எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 10 நவம்பர், 2016

நாளை என்ன நடக்கும்???

ஒருமுறை ஒரு மனிதருக்கு, அவர் செய்யாத குற்றத்துக்காக
மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை அவரை தூக்கில் போட வேண்டும் என்று அந்த நாட்டின் அரசர் உத்தரவிட்டு விட்டார். இப்படி ஒரு தீர்ப்பு சொன்னவுடன், அவர் அரசனை நோக்கி, ‘அரசே! எனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுத்தால், உங்கள் குதிரையைப் பறக்க வைப்பேன்’ என்று சொன்னார்.


இதைக் கேட்டுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்த அரசர், கடைசியில், ‘சரி! ஆனால் அப்படி குதிரை பறக்காவிட்டால், உன் தலையை யானையின் காலுக்குக் கீழே வைத்து நசுக்கிவிடுவேன்’ என்று எச்சரித்து, அவனுக்கு ஒரு வருடம் காலக்கெடு கொடுத்தனுப்பினார்.

அரசரின் குதிரையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த அம்மனிதரைப் பார்த்த அவர் மனைவி, ‘என்ன இப்படி செய்து விட்டீர்கள்? குதிரைக்கு எப்படி பறக்க கற்றுக் கொடுப்பீர்கள்? எங்காவது குதிரை பறந்து கேள்விப்பட்டதுண்டா?’ என்று சோகமாகக் கேட்டார். 

அதற்கு அந்த மனிதர், ‘எனக்கு ஒரு வருடம் அவகாசம் இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் ஒருவேளை அரசர் இறந்துவிடலாம், அல்லது நானே இயற்கை மரணம் அடைந்துவிடலாம் அல்லது இந்தக் குதிரை இறந்துவிடலாம். இல்லை யென்றால், இந்தக் குதிரை பறக்கக் கூட கற்றுக் கொள்ளலாம், யாருக்குத் தெரியும்?’ என்றார்.

நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை தற்போதைய சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்கத் தேவையில்லை. நாளை நடக்கப் போவதற்கு இப்போதிருக்கும் சூழ்நிலைகள் ஒரு வழிகாட்டியாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அவையே ஒரு தீர்மானமாக, இறுதி முடிவாக இருக்கத் தேவையில்லை.

இன்றைய சூழல்களை நாளைய எதிர்காலமாக மக்கள் கற்பனை செய்து கொள்வதால்தான் அவர்களுக்கு துயரங்களும், மன அழுத்தமும் ஏற்படுகின்றன.