எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 1 பிப்ரவரி, 2017

எண்ணங்களின் சக்தி!!!

ஒருநாள் அரசனும், மந்திரியும் நகர்வலம் வந்து கொண்டிருந்தார்கள். நகரின் ஒரு குறிப்பிட்ட கடையின் அருகில் வந்ததுமே, "மந்திரியாரே! ஏனோ தெரியவில்லை. இந்தக் கடைக்காரனை கொன்றுவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது. ஆனால் இவன் எனக்கு யாரென்றுகூடத் தெரியாது; பேரும் அறிய மாட்டேன்!'' என்றான். மந்திரி வியப்புற்று யோசிக்கும்போதே கடையைக் கடந்து விட்டிருந்தனர் இருவரும். மறுநாள், மந்திரி மட்டுமே, மாறுவேடத்தில் அந்தக் குறிப்பிட்ட கடைக்கு வந்தான். 



அந்த கடைக்காரனிடம் சாதாரணமாகப் பேசினான். "எப்படி வியாபாரம் நடக்கிறது?" என்று கடைக்காரனிடம் யதார்த்தமாய் கேட்க, உரிமையாளனும், வருத்தத்துடன், "என் கடையில் வியாபாரமே இல்லை! நிறைய பேர் வருகிறார்கள். என் கடையில் உள்ள சந்தனக் கட்டைகளை முகர்ந்து நல்ல மணம் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் யாரும் வாங்குவது மட்டுமில்லை... 'சந்தனக்கட்டைகளை யார் வாங்க முடியும், அரச குடும்பம் தவிர...' என்கின்றனர். ஒருவேளை இந்த நாட்டின் மன்னன் இறந்தால், இல்லை அரண்மனையில் யாரேனும் மரணித்தால், என் சந்தனக் கட்டைகளை பிணத்தை எரிக்க வேண்டி அதிகம் வாங்குவர். நல்ல விலைக்கு விற்பேன். என் கஷ்டமும் தீரும்'' என்றான். 

இதைக் கேட்டதுமே, அமைச்சருக்கு முதல் நாள் அரசன் தன்னிடம் சொன்னதற்கான காரணத்தை உணர்ந்தான். இந்தக் கடைக்காரனின் தீய எண்ணமே, மன்னனுடைய மனதில் எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தி, அவனை அறியாமலேயே 'கொல்ல' தூண்டியுள்ளது என்று உணர்ந்தான். இதை சுமூகமாகத் தீர்க்க நினைத்த மந்திரி, கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலை கொடுத்து வாங்கினான். 



அவற்றை, அரசனிடம் எடுத்துச் சென்று இதை, அந்தக் கடைக்காரன், பரிசுப் பொருளாகத் தந்தனுப்பியதாகச் சொல்லி அரசனிடம் அந்த மரத்துண்டங்களைத் தந்தான். நல்ல மணம் வீசிய அந்த சந்தன மரத்துண்டுகளைப் பார்த்த அரசன், 'இவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏன்தான் தனக்கு வந்ததோ?' என்று வெட்கப்பட்டான். அரசன் சில பொற்காசுகளை மந்திரி மூலம் அந்தக் கடைக்காரனுக்கு அனுப்பி வைத்தான். 

மந்திரி மூலம் வந்த பொற்காசுகளைப் பெற்றவன், 'இத்தனை நல்ல மன்னனைத் தன் சுயநலத்துக்காக செத்துப் போக வேண்டும். அவன் அரண்மனையில் மரணம் நிகழ வேண்டும் என்று மிகக் கொடூரமாய் எண்ணினோமே' என்று வெட்கி மனம் குன்றினான். இறுதியில் மனந்திருந்தி தீய எண்ணங்களை விட்டொழித்தான். சில நாள்கள் கழித்து அதே கடையருகே உலா வருகையில் அரசர், கடைக்காரன் இருவர் மனத்திலும் நல்ல நட்பான எண்ணமும், புன்னகையும் மலர்ந்தது.

எண்ணங்கள் வலுவானவை. நம்மை வழி நடத்துவையும் அவையே. ஒருவர் கொண்டிருக்கும் எண்ணங்களே, அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என்பதை உறுதி செய்யும். நாம் பேசும் வார்த்தைகளுக்கு மட்டுமில்லை, மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் கூட பிறரை  காயப்படுத்தும் சக்தி உள்ளது.