எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 17 நவம்பர், 2016

நான்கு வகை மனிதர்கள்!!!

அரசர் தன் மந்திரியிடம் புதிர் ஒன்றிற்கு விடை கேட்டார். “மந்திரியாரே, இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை முதல் வகையினர் உண்டு உண்டு. இரண்டாம் வகையினர் உண்டு இல்லை. மூன்றாம் வகையினர் இல்லை உண்டு. நான்காம் வகையினர் இல்லை இல்லை. இவர்களை உங்களுக்குத் தெரியுமா?“ என்றார். 


“மன்னா இதற்கான பதிலை நாளை சொல்கிறேன் “ என்றார் மந்திரி. மறுநாள் அரண்மனைக்கு வரும்போது மந்திரியுடன் நான்கு பேர் வந்தனர். அவர்களைக் காட்டி “மன்னா! இதோ இந்த பணக்காரர் தர்ம சிந்தனை கொண்டவர். இவர் உண்டு உண்டு வகையைச் சேர்ந்தவர். பூவுலகிலும் சுகமாக வாழ்கிறார் புண்ணிய செயல் செய்வதால் மேலுலகத்திலும் சுகம் அடைவார். 

இரண்டாவது ஆளான இவரும் செல்வந்தர் தான் என்றாலும் சுய நலத்துடன் வாழ்வதால் உண்டு இல்லை பிரிவில் இருக்கிறார். பூவுலகில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலும் மேலுலகில் இவருக்கும் சுகம் கிடைக்காது. 

மூன்றாவது ஆளான துறவிக்கு இங்கு சுகம் இல்லாவிட்டாலும் மேலுலகில் மகிழ்ச்சி உண்டு.

நான்காவது நபரான இந்த திருடனுக்கு இங்கும் அங்கும் மகிழ்ச்சி இல்லை. ஏனென்றால் கையும் களவுமாக பிடிபட்டால் இங்கும் தண்டனை உறுதி பாவம் செய்வதால் அங்கும் துன்பமே“ என்றார். 

உலகிலுள்ள அத்தனை பேரும் இந்த நால்வர் அணிக்குள் அடங்கியிருக்கின்றனர். இதில் நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர்?