எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 7 நவம்பர், 2016

சரியான தண்டனை

ஆசிரியர் ஸென்கேயிடம் பல மாணவர்கள் தியானம் பற்றி கற்று வந்தனர். அவர்களில் ஒருவன் நள்ளிரவில் எழுந்து மடத்தின் சுவரில் ஏறி அடுத்தப் பக்கத்தில் குதித்து, பக்கத்தில் உள்ள நகரத்திற்கு ஜாலியாக சென்று சுற்றிவிட்டு வருவது வழக்கம்.


பல படுக்கைகள் கொண்ட அந்த துயில் கூடத்தினை ஒருமுறை மேற்பார்வை செய்ய வந்த ஆசிரியர், மாணவன் ஒருவனைக் காணததைக் கண்டார். பக்கத்திலேயே உயரமான நாற்காலி ஒன்றும் சுவரின் அருகில் போடப் பட்டிருந்ததைப் பார்த்தார். நாற்காலியை அங்கிருந்து நகர்த்தி விட்டு அந்த இடத்தில் நின்று கொண்டார்.

சுற்றித் திரிந்தவன் உள்ளே நுழைந்த போது, ஸென்கேய் நாற்காலிக்கு பதிலாக நிற்பதை அறியாமல், அவர் தலையில் காலை வைத்து மெதுவாக தரையில் குதித்தான். குதித்தவன், தான் என்ன செய்தோம் என்பதனை அறிந்ததும் அச்சத்தால் திடுக்கிட்டான்.

ஸென்கேய், "காலை வேளையில் மிகவும் குளிராக இருக்கும். கவனமாக இருப்பது நல்லது. நீர்க்கோத்துக் கொண்டு சளி பிடித்துக் கொள்ளப் போகிறது" என்றார்.

இந்த நிகழ்சிக்குப் பிறகு அந்த மாணவன் இரவில் வெளியே செல்லவேயில்லை.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுத்தான் ஆக வேண்டும். மாணவப் பருவத்தில் எல்லாருக்குமே கட்டுப்பாடு என்பது கசக்கச் செய்யும். ஆனால் தவறு செய்தவனைத் தண்டித்தால் அவன் திருந்தி விடுவானா? யார் ஒருவர் தவறு செய்யாதவர்.

அனைவருமே வெவ்வேறு காலக் கட்டங்களில் தெரிந்தோ தெரியாமலோ தவறினைச் செய்கிறோம். தவறு செய்கிறவனைத் திருத்துவதற்கு எனப் பல வழிகள் உள்ளன.

சிலருக்கு நாசுக்காக தவறினைச் சுட்டிக்காட்டினாலே திருந்தி விடுவார்கள். 

சிலருக்கு அழுத்தமாக திட்டியோ, அடித்தோ அல்லது கடுஞ்சொல்லினைக் கூறியோ திருத்த வேண்டி இருக்கும். 

சிலருக்கு கடுமையான தண்டனை கொடுத்தாலே திருந்துவார்கள். 

சில வகையான தவறுக்கு முதல் வகையிலிருந்து மூன்றாவது வகைவரை படிப்படியாக உபயோகப் படுத்தி திருத்தப் பார்ப்பது நலம். 

ஆனால் சில வகையான தவறுகளை தெரிந்தே செய்பவர்களுக்கு மூன்றாவது வகையைப் பிரயோகித்தால்தான் சமூக கேடுகளை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.