எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 31 டிசம்பர், 2016

வெற்றி !!! தோல்வி !!!

இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். பரிசோதனைச் சாலையில் மும்முரமாய் சோதனையில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியை அவருடைய ஜெர்மானிய ராணுவ அதிகாரிகள் ஒருநாள் கூப்பிட்டு அனுப்பினார்கள்.

அப்பொழுது அவர் ராக்கெட் தயாரிக்கும் முயற்சியில் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட அவகாசம் கொடுத்திருந்தும் ராக்கெட் எதையும் அவர் கண்ணில் காட்டுவதாய் இல்லை. சட்டென்று ஏதாவது கண்டுபிடித்துக் கொடுத்தால் லண்டன் நகரில் போட்டுத் தீபாவளி கொண்டாடலாம் என்று துடித்துக் கொண்டிருந்தார்கள் ஜெர்மானிய ராணுவத்தினர்.


"என்னய்யா ஆச்சு?" விசாரித்தார்கள்.

"இதுவரை 65,121 தவறுகள் செய்திருக்கிறேன்; கண்டுபிடித்துவிடுவேன்" என்றார்.

அந்தப் பதில் அவர்களுக்குச் சகிக்கவில்லை.

"நீ கண்டுபிடித்து முடிக்க இன்னும் எத்தனைத் தவறுகள் செய்ய வேண்டியிருக்கும்?"

"ம்ம்ம்… எப்படியும் மேற்கொண்டு ஓர் ஐயாயிரம் தவறுகள் நிகழலாம். குறைந்தது 65,000 தவறுகள் செய்தால்தான் ஒரு ராக்கெட் கண்டுபிடிக்கும் தகுதியே உருவாகிறது. இப்பொழுதுதான் அந்தத் தகுதி எனக்குக் கிடைத்துள்ளது. ரஷ்யா இதுவரை 30,000 தவறுகள் மட்டுமே செய்துள்ளது. அமெரிக்கா ஒரு தவறும செய்யவில்லை. தெரிந்து கொள்ளுங்கள்" எனக் கூறினார் ராக்கெட் விஞ்ஞானி வெர்னர் வான் ப்ரௌன் (Wernher von Braun). ஜெர்மனியைச் சேர்ந்தவர். 

அவர் பேச்சு பொய்யாகவில்லை. அன்று வரை ராக்கெட் தொழில்நுட்பத்தில் ரஷ்யா பாதியளவு மட்டுமே முன்னேறியிருந்தது; அமெரிக்கா அத்துறையில் அப்பொழுது ஒன்றுமேயில்லை. இறுதியில் வெற்றிகரமாய் அவர் ஏவுகணையைக் கண்டுபிடித்துக் கொடுக்க அதை வைத்துக்கொண்டு ஜெர்மனி கெட்ட ஆட்டம் போட்டது.


எதிரி நாடுகளைக் கதிகலங்க அடித்தனர்; ஒருவழியாய் உலகப் போர் முடிவுக்கு வர, பார்த்தார் வெர்னர்; ரஷ்யர்களிடம் மாட்டிக் கொண்டு வதைபடுவதைவிட அமெரிக்கா பரவாயில்லை என்று அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். அவரைப் பத்திரமாக  தன் ஊருக்கு அழைத்து வந்த அமெரிக்கா அவரது அறிவுக்கு வேண்டிய தீனியைப் போடவே முதன்முதலில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வைக்க நாஸா உருவாக்கிய ராக்கெட்டிற்கு இவரது அறிவும் உழைப்பும் அடிப்படையாயின.

பணம் தவிர ஏகப்பட்ட விருதெல்லாம் சம்பாதித்துக் கொண்டு 1977-ல் தமது 65ஆவது வயதில் இறந்து போனார் விஞ்ஞானி வெர்னர்.



தவறுகளெல்லாம் உண்மையில் தவறுகளல்ல. நமது ஒவ்வொரு தவறும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தராமல் விடுவதில்லை. வெற்றியாளர்கள் தவறிழைத்தால் கற்கிறார்கள். அடுத்தமுறை தவறு நிகழ்ந்தால் அடுத்த முறையும் கற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு தவறிலும் விடாமல் கற்றுக் கொண்டே இருப்பதால், வெற்றியடைகிறார்கள். 

இந்த வருடத்தில் கற்ற தோல்வி என்னும் பாடத்தின் மூலம் அடுத்த (2017) வருடத்தில்  வெற்றி பெற வாழ்த்துக்கள்...