எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

போபியாவாக மாறும் பயம்

“பெரும்பாலான மனநலப் பிரச்னைகளுக்கு சிறு வயதில் நடந்த சம்பவங்கள் தான் காரணமாக இருக்கிறது. அந்த வகையில், ஃபோபியா வருவதற்கும் சிறு வயது தாக்கம் முக்கியக் காரணமாக இருக்கலாம்” என்று உளவியல் பகுப்பாய்வு நூலில் சிக்மண்டு பிராய்டு தெரிவித்துள்ளார்.

சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம் போபியா என்பது பயம்தான் என்று. போபியா என்பது வேறு. பயம் என்பது வேறு. பயம் என்பது இயல்பானது. போபியா என்பது அளவுக்கு மீறிய பயம்.

சுருக்கமாக சொன்னால் இயற்கைக்கு மாறான பேரச்சம் என்று சொல்லலாம்.
பயம் அவசியம். போபியா அநாவசியம். ஆனால் வாழ்க்கையில் நேரிடும் சில அசாதாரண சம்பவங்களினால் சிலர் இந்த போபியாக்களை தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு மனநோய்தான்.

சில போபியாக்கள் ஆபத்தானவை. உதாரணமாக நீங்கள் கார் அல்லது பைக் ஓட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு மலைப்பகுதியில் பெரிய மேட்டைக் கடந்து போக வேண்டி இருக்கிறது. ஆரம்பத்தில் இலேசாக இருக்கும் பயம் நாளடைவில் டிரைவிங்கே வேண்டாம் என்று முடிவெடுத்து விடுகிறீர்கள் என்றால் அங்கேதான் அது போபியா எனப்படுகிறது.

இது நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது. சிலருக்கு இந்த போபியாவினால் அளவுக்கு மீறி பிரச்சினை ஏற்பட்டு இதய வியாதி வரை கொண்டு போய்விடும்.

போபியா என்பது வியாதியல்ல. ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளால் வேறு பாதிப்புகள் வர வாய்ப்பு அதிகம். ஆண்களை விட, பெண்களுக்கு தான் போபியா வர அதிக வாய்ப்பு உள்ளது. காரணம்,பெண்களுக்கு அடிப்படையிலேயே பய உணர்வு அதிகம்.

சில வகை போபியாக்கள், பரம்பரையாக தொடர் கிறது. பெரும்பாலும் ஐந்து வயதில் போபியா ஆரம்பிக்கும். பூச்சிகளை பார்த்தால், இருட்டை பார்த்தால், யாராவது அதிர்ந்து பேசினால், குழந்தைகள் பயப்படும். பள்ளியில் முரட்டுத்தனமான வாத்தியாரை பார்த்தால் பிடிக்காது. வாகன சத்தம் பிடிக்காது. இதுபோன்ற விஷயங்களில் அடிக்கடி பயம் ஏற்பட்டால், அது போபியாவாக மாற வாய்ப்பு உள்ளது.

போபியாவிற்கு தகுந்த மனநல சிகிச்சையும் மருந்துகளும் எடுத்துக்கொண்டால் எளிதில் குணமடையலாம்.