எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 16 டிசம்பர், 2016

திட்டமிடுதல்!!!

ஒரு சாம்ராஜ்யம் இருந்தது. அங்கு பட்டத்து யானை மூலம் அரசனை தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்பட்டது. அப்படி யானையினால் மாலை சூட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுபவர் எல்லாவித ராஜ போகங்களுடன் ஆட்சி புரியலாம். ஆனால் அவரது பதவி காலம் ஐந்து ஆண்டுகள் மட்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரை நாட்டை விட்டு வெளியேற்றி கடலுக்கு அப்பால் உள்ள தீவுப் பிரதேசத்துக்கு நாடு கடத்தி விடப்படுவார். அரசராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தனது ஆட்சி காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதையே லட்சியமாகக் கொண்டுஆட்சி புரிந்தனர். 


ஐந்தாண்டு கால நிறைவில் தீவில் விடப்பட்டு வறுமையில் வாடுவார்கள். மக்கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை ஐந்தாண்டு முடிவில் பதவி இழந்தவருக்கு மாற்றாக வேறு ஒருவரை யானை தேர்ந்து எடுத்தது. அவர் ஆட்சியில் மக்கள் ஒன்றும் அவ்வளவு நன்றாக இல்லை. அநியாயமாக வரி போட்டு மக்களை வாட்டி வதைத்து விட்டார். எப்போது ஐந்து ஆண்டுகள் முடியும், இவர் ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கப்பட்டு தீவுப் பிரதேசத்துக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 

அவர்கள் எதிர்பார்த்த ஐந்தாண்டு காலம் முடிவுக்கு வந்தது. அந்த கொடுங்கோல் அரசனை ஆட்சியில் இருந்து நீக்கி படகில் ஏற்றிக் கொண்டு தீவுப் பிரதேசத்துக்கு கொண்டு போனார்கள். இப்படி கொண்டு போகும் போதெல்லாம் பதவி இழந்த அரசர்கள் வருந்திப் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த நபர் எந்த வருத்தமும் இல்லாமல் படகில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அவரை படகில் ஏற்றிக் கொண்டு போனவர்களுக்கு வியப்பாக இருந்தது. 

அவரைப் பார்த்து, "பதவி இழந்து தீவில் வறுமையில் வாழப் போகிறீர்கள். அதைப் பற்றி கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கறீர்களே எப்படி?" என ஒருவர் கேட்டார். அதைக் கேட்ட அந்த முன்னாள் அரசன், ”என்னுடன் அந்த தீவுக்கு வந்து பாருங்கள்” என்று சொன்னான். படகு தீவின் கரையை அடைந்தது. 

உடன் வந்தவர்கள் அந்த தீவைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். வறண்டு போய் இருந்த தீவு அங்கு இல்லை. மிகப்பெரிய அரண்மனை, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், தோட்டங்கள், பூங்காக்கள் என்று அந்த தீவே செல்வச் செழிப்புடன் சொர்கலோகம் போலக் காட்சி அளித்தது. உடன் வந்தவர்கள் திகைத்துப் போனார்கள்.

அப்போதுதான் தெரிந்தது, அந்த முன்னாள் அரசர் தம் ஐந்தாண்டு கால ஆட்சியில் தன் வருங்கால சந்ததியினர் பலரும் பயன்பெறும் வகையில் அந்த தீவில் சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொண்டார் என்பது. 


அரசனை யானை மாலைப் போட்டுத் தேர்ந்தெடுத்ததால்,  அதிருஷ்டம் உள்ளவர்கள் எவர்வேண்டுமானாலும் ஆட்சிக்கு வர முடிந்தது. அவர்கள் இஷ்டம் போல எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சி செய்ய முடிந்தது. ஆனால் அவர்களுடைய வருங்காலத்தைப் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை.

சரியான திட்டம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. நமது இலக்கை முதலில் நிர்ணயம் செய்துகொண்டு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தினால் நம் எண்ணம் இறுதியில் நல்ல பயனை தரும்.