எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 7 அக்டோபர், 2016

சிந்திப்பீர்!!! செயல்படுவீர்!!!

வணிகன் ஒருவன் தன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வதற்காக, அந்த ஊரின் மிகப் பெரிய பணக்கார கிழவன் ஒருவனிடம் கடன் வாங்கியிருந்தான். அவன் மிகவும் கோபக்காரன். கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடுவான்.

வணிகனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. என்ன செய்வதென தெரியாமல் தவித்தான். கிழவன் வணிகனை தேடிக் கொண்டு வீட்டிற்கே வந்துவிட்டான். அப்போது வணிகன் தன் மகளுடன் ஆற்றங்கரை அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

வணிகனைப் பார்த்து, "வாங்கிய கடனை திருப்பி தருகிறாயா? இல்லை நான் உன்னைப் பற்றி நான் புகார் செய்யவா?" என்றான் கிழவன். வணிகன், "ஐயா! எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தாருங்கள். உங்கள் பணத்தை திருப்பி செலுத்து விடுகிறேன்" எனக் கெஞ்சினான்.
மகளுக்கு தன் அப்பாவை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. 

அவளும் கிழவனிடம் தந்தைக்கு பரிந்துரைத்து பேசினாள். அவள் அழகில் மயங்கிய பணக்கார கிழவன், 'எப்படியாவது அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என முடிவெடுத்தான்.
கிழவன், "உன்னைப் பார்த்தால் எனக்கு பாவமாக உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க, ஒரு வழி என்னிடம் உள்ளது. நீயும், உன் மகளும் அதற்கு சம்மதம் தெரிவித்தால் நான் 'அது என்ன வழி?' என்பதைக் கூறுவேன்" என்றான். அவனது தந்திரத்தை அறியாத வணிகனும் மகளும் சம்மதம் தெரிவித்தனர்.

அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே நிறைய கருப்பு மற்றும் வெள்ளை நிற கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. அதைக் காட்டி, "இங்கிருக்கும் கற்களில், ஒரு கருப்பு நிறக் கல்லையும், ஒரு வெள்ளை நிறக் கல்லையும் எடுத்து நான் என் பையில் போட்டுக் கொள்வேன். அதிலிருந்து ஒரு கல்லை மட்டும் உன் மகள் கண்ணை மூடிக் கொண்டு எடுக்க வேண்டும். வெள்ளை நிறக் கல் கையில் வந்தால், நீ பணம் எதுவும் தரவேண்டாம். கருப்பு நிறக் கல் கையில் வந்தால், நீ உன் மகளை எனக்கு திருமணம் செய்து தரவேண்டும்" என்றான்.


இதைக் கேட்ட இருவரும் அதிர்ந்தனர். முதலில் இருவரும் சம்மதம் தெரிவித்ததால், இப்போது மறுத்து பேச முடியாமல் தவித்தனர். வணிகன், 'தன்னால் தன் மகளுக்கு இப்படி ஒரு நிலை வந்து விட்டதே' என அழுது புலம்பினான். பணக்கார கிழவன் கீழே குனிந்து இரண்டு கற்களை எடுத்தான். ஆனால் அவை இரண்டுமே கருப்பு நிறக் கற்கள்!

வணிகனின் மகள் அதை பார்த்து விட்டாள். கிழவனின் திட்டம் தெரிந்து விட்டது. ஆனால் அழுது கொண்டிருக்கும் தந்தையிடம் அதை சொல்ல முடியவில்லை. அவள் மனதில் 'எப்படியாவது இந்த கிழவனின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்' என்ற எண்ணம் உருவானது.

கிழவன் அந்த இரண்டு கற்களையும் பையில் போட்டு, ஒன்றை மட்டும் எடுக்கச் சொல்லி பையை நீட்டினான். வணிகனின் மகளும் ஒன்றை எடுத்தாள். கையை திறக்கும் நொடிப் பொழுதில் அதை தவறவிடுவது போல் கீழே போட்டுவிட்டாள். அந்த கல் குவியலுக்கு நடுவே சென்று விட்டது.

கிழவனைப் பார்த்து, "நான் எந்த கல்லை எடுத்தேன் என்பதை கண்டுபிடிக்க வேண்டுமானால், உங்கள் பையில் இருக்கும் பையை திறந்து பாருங்கள். ஒருவேளை உங்கள் பையில் கருப்பு நிற கல் இருந்தால், நான் எடுத்தது வெள்ளை நிறக் கல்லாகத்தான் இருக்க வேண்டும்" என்றாள்.

அவளது புத்திசாலிதனத்தால் ஏமாந்த கிழவன், "அவள் எடுத்தது வெள்ளை நிறக் கல் தான். பணம் தர தேவையில்லை" எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

உங்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தை உங்களால் கணிக்க முடிந்தால் எதற்காக அழ வேண்டும்? அதிலிருந்து விடுபடும் வழியைப் பற்றி மட்டும் சிந்திக்கலாமே!!!