எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

உண்மையான சாதனை

மனிதர்கள் அனைவருக்கும் இயல்பாக இருக்கும் ஆசை என்ன தெரியுமா?

ஏதாவதொரு விதத்தில் மற்றவர்களைக் காட்டிலும் தனித்திருக்க வேண்டும் என்பதே. இதற்காக அவர்களுக்கு தெரிந்த வித்தைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற தங்கள் உடல், மூச்சு, சக்தி, திறன் அனைத்தையும் செலவளிப்பார்கள். கடைசி வரை போராடி ஒரு கட்டத்தில் அலுத்துப் போய்விடுவார்கள். சிலர் தாம் செய்த சாதனை தான் உலகத்தில் பெரிது என தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.

இப்படிப் பலரும் அதிசயங்களை நிகழ்த்த முயற்சித்தும், பெருமையும் பேசிக் கொண்டிருக்கையில், இந்த உலகத்தில் எதுவுமே நிகழாதது போல் சிலர் இருப்பார்கள். அவர்கள் சாதனை செய்பவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். அவர்கள் உண்டு, அவர்கள் வேலை உண்டு என மிகச் சாதாரணமாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை சாதனை நிகழ்த்த துடிப்பவர்கள் கேலியும், கிண்டலும் செய்வர். ஆனாலும் அவர்கள் இயல்பாகவே இருப்பர்.

இந்த இரு பிரிவினரில் உண்மையான சாதனையாளர் யார்?

இதற்கு பதில் தருகிறது ஜென் கதை ஒன்று :

ஒரு ஊரில் இரண்டு ஜென் குருக்கள் வாழ்ந்தனர். இருவருக்கும் நிறைய சீடர்கள். அதில் இரு சீடர்கள் தனியே சந்தித்து, தங்கள் குருவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு சீடர் சொன்னார் : "எங்கள் குரு மிகவும் சக்தி வாய்ந்தவர். ஆற்றின் மீது நடந்து செல்வார். எரியும் நெருப்பின் உள்ளே செல்வார். காற்றில் பறக்கும் திறன் கொண்டவர். இப்படி பல சாதனைகளைப் புரிந்துள்ளார்" என தன் குருவின் பெருமை பாடி விட்டு, மற்றொரு குருவைப் பற்றி அந்த சீடனிடம் கேட்டான்.

மிகுந்த யோசனைக்குப் பிறகு, அந்த சீடன் சொன்னான் : " நீ சொல்வதைப் போல் எதுவும் என் குரு செய்து காட்டியதில்லை. பசிக்கும் போது சாப்பிடுவார். தூக்கம் வரும் போது தூங்குவார்"

இதைக் கேட்டதும் அந்த சீடன் ஏளனமாக சிரித்தான். அவமானத்துடன் அந்த சீடன் குருவிடம் சென்று நடந்ததைச் சொன்னான்.

அதற்கு அந்த குரு, "மற்றவர்களைவிட ஏதோ ஒரு விதத்தில் தனித்து, சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவர்கள் மிகச் சொற்ப அளவே. சாதனை நிகழ்த்தியவர்கள் சில நாட்களுக்குப் பிறகு துவண்டு போய் இருக்கும் போதும், சாதாரணமானவர்கள் முதலில் இருந்ததைப் போன்று இயல்பாகவே இருப்பார்கள். எனவே, அதிசயம் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பது தான் அதிசயத்திலும் அதிசயம்" என்றார்.