எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

உண்மையான வாழ்க்கை

அவர் ஒரு நடுத்தர வயதுள்ள டாக்டர். நல்ல கைராசிக்காரர் என அனைவரும் புகழும்படி பெயர் எடுத்தவர். ஆனால் அவரது குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை.

அவரது மனைவியும் ஒரு டாக்டர். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்த வண்ணம் இருந்தது. இது நாளடைவில் விரிசலாகி,கடைசியில் விவாகரத்தில் முடிந்தது.

அந்த டாக்டருக்கு சொந்தம் என யாரும் இல்லை. மறுமணம் செய்வதிலும் விருப்பமில்லை.
தனிமையில் வாடியவர் மெல்ல மெல்ல குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ஆரம்பத்தில் இரவு நேரங்களில் மட்டுமே குடித்தவர், பின்பு காலையிலேயே குடிக்கத் தொடங்கிவிட்டார்.

எந்நேரமும் போதையிலேயே இருப்பதால், அவரிடம் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அவர் உடலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

நுரையீரல் மிகவும் சேதமடைந்ததால், குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இதை அறிந்த அவரது நண்பர் ஒருவர், "டாக்டரான நீங்களே இப்படி செய்யலாமா? உங்களுக்கு தெரிந்தே குடிக்கலாமா?" என்று கேட்டு அவர் குடியிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தை கூறினார்.

இதைக் கேட்டு மனம் வருந்திய டாக்டர், "இனி தெரிந்தே இந்த தப்பை செய்ய மாட்டேன்" என நண்பருக்கு உறுதியளித்து விட்டு, தான் எப்போதும் போகும் பாருக்கு சென்றார்.

மதுவை ஊற்றிக் கொடுக்கும் நபரிடம் எலுமிச்சை சாறு கொடுக்கும்படி கேட்டார். அந்த நபருக்கு ஆச்சரியம். அப்படியே செய்யப் போனார். அப்போது டாக்டர் மெதுவாக, "நான் பார்க்காதபோது, எனக்கு தெரியாமல் கொஞ்சம் விஸ்கியை கலந்துவிடு" என கூறிவிட்டு தன் மேஜையில் சென்று அமர்ந்து கொண்டார்.

இதை போலவே நாமும் பல சந்தர்ப்பங்களில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். அது பிடித்த பொருளாகவோ, நபராகவோ, வேலையாகவோ இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை பிடிக்காதது போல் நடந்து கொள்வோம் அல்லது பிடிக்காததை பிடித்தது போல் காட்டிக் கொள்வோம்.

உங்கள் வாழ்க்கையினை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உண்மையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், உங்கள் வாழ்க்கைக்கே நீங்கள் உண்மையாக இல்லையென்றால் மற்றவர்களுக்கு எப்படி உண்மையாக இருக்க முடியும்?


(ஞானத்தின் விளிம்பிலிருந்து)