எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

இயல்பு !!!

வட இந்தியாவிலுள்ள கந்தார நாட்டின் தக்கசீலம் என்ற பகுதியில் ஒரு கன்றுக்குட்டி பிறந்தது. மிக வலுவான காளையாக வளர வேண்டும் என்பதற்காகவே, பிரத்யேக இனங்களைச் சேர்த்து அந்தக் கன்றுக்குட்டி பிறக்க வைக்கப்பட்டது. இதன் சிறப்பை உணர்ந்த மிகப்பெரிய வியாபாரி ஒருவன் அதை வாங்கிச் சென்றான். கன்றிலிருந்து காளையாக வளரும் வரை பிரத்யேகமான உணவுகள், சிறப்பு தானியங்கள் என படாடோபமாக வளர்க்கப்பட்டது அந்தக் காளை. 


அதன் இனமும் கொடுக்கப்பட்ட உணவும் அந்தக் காளையை முழு சக்தியுடையதாக வளர்த்தெடுத்தது. அப்போதும்கூட அந்த உணவுகள் மாறவுமில்லை. அந்த காளை வண்டி இழுக்கப் பயன்படுத்தப்படவுமில்லை. இதைக்கண்ட காளை ‘நம் எஜமான் நம்மை எவ்வளவு சிறப்பாகப் பார்த்துக் கொள்கிறார். அவருக்கு நாம் ஏதாவது கைம்மாறு செய்தே ஆக வேண்டுமே’ என்று அந்த வியாபாரியை அழைத்தது.
“எஜமான், என்னை நீங்கள் சிறப்பாகப் பார்த்துக் கொள்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்கு எதுவுமே செய்யவில்லை. எனக்கு இது மிகவும் சங்கடத்தை அளிக்கிறது. நான் ஒரு யோசனை சொல்கிறேன். ஊருக்குள் சென்று, ‘என் காளையைப் போல் சிறந்த காளை வேறு எதுவுமே இல்லை. என் காளை தனியாக நூறு வண்டிகளை இழுக்கக்கூடியது’ என்று சொல்லி யாரையாவது பந்தயத்துக்கு அழைத்து வாருங்கள். நான் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருகிறேன்” என்று சொன்னது. சுறுசுறுப்பாக வேலை செய்த வியாபாரியின் மூளை, இந்த யோசனைக்கு சரியெனச் சொல்லவும், ஊருக்குள் சென்று ஒரு பந்தயக்காரனிடம் பேசிவிட்டு வந்தார். 
அந்த பந்தயக்காரன் மற்றொரு உள்ளூர் வியாபாரி. அவன் சொன்னபடி தன் காளையுடன் சென்ற வியாபாரி நூறு வண்டிகளைக் கண்டார். அந்த வண்டிகள் மணலும், சேரும் நிரப்பி வைக்கப்பட்டிருக்க, தன் காளையை வண்டியில் பூட்டி ஏறி அமர்ந்தார் வியாபாரி. தன் எஜமானனுக்கு நல்லது செய்யப்போகும் பெருமையுடன் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த காளையை, மேலே உட்கார்ந்திருந்த வியாபாரி திடீரென ‘காது கேட்காத மிருகமே, உடனே, முன்னே போ’ எனக் கத்தி சாட்டையைச் சுழற்றினார். 
இதைச் சற்றும் எதிர்பார்க்காத காளை அப்படியே அமைதியாக நின்றுவிட்டது. எனவே பந்தயத்தில் தோற்று 1000 பொற்காசுகளை இழந்த வியாபாரி, சோகத்துடன் வீட்டுக்குச் சென்று அமர்ந்தார். அவர் பின்னால் சென்ற காளை, எஜமான் முகத்திலிருந்த சோகத்தைக் கண்டு ‘ஏன் இப்படி சோகமாக இருக்கிறீர்கள். தூக்கம் வரவில்லையா?’ என வினவ, ‘எப்படித் தூக்கம் வரும்? 1000 பொற்காசுகளை உன்னால் இழந்தேன்’ எனக் கூறினார்.
இதைக் கேட்ட காளை ‘என்னால் இழந்தீர்களா? உங்களால் இழந்தீர்களா?. உங்களுக்கு நல்லது செய்வதற்காக நான் ஒரு யோசனை சொன்னால், நீங்கள் என்னையே காது கேட்காத மிருகமே எனத் திட்டினீர்கள். அதனால் தான் நான் மிருகத்தைப் போல அமைதியாக நின்றேன். என் உடலைப் பார்த்து பார்த்து வளர்த்த நீங்கள், என் மனம் புண்படும் என யோசிக்கவில்லையே?’ எனக் கேட்டது.


காளையின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்த வியாபாரி மன்னிப்பு கேட்டதும், மீண்டும் அந்தப் போட்டியை 2000 பொற்காசுகளுக்கு நடத்துமாறு சொன்னது காளை. அதன்படியே மீண்டும் போட்டி அறிவிக்கப்பட, இனாமான வரும் பணத்தை வேண்டாம் என்பானேன்’ என்று பந்தயக்கார வியாபாரியும் 2000 பொற்காசுகளுக்கு போட்டியை நடத்த, மலர் மாலையிட்டு, தாமரைப் பூவால் தலையைத் தடவி வண்டியில் பூட்டப்பட்ட காளை நூறு வண்டிகளையும் இழுத்து தனது எஜமானனுக்கு வெற்றியத் தேடித்தந்தது. இழந்த பொற்காசுகளையும்.
உலகில் எப்போது வேண்டுமென்றாலும் எது வேண்டுமானாலும் மாறலாம். ஒரு நொடியின் கடைசி காலம் கூட நம்மால் நிறுத்தி வைக்க முடியாதது. எந்த நேரத்திலும் தமது இயல்பிலிருந்து மாறினால், அதனால் இழப்பு நமக்குத் தான்.