எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 27 டிசம்பர், 2016

நன்றிக் கடன்!!!

ஜப்பானில் ஒரு வாய்மொழிக் கதை இருக்கிறது. அதில், ஒரு விவசாயி ஒரு நாள் பாம்பு உண்ண முயற்சித்த சிலந்தியைப் காப்பாற்றுகிறான். இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு அவனது வீடு தேடி ஒரு இளம்பெண் வந்து வேலை கேட்டாள். ‘‘உனக்கு என்ன வேலை தெரியும்?’’ என விவசாயி கேட்கும்போது, ‘‘நன்றாக நெசவு நெய்வேன்…’’ என்கிறாள் அந்தப் பெண்.


அவள் மீது பரிதாபம் கொண்டு அவளுக்கு வேலை தருகிறான் விவசாயி. அவள் ஒரு தறியை உருவாக்கிக் கொண்டு இரவு, பகலாக நெசவு செய்கிறாள். அந்தப் பெண் நெய்து வந்த துணியின் அழகைக் கண்டு வியந்துபோன விவசாயி அவளிடம், ‘‘எப்படி இதை நெய்தாய்?’’ எனக் கேட்டான்.
‘‘என்னிடம் எதையும் நீங்கள் கேட்கக் கூடாது. என் அனுமதில் இல்லாமல் என் அறைக்கும் வரக் கூடாது…’’ என்றாள். அவனும் அதை ஏற்றுக் கொண்டான். அவள் நெய்து தரும் விசித்திர ஆடைகளை விற்று நிறையப் பணம் சம்பாதித்தான் விவசாயி. அவனது வாழ்க்கை வளமானது.

ஒருநாள் ஆர்வ மிகுதியால் ‘அறைக்குள் அவள் என்னதான் செய்கிறாள்’ என ஒளிந்திருந்து பார்த்தான். அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. அவள் ஒரு சிலந்தியாக உருமாறி நெசவு செய்து கொண்டிருந்தாள். தன்னால் காப்பாற்றப்பட்ட சிலந்தி தனது நன்றிக் கடனைத் தீர்க்க பெண்ணாக உருமாறி வந்திருப்பதை அறிந்து கொள்கிறான். உண்மை தனக்குத் தெரியும் என அவன் காட்டிக் கொள்ளவே இல்லை.



ஒருநாள் அவளுக்காக பஞ்சு வாங்கிக் கொண்டு வருவதற்காக, விவசாயி சந்தைக்கு சென்றான். பஞ்சுப் பொதி வாங்கிக்கொண்டு வரும்போது அசதியில் ஓரிடத்தில் உறங்கிவிட்டான். அந்தப் பஞ்சுப் பொதியில் பாம்பு ஒன்று புகுந்து கொண்டது. அதை அறியாமல் வீட்டுக்குப் போய் இளம்பெண்ணிடம் பஞ்சுப் பொதியை ஒப்படைத்தான் விவசாயி. அவளும் உற்சாகத்துடன் சிலந்தியாக உருமாறி பஞ்சை தனது வாயில் அடைத்துக் கொண்டு, அதில் இருந்து நூலை உருவாக்க முயற்சித்தாள்.

அப்போது பாம்பு பாய்ந்து அவளை கொல்ல முயன்றது. பயத்தில் சிலந்திப் பெண் தப்பி ஓடினாள். அவளது கஷ்டத்தைக் கண்ட சூரியன், அவளைக் காப்பாற்றி வானுலகுக்குக் கொண்டுச் சென்றது.
சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவள் தன் வாயில் வைத்திருந்த பஞ்சைக் கொண்டு அழகான மேகங்களை உருவாக்கினாள். அப்படிதான் வானில் மேகங்கள் உருவாகின என்கிறது ஜப்பானியக் கதை.



எதிர்பார்ப்பு இல்லாமல் ஒருவருக்கு செய்யும் உதவி என்றும் நன்மையே தரும். அதே சமயம் பிறர் செய்த உதவியை மறக்காமல் அவர்களுக்கு நன்றி செலுத்த முற்பட வேண்டும்.