உழைக்க வேண்டும் என்ற விருப்பமே இல்லாத, பெரிய சோம்பேறி அவன். எந்த வேலையுமே செய்யாமல் சொகுசாக வாழ்வதற்கு ஆசைப்பட்டான். "ஒரு நாள் அதிர்ஷ்டக் காற்று என் பக்கம் வீசும். அப்போது நான் பெரிய கோடீஸ்வரனாகிவிடுவேன்' என்று நினைத்துக்கொண்டிருந்தான்.
அவனுக்கு எதிர்பாராமல் ஒரு கஷ்டம் வந்தது. அதுவும் ஒரு பொம்மையால் வந்தது. அந்தப் பொம்மை அவனுடையது அல்ல. அவனது பக்கத்து வீட்டுக்காரன் தன் இடத்தை விற்று விட்டுச் செல்லும்போது பரிசாகக் கொடுத்த பொம்மை அது. ஒரு பொம்மையால் இப்படியொரு கஷ்டம் வருமென்று அவன் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை.
போகும்போது பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான்:
""என் நண்பனே, இந்த பொம்மையை சாதாரண பொம்மை என்று நினைத்துவிடாதே. என் முன்னோர்கள் இதைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். இன்று வரை நானும் இதை மிகவும் பாதுகாப்பாகத்தான் வைத்திருந்தேன். நீ என் நல்ல நண்பன் என்பதால் நான் உனக்கு இதைப் பரிசாகத் தருகிறேன். இதை நீ என் நினைவாக வைத்துக்கொள். இந்த பொம்மை உனக்கு அதிர்ஷ்டங்களைத் தேடித் தரும்''
அவனும் மகிழ்ச்சியுடன் பொம்மையை வாங்கிக்கொண்டான். "இத்தனைக் காலமும் எதிர்பார்த்திருந்த அதிர்ஷ்டம் இந்த பொம்மை உருவில் இப்போதாவது நம்மிடம் வந்ததே!' என்று ஆறுதலடைந்தான். தனக்கு ஒரு புதையல் கிடைத்ததைப்போல அந்தப் பொம்மையைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். தனக்குப் பரிசாக இதைக் கொடுத்துச் சென்ற நண்பனின் தாராள மனதை நினைத்து நினைத்து வியந்தான்.
இரவானது. நமக்கு ஒரு அதிர்ஷ்ட பொம்மை வந்துவிட்டது. இனி நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் எதுவும் இருக்காது. விரும்பியதெல்லாம் கிடைத்துவிடும் என்று நினைத்தபடியே படுத்தான்.
வெகு நேரம் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. இனிய கற்பனைகளுடன் புரண்டு புரண்டு படுத்தான். கடைசியில் உறங்கத் தொடங்கினான்.
அப்போது பக்கத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது:
""இதோ பார்! இப்போது மேற்கூரை இடிந்து விழப்போகிறது! சீக்கிரம் வெளியே ஓடிவிடு!''
பதறித் துடித்தெழுந்த அவன், விளக்கேற்றி மேலே பார்த்தான். மேற்கூரை அப்படியேதான் இருந்தது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது ஒரு குரல் ஒலித்ததே! யார் பேசினார்கள்? எங்கிருந்து பேசினார்கள்? அவனுக்குப் புரியவில்லை. சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தான். அங்கே ஒருவரும் இல்லை. கடைசியில், தான் கனவுதான் கண்டிருப்போம் என்று நினைத்து நிம்மதியடைந்து, மறுபடியும் படுத்தான்.
சில நிமிடங்கள் கழிந்திருக்கும். அப்போது மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது:
""ஐயோ, திருடன்! திருடன்! இதோ, வீட்டிற்குள் திருடன் புகுந்துவிட்டான். பிடியுங்கள், பிடியுங்கள்!''
திடுக்கிட்டு எழுந்தான். உடனடியாக வாளை எடுத்துக்கொண்டு வீடு முழுவதும் சுற்றி திருடனைத் தேடினான். ஒரு இடம் விடாமல் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்து ஏமாற்றமடைந்தான். அங்கே எவருமே இல்லை. இந்த முறை தான், உண்மையாகவே அந்தக் குரலைக் கேட்டதாக, உறுதியாக நம்பினான். ஆனால் தேடிப் பார்க்கும்போது யாருமில்லை. என்ன இது மாயம்! அவன் அச்சமடைந்தான்.
திருதிருவென்று முழித்துக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தான். எவ்வளவு நேரம்தான் ஒரு மனிதனால் அப்படி அமர்ந்திருக்க முடியும். களைப்படைந்த அவன் மீண்டும் படுத்தான். அவன் படுத்த அதே நொடியில் அந்தக் குரல் ஒலித்தது:
""நீ இப்படிப் படுத்திருந்தால் ஐந்து நிமிடத்திற்குள் இறந்துவிடுவாய்!''
""அட ஆண்டவனே, இது என்ன கொடுமை!'' என்று உரக்க அலறியபடியே தூக்கிவாரிப்போட்டு எழுந்தான். அவனது உறக்கம் அந்த நொடியே பறந்துவிட்டது. அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று அப்போதும் அவனுக்குப் புரியவில்லை.
அவன் பெரும் பதற்றத்துடன் வீடு முழுவதும் விளக்கேற்றி வைத்தான். எல்லா இடத்திலும் அரக்கப்பரக்கத் தேடினான். தற்செயலாக அந்தப் பொம்மையைப் பார்த்தான் அவன். அவனுக்குப் புரிந்துவிட்டது. கட்டிலின் அடியில் அந்தப் பொம்மை சிரித்துக்கொண்டு நிற்கிறது!
அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. இந்தப் பொம்மைதான் அடிக்கடி இப்படிப் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது என்று அவனுக்குத் தெரிந்தது. காற்றுகூட நுழைய முடியாத ஒரு பெட்டியில் அந்தப் பொம்மையைப் போட்டு அடைத்துவைத்தான். பெட்டிக்குள் இருந்த பொம்மை பெருங்குரலெடுத்து ஊளையிடத் தொடங்கியது.
இரவு முழுதும் உறங்காததால் மறுநாள் காலையில் மிகவும் களைப்புற்றிருந்தான். பெட்டிக்குள் அடைபட்டிருந்த பொம்மை அப்போதும் சத்தம்போட்டுக்கொண்டிருந்தது. பொம்மையை வெளியே எடுத்து ஒரு தூணில் ஓங்கியடித்தான். தூண் உடைந்ததுதான் மிச்சம். அந்தப் பொம்மைக்கு எதுவும் ஆகவில்லை. அது மிகுந்த உற்சாகத்துடன் சிரித்துக்கொண்டிருந்தது.
அவனுக்கு அப்போது தான் புரிந்தது, "பக்கத்து வீட்டுக்காரன் இந்தப் பொம்மையைப் பரிசளித்து தன்னை நன்றாக ஏமாற்றியிருக்கிறான்' என்று.
எங்காவது எடுத்துச் சென்று இந்தப் பொம்மையைத் தொலைத்துவிட்டால் போதும் என்றிருந்தது அவனுக்கு. எனவே அதை அவன் நதிக்கு எடுத்துச் சென்றான். ஒரு சிறிய படகில் பொம்மையை வைத்துக் கட்டி நதியில் விட்டான்.
அந்த நேரம் பார்த்து நதிக் கரையில் உலவிக்கொண்டிருந்தார் அந்த நாட்டு ராஜா. ஒரு படகிலிருந்து இடிமுழக்கம்போல யாரோ அலறுவதை கேட்டார். உடனே படகைக் கரை சேர்க்கும்படி உத்தரவிட்டார். கரைக்கு வந்த அந்தப் பேசும் பொம்மையைப் பார்த்து வியந்த அவர், அதைத் தன் அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.
அன்று இரவே அரண்மனையில் பெரிய பிரச்னைகள் ஏற்படத் தொடங்கின. "அதோ, எதிரிகள் தாக்க வருகிறார்கள். ஓடுங்கள் ஓடுங்கள்!'' என்று உரக்கச் சொன்னது ஒரு குரல். நொடியும் தாமதிக்காமல் ராஜாவும் படைவீரர்களும் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு வெளியே பாய்ந்து ஓடினார்கள். வெளியே யாருமே இல்லை! என்ன இது என்று யோசித்த அவர்கள், எதுவும் புரியாததால் ஆயுதங்களையெல்லாம் வைத்துவிட்டு மீண்டும் உறங்கத் தொடங்கினார்கள்.
அப்போது மறுபடியும் குரல் கேட்டது:
""ஐயோ! அரண்மனையில் தீப்பிடித்துவிட்டது! எல்லோரும் வெளியே ஓடிவிடுங்கள்!''
அனைவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்தார்கள். நாற்புறமும் ஓடி ஓடிச் சென்று பார்த்தார்கள். ஆனால் எங்குமே, ஒரு தீப் பொறியைக்கூடக் காணவில்லை! எங்கும் இருட்டாகத்தான் இருந்தது.
அப்படியாக அந்த இரவு அரண்மனையில் யாரும் தூங்கவில்லை.
மறுநாள் ராஜா தூக்கக் கலக்கத்துடன் தோட்டத்திற்குச் சென்றார். உடன் எடுத்துச் சென்றிருந்த பொம்மையை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, "நேற்றிரவு, அரண்மனையில் தீப்பிடித்திருக்கிறது என்று கத்தி ஏமாற்றியது யாராக இருக்கும்?' என்று யோசித்தார். அப்போது அவருக்குப் பின்புறத்திலிருந்து அந்தக் குரல் மீண்டும் கேட்டது:
""ஓடுங்கள்! எங்காவது ஒளிந்துகொள்ளுங்கள்! ஆகாயம் இப்போது இடிந்து கீழே விழப்போகிறது!''
ராஜா பட்டென்று திரும்பிப் பார்த்தார். அந்த பொம்மை சிரித்தது. அப்போது ராஜாவிற்கு எல்லாம் புரிந்தது. அவர் உடனே பொம்மையை எரித்துவிடும்படிக் கட்டளையிட்டார். ஆனால் அரண்மனையில் உள்ள எல்லா விறகையும் போட்டு எரித்தாலும் பொம்மைக்கு எதுவும் ஆகவில்லை. அது அப்படியே சிரித்துக்கொண்டிருந்தது.
களைப்படைந்த ராஜா கேட்டார்:
""உன்னை நதியில் விட்டது யார்?''
பொம்மை, பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தது. ராஜா ஆத்திரத்துடன் கத்தினார்:
""இப்போது நீ உண்மையைச் சொல்லவில்லை என்றால் நூறு அடிப் பள்ளம் தோண்டி உன்னைப் புதைத்துவிடுவேன்!''
இதைக் கேட்ட பிறகுதான் பொம்மைக்கு பயம் வந்தது. அது முதன் முறையாக உண்மையைச் சொன்னது.
பிறகு ராஜாவின் உத்தரவுப்படி படைவீரர்கள் அந்த சொம்பேறியைத் தேடிப் பிடித்தார்கள். அவனை ராஜாவிடம் அழைத்து வந்தார்கள்.
"இவனுக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இந்தப் பொம்மையை இவனிடமே ஒப்படைத்துவிடுங்கள்!'' என்று ராஜா உத்தரவிட்டார்.
உடனே அவன் சொன்னான்: "ராஜாவே, எனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நான் இப்போதே கட்டிவிடுகிறேன்! ஆனால் உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன், மறுபடியும் இந்தப் பொம்மையை என்னிடம் கொடுக்காதீர்கள்! தயவு செய்யுங்கள்!''
ஆனால் ராஜா, அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் செலுத்திவிட்டு, அந்தப் பொம்மையையும் எடுத்துக்கொண்டு வீடு வந்தான்.
பிறகு அவன் நேரத்தை வீணாக்கவில்லை. பக்கத்தில் வசிக்கும், அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவனிடம் பொம்மையைக்கொடுத்துவிட்டுச் சொன்னான்:
"இது மிகவும் அதிர்ஷ்டமான பொம்மை. இது உன்னிடமிருந்தால் நீ நினைத்ததெல்லாம் உனக்குக் கிடைக்கும். நீ விரைவில் கோடீஸ்வரனாகிவிடுவாய்! நான் சொல்வது உண்மை. எனக்கு இந்த பொம்மை அளவற்ற செல்வத்தைக் கொடுத்துவிட்டது. அது எனக்குப் போதும். என் நெருங்கிய நண்பன் என்பதால் இதை உனக்குக் கொடுக்கிறேன்.''
அந்தப் பக்கத்து வீட்டுக்காரனும் மிக்க சந்தோஷத்துடன் அதை வாங்கிக்கொண்டு நன்றி சொன்னான். பிறகு அவன், உடனடியாக வீட்டைக் காலி செய்து அந்த நாட்டைவிட்டே ஓடிவிட்டான்.
இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பொம்மை இப்போது யாரிடமோ இருக்கிறது! யாரிடம் இருக்கிறதென்று யாருக்குத் தெரியும்? உழைப்பையும், முயற்சியையும் நம்பாமல், அதிர்ஷ்டத்தை நம்புபவர்களின் பையில் ஒளிந்திருக்கலாம்.