எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 22 டிசம்பர், 2016

உருவம்!!!

சீனாவில் உண்மையில் நடந்ததாக சொல்லப்படும் கிராமிய கதைகளில் ஒன்று இது. ஷாங் என்பவன் விறகுகள் வெட்டி விற்று வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தனது கோடரி காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டு பையன் லீ மீது சந்தேகம் வந்தது.

ஷாங் அடிக்கடி அவனை கவனித்திருக்கிறான். லீ ஜன்னலின் வழியாக தன் வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பான். அவன் நெற்றியில் பயங்கரமான தழும்பு ஒன்று இருப்பது தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியும். நெற்றித் தழும்பும், குறுகுறு பார்வையும் அவனை திருடன் போல காட்டும். எனவே ஷாங், லீயை திருடன் என்றே எண்ணி வந்தான். 


தன் கோடரி காணாமல் போனதால் அவனது சந்தேகம் மேலும் வலுத்தது. தன் சகோதரன் டாங்கிடம், ஷாங் இது பற்றி பேசினான். அப்போது 'பக்கத்து வீட்டு லீதான் திருடன்' என்றே கூறிவிட்டான். 'லீ நடந்து செல்வதும் திருடனை நினைவுபடுத்தும், பதுங்கிப் பதுங்கி வருவதுபோல தயக்கமாக வருவான். சற்று நேரத்தில் இந்த வழியாக வரும்போது நீயே கவனி...' என்று சகோதரனிடம் விளக்கிக் கொண்டு இருந்தான்.

அப்போது ஷாங்கின் மனைவி நாணற் புற்களை வெட்டிக் கொண்டு கோடரியுடன் வந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும், 'நான் வைக்கோல் போரில் விழப் பார்த்தேன்' என்றாள். மனைவியின் தோளில் இருந்த கோடரியைப் பார்த்ததும் ஷாங்கின் முகம் மலர்ந்தது. சோகம் மறைந்தது.


'எங்கே போயிருந்தே?' என்று அவன், தன் மனைவியிடம் கேட்டான். அவள் பதில் ஏதும் கூறாமல் ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தாள். 'நான் கேட்டதற்கு பதில்சொல், அங்கே என்ன பார்க்கிறாய்?' என்றான். 'நான் பக்கத்து வீட்டு பையனை பார்க்கிறேன்' என்றாள். அவனும் திரும்பிப் பார்த்தான்.

அங்கே லீ ஒரு கோடரியுடன் சென்று கொண்டிருந்தான். அவன் கையில் சிறு பண முடிப்பும் இருந்தது. 'அவன் சாதுவான பையன் இல்லையா?' என்றாள் அவனது மனைவி. சற்று நேரத்திற்கு முன், அவனை இதேபோல் கோடரியுடன் பார்த்திருந்தால் நிச்சயம் அவன்தான் திருடன் என்ற முடிவுக்கு வந்திருப்பான் ஷாங். ஆனால் இப்போது மனைவியின் கையில் தன் கோடரி இருந்ததால், பக்கத்து வீட்டு பையனைப் பற்றிய எண்ணம் மாறிப்போனது. 'நிஜம்தான், அவன் ரொம்ப நல்ல பையன்' என்றான் ஷாங். 

பார்வை, நடை, பேச்சு ஆகியவற்றை வைத்து மட்டும் ஒருவரை எளிதாக எடை போட்டுவிட முடியாது.