எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 1 நவம்பர், 2016

கடவுள் வந்தால்...

நகரத்தின் மையத்தில் உள்ள பொதுக்கூட்ட மைதானம் அது.
கண்களுக்கு எட்டிய வரை மக்கள் கூட்டம். ஒரு புறம் சிறு குழுவாக பக்தர்கள் இசைத்த பஜனை பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தது. அனைவரும் குருவின் வருகைக்காக காத்திருந்தனர்.

கூட்டத்தில் திடீரென சலசலப்பு. 
குரு தனது சிஷ்யர்களுடன் இரு புறமும் குழுமி இருந்த மக்களை வணங்கியபடியே மேடையை நோக்கி நடந்தார்.
பஜனை குழுவின் பாடல்கள் உச்சகட்டத்தை எட்டியது.
சிலர் அவர் கால்களை ஸ்பரிசிக்க முயன்றார்கள். சிலர் ஆவேசமாக அவரின் பெயரை உச்சரித்தனர்.
மேடையில் ஏறியதும் அனைவரையும் ஒருமுறை தனது ஞானம் நிறைந்த கண்களால் பார்த்தார்.

கூட்டம் அமைதியடைந்தது.
”எனது ஆன்மாவிற்கு அருகில் இருப்பவர்களே.....” என தொடங்கி தனது ஆன்மீக அருளுரையை துவங்க, அனைவரும் அதில் மூழ்கினர்.

ஒரு மணிநேரம் அங்கு யாரும் அசையக்கூட இல்லை. தனது ஆன்ம ஆற்றலாலும், ஞான கருத்தாலும் மக்களை கட்டிவைத்தார் குரு.
குருதேவரின் சிஷ்யர் ஒருவர் மக்களை பார்த்து, “உங்களுக்கு சத்குருவிடம் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம்” என்றார்.
ஆன்மீகம் பற்றி, வாழ்வியல் பற்றி, தத்துவம் பற்றி என பல கேள்விகள் ஒவ்வொருவராக எழுந்து கேட்டார்கள். அனைத்துக்கும் குரு புதிய புரிதலை ஏற்படுத்தும் கோணத்தில் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.

இதே நேரம் தேவலோகத்தில்.... கடவுள் இக்காட்சிகளை பார்த்துகொண்டிருந்தார்.
தன்னை பற்றி பேசும் ஆன்மீகவாதிக்கும், அதை கேட்டு ஆன்மீக வயப்பட்டிருக்கும் மக்களுக்கும் தனது திருக்காட்சியை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் முன் தோன்ற எண்ணினார். எளிய உடையில் வந்தால் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும் என எண்ணி அவர்கள் வழிபடும் வடிவிலேய மெல்ல நடந்து அந்த சபைக்கு நடுவே வந்தார். அனைவரின் கவனமும் அவரிடத்தில் திரும்பியது. 


அவர் மெல்ல நடந்து குரு இருக்கும் மேடைக்கு அருகே வந்தார். அதற்குள் குருவின் சிஷ்யர்கள் அவரை கூடி என்ன வேண்டும் என வினாவ தொடங்கினார்கள். பரமாத்மா புன்புறுவலுடன், ”நான் கடவுள்” என்றார்.

இதை கேட்ட சிஷ்யர்களும் மக்களும் கூக்குரலிட்டனர். அனைவரும் கூச்சலிடவே கைகளால் அமைதிப்படுத்திவிட்டு குரு கடவுளை பார்த்தார்.
கடவுள் நம்பிக்கையுடன் குருவை ஆழமாக பார்த்தார்.
குரு சிஷ்யர்களை பார்த்து கூறினார்...”சத்சங்க்த்தின் நடுவே குழப்பம் விளைவிக்கும் இவரை கூட்டி சென்று எனது அறையில் அமரச்செய்யுங்கள்”

சிஷ்யர்கள் இருவர் கடவுளின் கைகளை பற்றி குருவின் அறைக்கு அவரை கொண்டு சென்று அடைத்து வாயிற்கதவை சாத்தினார்கள்.
”சத்குருவிற்கு ஜெய்... சத்குருவிற்கு ஜெய்”
குழப்பம் விளைவித்தவரையும் மன்னித்துவிடும் குருவின் தன்மையை கண்டு மக்கள் கோஷம் எழுப்ப துவங்கினர்.
சத்சங்கம் மீண்டும் துவங்கி மக்களுக்கு ஞானகருத்துகளை சத்குரு கூற துவங்கினார்.பின்பு மங்கள இசையுடன் சத்சங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அந்த நகர பிரபலங்களும் பிரமுகர்களும் குருவை காண வரிசையில் நின்றனர். ஆனால் அவர் அனைவரையும் சந்திப்பதை தவிர்த்துவிட்டு தனது அறைக்கு திரும்புனார். அறையிலிருந்த
சிஷ்யர்களை வெளியே நிற்கசொன்னார்.

உள்ளே சென்ற வேகத்தில் அறைகதவை உற்புறமாக தாழிட்டு , அறுபட்ட மரம் போல் கடவுளின் காலில் விழுந்தார். தனது முகத்தை அவரின் கால்களில் புதைத்த வண்ணம் தழுதழுத்த குரலில், ”பிரம்ம சொருபனே உங்களை பார்த்த உடனே கண்டுகொண்டேன். ஆனால் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என தெரிந்திருந்தால்.. தனது வாழ்க்கைக்கு தேவையான சுயநல கருத்துக்களை கேட்க துவங்குவார்கள். உங்களுடன் இருக்கும் ஆனந்தத்தை பருக தயாரக இருக்கமாட்டார்கள். இந்த எளியவனை மன்னித்தருளும்...” என வேண்டினார்.
தனது வருகையின் தவறை உணர்ந்த கடவுள் மறைந்தார்.

கோவில், மடாலயம் என எங்கும் குவியும் மக்கள் பெரும்பன்மையாக தனது வாழ்க்கையின் தேவை பூர்த்தி செய்யும் கோரிக்கை மனதில் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிறப்பை வாழும் சூழ்நிலையை படைந்தவனுக்கு நன்றி சொல்லும் இயல்பு எங்கும் காணப்படுவதில்லை.
பிறருக்காக ப்ரார்தனை செய்தல் என்பதும் குறைந்து வருகிறது. 
கடவுளே எதிரில் வந்தாலும் நமக்கு பல சமயம் அவரை காணமுடிவதில்லை.