பெரிய பணக்காரன் ஒருவன் புதிய வீடு ஒன்றை கட்டினான். நான்கு அறைகள் போட்டு மாடி மேல் மாடி எழுப்பி, உச்சி பரணில் யாருக்கும் தெரியாமல் தங்க நகைகளையும், காசுகளையும் வைத்து மூடிவிட்டான். பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்று யாரிடமும் சொல்லாமல் இருந்தான். ஆனால் திடீரென்று இறந்துவிட்டான்.
நான்கு வருடங்கள் ஆனது. இரவு நேரங்களில் அந்த வீட்டில் "புடிச்சிக்கோ புடிச்சிக்கோ" என்று குரல் கேட்டது. பிள்ளைகள் பயந்து வீட்டை வாடகைக்கு விட்டனர். தொடர்ந்து இரவு நேரங்களில் "புடிச்சிக்கோ புடிச்சிக்கோ" என்று குரல் கேட்டது. வாடகைக்கு வந்தவர்களும் பயந்து வீட்டை காலி செய்தனர் . வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட முடிவு செய்து விற்க முயன்றும் யாரும் வாங்க வில்லை.
அந்த ஊரில் உள்ள ஏரிக்கரையில் ஒருவன் புதிதாக டீக்கடை வைத்து இருந்தான். மழைக்காலம் வந்தவுடன் அந்த வீட்டின் தாழ்வாரத்தில் கடை வைத்து கொள்கிறேன் என்று கேட்க, 'தாரளமாக வைத்துகொள்' என்று கூறி வீட்டு சாவியை கொடுத்தனர்.
இரவு நேரம் வீட்டினுள் படுக்கும் பொது "புடிச்சிக்கோ புடிச்சிக்கோ" என்று குரல் கேட்டது. டீக்கடைக்காரன் மறுநாள் சாமியார் ஒருவரிடம் சென்று, நடந்ததை கூறினான். அவர் டீக்கடைக்காரனுக்கு தைரியம் கூறி, "இரவு நேரத்தில் 'புடிச்சிக்கோ புடிச்சிக்கோ' என்று சத்தம் கேட்கும் போது நீ, 'போடு புடிசிக்கிறேன்' என்று கூறி கையை நீட்டு" என்று கூறி அவன் கையில் திரூநீற்றைக் கொடுத்தார்.
அன்று இரவு அவன் சுவாமியை நினைத்து கொண்டு படுத்து இருந்தான். அப்போது 'புடிச்சிக்கோ புடிச்சிக்கோ' என்று சத்தம் கேட்டது. அவனும் தைரியமாக, 'போடு பிடித்து கொள்கிறேன்' என்று கூறி கையை நீட்டினான். உடனே மேல் இருந்த சுவர் வெடித்து தங்க நகைகள் கீழே விழுந்தது.
அதை அவன் யாருக்கும் தெரியாமல் அப்படியே வைத்து ஒரு வருடம் கழித்து அந்த வீட்டையே வாங்கி நன்கு தொழில் செய்தும் தான தருமங்கள் செய்தும் நன்கு வாழ்ந்தான்.
இதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம் அல்லது வாய்ப்பு என்றும் சொல்லலாம். ஆனால் அதை சரியான நேரத்தில் பயன்படுத்துவதில் தான் வாழ்க்கை உள்ளது.