எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 17 டிசம்பர், 2016

முதன்மை குணம்!!!

முன்னோரு காலத்தில் குருவின் பாட சாலையில் வகுப்புகள் முடியும் தருவாயில், அவரது மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்தார்கள். வகுப்பு முடிந்தவுடன், ஒரு மாணவனின் தாய் தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு மாம்பழத்தை அன்போடு குருவிடம் கொடுத்து உண்ணச் சொன்னார். குருவும் சீடர்களை அழைத்து அந்த மாம்பழத்தை கத்தியால் வெட்டி கொடுக்கச் சொன்னார். 

செக்கச் செவலென்று இருந்த பழத்தை பார்த்து சீடர்களுக்கு எச்சில் ஊறியது. ஒரு பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் குரு அந்த தாயிடம், "பழம் நன்றாக உள்ளது. நன்றி" என்று சந்தோசமாகத் தெரிவித்தார். ஆனால், அந்தத் தாய் தன் தோட்டத்து மாம்பழத்தை விரும்பி சாப்பிட்ட குருவைப் பார்த்து, "இன்னொரு பழமும் தாங்களே சாப்பிடுங்கள்" என்று கூறினார்.


குருவும் சம்மதித்து இரண்டாவது பழத்தையும் சாப்பிட்டார். அந்தத் தாய் மிக்க மகிழ்ச்சியோடு வீட்டுக்கு சென்றார். சீடர்கள் குருவைப் பார்த்து, "குருவே, ஒரு பழத்தை சாப்பிட்டு முடிந்தவுடன், இன்னொரு பழத்தை பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று அந்தத் தாயிடம் சொல்லிருக்கலாமே? இரண்டு மாம்பழத்தையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே?" என்று கேட்டனர். 

அதற்கு குரு, "சீடர்களே, அந்தத் தட்டில் மீதம் உள்ள சிறிய துண்டுகளைச் சாப்பிடுங்கள்" என்று கூறினார். அதை சாப்பிட்ட சீடர்கள் புளிப்பு தாங்க முடியாமல் துப்பினார்கள். குரு சிரித்துக் கொண்டே, "சீடர்களே, இதைத் தான் நீங்கள் அந்தத் தாயின் முன்பு செய்திருப்பீர்கள். தாயின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். நான் முதல் துண்டு சாப்பிடும் போதே எனக்குத் தெரியும். அதனால் தான் உங்களுக்கு நான் தரவில்லை" என்று கூறினார்.


அந்தத் தாய் சந்தோசப்பட, குரு முகத்தைக் கூடச் சுழிக்காமல் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு, நன்றாக உள்ளது என்று பாராட்டினாரே, அந்தபாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதன்மையாக இருக்க வேண்டிய குணம்.