எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 31 டிசம்பர், 2016

வெற்றி !!! தோல்வி !!!

இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். பரிசோதனைச் சாலையில் மும்முரமாய் சோதனையில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியை அவருடைய ஜெர்மானிய ராணுவ அதிகாரிகள் ஒருநாள் கூப்பிட்டு அனுப்பினார்கள்.

அப்பொழுது அவர் ராக்கெட் தயாரிக்கும் முயற்சியில் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட அவகாசம் கொடுத்திருந்தும் ராக்கெட் எதையும் அவர் கண்ணில் காட்டுவதாய் இல்லை. சட்டென்று ஏதாவது கண்டுபிடித்துக் கொடுத்தால் லண்டன் நகரில் போட்டுத் தீபாவளி கொண்டாடலாம் என்று துடித்துக் கொண்டிருந்தார்கள் ஜெர்மானிய ராணுவத்தினர்.


"என்னய்யா ஆச்சு?" விசாரித்தார்கள்.

"இதுவரை 65,121 தவறுகள் செய்திருக்கிறேன்; கண்டுபிடித்துவிடுவேன்" என்றார்.

அந்தப் பதில் அவர்களுக்குச் சகிக்கவில்லை.

"நீ கண்டுபிடித்து முடிக்க இன்னும் எத்தனைத் தவறுகள் செய்ய வேண்டியிருக்கும்?"

"ம்ம்ம்… எப்படியும் மேற்கொண்டு ஓர் ஐயாயிரம் தவறுகள் நிகழலாம். குறைந்தது 65,000 தவறுகள் செய்தால்தான் ஒரு ராக்கெட் கண்டுபிடிக்கும் தகுதியே உருவாகிறது. இப்பொழுதுதான் அந்தத் தகுதி எனக்குக் கிடைத்துள்ளது. ரஷ்யா இதுவரை 30,000 தவறுகள் மட்டுமே செய்துள்ளது. அமெரிக்கா ஒரு தவறும செய்யவில்லை. தெரிந்து கொள்ளுங்கள்" எனக் கூறினார் ராக்கெட் விஞ்ஞானி வெர்னர் வான் ப்ரௌன் (Wernher von Braun). ஜெர்மனியைச் சேர்ந்தவர். 

அவர் பேச்சு பொய்யாகவில்லை. அன்று வரை ராக்கெட் தொழில்நுட்பத்தில் ரஷ்யா பாதியளவு மட்டுமே முன்னேறியிருந்தது; அமெரிக்கா அத்துறையில் அப்பொழுது ஒன்றுமேயில்லை. இறுதியில் வெற்றிகரமாய் அவர் ஏவுகணையைக் கண்டுபிடித்துக் கொடுக்க அதை வைத்துக்கொண்டு ஜெர்மனி கெட்ட ஆட்டம் போட்டது.


எதிரி நாடுகளைக் கதிகலங்க அடித்தனர்; ஒருவழியாய் உலகப் போர் முடிவுக்கு வர, பார்த்தார் வெர்னர்; ரஷ்யர்களிடம் மாட்டிக் கொண்டு வதைபடுவதைவிட அமெரிக்கா பரவாயில்லை என்று அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். அவரைப் பத்திரமாக  தன் ஊருக்கு அழைத்து வந்த அமெரிக்கா அவரது அறிவுக்கு வேண்டிய தீனியைப் போடவே முதன்முதலில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வைக்க நாஸா உருவாக்கிய ராக்கெட்டிற்கு இவரது அறிவும் உழைப்பும் அடிப்படையாயின.

பணம் தவிர ஏகப்பட்ட விருதெல்லாம் சம்பாதித்துக் கொண்டு 1977-ல் தமது 65ஆவது வயதில் இறந்து போனார் விஞ்ஞானி வெர்னர்.



தவறுகளெல்லாம் உண்மையில் தவறுகளல்ல. நமது ஒவ்வொரு தவறும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தராமல் விடுவதில்லை. வெற்றியாளர்கள் தவறிழைத்தால் கற்கிறார்கள். அடுத்தமுறை தவறு நிகழ்ந்தால் அடுத்த முறையும் கற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு தவறிலும் விடாமல் கற்றுக் கொண்டே இருப்பதால், வெற்றியடைகிறார்கள். 

இந்த வருடத்தில் கற்ற தோல்வி என்னும் பாடத்தின் மூலம் அடுத்த (2017) வருடத்தில்  வெற்றி பெற வாழ்த்துக்கள்... 


வெள்ளி, 30 டிசம்பர், 2016

இயல்பு !!!

வட இந்தியாவிலுள்ள கந்தார நாட்டின் தக்கசீலம் என்ற பகுதியில் ஒரு கன்றுக்குட்டி பிறந்தது. மிக வலுவான காளையாக வளர வேண்டும் என்பதற்காகவே, பிரத்யேக இனங்களைச் சேர்த்து அந்தக் கன்றுக்குட்டி பிறக்க வைக்கப்பட்டது. இதன் சிறப்பை உணர்ந்த மிகப்பெரிய வியாபாரி ஒருவன் அதை வாங்கிச் சென்றான். கன்றிலிருந்து காளையாக வளரும் வரை பிரத்யேகமான உணவுகள், சிறப்பு தானியங்கள் என படாடோபமாக வளர்க்கப்பட்டது அந்தக் காளை. 


அதன் இனமும் கொடுக்கப்பட்ட உணவும் அந்தக் காளையை முழு சக்தியுடையதாக வளர்த்தெடுத்தது. அப்போதும்கூட அந்த உணவுகள் மாறவுமில்லை. அந்த காளை வண்டி இழுக்கப் பயன்படுத்தப்படவுமில்லை. இதைக்கண்ட காளை ‘நம் எஜமான் நம்மை எவ்வளவு சிறப்பாகப் பார்த்துக் கொள்கிறார். அவருக்கு நாம் ஏதாவது கைம்மாறு செய்தே ஆக வேண்டுமே’ என்று அந்த வியாபாரியை அழைத்தது.
“எஜமான், என்னை நீங்கள் சிறப்பாகப் பார்த்துக் கொள்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்கு எதுவுமே செய்யவில்லை. எனக்கு இது மிகவும் சங்கடத்தை அளிக்கிறது. நான் ஒரு யோசனை சொல்கிறேன். ஊருக்குள் சென்று, ‘என் காளையைப் போல் சிறந்த காளை வேறு எதுவுமே இல்லை. என் காளை தனியாக நூறு வண்டிகளை இழுக்கக்கூடியது’ என்று சொல்லி யாரையாவது பந்தயத்துக்கு அழைத்து வாருங்கள். நான் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருகிறேன்” என்று சொன்னது. சுறுசுறுப்பாக வேலை செய்த வியாபாரியின் மூளை, இந்த யோசனைக்கு சரியெனச் சொல்லவும், ஊருக்குள் சென்று ஒரு பந்தயக்காரனிடம் பேசிவிட்டு வந்தார். 
அந்த பந்தயக்காரன் மற்றொரு உள்ளூர் வியாபாரி. அவன் சொன்னபடி தன் காளையுடன் சென்ற வியாபாரி நூறு வண்டிகளைக் கண்டார். அந்த வண்டிகள் மணலும், சேரும் நிரப்பி வைக்கப்பட்டிருக்க, தன் காளையை வண்டியில் பூட்டி ஏறி அமர்ந்தார் வியாபாரி. தன் எஜமானனுக்கு நல்லது செய்யப்போகும் பெருமையுடன் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த காளையை, மேலே உட்கார்ந்திருந்த வியாபாரி திடீரென ‘காது கேட்காத மிருகமே, உடனே, முன்னே போ’ எனக் கத்தி சாட்டையைச் சுழற்றினார். 
இதைச் சற்றும் எதிர்பார்க்காத காளை அப்படியே அமைதியாக நின்றுவிட்டது. எனவே பந்தயத்தில் தோற்று 1000 பொற்காசுகளை இழந்த வியாபாரி, சோகத்துடன் வீட்டுக்குச் சென்று அமர்ந்தார். அவர் பின்னால் சென்ற காளை, எஜமான் முகத்திலிருந்த சோகத்தைக் கண்டு ‘ஏன் இப்படி சோகமாக இருக்கிறீர்கள். தூக்கம் வரவில்லையா?’ என வினவ, ‘எப்படித் தூக்கம் வரும்? 1000 பொற்காசுகளை உன்னால் இழந்தேன்’ எனக் கூறினார்.
இதைக் கேட்ட காளை ‘என்னால் இழந்தீர்களா? உங்களால் இழந்தீர்களா?. உங்களுக்கு நல்லது செய்வதற்காக நான் ஒரு யோசனை சொன்னால், நீங்கள் என்னையே காது கேட்காத மிருகமே எனத் திட்டினீர்கள். அதனால் தான் நான் மிருகத்தைப் போல அமைதியாக நின்றேன். என் உடலைப் பார்த்து பார்த்து வளர்த்த நீங்கள், என் மனம் புண்படும் என யோசிக்கவில்லையே?’ எனக் கேட்டது.


காளையின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்த வியாபாரி மன்னிப்பு கேட்டதும், மீண்டும் அந்தப் போட்டியை 2000 பொற்காசுகளுக்கு நடத்துமாறு சொன்னது காளை. அதன்படியே மீண்டும் போட்டி அறிவிக்கப்பட, இனாமான வரும் பணத்தை வேண்டாம் என்பானேன்’ என்று பந்தயக்கார வியாபாரியும் 2000 பொற்காசுகளுக்கு போட்டியை நடத்த, மலர் மாலையிட்டு, தாமரைப் பூவால் தலையைத் தடவி வண்டியில் பூட்டப்பட்ட காளை நூறு வண்டிகளையும் இழுத்து தனது எஜமானனுக்கு வெற்றியத் தேடித்தந்தது. இழந்த பொற்காசுகளையும்.
உலகில் எப்போது வேண்டுமென்றாலும் எது வேண்டுமானாலும் மாறலாம். ஒரு நொடியின் கடைசி காலம் கூட நம்மால் நிறுத்தி வைக்க முடியாதது. எந்த நேரத்திலும் தமது இயல்பிலிருந்து மாறினால், அதனால் இழப்பு நமக்குத் தான்.

வியாழன், 29 டிசம்பர், 2016

மறதி... வியாதி...

மறதி வியாதி பற்றி கிரேக்க புராணத்தில் ஒரு கதை உண்டு. ஈயொஸ் என்ற தேவதையிடம் காதல் கொள்கிறான் தைதோனிஸ். ஆனால் தைதோனிஸ் மரணத்தை தாண்டமுடியாத ஒரு சாதாரண மானுடன். 
பெரிய கடவுள் ஈறொஸிடம் தைதோனிஸுக்கு சாகா வரம் தரும்படி வேண்டுகிறாள் அவன் காதலி ஈயொஸ். அவனும் கொடுத்துவிடுகிறான். ஆனால் அதில் ஒரு சூழ்ச்சி இருந்தது. இளமையுடன் கூடிய சாகாவரம் அல்ல அது. தைதோனிஸ் வயோதிகம் கூடி, தளர்ச்சியும், மறதியும் கூடி தொணதொணக்க தொடங்குகிறான். 
ஈயொஸால் இதை பொறுக்கமுடியாமல், தைதோனிஸை வெட்டுக்கிளியாக மாற்றிவிட்டு தப்பிவிடுகிறாள். இன்றும் வெட்டுக்கிளி ஓயாமல் சத்தம் போடுவது இதனால்தான் என்கிறது அந்த கதை.

அன்று தொடங்கியது இன்று வரை மறதி தொடர்கிறது. வயதானவர்களுக்கு வருகிற மறதிநோய்களை அவர்களுடைய குழப்பமான நடவடிக்கையே காட்டிக் கொடுத்து விடும்.  ஆனால் இன்றைய கால கட்டத்தில் மறதி என்பது எல்லா வயதினருக்கும் சாதாரணமான ஒரு விஷயமாக இருக்கிறது. இளைஞர்களுக்கு ஏற்படும் மறதி நோய்க்கு அம்னீசியா என்று பெயர். இந்த அம்னீசியாவில் மூன்று வகைகள் இருப்பதாக சமீபத்திய  அமெரிக்க ஆய்வில் கண்டறிந் திருக்கிறார்கள். 

இளைஞர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவது  முதல் வகையில்தான்.  இந்த பாதிப்பு ஏற்பட்டால் இளைஞர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். சம்பவங்களை மனதில் பதிந்து வைத்துக் கொள்ள முடியாது, பழைய  நிகழ்வுகள் நினைவிருக்காது, பெயர்களில் குழப்பம் வருவது போன்றவை முதல் வகை அம்னீசியா. 
மனதில் இருப்பதை வெளியில் சொல்லத்  தடுமாறுவது, விபத்துகளால் ஏற்படும் மறதி நோய் போன்றவை இரண்டாவது வகை அம்னீசியா (Retrograde Amnesia). 
இயல்பாக ஒருவருடன் பார்த்து, பேசி, பழகுவார்கள். ஆனால், சில  நிமிடங்களிலேயே தான் பேசிக் கொண்டிருந்த நபரை அடையாளம் தெரியாமல் போவது மூன்றாம் வகை அம்னீசியா.
ஆரம்பத்திலேயே கண்டறிந்து விடடால், இந்த மறதி நோயை குணப்படுத்த பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

புதன், 28 டிசம்பர், 2016

பாதுகாப்பு !!!

ஓர் அரசன் தனது பார்சி அடிமையோடு ஒரு கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். அந்த அடிமை கடலில் இதுவரை பிரயாணம் செய்தது கிடையாது. அவன் புலம்ப ரம்பித்தும் சப்தமாக ஒலமிட்டும் பயத்தால் நடுங்கவும் செய்தான்.


அவர்கள் எவ்வளவுதான் அவனை அமைதி படுத்த முயன்ற போதும் அவன் அமைதியாகவில்லை. அரசனின் பிரயாணம் கெட்டு விடும் ஒரு சூழ்நிலை உருவாகி என்ன செய்வதென எவருக்கும் தெரியாமல் இருந்தது. அப்போது கப்பலில் ஒன்றாக இருந்த ஞானி ஒருவர், ‘நீங்கள் விரும்பினால் நான் அவனை அமைதிப்படுத்துகிறேன்’ என அரசரிடம் கூறினார். 

அதற்கு அரசர், ‘மெய்யாகவே இது ஒரு கருணை மிகு செயலாகும்’ என பதிலளித்தார்.ஞானி அந்த அடிமையை தூக்கி கடலில் வீசிடுமாறு அவர்களை பணித்தார். அந்த அடிமை திக்கு முக்காடி கடல் நீரை சிறிது குடித்த பின்பு அவனது தலை முடியைப் பற்றி கப்பலை நோக்கி இழுத்தனர். 



அவன் கப்பலை தன் இரு கைகளாலும் இருகப் பற்றி, கப்பலுக்குள் வந்தவுடன் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திடவும் செய்தான். அரசன் ஆச்சர்யமுற்று, ‘இதில் என்ன விவேகம் அடங்கியுள்ளது?’ என வினவினான். 

அதற்கு அந்த ஞானி: ‘இந்த அடிமைக்கு நீரில் மூழ்கிப் போவது என்றால் என்னவென்று தெரியவில்லை, ஆகவே கப்பல் தரும் பாதுகாப்பை அவன் உணரவில்லை. அவ்வாறே, ஆபத்தை அனுபவித்தவனே, பாதுகாப்பின் மதிப்பறிவான்.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

நன்றிக் கடன்!!!

ஜப்பானில் ஒரு வாய்மொழிக் கதை இருக்கிறது. அதில், ஒரு விவசாயி ஒரு நாள் பாம்பு உண்ண முயற்சித்த சிலந்தியைப் காப்பாற்றுகிறான். இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு அவனது வீடு தேடி ஒரு இளம்பெண் வந்து வேலை கேட்டாள். ‘‘உனக்கு என்ன வேலை தெரியும்?’’ என விவசாயி கேட்கும்போது, ‘‘நன்றாக நெசவு நெய்வேன்…’’ என்கிறாள் அந்தப் பெண்.


அவள் மீது பரிதாபம் கொண்டு அவளுக்கு வேலை தருகிறான் விவசாயி. அவள் ஒரு தறியை உருவாக்கிக் கொண்டு இரவு, பகலாக நெசவு செய்கிறாள். அந்தப் பெண் நெய்து வந்த துணியின் அழகைக் கண்டு வியந்துபோன விவசாயி அவளிடம், ‘‘எப்படி இதை நெய்தாய்?’’ எனக் கேட்டான்.
‘‘என்னிடம் எதையும் நீங்கள் கேட்கக் கூடாது. என் அனுமதில் இல்லாமல் என் அறைக்கும் வரக் கூடாது…’’ என்றாள். அவனும் அதை ஏற்றுக் கொண்டான். அவள் நெய்து தரும் விசித்திர ஆடைகளை விற்று நிறையப் பணம் சம்பாதித்தான் விவசாயி. அவனது வாழ்க்கை வளமானது.

ஒருநாள் ஆர்வ மிகுதியால் ‘அறைக்குள் அவள் என்னதான் செய்கிறாள்’ என ஒளிந்திருந்து பார்த்தான். அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. அவள் ஒரு சிலந்தியாக உருமாறி நெசவு செய்து கொண்டிருந்தாள். தன்னால் காப்பாற்றப்பட்ட சிலந்தி தனது நன்றிக் கடனைத் தீர்க்க பெண்ணாக உருமாறி வந்திருப்பதை அறிந்து கொள்கிறான். உண்மை தனக்குத் தெரியும் என அவன் காட்டிக் கொள்ளவே இல்லை.



ஒருநாள் அவளுக்காக பஞ்சு வாங்கிக் கொண்டு வருவதற்காக, விவசாயி சந்தைக்கு சென்றான். பஞ்சுப் பொதி வாங்கிக்கொண்டு வரும்போது அசதியில் ஓரிடத்தில் உறங்கிவிட்டான். அந்தப் பஞ்சுப் பொதியில் பாம்பு ஒன்று புகுந்து கொண்டது. அதை அறியாமல் வீட்டுக்குப் போய் இளம்பெண்ணிடம் பஞ்சுப் பொதியை ஒப்படைத்தான் விவசாயி. அவளும் உற்சாகத்துடன் சிலந்தியாக உருமாறி பஞ்சை தனது வாயில் அடைத்துக் கொண்டு, அதில் இருந்து நூலை உருவாக்க முயற்சித்தாள்.

அப்போது பாம்பு பாய்ந்து அவளை கொல்ல முயன்றது. பயத்தில் சிலந்திப் பெண் தப்பி ஓடினாள். அவளது கஷ்டத்தைக் கண்ட சூரியன், அவளைக் காப்பாற்றி வானுலகுக்குக் கொண்டுச் சென்றது.
சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவள் தன் வாயில் வைத்திருந்த பஞ்சைக் கொண்டு அழகான மேகங்களை உருவாக்கினாள். அப்படிதான் வானில் மேகங்கள் உருவாகின என்கிறது ஜப்பானியக் கதை.



எதிர்பார்ப்பு இல்லாமல் ஒருவருக்கு செய்யும் உதவி என்றும் நன்மையே தரும். அதே சமயம் பிறர் செய்த உதவியை மறக்காமல் அவர்களுக்கு நன்றி செலுத்த முற்பட வேண்டும்.   

திங்கள், 26 டிசம்பர், 2016

பழி வாங்கும் எண்ணம்!!!

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார். ”உங்களுக்கு மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா? நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா?” என மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியார்.

வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘ஆமாம்… அய்யா’ என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து, ”மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்.

மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார். வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த தக்காளி பையை எப்போதும் உங்கள் கூடவே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்கவேண்டும் என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள்.

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்… ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.

மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ”நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்” என்றார்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.

அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கொண்டு வகுப்பறைக்கு திரும்பினர்.

நாம் ஒவொருவரும் இப்படி தான் பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறோம் தக்காளி பை நாற்றத்தோடு.

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

பதற்றம்...

புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றிக் கொண்டுவந்தார். அன்று அவருக்கு மிகவும் அலுப்பாக இருந்தது. ஆனால், அன்றைய தினமும் சொற்பொழிவாற்றச் செல்ல வேண்டும். என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.


“சார், கிளம்பலாமா?” என்று கேட்டுக்கொண்டே கார் டிரைவர் அங்கே வந்தார். அப்போது ஐன்ஸ்டீனுக்கு ஒரு யோசனை தோன்றியது.“இன்னிக்குப் போற இடத்தில என்னை இதுவரை யாரும் பார்த்ததில்லை. அதனால நீதான் இன்னைக்கு ஐன்ஸ்டீன். நான் கார் டிரைவர்” என்று சொன்னார். டிரைவருக்கு ஒன்றுமே புரியவில்லை. 

“சார், நான் எப்படி நீங்களாக முடியும்? உங்கள் அறிவு எங்கே? என் அறிவு எங்கே?” என்றார். “ஒன்றும் பிரச்சினை இல்ல. நானும் அங்கேதான் இருப்பேன். சமாளித்துக்கொள்ளலாம்” என்றார் ஐன்ஸ்டீன். அரங்கத்துக்குள் இருவரும் நுழைந்தார்கள். டிரைவர் மேடையில் அமர்ந்தார்.

ஐன்ஸ்டீன் கூட்டத்துக்குள் அமர்ந்திருந்தார். ஐன்ஸ்டீன் கோட்பாடுகளைப் பற்றிப் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் ஐன்ஸ்டைனாக அமர்ந்திருந்த டிரைவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உடனே டிரைவர் எழுந்து, “இந்தச் சாதாரணக் கேள்விக்கு என் டிரைவர் பதில் அளிப்பார்” என்று கூறிவிட்டு அமர்ந்தார். கூட்டத்தில் டிரைவராக அமர்ந்திருந்த ஐன்ஸ்டீன், விளக்கம் அளித்தார். பிறகு உண்மையைச் சொன்னார்.

“எனக்குக் கிடைத்தது போல ஒரு வாய்ப்பு என் டிரைவருக்குக் கிடைத்திருந்தால் அவரும் ஒரு விஞ்ஞானி ஆகியிருப்பார். கொஞ்சம் கூடப் பதற்றம் இல்லாமல், எவ்வளவு அழகாக என் டிரைவர் பதிலளித்துள்ளார். அவர் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார்!” என்று பாராட்டினார்.

எந்த ஒரு சூழ்நிலையையும் பொறுமையாக சமாளிக்கும் திறன் வேண்டுமானால், அதற்கு பதற்றம் இல்லாத மனநிலை வேண்டும்.

சனி, 24 டிசம்பர், 2016

மனித மனம்!!!

ஒரு பிச்சைக்காரன் ரயில் நிலையத்தின் முன்பாக நின்று கொண்டிருந்தான். அவனை வழக்கமாக அங்கே பார்க்கிற ஒருவர் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவ நினைத்தார். 

இவன் வாழ்க்கையில் அதிகபட்சம் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான் பிச்சையாகப் பெற்றிருப்பான். நாம் 100 ரூபாய் கொடுப்போம். இவன் ஏதாவது தொழில் செய்து பிச்சை எடுப்பதில் இருந்து விடுபட உதவியாய் இருக்கும் என்று நினைத்து அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தார்.


பிறகு அவனிடம், "ஒரு சின்ன சந்தேகம். இந்த 100 ரூபாயை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?'' எனக் கேட்டார். கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன், "என் பிச்சை பாத்திரம் பழசாய்ப் போச்சு. புதிய பிச்சைப் பாத்திரம் வாங்குவேன்'' என்று சொன்னான். 

இதுதான் அவனுடைய பதில். 100 ரூபாய் பிச்சை கொடுத்தவர், இவனுக்கு லட்சரூபாய் கொடுத்தாலும் இந்த பிச்சைத் தொழிலை மாற்றிக் கொள்ளப்போவது இல்லை. இவனுக்கு தொழில் பக்தி அதிகம் என்று நினைத்துக் கொண்டு போனாராம்.

மனிதர்களின் மனோபாவத்தில் மாற்றம் இல்லை என்றால் எந்த மாறுதலும் ஏற்படப் போவதில்லை.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

வாய்ப்பு!!!

வயதான சிற்பி ஒருவன், ஒருநாள் தன் இரு மகன்களை அழைத்துப் பேசினார். “எனக்கு வயதாகிவிட்டது. கண் பார்வை மங்கிவிட்டது. நான் உங்களுக்கு சொத்து ஏதும் சேர்த்து வைக்கவில்லை. என்னிடம் உள்ள கருவிகளை உங்களுக்குத் தருகிறேன். அதை வைத்து உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ளுங்கள்” என்றார். இருவருக்கும் சரி சமமாக கருவிகளை பங்கிட்டுக் கொடுத்தார். 

சிற்பம் வடிக்கும் பல்வேறு கருவிகள் அதில் இருந்தன. பெரிய மகன் ஊதாரி, சோம்பேறி. “இந்த உளிகளையும், சுத்திகளையும் வைத்து என்ன செய்வது. பெரிய நிறுவனம் எதிலாவது சேர்ந்து நன்றாக சம்பாதிப்போம்” என்று எண்ணி, தந்தை தந்த கருவிகளை வீட்டிலேயே வைத்துவிட்டு வேலை தேடி புறப்பட்டான். 

எங்கெங்கோ வேலை தேடி அலைந்தான். கிடைத்த வேலையைச் செய்வான், எங்காவது உண்பான், எங்கேயாவது உறங்குவான், எங்கும் நிலைத்திருக்காமல் சுற்றிச் சுற்றி அலைந்தான். இளையவன் தந்தை தந்த கருவிகளை பயன்படுத்தி சின்னச்சின்ன பொம்மை சிற்பங்களை செய்து விற்பனை செய்தான். அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். 


போதிய வருமானம் கிடைக்காவிட்டாலும், பட்டினியில்லாமல் குடும்பத்தினர் வாழ்ந்தனர். ஒருமுறை சிற்ப போட்டி ஒன்று நடந்தது. அவன் தான் செய்த சிற்பத்தை போட்டிக்கு அனுப்பி வைத்தான். அந்த அழகு சிற்பம் முதல் பரிசுக்கு தேர்வாகி,  பொன்முடிப்பை பரிசாகப் பெற்றுத் தந்தது. 

அத்துடன் குறு நில மன்னரால் பாராட்டப்பட்டு அரசாங்கத்தில் சிற்ப பணி செய்யும் வேலையும் கிடைத்தது. அதன் பிறகு அவன் வாழ்வே வசந்தமானது. அதிர்ஷ்ட தேவதை அவர்கள் வாழ்வில் களி நடனம் புரிந்தாள்.

ஆனால் அவன் அண்ணன் பல ஊர்களில் சுற்றி அலைந்துவிட்டு வேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு திரும்பினான். வறுமையால் தவித்த அவன் உடல் மெலிந்து காணப்பட்டான். தம்பி அண்ணணை அரவனைத்து தன்னோடு வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். 

தந்தை இதனை பார்த்து பெருமிதப் பட்டார். பின்னர் மூத்த மகனை அழைத்தார்.“மகனே! நீ வாய்ப்பும், வசதியும்தேடி அலைந்தாயே. தம்பி இருப்பதை வைத்து உழைத்து முன்னேறி விட்டான், பார்த்தாயா? தெரிந்த தொழிலை அபிவிருத்தி செய்யாமல் வீணாக அலைந்து என்ன பலன்?” என்றார். 
“ஆம்! தந்தையே உழைப்பே உயர்வு தரும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்” என்றான் மூத்தமகன். அன்று முதல் நன்கு தெரிந்த சிற்பத் தொழிலையே தானும் அக்கறையுடன் செய்யத் தொடங்கினான்.

 நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

வியாழன், 22 டிசம்பர், 2016

உருவம்!!!

சீனாவில் உண்மையில் நடந்ததாக சொல்லப்படும் கிராமிய கதைகளில் ஒன்று இது. ஷாங் என்பவன் விறகுகள் வெட்டி விற்று வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தனது கோடரி காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டு பையன் லீ மீது சந்தேகம் வந்தது.

ஷாங் அடிக்கடி அவனை கவனித்திருக்கிறான். லீ ஜன்னலின் வழியாக தன் வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பான். அவன் நெற்றியில் பயங்கரமான தழும்பு ஒன்று இருப்பது தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியும். நெற்றித் தழும்பும், குறுகுறு பார்வையும் அவனை திருடன் போல காட்டும். எனவே ஷாங், லீயை திருடன் என்றே எண்ணி வந்தான். 


தன் கோடரி காணாமல் போனதால் அவனது சந்தேகம் மேலும் வலுத்தது. தன் சகோதரன் டாங்கிடம், ஷாங் இது பற்றி பேசினான். அப்போது 'பக்கத்து வீட்டு லீதான் திருடன்' என்றே கூறிவிட்டான். 'லீ நடந்து செல்வதும் திருடனை நினைவுபடுத்தும், பதுங்கிப் பதுங்கி வருவதுபோல தயக்கமாக வருவான். சற்று நேரத்தில் இந்த வழியாக வரும்போது நீயே கவனி...' என்று சகோதரனிடம் விளக்கிக் கொண்டு இருந்தான்.

அப்போது ஷாங்கின் மனைவி நாணற் புற்களை வெட்டிக் கொண்டு கோடரியுடன் வந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும், 'நான் வைக்கோல் போரில் விழப் பார்த்தேன்' என்றாள். மனைவியின் தோளில் இருந்த கோடரியைப் பார்த்ததும் ஷாங்கின் முகம் மலர்ந்தது. சோகம் மறைந்தது.


'எங்கே போயிருந்தே?' என்று அவன், தன் மனைவியிடம் கேட்டான். அவள் பதில் ஏதும் கூறாமல் ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தாள். 'நான் கேட்டதற்கு பதில்சொல், அங்கே என்ன பார்க்கிறாய்?' என்றான். 'நான் பக்கத்து வீட்டு பையனை பார்க்கிறேன்' என்றாள். அவனும் திரும்பிப் பார்த்தான்.

அங்கே லீ ஒரு கோடரியுடன் சென்று கொண்டிருந்தான். அவன் கையில் சிறு பண முடிப்பும் இருந்தது. 'அவன் சாதுவான பையன் இல்லையா?' என்றாள் அவனது மனைவி. சற்று நேரத்திற்கு முன், அவனை இதேபோல் கோடரியுடன் பார்த்திருந்தால் நிச்சயம் அவன்தான் திருடன் என்ற முடிவுக்கு வந்திருப்பான் ஷாங். ஆனால் இப்போது மனைவியின் கையில் தன் கோடரி இருந்ததால், பக்கத்து வீட்டு பையனைப் பற்றிய எண்ணம் மாறிப்போனது. 'நிஜம்தான், அவன் ரொம்ப நல்ல பையன்' என்றான் ஷாங். 

பார்வை, நடை, பேச்சு ஆகியவற்றை வைத்து மட்டும் ஒருவரை எளிதாக எடை போட்டுவிட முடியாது.

புதன், 21 டிசம்பர், 2016

யார் இவர்கள்???

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். 

ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார். 

“நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்” என்றார் வந்தவர். “இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங். அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.


“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு. “ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங். “அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம். என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாம் இருவரும் பெருமை அடையக் கூடிய அளவுக்கு வருவான்” என்றார். சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.


விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான். லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார். 


வருடங்கள் பல கழிந்த பின், ஒருநாள் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது அவர் கண்டுபிடித்த பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது. அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது மகன் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் இராணுவ அதிகாரியாக இருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சில்!


தினை விதைத்தவன் தினை அறுப்பான். நல்லது செய்பவனுக்குஎல்லாமே நல்லதுதான் நடக்கும். வாழ்க்கையில் பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்யுங்கள்; யாரும் உங்களை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்யுங்கள்.

திங்கள், 19 டிசம்பர், 2016

கடவுளும்... கனவும்...

ஒருநாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.“உள்ளே வா” என அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” எனக் கேட்டார்.

“ஆமாம். உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” என்றான் அவன். கடவுள் சிரித்தார்.“என் நேரம் முடிவற்றது. எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?” எனக் கேட்டார்.


“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?” எனக் கேட்டான் அவன்.

கடவுள், “மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான். ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்டகாலம் இருக்கிறான். பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான். பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான். எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான். நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது! சாகாமல் இருக்க வாழ்கிறான். ஆனால் வாழாமலே சாகிறான்” என்றார்.

கடவுளின் கைகள் லேசாக அசைந்தன. சிலநொடிகள் மவுனம் நிலவியது. “ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”-மீண்டும் கேட்டான். கடவுளிடமிருந்து ஒரு புன்னகை. 

பின்னர், “யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே. நேசிக்கப்படும் அளவு நடந்து கொள். வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதித்தது மதிப்புள்ளதல்ல. அதை எப்படிச் சம்பாதித்தான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு. ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது. எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே. உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்! 

பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது. இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள். ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும், எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே! 

அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும். நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம். நீ செய்தததையும் மறந்து போகலாம். ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!” என்றபடி பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். 


கதவுகள் மூடின. தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன் விழித்தெழுந்தான் அவன்!

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

இப்படியும் சிலர்!!!

ஒரு வயதான முதியவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். வெயிலில் வந்த களைப்பு, அவர் முகத்தில் தெரிந்தது. அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை அழைத்து, "தம்பி! இங்கு சாப்பாடு என்ன விலை?" என்று கேட்டார். 

அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான். பெரியவர் தனது சட்டை பைக்குள் கை விட்டு பார்த்து விட்டு சர்வரிடம், "தம்பி அதற்கும் சற்று குறைவாக சாப்பாடு கிடைக்காதா?" என்றார்.


சர்வர் கோபமாக, "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க? இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ இருக்கு அங்க போய் தொலைங்கயா" என்றான். பெரியவர், "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன். வெளியே வெயில் வேறு அதிகமா இருக்கு. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்" என்றார்.

சர்வர், "சரி எவ்வோ பணம் குறைவா வச்சுயிருக்கீங்க?" என்று கேட்டான். பெரியவர், "என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது" என்றார். சர்வர், "சரி தருகிறேன். ஆனால் உனக்கு தயிர் இல்லை. சரியா?" என்றான்.

பெரியவர் 'சரி' என சம்மதித்தார். அவனும் சாப்பாடு கொடுத்தான். பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த சர்வரிடம் 50 ரூபாய் தாளைக் கொடுத்தார். சர்வர் மேலும் கோபம் ஆனான். "யோவ் 50 ரூபாய் வச்சுகிட்டு 45 ரூபாய் தான் இருக்கு'னு ஏன் சொன்ன? ஓ.. வெற்றிலை, பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா? இந்தா மீதி 5 ரூபாய்" என்று மீதியை கொடுத்தான்.


பெரியவர், "வேண்டாம் தம்பி. அது உனக்குத் தான்! உனக்கு கொடுக்க என்னிடம் வேறு பணம் இல்லை" என்று சொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார். சர்வருக்கு கண்களில் நீர் ததும்பியது.

யாரேனும் எந்த சூழ்நிலைகளில் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது! யாரையும் ஏளனமாக பார்ப்பதும் பேசுவதும் தவறு.

சனி, 17 டிசம்பர், 2016

முதன்மை குணம்!!!

முன்னோரு காலத்தில் குருவின் பாட சாலையில் வகுப்புகள் முடியும் தருவாயில், அவரது மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்தார்கள். வகுப்பு முடிந்தவுடன், ஒரு மாணவனின் தாய் தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு மாம்பழத்தை அன்போடு குருவிடம் கொடுத்து உண்ணச் சொன்னார். குருவும் சீடர்களை அழைத்து அந்த மாம்பழத்தை கத்தியால் வெட்டி கொடுக்கச் சொன்னார். 

செக்கச் செவலென்று இருந்த பழத்தை பார்த்து சீடர்களுக்கு எச்சில் ஊறியது. ஒரு பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் குரு அந்த தாயிடம், "பழம் நன்றாக உள்ளது. நன்றி" என்று சந்தோசமாகத் தெரிவித்தார். ஆனால், அந்தத் தாய் தன் தோட்டத்து மாம்பழத்தை விரும்பி சாப்பிட்ட குருவைப் பார்த்து, "இன்னொரு பழமும் தாங்களே சாப்பிடுங்கள்" என்று கூறினார்.


குருவும் சம்மதித்து இரண்டாவது பழத்தையும் சாப்பிட்டார். அந்தத் தாய் மிக்க மகிழ்ச்சியோடு வீட்டுக்கு சென்றார். சீடர்கள் குருவைப் பார்த்து, "குருவே, ஒரு பழத்தை சாப்பிட்டு முடிந்தவுடன், இன்னொரு பழத்தை பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று அந்தத் தாயிடம் சொல்லிருக்கலாமே? இரண்டு மாம்பழத்தையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே?" என்று கேட்டனர். 

அதற்கு குரு, "சீடர்களே, அந்தத் தட்டில் மீதம் உள்ள சிறிய துண்டுகளைச் சாப்பிடுங்கள்" என்று கூறினார். அதை சாப்பிட்ட சீடர்கள் புளிப்பு தாங்க முடியாமல் துப்பினார்கள். குரு சிரித்துக் கொண்டே, "சீடர்களே, இதைத் தான் நீங்கள் அந்தத் தாயின் முன்பு செய்திருப்பீர்கள். தாயின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். நான் முதல் துண்டு சாப்பிடும் போதே எனக்குத் தெரியும். அதனால் தான் உங்களுக்கு நான் தரவில்லை" என்று கூறினார்.


அந்தத் தாய் சந்தோசப்பட, குரு முகத்தைக் கூடச் சுழிக்காமல் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு, நன்றாக உள்ளது என்று பாராட்டினாரே, அந்தபாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதன்மையாக இருக்க வேண்டிய குணம்.

வெள்ளி, 16 டிசம்பர், 2016

திட்டமிடுதல்!!!

ஒரு சாம்ராஜ்யம் இருந்தது. அங்கு பட்டத்து யானை மூலம் அரசனை தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்பட்டது. அப்படி யானையினால் மாலை சூட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுபவர் எல்லாவித ராஜ போகங்களுடன் ஆட்சி புரியலாம். ஆனால் அவரது பதவி காலம் ஐந்து ஆண்டுகள் மட்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரை நாட்டை விட்டு வெளியேற்றி கடலுக்கு அப்பால் உள்ள தீவுப் பிரதேசத்துக்கு நாடு கடத்தி விடப்படுவார். அரசராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தனது ஆட்சி காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதையே லட்சியமாகக் கொண்டுஆட்சி புரிந்தனர். 


ஐந்தாண்டு கால நிறைவில் தீவில் விடப்பட்டு வறுமையில் வாடுவார்கள். மக்கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை ஐந்தாண்டு முடிவில் பதவி இழந்தவருக்கு மாற்றாக வேறு ஒருவரை யானை தேர்ந்து எடுத்தது. அவர் ஆட்சியில் மக்கள் ஒன்றும் அவ்வளவு நன்றாக இல்லை. அநியாயமாக வரி போட்டு மக்களை வாட்டி வதைத்து விட்டார். எப்போது ஐந்து ஆண்டுகள் முடியும், இவர் ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கப்பட்டு தீவுப் பிரதேசத்துக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 

அவர்கள் எதிர்பார்த்த ஐந்தாண்டு காலம் முடிவுக்கு வந்தது. அந்த கொடுங்கோல் அரசனை ஆட்சியில் இருந்து நீக்கி படகில் ஏற்றிக் கொண்டு தீவுப் பிரதேசத்துக்கு கொண்டு போனார்கள். இப்படி கொண்டு போகும் போதெல்லாம் பதவி இழந்த அரசர்கள் வருந்திப் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த நபர் எந்த வருத்தமும் இல்லாமல் படகில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அவரை படகில் ஏற்றிக் கொண்டு போனவர்களுக்கு வியப்பாக இருந்தது. 

அவரைப் பார்த்து, "பதவி இழந்து தீவில் வறுமையில் வாழப் போகிறீர்கள். அதைப் பற்றி கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கறீர்களே எப்படி?" என ஒருவர் கேட்டார். அதைக் கேட்ட அந்த முன்னாள் அரசன், ”என்னுடன் அந்த தீவுக்கு வந்து பாருங்கள்” என்று சொன்னான். படகு தீவின் கரையை அடைந்தது. 

உடன் வந்தவர்கள் அந்த தீவைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். வறண்டு போய் இருந்த தீவு அங்கு இல்லை. மிகப்பெரிய அரண்மனை, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், தோட்டங்கள், பூங்காக்கள் என்று அந்த தீவே செல்வச் செழிப்புடன் சொர்கலோகம் போலக் காட்சி அளித்தது. உடன் வந்தவர்கள் திகைத்துப் போனார்கள்.

அப்போதுதான் தெரிந்தது, அந்த முன்னாள் அரசர் தம் ஐந்தாண்டு கால ஆட்சியில் தன் வருங்கால சந்ததியினர் பலரும் பயன்பெறும் வகையில் அந்த தீவில் சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொண்டார் என்பது. 


அரசனை யானை மாலைப் போட்டுத் தேர்ந்தெடுத்ததால்,  அதிருஷ்டம் உள்ளவர்கள் எவர்வேண்டுமானாலும் ஆட்சிக்கு வர முடிந்தது. அவர்கள் இஷ்டம் போல எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சி செய்ய முடிந்தது. ஆனால் அவர்களுடைய வருங்காலத்தைப் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை.

சரியான திட்டம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. நமது இலக்கை முதலில் நிர்ணயம் செய்துகொண்டு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தினால் நம் எண்ணம் இறுதியில் நல்ல பயனை தரும்.

வியாழன், 15 டிசம்பர், 2016

கற்பனை மனிதர்கள்!!!

முன்னொரு காலத்தில் குய்ஷு (Guizhoo) என்ற ஊரில் கழுதைகள் கிடையாது. ஒரு கழுதையைப் பிடித்து அரசாங்க அலுவலர் ஒருவர் அந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் அந்தக் கழுதையை எதற்கு பயன்படுத்துவது என்று தெரியாமல் அப்படியே மலை, காடு பகுதிகளில் ஊர்க்காரர்கள் விட்டு விட்டார்கள். கழுதை மலையும் காடும் சேர்ந்த பகுதிகளில் தன்னிச்சையாகத் திரிந்தது. அடிக்கடி வாலைத் தூக்கிக்கொண்டு தன் கனகம்பீரக் குரலை ஒலிக்கச் செய்யும். 


இதன் குரலின் உரத்த ஒலியால் இதைப் பற்றி அறியாத அங்குள்ள மிருகங்கள் திடுக்கிட்டு ஓடும். அங்கே ஒரு புலி இருந்தது. காட்டிலிருந்து வந்த அந்தப் புலி அதுவரை கழுதையைப் பார்த்ததில்லை. கழுதையின் உருவத்தைப் பார்த்து இது சக்தி வாய்ந்த மிருகமாக இருக்குமென்று நினைத்தது.

கழுதையைப் பார்த்த புலி, கழுதையைப் பார்க்காதவாறு தன்னை மறைத்துக் கொண்டது. கழுதையை எங்கேனும் தூரத்தில் கண்டால், தொலைவாக இருந்து கொண்டது. இந்தப் பெரிய மிருகம் ஒருவேளை தன்னைக் கொல்லவும் கூடும் என்ற அச்சமும் அதற்கு இருந்தது.

நாளாக, நாளாக, கழுதைக்கும் புலிக்கும் உள்ள இடைவெளி குறையலாயிற்று. கழுதையைக் கொஞ்சம் கொஞ்சமாக அளந்துப் பார்க்கத் தொடங்கியது புலி. கழுதையின் உரத்த குரலொலியும் அதன் நீண்ட நேர ஆலாபனையும் திடுக்குறச் செய்த போதிலும் கழுதையை உன்னிப்பாக புலி கவனித்து வந்தது. பிற காட்டு மிருகங்கள் கூட கழுதையைக் கண்டு அஞ்சி, அதன் காட்டுக் கத்தலைக் கேட்டு அலறியடித்துக் கொண்டு ஓடின.

ஒருநாள் புலி, கழுதையின் எதிரே இருந்தது. கழுதையின் மேல் சின்னதாக ஒரு அடி அடித்தது. அவ்வளவுதான் கழுதைக்குக் கோபம் வந்தது. தன் இரண்டு பின்னங்கால்களைத் தூக்கி ஒரு உதை கொடுத்தது. புலிக்கு அடி ஒன்றும் பலமாகவுமில்லை. அது தாக்குதலாகவும் தெரியவில்லை. உடனே புலி ஒரேயடியாகப் பாய்ந்தது. கழுதையின் கழுத்தைக் கவ்வி,  பூமியில் கவிழ்த்தது. ஒரு பெரிய உறுமலுடன் அதைப் புரட்டிப் போட்டுக் கிழித்தது. திருப்தியாக கழுதை மாமிசம் உண்டது.

ஒருவருடைய உண்மை நிலையைத் தெரியாமலே நாம் ஒருவர் மீது மதிப்பும் பயமும் கொள்கிறோம். தெரிந்துவிட்டால்?

புதன், 14 டிசம்பர், 2016

அழகு!!!

ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான்சிறுவன் உணர்ந்தான்.

யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது."அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே... அம்மா.. அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்!" என கதறி அழுதான். 


அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார். "நீ யாரு? எதுக்காக இங்க தனியா நிக்கற?" எனக் கேட்டார். அவன், "நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து, அம்மாவ தொலைச்சிட்டேன். அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க. எனக்கு திரும்பிப் போக வழி தெரியல" என்று சிறுவன் கூறினான். 

அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்படி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார். அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க... இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.

சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே, "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான். வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார். 

ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான். அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான்.

கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன், அந்த ஊரே அதிரும் படி சிரித்தான்."இதுவா உங்கம்மா? இவங்களையா அழகுன்னு சொன்ன?" என்று சிறுவனைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா... அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குவாங்க. இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான்.

உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்!

செவ்வாய், 13 டிசம்பர், 2016

அறிவு!!!

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒருநாள் மந்திரி சபையை கூட்டி விவாதம் செய்து கொண்டிருந்தபோது எதிரி நாட்டைச் சேர்ந்த தூதுவன் ஒருவன் ராஜாவை பார்க்க வந்தான். வந்த தூதுவன் எதுவுமே பேசாம ராஜாவோட சிம்மாசனத்தை சுற்றி ஒரு வட்டம் போட்டான். 

தூதுவனின் இந்த செய்கைக்கு ராஜா உட்பட யாராலும் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே ராஜா, "இந்த வட்டத்திற்கு சரியான விளக்கம் அளிப்பவர்களுக்கு பரிசு அளிக்கப்படும்" என அறிவித்தார். ஆனால் யாரும் வந்து எதுவும் சொல்லவில்லை. இதனால் அரண்மனை காவலர்கள் குதிரையில் ஏறி புத்திசாலியை கண்டுபிடிக்க கிளம்பினார்கள்.

ஊர் எல்லைக்கு வந்து விட்டார்கள். அங்கே ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு சின்ன குடில் இருந்தது. அமைதியான அந்த குடிலில் ஒரு தொட்டில் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு குழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. முற்றத்தில் நெல் மணிகள் காய வைக்கப்பட்டிருந்தன. அதை பறவைகள் கொத்தி தின்று விடாதவாறு பெரிய விசிறி ஒன்று ஆடிக்கொண்டிருந்தது.

இதைப் பார்த்த வீரர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆச்சரித்துடன் வீட்டிற்குள் நுழைந்தனர். மற்றொரு அறையில் ஒரு நெசவாளி நெசவு செய்து கொண்டிருந்தார். அவரிடம் குழந்தையின் தொட்டில் தானாக ஆடுவது குறித்தும், முற்றத்தில் தானாக விசிறி வீசுவது பற்றியும் கேட்டனர் வீரர்கள். 

அவர்களுக்கு பதிலளித்த தொழிலாளியோ, “இது ஒன்றும் பெரிய விசயமில்லை. என்னுடைய நெசவு செய்யும் தறியில் இரண்டு கயிறுகளை கட்டியிருக்கிறேன். ஒன்றை குழந்தையின் தொட்டிலிலும், மற்றொன்றை விசிறியிலும் இணைத்துள்ளேன். நான் துணி நெய்யும் போது அந்த கயிறு இழுக்கப்படுவதால் இரண்டுமே தானாக ஆடுகின்றன" என்றார் அந்த நெசவாளி. 


இதைக் கண்ட வீரர்கள், "ஆஹா! நமது மன்னரின் குழப்பத்தை தீர்க்கும் புத்திசாலி இவன்தான்" என்று உடனே நடந்த விசயத்தை நெசவாளியிடம் கூறி, மன்னரைப் பார்க்க வருமாறு அழைத்தார்கள். நெசவாளியும் உடனே ஒப்புக்கொண்டு வீரர்களுடன் கிளம்பினார். போகும் போது குழந்தைகள் விளையாடும் இரண்டு பொம்மைகளை எடுத்துக்கொண்டான். கூடவே அவன் வீட்டில் வளர்க்கு கோழி ஒன்றையும் எடுத்துக்கொண்டு சென்றான். 

அரண்மனை தர்பாருக்கு சென்ற நெசவாளி சிம்மாசனத்தை சுற்றி போடப்பட்டிருந்த வட்டத்தை கவனித்தான். அதில் பொம்மைகளை தூக்கிப் போட்டான். இதைப்பார்த்த தூதுவன் உடனே தன் கையில் இருந்த நெல்மணிகளை தூக்கிப் போட்டான். நெசவாளியும் தன் கையில் இருந்த கோழியை விட்டு நெல் மணிகள் முழுவதையும் சாப்பிட வைத்தான். தூதுவன் உடனே பயந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான். அரண்மனையில் இருந்தவர்கள் யாருக்கும் எதுவுமே புரியவில்லை.

 நெசவாளியின் செயலுக்கு விளக்கம் கேட்டார் மன்னர்.“அது ஒன்றுமில்லை மன்னா, உங்கள் நாட்டைச் சுற்றிலும் நால்புறமும் படைகளைக் கொண்டு தாக்கப்போகிறோம் என்று வட்டம் போட்டான் தூதுவன். நானோ குழந்தைகள் விளையாடும் பொம்மைகளைப் போல எங்கள் வீரர்கள் உங்கள் படை வீரர்களை சூறையாடி விடுவார்கள் என்றேன். அதற்கு அவனோ, நெல்மணிகளைப் போல கணக்கில் அடங்காத வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்றான். நானோ ஒரு கோழியை விட்டு அதை சாப்பிட வைத்ததன் மூலம் எங்கள் நாட்டில் உள்ள ஒரு வீரனே போதும் உங்கள் நாட்டு வீரர்களை வெற்றி கொள்ள, அந்த அளவிற்கு வீரமும் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள் என்றேன். உடனே தூதுவன் ஓடிவிட்டான்" என்றான் நெசவாளி. இதை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 

பெரிய பதவியில் இருப்பவர்கள்தான் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பதில்லை. நெசவு செய்யும் தொழிலாளி கூட புத்திசாலியாக இருக்க முடியும் என்பதை மன்னரும் அரண்மனையில் இருப்பவர்களும் உணர்ந்து கொண்டனர். 

படித்தவர்கள் அனைவரும் புத்திசாலி இல்லை; புத்திசாலிகள் அனைவரும் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

திங்கள், 12 டிசம்பர், 2016

சின்ன சின்ன சந்தோஷங்கள்!!!

பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடைவைத்திருந்தான். தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. 

கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே ஒரு நாற்காலியும் வைத்திருப்பான். தாகம் எடுக்கும் போதெல்லாம் எழுந்து முன்னால் வந்து அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த தேநீர் பாத்திரத்தில் இருந்து குளிர்ச்சியான நீரைக் குடித்து கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவான். அவன் மிக அமைதியாக உணரும் தருணங்கள் அவை.

                      

 அவன் வாழ்க்கை இப்படி அமைதியாக சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் அவன் அப்படி அந்த தேனீர் பாத்திரத்தில் இருந்து தண்ணீரைக் குடித்துக்கொண்டிருக்கையில் ஒரு வழிப்போக்கன் அவனையே உற்றுப் பார்த்தான். கொல்லன் அவனிடம், “ஐயா என்ன பார்க்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” எனக் கேட்டான். 

அதற்கு, ”உங்களின் தேனீர் பாத்திரத்தைப் பார்த்தேன். மிக வித்தியாசமாக இருக்கிறது” என்றான். கொல்லன், “இந்த தேனீர் பாத்திரம் மிகப் பழையது. என் தந்தை இருக்கும் வரை இதில் தான் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து குடிப்பார். அவருக்குப் பின் நான் இதை உபயோகித்து வருகிறேன். களைப்பும் தாகமும் ஏற்பட்டால் நான் இதிலிருக்கும் தண்ணீரைக் குடித்து சற்று இளைப்பாறுவேன்” என்றான். 

“அதை நான் சற்று ஆராய்ந்து பார்க்கலாமா?” என்று கேட்டான் அந்த வழிப்போக்கன். 'இந்த பழைய பாத்திரத்தில் ஆராய என்ன இருக்கிறது?' என்று நினைத்தவனாக கொல்லன் அந்த தேனீர் பாத்திரத்தை அந்த வழிப்போக்கனிடம் தந்தான். வழிப்போக்கன் அந்த தேனீர் பாத்திரத்தை கையில் பிடித்து அதனை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தான். 

வழிப்போக்கன், “ஐயா, இந்த தேனீர் பாத்திரம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு புராதனப் பொருள். இதற்கு முந்தைய மன்னர் பரம்பரையினர் காலத்தில் இது போன்ற ஒரே மாதிரியான மூன்று தேனீர் பாத்திரங்கள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டன. இரண்டு தேனீர் பாத்திரங்கள் இன்றும் நம் அரசவையில் இருக்கிறது.மூன்றாவது தொலைந்து போய் விட்டதாகக் கருதப்பட்டு வந்தது. இதைப் பார்த்த பின்பு தான் இது இன்னமும் இருப்பது புரிந்தது. இதை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பார்த்தால் இதன் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருப்பதை நீங்கள் பார்க்கலாம்” என்றான்.

 உடனடியாக கொல்லன் அந்த சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தான். பின் பார்த்த போது வழிப்போக்கன் சொன்னது போல அந்த சட்டியின் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருந்தது. இது வரை யாரும் அப்படிப் பட்ட முத்திரை உள்ள பாண்டங்களைப் பார்த்ததில்லை. வழிப்போக்கன், “ஐயா இந்த அபூர்வ சட்டியை நீங்கள் விற்க விரும்பினால் நானே வாங்கிக் கொள்கிறேன். நூறு பொற்காசுகள் வரை தர நான் தயாராக இருக்கிறேன்” என்றான். 

கொல்லனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அக்காலத்தில் நூறு பொற்காசுகள் என்பது மிகப் பெரிய செல்வம். கொல்லன் தன் வாழ்நாழ் எல்லாம் கடுமையாக உழைத்தாலும் அந்த அளவு செல்வத்தை சம்பாதிக்க முடியாது. கொல்லன் சம்மதித்தான். வழிப்போக்கன் இன்னும் சில நாட்களில் பொற்காசுகளுடன் வந்து அந்த தேனீர் பாத்திரத்தை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டு சென்றான். கூடியிருந்தவர்களுக்கும் நடந்ததெல்லாம் மிக ஆச்சரியமாக இருந்தது. 

ஒவ்வொருவரும் அந்த தேனீர் பாத்திரத்தை கையில் எடுத்துப் பார்க்க விரும்பினார்கள். அந்த அரச முத்திரையைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அந்த பாத்திரத்தை மதிப்பை இப்போது உணர்ந்திருந்த கொல்லன் எல்லோரையும் எட்ட நின்றே பார்க்கச் சொன்னான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே மாறி விட்டது. 

அந்த தேனீர் பாத்திரத்தை முன்பு போல வெளியே வைக்க முடியவில்லை. மேசை, நாற்காலி, தேனீர் பாத்திரத்தை மூன்றையும் வீட்டுக்குள்ளே வைத்தான். வேலை முடிந்த பின் முன்பு போல நிம்மதியாக வெளியில் காற்றாட அமர்ந்து குளிர்ந்த நீரை குடிக்க முடியவில்லை. அவனிடம் அந்த அபூர்வ பாத்திரம் இருக்கும் செய்தி பரவி தினமும் நிறைய பேர் அதைப் பார்க்க வந்தார்கள். அதற்கு அந்த வழிப்போக்கன் என்ன விலை கேட்டான் என்பதை கொல்லன் வாய் வழியாகவே அறிந்துகொள்ள பலரும் ஆசைப்பட்டார்கள். ‘இந்தக் கொல்லன் எப்படிப்பட்ட அதிர்ஷ்டக்காரன்’ என்று அவர்கள் அவன் முன்னாலேயே வியந்தார்கள். 

இப்படி அவனுடைய தேனீர் பாத்திரத்தை யாராவது திருடிக் கொண்டு சென்று விட்டால் என்னசெய்வது என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது. பகல் முழுவதும் எப்போதும் அதன் மேல் ஒரு கண் வைத்திருந்தான். அவனுடைய வழக்கமான வேலைகள் எதுவும் சரியாக நடக்கவில்லை. இரவும் திருட்டு பயம் காரணமாக அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. இப்படியே நாட்கள் சென்றன. சில நாட்களில் வருவதாகச் சொன்ன வழிப்போக்கன் மூன்று மாத காலமாகியும் வரவில்லை. ஆனால் ஆட்களோ அந்த தேனீர் பாத்திரத்தை பார்க்க வந்த வண்ணம் இருந்தார்கள். 

அவனிடம் அது பற்றி கேட்ட வண்ணம் இருந்தார்கள். ஒரு நாள் வெளியூர்களில்இருந்தும் ஆட்கள் அதனைப் பார்க்க வந்து விட்டார்கள். அவனிடம் “நீ உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி தான்” என்றார்கள். 

அவனோ பொறுக்க முடியாமல், “உண்மையில் நான் துரதிர்ஷ்டசாலி தான். ஒரு காலத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தபடி நிம்மதியாக நான் இருந்தேன். இந்த மூன்று மாதங்களாக இந்த தேனீர் பாத்திரம் என் நிம்மதியைக் குலைத்து விட்டது. பகலில் நிம்மதியாக வெளியே உட்கார்ந்து இதில் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. ஒரு கணம் கூட என்னால் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை. இதை யாராவது திருடிச் சென்று விடுவார்களா என்ற பயத்தில் இரவிலும் என்னால் தூங்க முடியவில்லை” என்றான். அவர்கள், “அப்படிச் சொல்ல வேண்டாம். அந்த வழிப்போக்கன் கண்டிப்பாக வருவான். அதை விற்று நூறு பொற்காசுகளோடு நீ நிம்மதியாக இருக்கலாம்” என சொன்னார்கள். 

அவன், “இத்தனை நாட்கள் வராதவன் இனி வருவானா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இப்போது நூறு பொற்காசுகள் தேவையில்லை. என் பழைய நிம்மதியான வாழ்க்கை திரும்பக் கிடைத்தால் போதும். அதற்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்” என்றபடி, மற்றவர்கள் அவனைத் தடுப்பதற்குள் அந்த பாத்திரத்தை சுத்தியலால் போட்டுடைத்தான். அது பல துண்டுகளாக சிதறியது. மற்றவர்கள் திகைத்துப் போய் நிற்க கொல்லனோ மாபெரும் நிம்மதியை உணர்ந்தான். 

இந்த கதை செல்வமும், புகழும் அதிகரிக்கும் போது அதனுடன் கூடவே வரும் பிரச்னைகளைச் சொல்கிறது. என்றுமே மனிதனை விட அதிகமாக அவனுடைய செல்வமும், புகழும் முக்கியத்துவம் பெற்று விடுமானால் அவனால் உண்மையான நிம்மதியைக் காண முடியாது. 

பிரச்னை செல்வத்திலும், புகழிலும் இல்லை. உண்மையான பிரச்னை அவனால் அவற்றை விட்டு இருக்க முடியாத அடிமைத்தனத்தில் தான் இருக்கிறது. இந்த அடிமைத்தனம் அவனை சின்ன சின்ன எளிமையான சந்தோஷங்களை அனுபவிக்க அனுமதிக்காது.