எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 2 பிப்ரவரி, 2017

பணமும்... வாழ்க்கையும்...

பத்திரிக்கையில் வேலை செய்யும் ஏழை ஒருவன். அவனுக்கு ஒரு மனைவி, உடல் நலக்குறைவுடன் பேச முடியாத ஒரு குழந்தை. தனது  குழந்தைக்கு மருத்துவம் செய்யக்கூட அவனிடம் காசு இல்லை. பத்திரிக்கை அதிபரோ உதவவில்லை. ஒருநாள் அவனுக்கு அவசரமாக நூறு ரூபாயவது தேவைப்படுகிறது. நண்பர் 50 ரூபாய் கொடுக்கிறார். காரணம் ஏற்கனவே நிறைய வாங்கி விட்டான். 

அடுத்த நாள், “ குழந்தையிடம் காசு ஏதாச்சும் கொடுத்தீங்களா? “ என கேட்க்கிறாள் அவன் மனைவி. "என்னிடம் ஏது காசு? நான் கொடுக்கவில்லையே!" என்கிறான் அவன். குழந்தை கையில் நூறு ரூபாய் இருந்ததாக சொல்லி மனைவி பணத்தை அவனிடம் கொடுக்கிறாள். "எப்படி அந்த காசு வந்தது?" என அவர்களுக்கு புரியவில்லை. ஆனாலும், 'எப்படியோ காசு வந்தால் சரி' என நினைத்துக்கொண்டு அதை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.


இன்னொரு முறை 500 ரூபாய் தேவைப்படுவதாக புலம்புகிறான். அடுத்த நாள் பார்த்தால் , குழந்தை கையில் 500 ரூபாய் இருக்கிறது.
"இதெல்லாம் எப்படி வருகிறது?" என இருவருக்கும் புரியவில்லை. பழைய டீவியை மாற்றி எல் சி டி வாங்கினால் நன்றாக இருக்குமே என புலம்புகிறான். அடுத்த நாள் குழந்தை கையில் அதற்கு தேவையான பணக்கட்டு இருக்கிறது. தேவைப்படும்போதெல்லாம் காசு வருகிறது. குழந்தை கையில் யாராவது வைக்கிறார்களா என சோதித்துப் பார்க்கிறார்கள். ஒரு நாள் முழுக்க விழிப்பாக கவனிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை.  

இதற்கிடையில் , குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க கணவன் தாமதம் செய்வதை மனைவி கண்டிக்கிறாள். 'குழந்தை சரியாகி , பேச ஆரம்பித்தால், காசு எப்படி வருகிறது என சொல்லி விடுமோ?' என பயப்படுவதாக குற்றம் சாட்டுகிறாள். அதில் இருக்கும் உண்மை கணவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. 


ஒரு கட்டத்தில் அந்த பத்திரிக்கை அதிபர் பத்திரிக்கை நடத்த முடியாமல் , இவனை நடத்த சொல்கிறார். அவனிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட நிபந்தனை விதிக்கிறான். அது ஏற்கப்படுகிறது. சில நாட்கள் கழித்து, தன் மனைவியின் விருப்பத்திற்காக குழந்தைக்கு வைத்தியம் பார்க்க முடிவு செய்கிறான் அவன். ஆனால், அந்த குழந்தையின் நோய்க்கு சிகிச்சை செய்ய அந்த ஊரில் டாக்டர்கள் இல்லை. கல்கத்தாவிற்கு போக வேண்டும். விமானத்தில் கிளம்ப அவனும், குழந்தையும் தயார் ஆகிறார்கள். வேண்டுமென்றே விமானத்தை தவற விடுகிறான். மனைவி திட்டுகிறாள். கடைசியில் ஒரு வழியாக கல்கத்தா செல்கிறான்.

டாக்டர் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு , வெகு நேரம் கழித்து பேயறைந்த முகபாவத்துடன் வெளியே வருகிறார். "இத்தனை நாள் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாய்? ஏன் முன்பே வரல?" என கடுமையாக திட்டுகிறார். "என்ன ஆச்சு?" பதறுகிறான் அவன். குழந்தை இறந்து வெகு நாட்கள் ஆகின்றன என்கிறார் டாக்டர். அந்த குழந்தை இறந்து ஒரு பண மெஷினாக மாறிவிட்டது. 



நாமும் அப்படித்தான் மாறி விடுகிறோம். வெகு சிலர்தான், சுயநலம் மறந்து பண மெஷினாக மாறாமல் மற்றவர்களுக்காக உழைக்கிறார்கள். வாழ்வதற்கு பணம் சம்பாதிக்கணுமேயன்றி, பணத்தை வாழ்க்கையாக பார்க்கக் கூடாது. பணத்தை விட அன்பு, பாசம், கருணை, மனிதாபிமானம், இரக்கம் போன்ற குணங்களுக்கு மதிப்பு அதிகம்.