ஒரு ஊரில், ஒரு செல்வந்தன் இருந்தான். அவனுக்கு, தான் என்ற அகங்காரம் அதிகம் உண்டு. மற்றவர்களை மிகவும் துச்சமாக மதிப்பான். அவன் ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைக் கண்டால் அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. அவர்கள் மேல் அவனுக்கு அப்படி ஒரு வெறுப்பு.
ஒரு நாள் அவன் ஒரு அவசர வேலை காரணமாக வேறு ஒரு ஊருக்குச் செல்ல நேரிட்டது. அந்த வேலை முடிந்து, சாப்பிடுவதற்காக, பக்கத்தில் உள்ள ஒரு பெரிய உணவகத்திற்குச் சென்றான்.
உள்ளே கூட்டம் அதிகமாக இருந்தது. ஓரிரு இருக்கைகள் தவிர்த்து, அனைத்து இருக்கைகளிலும் மக்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
உள்ளே நுழைந்தவன் பார்வையில், ஒரு ஓரத்தில், அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது பகுதி மக்களில், ஒருவன் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்தான்.
அவனைக் கண்டவுடன், அவனையே அறியாமல் அவனுக்கு ஆத்திரமமும் வெறுப்பும் ஒரு சேர வந்தது. உடனே, அவன் அங்கிருந்த உணவு பரிமாறுபவனை அழைத்து, சத்தமாக, இந்த உணவகத்தில், அவனுக்குப் பிடிக்காத "அந்த ஒரு மனிதனைத் தவிர்த்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும், அவர்கள் சாப்பிடும் உணவுக்கான தொகையை நானே கொடுக்கிறேன்" மிகவும் சத்தமாக கூறினான்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த செல்வந்தனுக்கும், அவனுக்குப் பிடிக்காத மனிதனைப் பழிவாங்கியதாக ஒரு பெரிய மகிழ்ச்சி வந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. இந்த செல்வந்தனுக்குப் பிடிக்காத அந்த மனிதன், எழுந்து, மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே அந்த செல்வந்தனுக்கு நன்றி கூறினான்.
இதைக் கண்ட அந்த செல்வந்தனுக்கு கோபம் அதிகமானது.
நாம் அவனை அவமரியாதை செய்கின்றோம், ஆனால் அவன் அதைக் கண்டுகொள்ளாமால் திமிராக நன்றி சொல்கிறானே என்று எண்ணி, இன்னும் அதிகம் ஆத்திரப்பட்டு, உணவு பரிமாறுபவனை மீண்டும் அழைத்து, சத்தமாக, அவனுக்குப் பிடிக்காத மனிதனைக் காட்டி, "அந்த ஒரு மனிதனை தவிர்த்து, இங்கு உணவு உண்பவர்கள் அனைவருக்கும், இந்த மாதம் முழுவதும், அவர்கள் என்ன உணவு உண்டாலும் அதற்கான தொகையை நானே கொடுக்கிறேன்" என அறிவித்தான். அதற்காக உறுதியையும் அளித்தான். இதனால் அங்கு இருந்தவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்து அவனைப் பாராட்டினார்கள்.
அதனால் மிகவும் இறுமாப்புடன், தனக்கு பிடிக்காத மனிதனைப் பழிவாங்கிய மகிழ்ச்சியுடன் அவனை நோக்கினான். ஆனால், அந்தோ பரிதாபம், அந்த மனிதன் மீண்டும் எழுந்து, மிகவும் மகிழ்ச்சியுடன், தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டான். அதைக் கண்டவுடன், அந்த செல்வந்தனுக்கு கோபம் தலைக்கேறியது.
உடனே அவனை நோக்கிச் சென்று, "உன்னை இவ்வளவும் அவமானப் படுத்தினேனே, உனக்கு சிறிது கூட கோபம் வரவில்லையே, ஏன்?" எனக் கேட்டான்.
அதற்கு அந்த மனிதன், "நான் ஏன் கோபப் படவேண்டும். உங்களைப் போன்ற வாடிக்கையாளர்கள் வந்தால் எனக்கு மிகவும் இலாபம் தானே, ஏனென்றால், இது என்னுடைய உணவகம், நான் தான் இதன் உரிமையாளர்" என்றான்!
கோபத்துடன் எழுபவன் நட்டத்துடன் அமரவேண்டும். முடிந்த வரை அடுத்தவர்கள் கோபத்திற்கு நாம் செவி சாய்க்க கூடாது. பகைவர்களின் கோபம் கூட நமக்கு நன்மை தரும் சந்தர்ப்பமாக மாறலாம். அதனால் எப்பொழுது பொறுமை இழக்காமல் எதையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.