பக்குவப்படுத்திச் செல்வதும் உங்களிடம் தான் உள்ளது.

உங்கள் நினைவுகள் பிரச்சனை அல்ல. அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தாதது தான் பிரச்சனை. ஒவ்வொரு நிகழ்வையும், பதிவையும், தகவலையும் சரியாக  கையாளக் கற்றுக்கொண்டால், வாழ்க்கை மிக அழகாகத் தெரியும்.


(ஆனந்த அலை : 16)

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

மனதினை பகிர்வு செய்

நாம் வாழ்கின்ற வாழ்க்கை நிஜமாகவே நமக்கு பிடித்திருக்கிறதா? நமக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்வதற்கு தடையாக இருப்பது யார்? நம் எதிரிகளா? நம்மை விரும்பாதவர்களா?


இவர்கள் யாருமில்லை. நம் தயக்கம் என்னும் மனநிலை தான்.

சிலருக்கு பாடப் பிடிக்கும். சிலருக்கு ஆடப் பிடிக்கும். ஆனால் இந்த சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட வெளிப்படுத்த நாம் மிகவும் தயங்குவோம். காரணம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற கூச்சம் தான்.

நல்ல உணர்வுகளோடு இருப்பதைவிட நல்லவனாக இருக்கவே முயல்கிறோம்.
மற்றவர்கள் கண்களுக்கு நல்லவராகத் தெரிய வேண்டும் என்பதற்காக, நம் சந்தோஷங்களைப் பலி கொடுக்கிறோம்.

நீங்கள் உள்ளார்ந்த அன்போடு உங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் நேசிக்கிறீர்களா?

உங்களை சுற்றியுள்ளவர்கள், உங்களால் பல சங்கடங்களை சந்திப்பதாக நீங்கள் எண்ணி இருக்கலாம். ஆனால் எத்தனை முறை அவர்களிடம் உங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?

தயக்கம் என்னும் திரையை விலக்கி உங்கள் அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்துங்கள். இது பல மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும்.


(ஓ! வாழ்க்கையே ரிலாக்ஸ் ப்ளீஸ் : 23)