எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

மனச்சிதைவு

மனிதனின் மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிற் சாலை போன்றது. தூக்கத்தில் கூட கனவுத் தொழிற்சாலை போல மனம் இயங்குவதால் மனதுக்கு ஓய்வு என்பதே கிடையாது. மனம் இருக்கும் இடமும் மூளைதான்.

மூளையின் செயல்பாடுகளில் சிதைவு ஏற்படும்போது நிச்சயமாக ஒரு மனிதனின் மனநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அப்படி உருவாகும் ஒரு வகை மனநோய் ஸ்கிசோபிரினியா (Schizophrenia) என்றழைக்கப்படும் மனச்சிதைவு நோய்.

மனச்சிதைவு நோய்க்கு பல காலகட்டங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நவீனகால அறிவியல் முன்னேற்றங்கள் மரபணுக்களில் எற்படும் மாற்றங்களே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. சாதகமற்ற வாழ்க்கைச்சூழல், மனஅழுத்தம், குழந்தைப் பருவத்தில் மனம் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள், போதைப் பழக்கங்கள், கலாசார மாற்றங்கள் போன்றவை இந்த மரபணு மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மனச்சிதைவு நோய் மருந்து களால் குணப்படுத்தக்கூடியதே. ஆரம்பகட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டால் எளிதில் கட்டுப்படுத்தலாம். பல புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பு நோயை குணமாக்கும் சதவீதத்தை அதிகரித்துள்ளதுடன் பக்கவிளைவுகள் குறைந்து காணப்படுவதால் நோயாளிகள் பயமின்றி உட்கொள்ளவும் உதவியாக உள்ளது. சரியான முறையில் மருந்துகளை சாப்பிடுவோர் சுமார் எழுபது சதவீதத்துக்கும் அதிகமானோர் நல்ல முன்னேற்றம் பெற்று சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.