எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 8 நவம்பர், 2016

முதல் கண்ணாடி!!!

உலகில் கண்ணாடிகள் தோன்றிராத காலம் அது. யாருமே தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததில்லை. அப்போது முதன் முதலாக முகம் பார்க்கும் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவனுக்கு அந்தக்கண்ணாடி கிடைத்தது.அதை வீட்டுக்கு கொண்டுவந்து ஒரு பெட்டியில் வைத்டுக்கொண்டு பின் அதை திறந்து பார்த்தான். அதில் அவன் முகம் தெரிகிறது. அது தன் முகம் தான் என்று அவனுக்குத்தெரியவில்லை.


இதற்குள் ஒரு மனிதன் இருக்கிறான். 'இதற்குள்ளே ஆனந்தமாக வசிக்கும் அவன் ஒரு தேவனாகத்தான் இருக்கவேண்டும்' என்று எண்ணினான். உடனே கண்ணாடியை பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டான்.

 தினமும் காலையில் எழுந்ததும் தன் மனைவிக்குத்தெரியாமல் தன் அறைக்குள் நுழைந்துபெட்டியைத்திறந்து கண்ணாடியைப்பார்ப்பான். மனைவி வந்துவிட்டால் பெட்டியை மூடி விடுவான். அவன் செய்கைகளைப் பார்த்த மனைவிக்கு சந்தேகம் வந்தது.

ஒரு நாள் கணவன் இல்லாத சமயம் அவன் அறைக்குள் போய் பெட்டியை வேறு சாவி போட்டுத்திரந்து பார்த்தாள். கண்ணாடியில் அவள் முகம் தெரிந்தது. அதுவரை கண்ணாடியை பார்த்திராததால் அது அவள் முகம்தான் என்று அவளுக்கும் தெரிந்திருக்கவில்லை. தன் கணவன் யாரோ ஒருத்தியை பெட்டியில் ஒளித்து வைத்திருக்கிரான் என்று எண்ணி கோபம் கொண்டாள்.

கணவனின் வருகைக்காக கோபத்துடன் அவள் காத்திருந்தபோது கணவன் ஒரு புத்தபிட்சுவை உடன் அழைத்து வந்தான். கணவனுடன் மனைவி சண்டை போடத்தொடங்கியதும், 'ஏன் இப்படி கோபிக்கிராய்?' என்று புத்தபிட்சு அமைதியாகக்கேட்டார்.

அதற்கு, "சுவாமி இவர் எனக்குத்தெரியாமல் வேறு ஒரு பெண்ணை அழைத்துவந்து தன் அறையில் உள்ள பெட்டியில் ஒளித்து வைத்திருக்கிறார்" என்றாள் மனைவி. 

பிட்சுவும் கணவனிடம், "ஏனப்பா இப்படி செய்கிராய்?" என்றார். அவன், "ஐயோ, இவளைத்தவிர வேறு பெண்ணையே நான் பார்த்ததில்லை" என்றார் பரிதாபமாக. "இவர் பொய் சொல்கிறார் சுவாமி, இதோ உங்களுக்கு நிரூபிக்கிறேன்"  என்று சொல்லி கண்ணாடி வைத்திருக்கும் பெட்டியை திறந்து பார்க்கும்படி பிட்சு விடம் சொன்னாள் அவள். 

பிட்சு அதைத் திறந்து பார்த்தார். கண்ணாடியில் அவர் முகம் தெரிந்தது. இதுவரை அவரும் கண்ணாடியில் தன் முகத்தைப்பார்த்ததில்லை. அவர் உடனே, "அட, இதோ பாரம்மா, எல்லோருக்கும் தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று எண்ணி இப்பெண் வெட்கிப்போய் தன் தலையை மொட்டை அடித்துக்கொண்டுவிட்டாள். இனிமேல் இங்கிருந்தால் அவமானம் தாங்காது அவள் போய் விடுவாள்" என்றார் ஆறுதலாக. உண்மையில் பிட்சு பார்த்தது அவருடைய உருவத்தைத்தான்.

“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”