எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

நிதர்சனம்!!!

ஒருவன் அழகானமண்டபம் ஒன்றைக் கட்டினான். அது எண்கோண வடிவில் இருந்தது. அதன் எட்டுப் பக்கச் சுவர்களிலும் நிலைக் கண்ணாடிகள் பதித்திருந்தான். 

எந்த உருவமும் எந்தத் திசையில் பார்த்தாலும் தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது. மண்டபத்தின் நடுவே அழகான ஒரு மலரைக்கொண்டு வந்து வைத்தான் அவன். அழகான மலர், எட்டுப் பக்கங்களிலும் எட்டு மலர்களாகத் தோற்றம் அளித்தது.


ஒருநாள் அவன் மண்டபத்தின் கதவை மூடும் முன் சிறு வெண்புறா ஒன்று உள்ளே நுழைந்து விட்டது. அது கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தது. கண்ணாடியில் தெரியும் பிம்பத்தையே உண்மை என்று எண்ணி அதை நோக்கிப் பாய்ந்து பறந்தது.

எட்டு திசைகளிலும் அது மாறி மாறிப் பறந்தது. கண்ணாடியில் மோதிற்று. ஆனால் அந்தப் பறவையால் வெளியேற முடியவில்லை. கடைசியில் புறா சோர்ந்து போய்த் தரையில் விழுந்தது.

அதன் அருகே இருந்த அழகான மலரை அது அப்போது தான் பார்த்தது. அந்த இடத்தில் அதுவே உண்மை என்பதை உணர்ந்து கொண்டது.

வாழ்க்கையில் அந்தப் புறாவைப் போலவே, நாம் மாய நிழல்களைத் தேடி அலைகிறோம். நமக்குள்ளேயே இருக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நாம் உணருவதில்லை. வாழ்க்கையில் தோல்விகளை அடைந்து, மனம் சலித்துப் போய் விழும் வேளையில் நிதர்சனமான உண்மை எது என்பதை உணருகிறோம்.