எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

நேர்படப் பேசு

ஒரு நாட்டின் மன்னனுக்கு தன் பக்கத்து நாட்டு மன்னனிடம் இருந்து ஒரு தூது வந்தது. அதில் "நெற்றியில் நட்சத்திர குறியுடன், உடல் வெள்ளை நிறத்தில் வால் நீளமாக உள்ள குதிரை உங்கள் நாட்டில் எங்கிருந்தாலும் உடனடியாக அனுப்பி வைக்கவும். இல்லாவிட்டால்..." என எழுதியிருந்தது.

இதைப் படித்ததும் அந்த மன்னனுக்கு மிகுந்த கோபம் வந்தது. உடனே பதிலுக்கு மற்றொரு ஓலையில் "நீங்கள் கூறிய அடையாளங்களை உடைய குதிரை என் நாட்டில் இல்லை. இருந்திருந்தால்..." என்று எழுதி அனுப்பினான்.

இதை படித்ததும் பக்கத்து நாட்டு மன்னன் தன்னை அவமதித்ததாக எண்ணி போர் தொடுத்தான்.

போர் பல நாட்கள் நீடித்தது. பல வீரர்கள் மாண்டனர். ஆனால் முடிவுக்கு வருவதைப்போல் தெரியவில்லை. இறுதியில் இரு நாட்டு அரசர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர்.

அப்போது பக்கத்து நாட்டு அரசன் மற்றொரு அரசனிடம், "நீங்கள் நெற்றியில் நட்சத்திர குறியுடன், உடல் வெள்ளை நிறத்தில் வால் நீளமாக உள்ள குதிரை உங்கள் நாட்டில் எங்கிருந்தாலும் உடனடியாக அனுப்பி வைக்கவும். இல்லாவிட்டால்... என எழுதி இருந்தீர்களே அதன் முழுப்பொருள் என்ன?" என்று கேட்டான்.

அதற்கு "இல்லாவிட்டால் வேறு நல்ல குதிரையை அனுப்பி வைக்கும்படி கூறினேன்" என பதிலளித்துவிட்டு,

" நீங்கள் கூறிய அடையாளங்களை உடைய குதிரை என் நாட்டில் இல்லை. இருந்திருந்தால்... என நீங்கள் பதில் சொன்னதன் அர்த்தம் என்ன?" என்று வினாவினான்.

"இருந்திருந்தால் உடனே உங்களுக்கு அனுப்பி இருப்பேன்" என்றான் மற்றொரு மன்னன்.

இதைப் போன்ற ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்.

உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என யாராவது ஒருவர் உங்கள் கருத்தை தவறான பொருளில் புரிந்து கொண்டிருக்கலாம். அல்லது நீங்கள் அவர்களை தவறாக எண்ணி இருக்கலாம்.

நாம் பேசும் வார்த்தைகளின் பொருள் கேட்பவரின் மனநிலைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடும் என்பதை உணருங்கள்.

மனம் விட்டு பேசுவது ஒன்றே எல்லாப் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு.