வயதான சிற்பி ஒருவன், ஒருநாள் தன் இரு மகன்களை அழைத்துப் பேசினார். “எனக்கு வயதாகிவிட்டது. கண் பார்வை மங்கிவிட்டது. நான் உங்களுக்கு சொத்து ஏதும் சேர்த்து வைக்கவில்லை. என்னிடம் உள்ள கருவிகளை உங்களுக்குத் தருகிறேன். அதை வைத்து உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ளுங்கள்” என்றார். இருவருக்கும் சரி சமமாக கருவிகளை பங்கிட்டுக் கொடுத்தார்.
சிற்பம் வடிக்கும் பல்வேறு கருவிகள் அதில் இருந்தன. பெரிய மகன் ஊதாரி, சோம்பேறி. “இந்த உளிகளையும், சுத்திகளையும் வைத்து என்ன செய்வது. பெரிய நிறுவனம் எதிலாவது சேர்ந்து நன்றாக சம்பாதிப்போம்” என்று எண்ணி, தந்தை தந்த கருவிகளை வீட்டிலேயே வைத்துவிட்டு வேலை தேடி புறப்பட்டான்.
எங்கெங்கோ வேலை தேடி அலைந்தான். கிடைத்த வேலையைச் செய்வான், எங்காவது உண்பான், எங்கேயாவது உறங்குவான், எங்கும் நிலைத்திருக்காமல் சுற்றிச் சுற்றி அலைந்தான். இளையவன் தந்தை தந்த கருவிகளை பயன்படுத்தி சின்னச்சின்ன பொம்மை சிற்பங்களை செய்து விற்பனை செய்தான். அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வந்தான்.
போதிய வருமானம் கிடைக்காவிட்டாலும், பட்டினியில்லாமல் குடும்பத்தினர் வாழ்ந்தனர். ஒருமுறை சிற்ப போட்டி ஒன்று நடந்தது. அவன் தான் செய்த சிற்பத்தை போட்டிக்கு அனுப்பி வைத்தான். அந்த அழகு சிற்பம் முதல் பரிசுக்கு தேர்வாகி, பொன்முடிப்பை பரிசாகப் பெற்றுத் தந்தது.
அத்துடன் குறு நில மன்னரால் பாராட்டப்பட்டு அரசாங்கத்தில் சிற்ப பணி செய்யும் வேலையும் கிடைத்தது. அதன் பிறகு அவன் வாழ்வே வசந்தமானது. அதிர்ஷ்ட தேவதை அவர்கள் வாழ்வில் களி நடனம் புரிந்தாள்.
ஆனால் அவன் அண்ணன் பல ஊர்களில் சுற்றி அலைந்துவிட்டு வேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு திரும்பினான். வறுமையால் தவித்த அவன் உடல் மெலிந்து காணப்பட்டான். தம்பி அண்ணணை அரவனைத்து தன்னோடு வேலைக்குச் சேர்த்துக் கொண்டான்.
தந்தை இதனை பார்த்து பெருமிதப் பட்டார். பின்னர் மூத்த மகனை அழைத்தார்.“மகனே! நீ வாய்ப்பும், வசதியும்தேடி அலைந்தாயே. தம்பி இருப்பதை வைத்து உழைத்து முன்னேறி விட்டான், பார்த்தாயா? தெரிந்த தொழிலை அபிவிருத்தி செய்யாமல் வீணாக அலைந்து என்ன பலன்?” என்றார்.
“ஆம்! தந்தையே உழைப்பே உயர்வு தரும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்” என்றான் மூத்தமகன். அன்று முதல் நன்கு தெரிந்த சிற்பத் தொழிலையே தானும் அக்கறையுடன் செய்யத் தொடங்கினான்.
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!