எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 3 நவம்பர், 2016

பைத்தியம் தெளிந்ததா???

கலீல் கிப்ரானின் புத்தகத்தில்
ஒரு அழகான சூஃபி கதை ஒன்று உண்டு. உண்மையில் நிகழ்ந்ததாக
கூறப்படும் அந்தக் கதையில் ஒரு கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்தன. 

ஒன்று அரண்மனையில் இருந்தது. அதை மந்திரியும் அரச குடும்பத்தினரையும் தவிர வேறு யாரும் உபயோகிக்க முடியாது. மற்றொன்று ஊரின் நடுவே இருந்தது. அதை மற்ற அனைவரும் உபயோகித்தனர்.

ஆனால் ஒருநாள், ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து சில மந்திரங்களை கூறிக்கொண்டே ஏதோ ஒன்றை அந்த பொது கிணற்றினுள் போட்டான். மக்கள் எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் என்ன
நிகழ்கிறதென்று புரியவில்லை!

அவன், "இந்த கிணற்றிலிருந்து
தண்ணீர் பருகுபவர் யாராயிருந்தாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவர்" என்று கூறிவிட்டு
மறைந்துவிட்டான்.
தண்ணீர் குடிக்க வேறு வழியில்லை,
அரண்மனைக்கு போக முடியாது. எனவே தாங்கள் பைத்தியமாகி
விடுவோம் என தெரிந்தபோதிலும் மக்கள் வேறு வழியில்லாமல் இந்த தண்ணீரையே குடித்தனர்.

 சூரியன் மறையும்போது அந்த தண்ணீரைக் குடித்த
வயது முதிர்ந்த கிழவனிலிருந்து சிறு குழந்தை வரை அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. ராஜா, ராணி, இளவரசன், மந்திரி ஆகியோரைத்
தவிர தலைநகர் முழுமைக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது.
யாருக்கும் சுயநினைவில்லை! 

ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பியதை செய்தனர். மக்கள்  கத்தி கதறி கூக்குரலிட்டனர். எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்!  

மந்திரியும் அரச குடும்பத்தினரும்
மட்டுமே சோகமாக இருந்தனர். 'எல்லோரும் பைத்தியமாகி விட்டனரே!' என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். உண்மையில் தங்களது உணர்வைப்
பற்றி அவர்களுக்கே சந்தேகமாக இருந்தது. நாம்தான் பைத்தியமாகிவிட்டோமோ
என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கு ஒரு வித்தியாசமான
விஷயம் நடந்தது.


நகர் முழுவதும் அரசரும்
மந்திரியும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தது. அரசரும் மந்திரியும் பைத்தியமாகிவிட்டனர் என்ற வதந்தி பரவியது. கூட்டம் முழுமையும் அரண்மனை முன்
ஒன்று கூடி அரசன் பைத்தியமாகிவிட்டான் என சத்தமிட ஆரம்பித்தனர். எல்லோருக்கும் பைத்தியம் பிடித்திருந்தது. எனவே அரசர் நம்மைப் போல இல்லை எனும்
விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டனர்.

காவலாளிகள், படைபட்டாளம்
ஆகிய அனைவரும் பைத்தியமாகிவிட்டனர்! அதனால் அங்கு எந்த பாதுகாப்பும்
இல்லை. அவர்களும் சேர்ந்து கூடி கூத்தாடிக் கொண்டு, “மரியாதையாக இயல்பாகி விடு,
இல்லையேல் அரண்மனையை விட்டு வெளியே வா! நாங்கள் எங்களைப் போலவே
இருக்கும் ஒருவரை புதிய அரசராக தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்,” என கூக்குரலிட்டனர்.

அரசர், மந்திரியிடம், “நமது படைகளுக்கும் கூட பைத்தியம்
பிடித்து விட்டதே! என்ன செய்வது? நமக்கு பாதுகாப்பில்லையே!” என்று கேட்டார். மந்திரி விவேகமுள்ளவர், வயது முதிர்ந்த அனுபவசாலி. அவர், “ஒரே ஒரு வழிதான் உள்ளது! முன்வாசலை அடைத்துவிட்டு பின்வாசல் வழியே தப்பி சென்று அவர்கள் தண்ணீர் பருகிய அந்த கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுத்து குடித்து நாமும் பைத்தியமாகி விட வேண்டியதுதான். இல்லாவிடில் இந்த பைத்தியகார கும்பல் நம்மை
கொன்றுவிடும்” என்றார்.

அந்த அறிவுரை மிகவும் சரியானது. அரசரும் மந்திரியும் அரச குடும்பத்தினரும் பின்வாசல் வழியே ஓடினர். அந்த மந்திரவாதி ரசாயன மாற்றம் செய்திருந்த அந்த கிணற்று தண்ணீரைக் குடித்தனர். பின் அவர்கள் பின்வாசல் வழியே வரவில்லை, ஆடிக் கொண்டும், கத்திக் கொண்டும், குதித்துக் கூத்தாடிக் கொண்டும், முன் வாசல் வழியே வந்தனர். தங்களது அரசரும் மந்திரியும் இயல்பாகி விட்டதைக் கண்ட கூட்டம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அன்று இரவு தலைநகரம், ‘அரசரும் அரச குடும்பத்தினரும் மந்திரியும் இயல்பு நிலையடைந்து விட்டனர் ‘ என்று மிகவும் கோலாகலமாக இருந்தது.

நாம் சரியான பாதையை தேர்ந்தெடுத்து, நேர்மையான வழியில் சென்றாலும், நம்மைச் சுற்றியிருக்கும் தவறானவர்கள் இருந்தால், நாமும் அதையே தேர்ந்தெடுத்து விடுகிறோம்.