எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 13 டிசம்பர், 2016

அறிவு!!!

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒருநாள் மந்திரி சபையை கூட்டி விவாதம் செய்து கொண்டிருந்தபோது எதிரி நாட்டைச் சேர்ந்த தூதுவன் ஒருவன் ராஜாவை பார்க்க வந்தான். வந்த தூதுவன் எதுவுமே பேசாம ராஜாவோட சிம்மாசனத்தை சுற்றி ஒரு வட்டம் போட்டான். 

தூதுவனின் இந்த செய்கைக்கு ராஜா உட்பட யாராலும் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே ராஜா, "இந்த வட்டத்திற்கு சரியான விளக்கம் அளிப்பவர்களுக்கு பரிசு அளிக்கப்படும்" என அறிவித்தார். ஆனால் யாரும் வந்து எதுவும் சொல்லவில்லை. இதனால் அரண்மனை காவலர்கள் குதிரையில் ஏறி புத்திசாலியை கண்டுபிடிக்க கிளம்பினார்கள்.

ஊர் எல்லைக்கு வந்து விட்டார்கள். அங்கே ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு சின்ன குடில் இருந்தது. அமைதியான அந்த குடிலில் ஒரு தொட்டில் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு குழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. முற்றத்தில் நெல் மணிகள் காய வைக்கப்பட்டிருந்தன. அதை பறவைகள் கொத்தி தின்று விடாதவாறு பெரிய விசிறி ஒன்று ஆடிக்கொண்டிருந்தது.

இதைப் பார்த்த வீரர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆச்சரித்துடன் வீட்டிற்குள் நுழைந்தனர். மற்றொரு அறையில் ஒரு நெசவாளி நெசவு செய்து கொண்டிருந்தார். அவரிடம் குழந்தையின் தொட்டில் தானாக ஆடுவது குறித்தும், முற்றத்தில் தானாக விசிறி வீசுவது பற்றியும் கேட்டனர் வீரர்கள். 

அவர்களுக்கு பதிலளித்த தொழிலாளியோ, “இது ஒன்றும் பெரிய விசயமில்லை. என்னுடைய நெசவு செய்யும் தறியில் இரண்டு கயிறுகளை கட்டியிருக்கிறேன். ஒன்றை குழந்தையின் தொட்டிலிலும், மற்றொன்றை விசிறியிலும் இணைத்துள்ளேன். நான் துணி நெய்யும் போது அந்த கயிறு இழுக்கப்படுவதால் இரண்டுமே தானாக ஆடுகின்றன" என்றார் அந்த நெசவாளி. 


இதைக் கண்ட வீரர்கள், "ஆஹா! நமது மன்னரின் குழப்பத்தை தீர்க்கும் புத்திசாலி இவன்தான்" என்று உடனே நடந்த விசயத்தை நெசவாளியிடம் கூறி, மன்னரைப் பார்க்க வருமாறு அழைத்தார்கள். நெசவாளியும் உடனே ஒப்புக்கொண்டு வீரர்களுடன் கிளம்பினார். போகும் போது குழந்தைகள் விளையாடும் இரண்டு பொம்மைகளை எடுத்துக்கொண்டான். கூடவே அவன் வீட்டில் வளர்க்கு கோழி ஒன்றையும் எடுத்துக்கொண்டு சென்றான். 

அரண்மனை தர்பாருக்கு சென்ற நெசவாளி சிம்மாசனத்தை சுற்றி போடப்பட்டிருந்த வட்டத்தை கவனித்தான். அதில் பொம்மைகளை தூக்கிப் போட்டான். இதைப்பார்த்த தூதுவன் உடனே தன் கையில் இருந்த நெல்மணிகளை தூக்கிப் போட்டான். நெசவாளியும் தன் கையில் இருந்த கோழியை விட்டு நெல் மணிகள் முழுவதையும் சாப்பிட வைத்தான். தூதுவன் உடனே பயந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான். அரண்மனையில் இருந்தவர்கள் யாருக்கும் எதுவுமே புரியவில்லை.

 நெசவாளியின் செயலுக்கு விளக்கம் கேட்டார் மன்னர்.“அது ஒன்றுமில்லை மன்னா, உங்கள் நாட்டைச் சுற்றிலும் நால்புறமும் படைகளைக் கொண்டு தாக்கப்போகிறோம் என்று வட்டம் போட்டான் தூதுவன். நானோ குழந்தைகள் விளையாடும் பொம்மைகளைப் போல எங்கள் வீரர்கள் உங்கள் படை வீரர்களை சூறையாடி விடுவார்கள் என்றேன். அதற்கு அவனோ, நெல்மணிகளைப் போல கணக்கில் அடங்காத வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்றான். நானோ ஒரு கோழியை விட்டு அதை சாப்பிட வைத்ததன் மூலம் எங்கள் நாட்டில் உள்ள ஒரு வீரனே போதும் உங்கள் நாட்டு வீரர்களை வெற்றி கொள்ள, அந்த அளவிற்கு வீரமும் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள் என்றேன். உடனே தூதுவன் ஓடிவிட்டான்" என்றான் நெசவாளி. இதை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 

பெரிய பதவியில் இருப்பவர்கள்தான் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பதில்லை. நெசவு செய்யும் தொழிலாளி கூட புத்திசாலியாக இருக்க முடியும் என்பதை மன்னரும் அரண்மனையில் இருப்பவர்களும் உணர்ந்து கொண்டனர். 

படித்தவர்கள் அனைவரும் புத்திசாலி இல்லை; புத்திசாலிகள் அனைவரும் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.