மறதி வியாதி பற்றி கிரேக்க புராணத்தில் ஒரு கதை உண்டு. ஈயொஸ் என்ற தேவதையிடம் காதல் கொள்கிறான் தைதோனிஸ். ஆனால் தைதோனிஸ் மரணத்தை தாண்டமுடியாத ஒரு சாதாரண மானுடன்.
பெரிய கடவுள் ஈறொஸிடம் தைதோனிஸுக்கு சாகா வரம் தரும்படி வேண்டுகிறாள் அவன் காதலி ஈயொஸ். அவனும் கொடுத்துவிடுகிறான். ஆனால் அதில் ஒரு சூழ்ச்சி இருந்தது. இளமையுடன் கூடிய சாகாவரம் அல்ல அது. தைதோனிஸ் வயோதிகம் கூடி, தளர்ச்சியும், மறதியும் கூடி தொணதொணக்க தொடங்குகிறான்.
ஈயொஸால் இதை பொறுக்கமுடியாமல், தைதோனிஸை வெட்டுக்கிளியாக மாற்றிவிட்டு தப்பிவிடுகிறாள். இன்றும் வெட்டுக்கிளி ஓயாமல் சத்தம் போடுவது இதனால்தான் என்கிறது அந்த கதை.
அன்று தொடங்கியது இன்று வரை மறதி தொடர்கிறது. வயதானவர்களுக்கு வருகிற மறதிநோய்களை அவர்களுடைய குழப்பமான நடவடிக்கையே காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மறதி என்பது எல்லா வயதினருக்கும் சாதாரணமான ஒரு விஷயமாக இருக்கிறது. இளைஞர்களுக்கு ஏற்படும் மறதி நோய்க்கு அம்னீசியா என்று பெயர். இந்த அம்னீசியாவில் மூன்று வகைகள் இருப்பதாக சமீபத்திய அமெரிக்க ஆய்வில் கண்டறிந் திருக்கிறார்கள்.
இளைஞர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முதல் வகையில்தான். இந்த பாதிப்பு ஏற்பட்டால் இளைஞர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். சம்பவங்களை மனதில் பதிந்து வைத்துக் கொள்ள முடியாது, பழைய நிகழ்வுகள் நினைவிருக்காது, பெயர்களில் குழப்பம் வருவது போன்றவை முதல் வகை அம்னீசியா.
மனதில் இருப்பதை வெளியில் சொல்லத் தடுமாறுவது, விபத்துகளால் ஏற்படும் மறதி நோய் போன்றவை இரண்டாவது வகை அம்னீசியா (Retrograde Amnesia).
இயல்பாக ஒருவருடன் பார்த்து, பேசி, பழகுவார்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே தான் பேசிக் கொண்டிருந்த நபரை அடையாளம் தெரியாமல் போவது மூன்றாம் வகை அம்னீசியா.
ஆரம்பத்திலேயே கண்டறிந்து விடடால், இந்த மறதி நோயை குணப்படுத்த பல்வேறு வழிமுறைகள் உள்ளன.