எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

கதை சொல்லும் பாடம்

ஒருவனுக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். படிப்பது மட்டுமின்றி புதுவித புத்தகங்கள் பலவற்றை சேகரித்தும் வந்தான்.

பிரபல நாளிதழ் ஒன்றில், புதிதாக வெளியான நாவல் பற்றிய கருத்து ஒன்றை அவன் படிக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கிவிட்டான். ஆனால் உடனே அதை படிக்கும் சூழ்நிலை அவனுக்கு கிடைக்கவில்லை.

அவனுடைய புத்தக அலமாரியில், பல புத்தகங்களுக்கு இடையே இந்த புத்தகமும் மாட்டிக் கொண்டது.

வருடங்கள் பல கடந்தன. தன் புத்தக அலமாரியிலிருந்து தற்செயலாக அந்த புத்தகம் அவனுக்கு கிடைத்தது. உடனே அதை படிக்கத் தொடங்கினான். அந்த நாவலைப் படிக்க படிக்க 'உலகத்திலேயே மிகச் சிறந்த நாவல் இதுதான்' என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.

அந்த நாவலின் எழுத்தாளர் எழுதிய மற்ற நாவல்களை படிக்கும் ஆவல் ஏற்ப்பட்டது. அதைப் பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கியபோது அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைத்தது.

அந்த எழுத்தாளர் இந்த புத்தகத்தை தவிர வேறு புத்தகம் எதுவும் எழுதவில்லை. "மிகச் சிறந்த எழுத்தாளர் வேறு புத்தகம் எதுவும் எழுதாததற்கு காரணம் என்ன?" என்று யோசித்தான்.

அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க அந்த எழுத்தாளரைத் தேடத் தொடங்கினான். புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம், செய்தித்தாளில் அந்த புத்தகத்தைப் பற்றிய கருத்தை எழுதியவர் என அனைவரிடமும் விசாரித்தான்.

கிடைத்த ஒவ்வொரு தகவல்களும் அவனுக்குள் எழுத்தாளரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகரித்தது. கடைசியாக, அந்த எழுத்தாளரைக் கண்டுபிடித்து தன் மனதில் இருந்த கேள்வியைக் கேட்டான்.

அதற்கு அவர், "எழுத்தாளர் அனைவருக்கும் தங்கள் எழுத்துக்களின் மீது தனிப்பிரியம் இருக்கும். அது தனக்கான அங்கீகாரம் கிடைக்கும்போது மட்டுமே ஏற்படும். பாராட்டு என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. ஒரு வாசகனின் பார்வையில் புத்தகம் எப்படிப்பட்டது என்பதை அறிவதற்கான வழி. எனக்கான அங்கீகாரம் அப்போது கிடைத்திருந்தால் நான் மேலும் பல புத்தகங்களை வெளியிட்டிருப்பேன்" என்று பதிலளித்தார்.

பாராட்டு என்பது கலைஞர்களின் வெற்றியின் அடையாளம். உங்கள் மனதிற்கு பிடித்தது எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பாராட்டுங்கள். ஏனென்றால், சாதாரணமாக நாம் நினைக்கும் ஒரு நிகழ்வின் பின்னால் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி இருக்கலாம்.

(இது "The stone reader" என்னும் டாக்குமென்ட்ரி படத்தின் கதை. கதாநாயகன் படித்த புத்தகத்தின் பெயர் "The stones of summer". இப்புத்தகம் பல பதிப்புகளைக் கடந்து இன்றும் விற்க்கப்படுகிறது)