எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 30 நவம்பர், 2016

தனி மரம்!!!

பரந்த வயல்வெளியின் நடுவே அந்த மரத்திற்கு ஒரு வீடு இருந்தது. அந்த வயல்வெளியில் வேறு மரங்கள் எதுவும் இல்லை. எந்தப் பறவையும் அங்கு வருவதும் இல்லை. அங்கே ஒரே ஒரு மரம் தனிமையாக உள்ளது.
மரத்தின் மனதில் ஆயிரக்கணக்கான ஆசைகள்.

இந்த ஆசைகளை எல்லாம் யாரிடம் சொல்வது என அது நினைத்தது! சூரியன், நிலா, நட்சத்திரம் ஆகியோரிடம் சொல்லலாமா? ஆனால், அவை எல்லாம் வெகு தூரத்தில் வானில் அல்லவா இருக்கின்றன?
திடீரென்று ஒருநாள் மாலை வேளையில், பாதை தவறிய ஒரு நீலக்குருவி அந்த மரத்தின் மீது வந்து உட்கார்ந்தது. 

நேரம் செல்லச் செல்ல வானம் இருட்டியது. இருட்டில் எப்படி வீட்டிற்குப் போக முடியும் என்று நீலக்குருவி யோசித்தது. அதனால் இரவு மட்டும் மரத்திலேயே தங்கி விடலாம் என நினைத்தது.
இதைப் பார்த்த மரத்துக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. மனசுக்குள் துள்ளிக் குதித்தது. மரம் நீலக்குருவியிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தது. 

சிறிது நேரத்தில் மரமும் நீலக்குருவியும் நண்பர்களாகி விட்டார்கள். இருவரும் நேரம் போவதே தெரியாமல் விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்தது. நீலக்குருவி தன்னுடைய வீட்டுக்குப் புறப்படத் தயரானது. புறப்படும் முன்பாக,
“கவலைப்படாதே! நான் மறுபடியும் இங்கு வருவேன்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுக் குருவி பறந்து சென்றது.

குருவி வரும் என்று இரவும் பகலும் மரம் காத்துக் கொண்டிருந்தது. பகல்கள் போயின, இரவுகள் போயின. நாட்கள் நகர்ந்தன. ஆனால் நீலக்குருவி மட்டும் வரவேயில்லை. மரம் கண்ணீர் விட்டு அழுதது. அதன் கண்ணீர், துளித் துளியாகக் கீழே விழுந்தது.


ஒருநாள் காலையில் தன் கண்ணீர் கீழே குளமாகத் தேங்கி இருப்பதைக் கண்டது அந்த மரம். இப்போது குளத்துடன் பேசத் தொடங்கியது மரம். நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தது. தன் காலை குளத்தில் நனைத்தபடி மரம் பேசிக்கொண்டேயிருந்தது. பேசிக்கொண்டே குளத்தில் பிரதிபலித்தத் தன் கிளையைப் பார்த்தது. அந்தக் கிளையில்தான் ஒரு காலத்தில் ஒரு பறவை வந்து அமர்ந்திருந்தது. குளத்தின் துணையுடன் மரம் இப்போது தனியாக இல்லை.

அந்த தனி மரத்தைப் போன்ற பெற்றோர்களும், நீலக்குருவி போன்ற பிள்ளைகளும் இருப்பதால் தான் குளம் போன்று முதியோர் இல்லங்கள் பெருகி விட்டனவோ???