எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 30 நவம்பர், 2016

தனி மரம்!!!

பரந்த வயல்வெளியின் நடுவே அந்த மரத்திற்கு ஒரு வீடு இருந்தது. அந்த வயல்வெளியில் வேறு மரங்கள் எதுவும் இல்லை. எந்தப் பறவையும் அங்கு வருவதும் இல்லை. அங்கே ஒரே ஒரு மரம் தனிமையாக உள்ளது.
மரத்தின் மனதில் ஆயிரக்கணக்கான ஆசைகள்.

இந்த ஆசைகளை எல்லாம் யாரிடம் சொல்வது என அது நினைத்தது! சூரியன், நிலா, நட்சத்திரம் ஆகியோரிடம் சொல்லலாமா? ஆனால், அவை எல்லாம் வெகு தூரத்தில் வானில் அல்லவா இருக்கின்றன?
திடீரென்று ஒருநாள் மாலை வேளையில், பாதை தவறிய ஒரு நீலக்குருவி அந்த மரத்தின் மீது வந்து உட்கார்ந்தது. 

நேரம் செல்லச் செல்ல வானம் இருட்டியது. இருட்டில் எப்படி வீட்டிற்குப் போக முடியும் என்று நீலக்குருவி யோசித்தது. அதனால் இரவு மட்டும் மரத்திலேயே தங்கி விடலாம் என நினைத்தது.
இதைப் பார்த்த மரத்துக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. மனசுக்குள் துள்ளிக் குதித்தது. மரம் நீலக்குருவியிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தது. 

சிறிது நேரத்தில் மரமும் நீலக்குருவியும் நண்பர்களாகி விட்டார்கள். இருவரும் நேரம் போவதே தெரியாமல் விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்தது. நீலக்குருவி தன்னுடைய வீட்டுக்குப் புறப்படத் தயரானது. புறப்படும் முன்பாக,
“கவலைப்படாதே! நான் மறுபடியும் இங்கு வருவேன்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுக் குருவி பறந்து சென்றது.

குருவி வரும் என்று இரவும் பகலும் மரம் காத்துக் கொண்டிருந்தது. பகல்கள் போயின, இரவுகள் போயின. நாட்கள் நகர்ந்தன. ஆனால் நீலக்குருவி மட்டும் வரவேயில்லை. மரம் கண்ணீர் விட்டு அழுதது. அதன் கண்ணீர், துளித் துளியாகக் கீழே விழுந்தது.


ஒருநாள் காலையில் தன் கண்ணீர் கீழே குளமாகத் தேங்கி இருப்பதைக் கண்டது அந்த மரம். இப்போது குளத்துடன் பேசத் தொடங்கியது மரம். நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தது. தன் காலை குளத்தில் நனைத்தபடி மரம் பேசிக்கொண்டேயிருந்தது. பேசிக்கொண்டே குளத்தில் பிரதிபலித்தத் தன் கிளையைப் பார்த்தது. அந்தக் கிளையில்தான் ஒரு காலத்தில் ஒரு பறவை வந்து அமர்ந்திருந்தது. குளத்தின் துணையுடன் மரம் இப்போது தனியாக இல்லை.

அந்த தனி மரத்தைப் போன்ற பெற்றோர்களும், நீலக்குருவி போன்ற பிள்ளைகளும் இருப்பதால் தான் குளம் போன்று முதியோர் இல்லங்கள் பெருகி விட்டனவோ???

செவ்வாய், 29 நவம்பர், 2016

தேநீர் விழா!!!

ஜப்பானில் மிகவும் புகழ்பெற்ற பச்சை இலைத் தேனீரைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருந்தால் உங்களுக்கு முன்பே ஜப்பானின் தேனீர் விருந்து பற்றியும் கேள்வி பட்டிருக்கக்கூடும். தேனீர் விழாவானது மிகவும் தொன்று தொட்டு நடந்து வரும் மரபான விழாக்களில் ஒன்று.

தேனீர் விழாவிற்கு விருந்தினர்களை வர வழைத்து, அதற்கென பிரத்யோகமாக தயாரிக்கப் பட்ட சிறிய பிங்கான் கோப்பையில் தேனீர் ஊற்றப் பட்டு விருந்தினருக்கு அளிக்கப்படும்.

தேனீர் விழாவினை நடத்தும் ஆசிரியர் மிகவும் பொருமையும் நிதானமும் கொண்டவராகவும், குறைந்தது பத்து வருடங்கள் இதற்கான பயிற்சியினை முறையான ஆசிரியரிடம் பயின்று விட்டே தாங்களாக தேனீர் விழாவினை நடத்தவோ, விருந்தினர்களை அழைக்கவோ முடியும். 


ஒரு சமயம் நடந்த தேனீர் விழாவில் வந்திருந்த சமுராய் போர் வீரன் ஒருவனை தேனீர் ஆசிரியர் சரியாக கவனித்து உபசரிக்கத் தவறிவிட்டார். ஆனால் அதனை சற்று நேரத்தில் உணர்ந்த ஆசிரியர், போர் வீரனிடம் சென்று தன்னுடைய தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். 

இயற்கையிலேயே போர்க் குணமும், வெறியும் கொண்ட அந்த சமுராய் போர் வீரன் ஆசிரியரை மன்னித்து விடத் தயாராய் இல்லை. மிகவும் கோபத்துடன் தேனீர் ஆசிரியரிடம் "நாளை என்னுடன் வாள் சண்டைக்கு வந்து மோது. அதில் எனது மனக்கசப்பைத் தீர்த்துக் கொள்ளலாம்" என சவால் விட்டு விட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.

தேனீர் ஆசிரியர் வாள் வீச்சில் எந்த விதமான பயிற்சியும் எடுத்தவர் இல்லை. அதனால் விருந்திற்கு வந்திருந்த வாள் பயிற்சியில் சிறந்த மற்றொரு விருந்தினரான ஸென் ஆசிரியரிடம் சென்று அறிவுரைக் கேட்டு விட்டு மற்றவர்களை உபசரிக்கச் சென்று விட்டார்.

தேனீர் ஆசிரியர் எந்த பதட்டமோ, பயமோ இல்லாமல் அங்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு கலை நயத்துடன் எப்பொழுதும் போல அதே பொறுமையுடனும், கவனத்துடனும் உபசரித்துக் கொண்டிருந்தார். மற்றவர்களை உபசரித்துக் கொண்டே ஸென் ஆசிரியரிடமும் வந்து அவருக்கான கோப்பையில் பொறுமையாக பச்சையிலைத் தேனீரினை கவனமாகவும் முறையாகவும் ஊற்றிக் கொடுத்தார்.

ஸென் ஆசிரியர், "நாளை சமுராய் போர் வீரனுடன் மோதும் போது, எதிரியினைத் தாக்கும் விதத்தில் உன்னுடைய வாளினை நன்றாக தலைக்கு மேல் உயர்த்தி பிடித்துக் கொள். தேனீர் விருந்தில் எவ்வளவு கவனத்துடனும் பொறுமையாகவும் எந்த விதக் கவலையும் இல்லாமல் உறுதியாக தேனீரினை பறிமாறினாயோ, அதே கவனத்துடனும், அமைதியாகவும் உன் எதிரியை உற்று நோக்கு" என்று அறிவுரைக் கூறிவிட்டு சென்று விட்டார்.

மறுநாள் குறித்த நேரத்தில் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்ற தேனீர் ஆசிரியர் ஸென் ஆசிரியர் கூறிய அறிவுரையை அப்படியேக் கடைபிடித்தார். சமுராய போர் வீரன் தன்னை சண்டைக்கு தயார் செய்து கொண்டு தேனீர் ஆசிரியரை உற்று நோக்கினான். மிகவும் விழிப்புடனும் ஆனால் சாந்தமான முகத்துடன் எந்த சலனமும் இல்லாமல் நின்றிருந்த தேனீர் ஆசிரியரினை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தான். 

வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன் ஆசிரியரிடம் எந்த மாற்றமும் தென்படாததால், ஒரு கட்டத்தில் தன்னுடைய வாளை தளர்த்தி உறைக்குள் வைத்து விட்டு தேனீர் ஆசிரியரிடம் சென்று தன்னுடைய அகங்காரமான செயலுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டு, ஒரு முறை கூட ஆசிரியரை நோக்கி வாளை வீசாமலேயே சென்று விட்டான்.

திங்கள், 28 நவம்பர், 2016

தவறான எண்ணம்...

ஒரு துறவி ஒருநாள் நல்ல வெயிலில் நடந்து சென்றார். அப்போது அவரது செருப்பு அறுந்து போயிற்று. தொடர்ந்து நடக்க முடியாதவராக அருகே இருந்த செருப்பு தைப்பவனிடம் சென்றுகொடுத்தார். 

அவரோ அந்தச் செருப்பைப் பார்த்துவிட்டு, "ஐயா நிறைய தைக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் உங்கள் செருப்பை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள். நான் தைத்து வைக்கிறேன்" என்றார்.

துறவி அந்த செருப்புத் தைப்பவரிடம், "ஐயா! இந்த செருப்பை உங்களிடம் கொடுத்து விட்டு, இப்போது வெயிலில் நான் எவ்வாறு நடந்துபோவேன்?" என்றார். 


அதற்கு அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி, "ஐயா! உங்களுக்கு வேண்டுமானால் நான் வேறு செருப்புத் தருகிறேன். இதை அணிந்துகொண்டு செல்லுங்கள். மாலை வரும்போது இந்தச் செருப்பைத் தந்துவிட்டு, உங்கள் செருப்பைப் பெற்றுச் செல்லுங்கள்" என்றார்.

ஒரு நொடி சிந்தித்த அந்தத் துறவி,
"என்ன இன்னொருவர் செருப்பை நான் அணிவதா?" என்று சிந்தித்தார். அவர் மனதில்,
“இன்னொருவர் செருப்பை அணிவதற்கே இவ்வளவு சிந்திக்கிறோமே! இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களையும்,
அவர் மீதான கோபத்தையும்,
பொறாமையையும் இறக்கி வைக்காமல் தூக்கி சுமக்கிறோமே!!" என்று தோன்றியது.

இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது

ஞாயிறு, 27 நவம்பர், 2016

தியானம்!!!

ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான். அவனது அப்பா, “நீ இந்த குருவிடம் சென்று தியானம் செய்ய கற்றுக்கொண்டு நான் இறப்பதற்குள் திரும்பி வா. நீ தியானம் செய்ய தெரிந்து கொண்டு விட்டால் நான் சந்தோஷமாக இறப்பேன். நான் இதை தவிர வேறு எதையும் கொடுக்கமுடியாது. இந்த ராஜ்ஜியம் சிறிதும் மதிப்பற்றது" எனக் கூறியிருந்தார்.

அதனால் இளவரசன் இந்த ஜென்குருவிடம் வந்து, "நான் அவசரத்திலிருக்கிறேன். எனது தந்தைக்கு வயதாகிவிட்டது. அவர் எந்த விநாடியும் இறந்து விடுவார்" எனக் கூறினான்.

குரு, "தியானத்திற்கான முதல் அடிப்படையே அவசரப்படக்கூடாது என்பதுதான். பொறுமையில்லாதது வேலைக்காகாது. என்னிடம் தியானம் கற்றுக்கொள்ள விரும்பினால் நீ உனது தந்தை உனது அரசாங்கம் ஆகிய எல்லாவற்றையும் மறந்து இருக்க வேண்டும். அதற்கு ஒருமுனைப்பட்ட அர்ப்பணிப்பு வேண்டும்" என்றார்.

அந்த இளைஞன் தங்க முடிவெடுத்தான்.
மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. குரு தியானத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த இளைஞன் குருவுக்கு எல்லாவழிகளிலும் சேவை செய்து வந்தான். அவன் எதையும் பேசக் கூட இல்லை.
ஆனால் மூன்று வருடங்கள் என்பது மிக அதிகம். முடிவில் ஒருநாள் காலை குரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, "குருவே, மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் இன்னும் எனக்கு தியானம் என்பது என்ன. அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கூட கூறவில்லை" எனக் கேட்டான்.


குரு அவனை திரும்பி பார்த்துவிட்டு, "சரி, இன்று உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன்" என்றார்.
அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். 

இளைஞன் கோவிலின் தரையை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். மிகவும் பலமாக தாக்கினார். அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக் கொணடிருக்கும்போது வந்து குரு தாக்கினார். திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது இறங்கும்.
இளைஞன், "என்ன வகையான தியானம் இது?" என நினைத்தான். ஏழு நாட்களில் அவன் மிகவும் சோர்ந்து போனான். காயங்களும் சிராய்ப்புகளும் அடைந்த அவன் குருவிடம், "என்ன செய்கிறீர்கள் நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?" எனக் கேட்டான்.

குரு, "இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை. கவனமாயிரு. தன்ணுணர்வோடு இரு, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி" என்றார்.
தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான்.

மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஓசையை கேட்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான்.

அப்போது குரு, "முதல்பாடம் முடிந்தது. இப்போது இரண்டாவது பாடம் ஆரம்பிக்கிறது. இப்போது நீ உன்னுடைய தூக்கத்திலும் விழிப்போடு இருக்கவேண்டும். உன்னுடைய கதவுகளை திறந்து வைத்திரு. ஏனெனில் நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன்" என்றார்.

 அவனுக்கு முழு இரவும் போராட்டமாக இருந்தது. பலமுறை குரு வந்து அவனை அடித்தார். குரு, "கவலைப்படாதே. தூக்கத்தில் கூட கவனமாக இரு. நான் எவ்வளவு கடினமாக உன்னை அடிக்கிறேனோ அவ்வளவு விரைவாக தூக்கத்தில் கூட சுதாரிப்பாவாய். சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும், அவ்வளவுதான்" என்றார்.
மூன்று மாதங்களுக்குள்ளாகவே அவன் தூக்கத்தில் கூட கவனமடைந்தான். பிறகு குரு, "நீ இரண்டாவது பாடத்திலும் தேர்ந்து விட்டாய். இப்போது மூன்றாவதும் கடைசியுமானது" என்றார்.

அவன், "மூன்றாவது என்னவாக இருக்கும்?" என்றான்.
குரு, "இப்போது நான் உன்னை உண்மையான கத்தியினால் அடிக்கப்போகிறேன். இதுதான் மூன்றாவது" என்றார். அவர் உறையிலிருந்து அசல் கத்தியை எடுத்தவுடன் இளைஞன், "முடிந்தது நான் செத்தேன்" என நினைத்தான். 

ஆனால் அவன் ஒருமுறை கூட தவற விடவில்லை. மூன்று மாதங்களில் குருவால் அவனை ஒருமுறை கூட உண்மையான கத்தியால் அடிக்க முடியவில்லை.
பின் குரு, "உன்னுடைய மூன்றாவது பாடமும் முடிந்தது. நாளை காலை நீ புறப்படலாம்" என்றார்.

குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார். இளைஞன் வேறு எங்கோ அமர்ந்திருந்தான். அவன் மனதில், "நான் போவதற்கு முன் ஒருமுறை இந்த கிழவனை அடிக்க வேண்டும்" என்று தோன்றியது. 
இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். அப்போது குரு, "நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல. அதிலும் நான் உன் குரு" என்றார்.
இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. 

"ஆனால் நான் எதையும் சொல்லவில்லையே" எனக் கேட்டான். குரு, "ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும் விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும். உனது மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும். சொல்லப்படாத எண்ணங்களையும் உன்னால் படிக்க முடியும். உள்ளுணர்வை தெரிந்து கொள்ள முடியும். உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும். நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய்" என்றார்.

சனி, 26 நவம்பர், 2016

வெற்றிக்கு காத்திருங்கள்

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. படைவீரர்கள் பலர் மாண்டு விட்டனர். ஆனாலும் போர் நீண்டு கொண்டே சென்றது. சமாதனப் பேச்சுவார்த்தையின் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்தனர்.

இருநாடுகளின் சார்பாக போருக்கு தலைமை வகித்த, சர்வாதிகாரி ஹிட்லரும், சர்ச்சிலும் ஒரு குளத்தின் அருகே சந்தித்தனர். சமாதானப் பேச்சு முடிவுக்கு வந்தது. ஆனால் 'போரில் வெற்றி பெற்றவர் யார்?' என்பதை எப்படி முடிவு செய்வது என்ற குழப்பம் வந்தது. ஹிட்லர் "என்னிடம் ஒரு யோசனை உள்ளது" என்றார். சர்ச்சில், "என்ன?" என்று கேட்டார்.


அதற்கு ஹிட்லர், " நாம் இருவரும் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். இந்த குளத்தில் நிறைய மீன்கள் உள்ளன. நம் இருவரில் யார் அதிக மீன்களை குளத்திலிருந்து வெளியே எடுக்காமல் கொல்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர் என முடிவு செய்வோம்" என்றார். சர்ச்சிலும் இதற்கு சம்மதித்தார்.

முதலில் ஹிட்லர், தன் துப்பாக்கியை எடுத்து குளத்தை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். சிலமணி நேரங்களுக்குப் பிறகு, சுடுவதை நிறுத்திவிட்டு குளத்தைப் பார்த்தார். சில மீன்கள் மட்டுமே இறந்து நீரில் மிதந்து கொண்டிருந்தன.

அடுத்து சர்ச்சிலின் முறை வந்தது. சர்ச்சில், ஒரு வாளியை எடுத்துக் கொண்டு குளத்தின் அருகே சென்றார். குளத்தில் இருந்த நீரை வாளி நிறையும் வரை எடுத்துக் கொண்டு சில தூரம் சென்று கீழே ஊத்தினார். பிறகு மீண்டும் குளத்து நீரை வாளியில் நிரப்பிச் சென்று கீழே ஊத்தினார். இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருந்தார்.

சர்ச்சிலின் செயலைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினார் ஹிட்லர். ஆனால் சர்ச்சில் சிறிதும் அலுத்துக் கொள்ளாமல், "என்னால் எளிதில் வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் நான் விடாமுயற்சியோடு தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்றபடி தன் வேலையைத் தொடர்ந்தார்.

வெள்ளி, 25 நவம்பர், 2016

ஒரு நொடி!!!

ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். ஒரு நாள் அவன் தன் மனைவியை ஒரு சிறிய தவறு செய்ததற்காக கிணற்றில் தள்ளி கொன்று விட்டான். அவனிடம் யாரும் பேசவில்லை . அவனுக்கு அவன் தவறை எடுத்து சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை. 


ஒருநாள் அந்த ஊரின் வழியாக ஒரு ஜென் குரு போனார். அவர் சொத்து என எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதால் உடை கூட உடுத்தாமல் நிர்வாணமாக வாழ்பவர்.

அவன் அவரிடம் ஓடி வந்து “நான் தவறு செய்து விட்டேன். என் கோபத்தால் என் அன்பு மனைவியை கொன்று விட்டேன். எனக்கு இந்த கோபத்தை குறைக்க வழி தெரியவில்லை. நீங்கள் சொல்லுங்கள்” என்றான்.

அவர் சிரித்துக் கொண்டே அவன் பெயரை கேட்டார்.
“சாந்தன்” என்றான் அவன். அவர் சிரிப்பு இன்னும் பெரிதானது. அவனுக்கு கோபம் வந்தாலும் அடக்கி கொண்டான்.
“நல்ல பெயர். கோபத்தை வெல்ல வேண்டுமானால் நீ எல்லாவற்றையும் துறக்க வேண்டும். இந்த உலகத்தில் இருக்கும் எதுவுமே உனக்கு சொந்த மானதல்ல என உணர வேண்டும்” என்றார்.

அவன் உடனே அனைவரும் ஆச்சரியப்படும்படி அவன் தன் உடை அனைத்தையும் கழட்டி அதே கிணற்றுக்குள் போட்டான். இனி அவர் போலவே வாழ்வதாக சபதமேற்று சென்றான்.
அதன் பின் அவனை பற்றிய விதவிதமான செய்திகள் கிடைத்தன. அவனை தரிசிப்பதே புண்ணியம் என உலக மக்கள் எண்ணினார்கள். 20 வருடங்கள் கடந்தன. அதே ஊரில் இருந்து ஒருவன் தூர தேச பயணம் ஒன்று மேற்கொள்ளும் வழியில் சாந்தன் வழியில் உள்ள ஊரில் தங்கியிருப்பதாக கேள்விப்பட்டு அவனை காண சென்றான்.

இவனுக்கு அவன் முகம் இன்னும் குரூரமாகவே பட்டது. சாந்தன் அவனை அடையாளம் கண்டு கொண்டாலும் தன் தகுதிக்கு குறைவென எண்ணி கண்டுகொள்ளாதது போல நடித்தான். அவன் அகத்திரையை கிழிக்க வேண்டும் என நினைத்தான்.
“உன் பெயர் என்ன?” என கேட்டான்
இப்போது சாந்தன் நடிக்க விரும்பவில்லை.
“நான் தான் சாந்தன்” என்றான்.
“அட சொன்ன உடன் உங்கள் பெயர் நினைவில் நிற்க மறுக்கிறதே, திரும்ப சொல்லுங்கள்” என்றான்.
“நான் சாந்தன். உன் ஊர் காரன் தான்” என்றான்.

“ஓ என்ன பெயர் சொன்னீர்கள்?” என மீண்டும் கேட்டான். கோபத்தில் கத்தியபடி, பக்கத்தில் இருந்த ஒரு கத்தியை எடுத்தான் சாந்தன் “இன்னோரு முறை கேள் நான் யாரென்று காட்டுகிறேன். நான் என் மனைவியை கொன்ற அதே சாந்தன்” என்றான். வந்தவன் நிதானமாக,
“ஆம். நீ அதே சாந்தன் தான்” என சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டான்.

பல வருட உழைப்பு வீணாக ஒரு நொடி கோபமே போதுமானது.

வியாழன், 24 நவம்பர், 2016

வினை விதைத்தவன்

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.
""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.

"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக் கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்'' என்று நினைத்தான் மன்னன்.

அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.
"மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.
நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்.
இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்'' என அறிவித்தார்.


மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப் பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.
அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.
சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
"இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு'' என்றார்.

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி
தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான
காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்.

புதன், 23 நவம்பர், 2016

ரகசியம்????

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன் வந்து அவரை சந்தித்தான். வெற்றியின் ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி சென்று விட்டான்.


அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச் சந்தித்தான் அவன். தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும் நடந்தான்.
மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.
அப்போதுதான் அது நடந்தது.

சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.
ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில் இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை.

ஒரு நிமிட மரணப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். முகம் சிவந்துவிட்டது. மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.

சாக்ரடீசின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அமைதியாக “ஐயா, ஏன் இப்படிச் செய்தீர்கள்?” எனக் கேட்டான். சாக்ரடீஸ், “செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல் முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார். “காற்று. சுவாசிப்பதற்கான காற்று!” என்றான்.

“வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ? வெற்றியும் அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம்
ஒன்றும் இல்லை!

செவ்வாய், 22 நவம்பர், 2016

தவறவிட்டவர்கள்!!!

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அது வைரம் என்றறியாமல், 'விலை போகுமா?' என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்.

அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த
வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான். ஆனால் வழிபோக்கனோ, 'பேரம் பேசித்தான் பார்ப்போமே' என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்.


இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.
ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும். அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்.

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம். அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்” என்றான்.

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்...!

திங்கள், 21 நவம்பர், 2016

பந்தயம்

முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். அதில், ''இந்த கடிதத்தை கொண்டுவருபவன் கடமையில் கருத்தாக இருப்பான். ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்" என எழுதியிருந்தது.


அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்து விட்டு, "பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம். நீ எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?" என்று கேட்டார்.அவன், "எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன். இப்போது கூட ஒரு பந்தயம். உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன். பந்தயம் நூறு ரூபாய்'' என்றான். அதிகாரி, "எனக்கு முதுகில் மச்சமே கிடையாது. நீ தோற்று விட்டாய். நீயே பார்'' என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.

மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான். புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். ''அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன். இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்'' என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.

உடன் பதில் வந்தது.
''நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள். புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான்
அங்கு வந்தான். வெற்றி அவனுக்குத்தான்" என அதில் எழுதியிருந்தது.

சில சமயங்களில் முட்டாள்தனம் கூட புத்திசாலித்தனமாக மாறிவிடும்.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

நிர்வாகம்!!!

சீனாவில் உண்மையில் நடந்ததாக கூறப்படும் கதை இது :

சீனாவில் உள்ள மிகப் பெரிய நகரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார் அவர். அவர் வேலையில் சேர்ந்து மூன்று வருடம் முடிந்துவிட்டது. அவரது மேலதிகாரியிடம் இருந்து, 'நேரில் சந்தித்து பேச வேண்டும்' என்ற செய்தி ஒன்று அவருக்கு கிடைத்தது. அந்த ஆளுனரும் மேலதிகாரியை பார்க்கச் சென்றார்.

அதிகாரி, "உங்களைப் பற்றி பலவிதமான குற்றச்சாட்டுகளும், புகார்களும் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றன. அதனால் உங்களைப் பதவியிலிருந்து நீக்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?" எனக் கேட்டார். 


அதற்கு அவர், "தவறு என்னுடையது தான். அதை நான் சரி செய்து கொள்ள விரும்பிகிறேன். எனவே, தயவுசெய்து என் பதவியை இன்னும் மூன்று வருடங்கள் நீட்டிப்பு செய்யுங்கள்" என கெஞ்சினார். மேலதிகாரியும் அதற்கு சம்மதித்தார்.

அடுத்த மூன்று வருடங்களில், அதே ஆளுனரைப் பற்றி பாராட்டுகள் குவியத் தொடங்கின. இதைப் பார்த்த மேலதிகாரிக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவரை பாராட்டி பரிசு வழங்க முடிவு செய்தார்.

மேலதிகாரி ஆளுனரை நேரில் சந்தித்து, "உங்களது தவறை சரி செய்துவிட்டீர்கள். இதை பாராட்ட வேண்டும். இந்த பரிசை  நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றபடி ஒரு பரிசை நீட்டினார்.

ஆனால் அதை வாங்க மறுத்து, "என் முதல் மூன்றாண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன். அதனால் ஊழல், லஞ்சம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டேன். சட்டங்களை மாற்றி, தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தேன். என்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்னைப்பற்றி உங்களிடம் புகார் அளித்தனர்.

அதன் பின்னர், என்னுடைய அடுத்த மூன்றாண்டு ஆட்சி காலத்தில் யாரையும் கண்டுகொள்ளவில்லை. ஊழலில் ஈடுபடுபவர்களை தண்டிக்காமல் விட்டேன். தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கவில்லை. என்னுடைய இந்த மாற்றத்தால் இப்போது அவர்கள் என்னைப் புகழ்ந்து உங்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள்.

என்னுடைய முதல் மூன்றாண்டு ஆட்சி காலத்தில் இந்த பரிசை நீங்கள் வழங்கியிருந்தால், நிச்சயம் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் இப்போது இந்த பரிசு ஏற்றத்தக்கதில்லை" என்று கூறி பரிசை வாங்க மறுத்துவிட்டார்.

நாம் ஒவ்வொருவரும் சுயநலமாக செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னாலும் ஒரு சமூகம் மறைந்திருக்கிறது என்பதை மறந்து (மறைத்து) விடுகிறோம்.

சனி, 19 நவம்பர், 2016

பதவி!!!

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?''எனக் கேட்டான்.
"வராது'' என்றான் அமைச்சன்.
வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன், "கொஞ்ச நேரத்தில் மழை வரும்" என எச்சரித்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்தபோது கடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான். திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து,''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' எனக் கேட்டான்.

அவனோ,''மன்னா! எனக்குத் தெரியாது. ஆனால் என் கழுதைக்குத் தெரியும். மழை வரும் முன் அது தனது காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்'' என்றான். உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.


இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு, ''அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான். அது என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன'' என்றார்.

 பதவியாசை கொடூரமானது, ருசிகண்டவர்களை அது விடாது!

வெள்ளி, 18 நவம்பர், 2016

அனுபவம்!!!

ஒரு பயணி, டாக்சியில் சென்று கொண்டிருந்தார். டாக்சி ஓட்டுனரிடம் ஏதோ கேட்பதற்காக, அவன் முதுகில் லேசாகத் தட்டிக் கூப்பிட்டான்.


உடனே ஓட்டுனர் நிலை குலைந்து விட்டார். இன்னொரு காரை நெருங்கி மோதாமல் தப்பித்து,
அடுத்து வந்த ஒரு லாரியின் மீது இடிக்காமல் தப்பித்து, ஒரு மரத்தின் மீது மோதுமுன் காரை நிறுத்தினான்.

சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது. ஓட்டுனர் பயணியிடம் சொன்னார்,''என் உயிரே போகும் அளவுக்கு என்னைக் கலங்க வைத்து விட்டாயே?" என்றார்.
அந்த பயணி மன்னிப்புக் கேட்டுக்கொண்டே, "உன் முதுகில் லேசாகத் தட்டியது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை'' என்றான்.

ஓட்டுனர், "இல்லை, இது என்னுடைய தவறுதான்.
இன்று தான் முதல்முதலாக நான் டாக்சி ஓட்டுகிறேன். கடந்த பத்தாண்டுகளாக நான் வேனில் பிணங்களைத்தான் எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன்" என சொன்னான்.

நமது அனுபவங்கள் கடந்த காலத்தால் பாதிக்கப்படுகின்றன.

வியாழன், 17 நவம்பர், 2016

நான்கு வகை மனிதர்கள்!!!

அரசர் தன் மந்திரியிடம் புதிர் ஒன்றிற்கு விடை கேட்டார். “மந்திரியாரே, இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை முதல் வகையினர் உண்டு உண்டு. இரண்டாம் வகையினர் உண்டு இல்லை. மூன்றாம் வகையினர் இல்லை உண்டு. நான்காம் வகையினர் இல்லை இல்லை. இவர்களை உங்களுக்குத் தெரியுமா?“ என்றார். 


“மன்னா இதற்கான பதிலை நாளை சொல்கிறேன் “ என்றார் மந்திரி. மறுநாள் அரண்மனைக்கு வரும்போது மந்திரியுடன் நான்கு பேர் வந்தனர். அவர்களைக் காட்டி “மன்னா! இதோ இந்த பணக்காரர் தர்ம சிந்தனை கொண்டவர். இவர் உண்டு உண்டு வகையைச் சேர்ந்தவர். பூவுலகிலும் சுகமாக வாழ்கிறார் புண்ணிய செயல் செய்வதால் மேலுலகத்திலும் சுகம் அடைவார். 

இரண்டாவது ஆளான இவரும் செல்வந்தர் தான் என்றாலும் சுய நலத்துடன் வாழ்வதால் உண்டு இல்லை பிரிவில் இருக்கிறார். பூவுலகில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலும் மேலுலகில் இவருக்கும் சுகம் கிடைக்காது. 

மூன்றாவது ஆளான துறவிக்கு இங்கு சுகம் இல்லாவிட்டாலும் மேலுலகில் மகிழ்ச்சி உண்டு.

நான்காவது நபரான இந்த திருடனுக்கு இங்கும் அங்கும் மகிழ்ச்சி இல்லை. ஏனென்றால் கையும் களவுமாக பிடிபட்டால் இங்கும் தண்டனை உறுதி பாவம் செய்வதால் அங்கும் துன்பமே“ என்றார். 

உலகிலுள்ள அத்தனை பேரும் இந்த நால்வர் அணிக்குள் அடங்கியிருக்கின்றனர். இதில் நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர்?

புதன், 16 நவம்பர், 2016

இடம்... பொருள்... ஏவல்...

நீதிபதி அவனை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தார். “இந்தாப்பா. விசாரணை முடிஞ்சாச்சு. நீ ஏதாவது சொல்லனுமா?” என்றார். அவன் இல்லை என்று தலையாட்டினான்.

செய்யாத தப்புக்கு தண்டனை என்பதை விட, 'இரண்டு வருஷம் ஜெயிலில் இருக்கணுமா?' என்ற  அவஸ்தை தான் அவனுக்கு பெரிசாய் தெரிந்தது. ஜெயில் முதல் இரண்டு நாளைக்குத்தான் போரடித்தது. அப்புறம் சகஜமாகி விட்டது.

அன்றைக்கு நல்ல தூக்கம். முதுகில் ஏதோ ஏறுவதைப் போல் இருந்தது. உதறி எழுந்தான். அந்த மெல்லிசான வெளிச்சத்திலும் தரையில் ஒரு கட்டெறும்பு தெரிந்தது. லேசாக மினுமினுப்புடன் ஒரு கட்டெறும்பு. இதுவரை பார்த்ததில்லை. தூக்கம் கலைந்த ஆத்திரத்தில் அதை நசுக்க காலை நகர்த்தினான். “ஏய் என்னை கொல்லாதே” என ஒரு சத்தம் கேட்டது.

எறும்பு பேசியது !!! தரைக்குக் குனிந்தான். ”நான்தான் பேசினேன். கொஞ்சம் என்னை தூக்கி வச்சிக்கோ சொல்றேன்” என்றது எறும்பு. உள்ளங்கையில் அதை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான். பிரமிப்பு நீங்காமல், “ஆமா.. நீ எப்படி பேசறே?” என்றான்.


”அதெல்லாம் உனக்கு எதுக்கு? நான் உன்னோட இங்கேயே இருக்கேன். உனக்கு பேச்சு துணையா” என்றது.
தனிமை தொலைந்த சந்தோஷம்!!! பேசும் எறும்பு!!!

அவனுக்கு தூக்கம் வரவில்லை. 
வெளியில் போனதும் இந்த எறும்பை வைத்து பெரிசா சம்பாதிக்கனும் என திட்டமிட்டான். யோசனை விரிவாகியது. மிச்சம் இருந்த நாளெல்லாம் எறும்புக்கு வித விதமாக பேச சொல்லிக் கொடுத்தான். சின்னதாய் ஒரு பாட்டு பாடும் அளவுக்கு எறும்பு தேறி விட்டது. சில நாட்களில் அவனும் விடுதலை ஆனான். 

முதல் வேலையாய் 'எறும்பு ஷோ' நடத்தணும் என்ற நினைப்பில் நடந்தவனுக்கு ஒரு நல்ல ஹோட்டல் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்தான். டிபன் ஆர்டர் செய்துவிட்டு பாக்கெட்டில் இருந்து அந்த எறும்பை எடுத்து டேபிளில் விட்டு ஒரு காலி டம்ளரை கவிழ்த்து அதை பத்திரமாக்கினான். 

சர்வர் டிபன் கொண்டு வந்து வைத்துவிட்டு, சிநேகமாய் பார்த்து சிரித்தான். இந்த சர்வர் தான் பேசும் எறும்பை பார்க்க போகும் முதல் ஆள் என்று நினைத்து கவிழ்த்த காலி டம்ளரை திறந்து எறும்பைக் காட்டி, “இங்கே பார்” என்றான் பெருமையாக. சர்வர் தாமதிக்காமல் தனது நாலு விரலையும் சேர்த்து ஒரு அடி அடித்தார். அந்த எறும்பு நசுங்கி செத்துப் போனது.

எந்த ஒரு செயலை செய்வதற்கும் இடம், பொருள், ஏவல் முக்கியம். தக்க சமயத்தில், சரியான பொருளுடன் இடப்படும் கட்டளையானது, நிச்சயம் நல்ல முடிவையே தரும்.

செவ்வாய், 15 நவம்பர், 2016

யாருக்காக???

ஒரு ஊரில் ஒரு தனவந்தர் இருந்தார். அவர் காலி மனைகளை வாங்கி அவற்றில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். தன் தொழிலுக்கு உதவியாக ஒரு கொத்தனாரை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அந்தக் கொத்தனார் மிகவும் நேர்த்தியான, அழகான வீடுகளைக் கட்டுவதில் திறமைசாலி. 

அவர் கட்டும் வீடுகள் உடனே நல்ல விலைக்குப் போயின. பலரும் காத்திருந்து வாங்கினார்கள்.
வியாபாரம் செழித்தது. தனவந்தரும் கொத்தனாரை நல்ல சம்பளம் கொடுத்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்.


கொத்தனாருக்கு வயது நிரம்பவும், தான் ஓய்வு பெற்றால் நல்லது என்று நினைத்தார். தனவந்தரிடம் அந்த யோசனையைச் சொன்ன போது அவருக்கும் அது சரியென்றே பட்டது. ஆனாலும் அவர் கொத்தனாரைப் பார்த்து 'தம்பி, நீ எவ்வளவோ செய்து விட்டாய். உனக்கு வாழ்க்கையில் ஓய்வு தேவைதான். எனக்காக இறுதியாக ஒரு வீடு கட்டிக் கொடுத்து விட்டுப் போ" என்று கேட்டுக் கொண்டார்.

கொத்தனாருக்கு தனவந்தர் மேலும் வேலை சொன்னது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஓய்வு கேட்டால் வேலை சொல்கிறாரே என்று கோபப் பட்டார். ஆனாலும் பல நாளாக தன்னைப் பார்த்துக் கொண்ட மனிதரிடம் கொண்ட நன்றியறிதலால் ஒன்றும் பேசவில்லை.

வேண்டா வெறுப்பாக அந்தக் கடைசி வீட்டைக் கட்டினார். வழக்கமாக இருக்கும் தரம் அதில் இல்லை. ஏனோ தானோவென்று இருந்தது.

கட்டி முடித்த அன்று தனவந்தர் வந்தார். வீட்டின் சாவியைக் கொத்தனாரிடம் ஒப்படைத்து, "அப்பா, இந்த வீட்டையே உனக்காகத்தான் கட்டினேன். உன் ஓய்வு காலத்திற்கு இது உதவும். வைத்துக் கொள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

கொத்தனாருக்குத் திடுக்கென்று இருந்தது. நமக்கு என்று தெரிந்திருந்தால் இன்னமும் கவனம் எடுத்து சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று வெகுநேரம் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.

நாமும் நமது இளம் வயதில் நம் யோசனைத் தெரிவுகளாலும் செய்கைத் தெரிவுகளாலும் நமது எதிர்காலம் என்ற வீட்டைக் கட்டுகிறோம். அதில்தான் வாழப் போகிறோம் என்று யோசித்துச் செய்பவர்கள் எப்போதுமே சிறப்பாக வாழ்கிறார்கள்.

திங்கள், 14 நவம்பர், 2016

அதிர்ஷ்டம்!!!

இங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ்.
ஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? அல்லது சோம்பேறிகளாக வாழ்கிறார்களா? என்று அறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

எனவே, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு, திடீரென்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மக்களும் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவிப்புச் செய்திருந்தார்.
விருந்துக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்ற வேளையில் மன்னர் மட்டும், மாறுவேடம் போட்டுக் கொண்டு நகரைச் சுற்றி வந்தார்.


அவர் ஒரு கிராமத்துக்குள் தம்முடைய குதிரையைச் செலுத்தி கொண்டு வந்து பார்த்தபோது, அக்கிராமத்தில் ஒருவருமே இல்லை. எல்லாரும் மன்னரின் விருந்துக்காக அரண்மனைக்குச் சென்றிருந்தனர்.
ஆனால், ஓரிடத்தில் ஒரேயொரு பெண் மட்டும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தாள். இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட மன்னர் அவளிடம் நெருங்கிச் சென்று, ""பெண்ணே, இந்தக் கிராமமே காலியாக இருக்கிறதே! இங்குள்ளவர்கள் என்னவானார்கள்?'' என்று கேட்டார்.

அவளோ தன் வேலையிலேயே மும்முரமாக மூழ்கி இருந்த காரணத்தினால், தன் பார்வையைத் திருப்பாமலேயே சொன்னாள்.
""உங்களுக்கு விஷயமே தெரியாதா? இன்று நம் மன்னரின் அரண்மனையில் திடீர் விருந்துக்கு ஏற்பாடாகி உள்ளது. அதில் மன்னர் பரிசு கொடுப்பார் என்றும் அறிவிப்பு செய்து இருந்தனர். ஆகவே, விருந்து சாப்பிடும் பொருட்டும், தங்களுக்கு ஏதாவது அதிர்ஷ்டவசமாகப் பரிசு கிடைக்காதா என்ற நப்பாசையாலும் மக்கள் அங்கே சென்றிருக்கின்றனர்!'' என்றாள்.

"இவ்வளவு விபரங்களைத் தெரிந்து வைத்திருக்கக் கூடிய நீ, விருந்துக்குப் போக வில்லையா? அதிர்ஷ்டமிருந்தால் உனக்கும் மன்னரின் பரிசு கிடைக்குமில்லையா?'' என்று கேட்டார்.

அந்தப் பெண் வேலையைச் செய்து கொண்டே சொன்னாள்.
"ஐயா, எனக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால், நான் செய்யும் இந்த வேலைக்குத் தக்க கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மேலும், நான் விருந்துக்குப் போய்விட்டால், இன்றைய தினத்தில் செய்யும் வேலையை இழந்து விடுவேன். அதனால், கிடைக்கும் கூலியை இழந்து விடுவேன். எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எனக்குண்டு. ஆகவேதான், நான் போக விரும்பவில்லை!'' என்றாள்.

இதைக் கேட்ட மன்னர் மனமகிழ்ந்தார்.
"பெண்ணே, என்னை நிமிர்ந்து பார். உன் சக மக்களிடம் நீ கூறு. நீங்கள் அதிர்ஷ்டத்தை விரும்பி மன்னரைப் போய்ப் பார்க்கச் சென்றீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. ஆனால், வேலையை விட மனதின்றிக் கடுமையான வேலை செய்து கொண்டிருந்தேன். என் உழைப்பு அதிர்ஷ்டமாக மாறி, மன்னரையே இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. மன்னரே தேடி வந்து பரிசுகள் தந்தார் என்று கூறு'' என்றபடி ஒரு பணமூட்டையை அவள் கையில் தந்துவிட்டு சென்றார் மூன்றாம் ஜார்ஜ்.

கடுமையான உழைப்பு அதிர்ஷ்டத்தை அழைத்து வரும். அதிர்ஷ்டத்தைக் தேடிக் கொண்டு நாம் போகக் கூடாது. அதிர்ஷ்டம் நம்மைத் தேடிக்கொண்டு வர வேண்டும். அதுதான் உண்மையான அதிர்ஷ்டம்.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

நம்பிக்கையை விதையுங்கள்!!!

ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்த்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள்.

இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.
அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். 


அது என்னவென்றால்,
அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொன்னார்.

வீரர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர்.
அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள்.

யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது" என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார்.

நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.

சனி, 12 நவம்பர், 2016

நாணலும்... மூங்கிலும்...

இந்த உலகத்தில், சமூகத்தில், அலுவலகத்தில், குடும்பத்தில், உறவுகளிடத்தில், போராடி போராடி அவன் மிகவும் களைத்துவிட்டான். ஒரு கட்டத்தில் “என்னடா வாழ்கை இது?” என்று வெறுத்தே போய்விட்டது. எங்காவது கண்காணாத இடத்துக்கு போனால் என்ன என்று தோன்றியது.

மனம் போன போக்கில் நடந்தான்.
அங்கும் இங்கும் அலைந்து திரிந்து நடந்து நடந்து ஊருக்கு வெளியே இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் வந்துவிட்டான்.

கடைசியாக ஒரு முறை கடவுளிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. உடனே,
“கடவுளே நான் ஏன் இன்னும் வாழவேண்டும்? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் நீ பதில் சொல் போதும்!” என கத்தினான்.

திடீரென இடி இடிப்பது போல கடவுளின் குரல் கேட்டது. “மகனே உன்னைச் சுற்றி ஒரு முறை பார்” என்றார்.
சுற்று முற்றும் பார்த்தான்.


கடவுள் தொடர்ந்தார்… “மூங்கில்செடிகளும் நாணலும் தெரிகிறதா? மூங்கில் செடிகளையும் நாணலையும் நான் நடும்போது மிகவும் கவனமாக அவற்றை பார்த்துக்கொண்டேன். பாரபட்சமின்றி அவை வளர்வதற்கு தேவையான சூரிய ஒளி, தண்ணீர் ஆகியவற்றை குறைவின்றி அவற்றுக்கு கொடுத்தேன். 

நாணல்கள் சற்று சீக்கிராமகவே வளர்ந்துவிட்டன. பச்சை பசேலென்ற அவற்றின் பசுமை பூமிக்கு அழகு சேர்த்தது. 
ஆனால் மூங்கில் செடிகளிலிருந்து ஒன்றுமே வரவில்லை. நான் நட்டபோது எப்படி இருந்தனவோ அப்படியே தான் இருந்தன. இருப்பினும் நான் அவற்றின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.

அடுத்த ஆண்டு நாணல்கள் இன்னும் பெரிதாக வளர்ந்தன. அவை வளரும் இடத்திற்கு மேலும் மேலும் அழகையும் பசுமையையும் சேர்த்தன. ஆனால் இம்முறையும் மூங்கில் செடிகளிலிருந்து ஒன்றுமே வரவில்லை. அப்படியே தான் அவை இருந்தன. இருப்பினும் நான் அவற்றின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.

மூன்றாம் ஆண்டும் இப்படியே. மூங்கில் செடி எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை. ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
நான்காம் ஆண்டும் அதே நிலை தான். எந்த வித வளர்ச்சியையும் மூங்கி செடிகள் காட்டவில்லை.
ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.

ஐந்தாம் ஆண்டு மூங்கில் செடி மிக மிக சிறியதாக ஒரு முளை விட்டது. நாணலுடன் ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை என்று கூறலாம். அத்தனை சிறியது. ஆனால் ஆறு மாதங்கள் கழித்து மூங்கில் சுமார் 100 அடி உயரத்துக்கு வளர்ந்தது.
எப்படி தெரியுமா? ஐந்து ஆண்டுகளாக தனது வேரை வளர்ப்பதற்கு அது செலவிட்டது.
அந்த வேர்கள் தான் தற்போது அதன் அசாத்திய உயரத்தை தாங்குகின்றன. தாங்க முடியாத சுமை என்று நான் யாருக்கும் எப்போதும் தருவதில்லை.

மூங்கில் எப்படி தன் வேரை ஆழமாக வளர்த்துக்கொண்டு வந்ததோ அதே போல நீ கஷ்டப்படும்போதெல்லாம் உனது வேரை வளர்த்து வந்தாய். நீ நிமிர்ந்து நிற்பதற்கு. 

நான் மூங்கில் மீது எப்படி நம்பிக்கை இழக்கவில்லையோ அதே போல உன் மீதும் நம்பிக்கை இழக்கமாட்டேன்! யாருடனும் உன்னை ஒப்பிட்டுக்கொள்ளாதே. மூங்கிலை நான் படைத்த நோக்கம் வேறு. நாணலை நான் படைத்த நோக்கம் வேறு. ஆனாலும் இரண்டுமே காடுகளுக்கும் நதிக்கரைகளுக்கும் அழகு சேர்ப்பவை தான்.

உன் நேரம் நிச்சயம் வரும். அப்போது நீயும் மூங்கிலை போல எல்லாரும் ஆச்சரியப்படத்தக்க அளவு உயர்வாய்! எந்தளவு நீ சோதனைகளை சந்திக்கிறாயோ அந்தளவு மேலே உயர்வாய். உன்னால் எவ்வளவு உயரமாக போகமுடியுமோ அவ்வளவு உயரமாக நீ போகவேண்டும். அதுவே எனக்கு பெருமை!” என்றார் கடவுள்.

உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு நாளையும் கெட்ட நாளாக நினைக்கவேண்டாம். நல்ல நாட்கள் மகிழ்ச்சியையும், மோசமான நாட்கள் அனுபவத்தையும் நமக்கு கொடுக்கும். இரண்டுமே வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவை.
மகிழ்ச்சியான அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு நம்முடைய விடாமுயற்சியும், புதுமை கலந்த செயல்திறனும் தேவை. இது அதிர்ஷ்டத்திலோ அல்லது குருட்டாம்போக்கிலோ வருவதல்ல. நமது தேர்வுகளில் தான் வருகிறது. நமது செயல்களில் தான் விளைகிறது.

வெள்ளி, 11 நவம்பர், 2016

சிரிக்கும் புத்தரின் கதை!!!

சீனாவைச் சேர்ந்த மூன்று துறவிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்களின் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவர்கள் யாரிடமும் பேசியதில்லை. யாருடைய கேள்விகளுக்கும் பதிலும் அளித்ததில்லை.


சீனாவில் அவர்களைப் பற்றிப் பேசும்போது ‘மூன்று சிரிக்கும் துறவிகள்’ என்றே அழைத்தார்கள்.

அவர்கள் ஒரே ஒரு வேலையைத் தான் வாழ்நாள் முழுவதும் செய்துவந்தனர். ஒரு கிராமத்திற்குள் நுழைவார்கள். அங்கு மக்கள் கூடும் சந்தையில் நின்று சிரிக்கத் தொடங்குவார்கள். உடனடியாக அங்குள்ள மக்கள் விழிப்புணர்வை அடைந்து தங்கள் மொத்த உயிர்ப்பும் வெளிப்படும்படி சிரிப்பார்கள்.

அது மற்றவர்களையும் தொற்றும். கூட்டம் கூட்டமாகச் சிரிப்பார்கள். பிறகு என்ன? மொத்த கிராமமே சிரிக்கும். பின்னர் அவர்கள் மற்றொரு ஊருக்குச் செல்வார்கள். அந்த மூன்று துறவிகள் மீதும் சீன மக்களுக்கு மிகுந்த பிரியம் இருந்தது. அவர்கள் தங்கள் சிரிப்பைத் தவிர வேறெந்த போதனையையும் நிகழ்த்தவேயில்லை. அவர்கள் எதையும் யாருக்கும் கற்பிப்பதும் இல்லை. அவர்கள் ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள். அவ்வளவுதான்.

வாழ்க்கை என்பது வெறும் சிரிப்புதான், வேறொன்றுமில்லை என்பதைப் போல இருந்தது அவர்களது சிரிப்பு. அவர்கள் ஒருபோதும் மற்றவரைப் பார்த்துக் குறிப்பாக சிரித்ததே இல்லை. பிரபஞ்சத்தின் நகைச்சுவையைப் புரிந்துகொண்டது போல அவர்கள் சிரித்தனர். ஒரு வார்த்தையைக் கூட செலவழிக்காமல் சீனா முழுவதும் அந்த மூன்று துறவிகள் மகிழ்ச்சியைப் பரவச்செய்தனர்.

அந்த சிரிக்கும் துறவிகளுக்கும் வயோதிகம் வந்தது. அவர்களில் ஒருவர் கிராமம் ஒன்றைக் கடக்கும்போது இறந்துபோனார். அந்தக் கிராம மக்கள் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. குறைந்தபட்சம் சகதுறவியின் மரணத்துக்காக மற்ற இரண்டு துறவிகளும் அழுவதைப் பார்க்கலாம் என்று நினைத்தனர்.

மரணம் நடந்த இடத்தில் அனைத்து கிராமத்தவர்களும் கூடினர். இறந்த துறவியின் சடலத்தைப் பார்த்தபடி இருந்த இரண்டு துறவிகளில் ஒருவர் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கத் தொடங்கினார். கிராம மக்கள் குழப்பமடைந்தனர்.

இதற்கு என்ன விளக்கம் என்று சிரித்த துறவிகளை வற்புறுத்திக் கேட்டனர். துறவிகள் முதல் முறையாகப் பேசத்தொடங்கினர்.

“இறந்து கிடப்பவன் வென்றுவிட்டான். யார் முதலில் இறப்பார்கள் என்பது எங்களுக்குள் பெரிய போட்டியாக இருந்தது. இவன் எங்களைத் தோற்கடித்து விட்டான். எங்களுடன் இவன் பல ஆண்டுகள் சேர்ந்து சிரித்தான். நாங்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறோம். அவனை வழியனுப்புவதற்கு சிரிப்பைத் தவிர வேறு என்ன சிறப்பு வழிமுறை இருக்கமுடியும்” என்றார்கள் அந்தத் துறவிகள்.

அந்த இரண்டு துறவிகளும் சக துறவியின் மரணத்தைப் பார்த்து சிரித்ததற்கான காரணம் பின்னர்தான் கிராமத்தவருக்குத் தெரியவந்தது. இறந்த துறவி தனது மரணத்துக்குப் பின்னர் தனது உடையை மாற்றவேண்டாம் என்றும் தன்னைக் கழுவ வேண்டாம் என்றும் உத்தரவு இட்டிருந்தார்.

“நான் ஒருபோதும் தூய்மை குறைந்தவனாக இருந்தது இல்லை. நான் வாழ்க்கை முழுக்கவும் சிரித்துக் கொண்டிருந்ததால் அழுக்கு என்னிடம் சேரவே இல்லை. சிரிப்பு என்பது இளமையானது. புத்துணர்வு வாய்ந்தது” என்று கூறியிருந்தார். அவரது விருப்பப்படியே அவரது சடலத்திற்கு தீ வைக்கப்பட்டது.

அவரது உடல் எரியத்தொடங்கியது. அனைவரும் சிரிக்கத் தொடங்கினார்கள். காரணம் அவரது உடல் பட்டாசுகளாக மாறி வண்ண வண்ண விந்தைகளைக் காட்டியது.

ஆம். அவர் தன் உடலை கழுவ வேண்டாம் என்று சொன்னதே தன் ஆடைக்குள் பட்டாசுகளை மறைத்து வைத்திருந்த காரணத்தால்தான். தன்னுடைய மரணம் கூட மற்றவர்களை மகிழ்ச்சியடைய செய்ய வேண்டும் என்ற நல் எண்ணத்தால் தான்.

அந்த மூன்று துறவிகளும் மூன்று புத்தர்களாக இருந்திருக்க வேண்டும். நீங்களும் சிரிக்கலாம் ஒரு நிமிடம்.

வியாழன், 10 நவம்பர், 2016

நாளை என்ன நடக்கும்???

ஒருமுறை ஒரு மனிதருக்கு, அவர் செய்யாத குற்றத்துக்காக
மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை அவரை தூக்கில் போட வேண்டும் என்று அந்த நாட்டின் அரசர் உத்தரவிட்டு விட்டார். இப்படி ஒரு தீர்ப்பு சொன்னவுடன், அவர் அரசனை நோக்கி, ‘அரசே! எனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுத்தால், உங்கள் குதிரையைப் பறக்க வைப்பேன்’ என்று சொன்னார்.


இதைக் கேட்டுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்த அரசர், கடைசியில், ‘சரி! ஆனால் அப்படி குதிரை பறக்காவிட்டால், உன் தலையை யானையின் காலுக்குக் கீழே வைத்து நசுக்கிவிடுவேன்’ என்று எச்சரித்து, அவனுக்கு ஒரு வருடம் காலக்கெடு கொடுத்தனுப்பினார்.

அரசரின் குதிரையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த அம்மனிதரைப் பார்த்த அவர் மனைவி, ‘என்ன இப்படி செய்து விட்டீர்கள்? குதிரைக்கு எப்படி பறக்க கற்றுக் கொடுப்பீர்கள்? எங்காவது குதிரை பறந்து கேள்விப்பட்டதுண்டா?’ என்று சோகமாகக் கேட்டார். 

அதற்கு அந்த மனிதர், ‘எனக்கு ஒரு வருடம் அவகாசம் இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் ஒருவேளை அரசர் இறந்துவிடலாம், அல்லது நானே இயற்கை மரணம் அடைந்துவிடலாம் அல்லது இந்தக் குதிரை இறந்துவிடலாம். இல்லை யென்றால், இந்தக் குதிரை பறக்கக் கூட கற்றுக் கொள்ளலாம், யாருக்குத் தெரியும்?’ என்றார்.

நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை தற்போதைய சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்கத் தேவையில்லை. நாளை நடக்கப் போவதற்கு இப்போதிருக்கும் சூழ்நிலைகள் ஒரு வழிகாட்டியாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அவையே ஒரு தீர்மானமாக, இறுதி முடிவாக இருக்கத் தேவையில்லை.

இன்றைய சூழல்களை நாளைய எதிர்காலமாக மக்கள் கற்பனை செய்து கொள்வதால்தான் அவர்களுக்கு துயரங்களும், மன அழுத்தமும் ஏற்படுகின்றன.

புதன், 9 நவம்பர், 2016

பணத்தின் மதிப்பு!!!

ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?" என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து, "அந்த பொம்மை என்ன விலை?" என்று கேட்டான். அதற்கு சிரித்துக் கொண்டே அந்த முதலாளி, "உன்னிடம் எவ்வளவு உள்ளது?" என்று கேட்டார்.


அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். "இது போதுமா?" என்று கவலையுடன் கேட்டான்.

அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே, "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்" என்று மீதியை கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம், "அய்யா ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு, விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே அய்யா?" என்றான். 

அதற்கு அந்த முதலாளி, "அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு பணத்தை விட அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.
நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும்..அதை தடுத்து
விட்டேன் மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன் என்றோ ஒரு நாள் அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும் ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்" என்றார்.

செவ்வாய், 8 நவம்பர், 2016

முதல் கண்ணாடி!!!

உலகில் கண்ணாடிகள் தோன்றிராத காலம் அது. யாருமே தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததில்லை. அப்போது முதன் முதலாக முகம் பார்க்கும் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவனுக்கு அந்தக்கண்ணாடி கிடைத்தது.அதை வீட்டுக்கு கொண்டுவந்து ஒரு பெட்டியில் வைத்டுக்கொண்டு பின் அதை திறந்து பார்த்தான். அதில் அவன் முகம் தெரிகிறது. அது தன் முகம் தான் என்று அவனுக்குத்தெரியவில்லை.


இதற்குள் ஒரு மனிதன் இருக்கிறான். 'இதற்குள்ளே ஆனந்தமாக வசிக்கும் அவன் ஒரு தேவனாகத்தான் இருக்கவேண்டும்' என்று எண்ணினான். உடனே கண்ணாடியை பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டான்.

 தினமும் காலையில் எழுந்ததும் தன் மனைவிக்குத்தெரியாமல் தன் அறைக்குள் நுழைந்துபெட்டியைத்திறந்து கண்ணாடியைப்பார்ப்பான். மனைவி வந்துவிட்டால் பெட்டியை மூடி விடுவான். அவன் செய்கைகளைப் பார்த்த மனைவிக்கு சந்தேகம் வந்தது.

ஒரு நாள் கணவன் இல்லாத சமயம் அவன் அறைக்குள் போய் பெட்டியை வேறு சாவி போட்டுத்திரந்து பார்த்தாள். கண்ணாடியில் அவள் முகம் தெரிந்தது. அதுவரை கண்ணாடியை பார்த்திராததால் அது அவள் முகம்தான் என்று அவளுக்கும் தெரிந்திருக்கவில்லை. தன் கணவன் யாரோ ஒருத்தியை பெட்டியில் ஒளித்து வைத்திருக்கிரான் என்று எண்ணி கோபம் கொண்டாள்.

கணவனின் வருகைக்காக கோபத்துடன் அவள் காத்திருந்தபோது கணவன் ஒரு புத்தபிட்சுவை உடன் அழைத்து வந்தான். கணவனுடன் மனைவி சண்டை போடத்தொடங்கியதும், 'ஏன் இப்படி கோபிக்கிராய்?' என்று புத்தபிட்சு அமைதியாகக்கேட்டார்.

அதற்கு, "சுவாமி இவர் எனக்குத்தெரியாமல் வேறு ஒரு பெண்ணை அழைத்துவந்து தன் அறையில் உள்ள பெட்டியில் ஒளித்து வைத்திருக்கிறார்" என்றாள் மனைவி. 

பிட்சுவும் கணவனிடம், "ஏனப்பா இப்படி செய்கிராய்?" என்றார். அவன், "ஐயோ, இவளைத்தவிர வேறு பெண்ணையே நான் பார்த்ததில்லை" என்றார் பரிதாபமாக. "இவர் பொய் சொல்கிறார் சுவாமி, இதோ உங்களுக்கு நிரூபிக்கிறேன்"  என்று சொல்லி கண்ணாடி வைத்திருக்கும் பெட்டியை திறந்து பார்க்கும்படி பிட்சு விடம் சொன்னாள் அவள். 

பிட்சு அதைத் திறந்து பார்த்தார். கண்ணாடியில் அவர் முகம் தெரிந்தது. இதுவரை அவரும் கண்ணாடியில் தன் முகத்தைப்பார்த்ததில்லை. அவர் உடனே, "அட, இதோ பாரம்மா, எல்லோருக்கும் தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று எண்ணி இப்பெண் வெட்கிப்போய் தன் தலையை மொட்டை அடித்துக்கொண்டுவிட்டாள். இனிமேல் இங்கிருந்தால் அவமானம் தாங்காது அவள் போய் விடுவாள்" என்றார் ஆறுதலாக. உண்மையில் பிட்சு பார்த்தது அவருடைய உருவத்தைத்தான்.

“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”

திங்கள், 7 நவம்பர், 2016

சரியான தண்டனை

ஆசிரியர் ஸென்கேயிடம் பல மாணவர்கள் தியானம் பற்றி கற்று வந்தனர். அவர்களில் ஒருவன் நள்ளிரவில் எழுந்து மடத்தின் சுவரில் ஏறி அடுத்தப் பக்கத்தில் குதித்து, பக்கத்தில் உள்ள நகரத்திற்கு ஜாலியாக சென்று சுற்றிவிட்டு வருவது வழக்கம்.


பல படுக்கைகள் கொண்ட அந்த துயில் கூடத்தினை ஒருமுறை மேற்பார்வை செய்ய வந்த ஆசிரியர், மாணவன் ஒருவனைக் காணததைக் கண்டார். பக்கத்திலேயே உயரமான நாற்காலி ஒன்றும் சுவரின் அருகில் போடப் பட்டிருந்ததைப் பார்த்தார். நாற்காலியை அங்கிருந்து நகர்த்தி விட்டு அந்த இடத்தில் நின்று கொண்டார்.

சுற்றித் திரிந்தவன் உள்ளே நுழைந்த போது, ஸென்கேய் நாற்காலிக்கு பதிலாக நிற்பதை அறியாமல், அவர் தலையில் காலை வைத்து மெதுவாக தரையில் குதித்தான். குதித்தவன், தான் என்ன செய்தோம் என்பதனை அறிந்ததும் அச்சத்தால் திடுக்கிட்டான்.

ஸென்கேய், "காலை வேளையில் மிகவும் குளிராக இருக்கும். கவனமாக இருப்பது நல்லது. நீர்க்கோத்துக் கொண்டு சளி பிடித்துக் கொள்ளப் போகிறது" என்றார்.

இந்த நிகழ்சிக்குப் பிறகு அந்த மாணவன் இரவில் வெளியே செல்லவேயில்லை.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுத்தான் ஆக வேண்டும். மாணவப் பருவத்தில் எல்லாருக்குமே கட்டுப்பாடு என்பது கசக்கச் செய்யும். ஆனால் தவறு செய்தவனைத் தண்டித்தால் அவன் திருந்தி விடுவானா? யார் ஒருவர் தவறு செய்யாதவர்.

அனைவருமே வெவ்வேறு காலக் கட்டங்களில் தெரிந்தோ தெரியாமலோ தவறினைச் செய்கிறோம். தவறு செய்கிறவனைத் திருத்துவதற்கு எனப் பல வழிகள் உள்ளன.

சிலருக்கு நாசுக்காக தவறினைச் சுட்டிக்காட்டினாலே திருந்தி விடுவார்கள். 

சிலருக்கு அழுத்தமாக திட்டியோ, அடித்தோ அல்லது கடுஞ்சொல்லினைக் கூறியோ திருத்த வேண்டி இருக்கும். 

சிலருக்கு கடுமையான தண்டனை கொடுத்தாலே திருந்துவார்கள். 

சில வகையான தவறுக்கு முதல் வகையிலிருந்து மூன்றாவது வகைவரை படிப்படியாக உபயோகப் படுத்தி திருத்தப் பார்ப்பது நலம். 

ஆனால் சில வகையான தவறுகளை தெரிந்தே செய்பவர்களுக்கு மூன்றாவது வகையைப் பிரயோகித்தால்தான் சமூக கேடுகளை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.