ஒரு கிராமம். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. இன்று நிலைமை மாறிப்போய் கிடக்கிறது. பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது.
அந்தக் கிராமத்தின் கோடியில் ஒரு கந்தல் குடிசை. அந்தக் குடிசை, இருவர் அடைக்கலமாகி வசித்து வந்தனர். அதில், ஒருவர் பார்வையற்றவர். மற்றவர் கால்கள் அற்றவர். அவர்களுக்கென்று பிழைப்பு வழி எதுவுமில்லை. மாலையில் கடைத்தெரு மூடப்படும்போது அவர்கள் போவார்கள். பழையது, மிஞ்சிய காய் கனி தானியங்களை மக்கள் அவர்களுக்குத் தருவார்கள். அதை உணவாக்கி அவர்கள் உண்டு வாழ்ந்தனர்.
ஆனால் பஞ்சம் வந்த பிறகு, இருவருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இருவரும் பெரும்பாலும் பட்டினி கிடந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்த போது, 'திருடி சாப்பிட்டாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்வது' என்ற முடிவுக்கு வந்தனர். போகிற வழியில் வயல்கள் எல்லாம் கருகிக் கிடந்தன.
கொஞ்சம் தூரத்தில் ஊர்த்தலைவரின் தோட்டம். அவருக்கென்று தண்ணீர் வசதிகள். தோட்டம் இன்றைக்கும் செழித்துக் கிடந்தது.
அங்கே போவதென்று முடிவு செய்தார்கள்.
முடவரைக் குருடர் சுமந்து கொண்டார். முடவர் வழிகாட்ட, குருடர் நடந்தார். ஒருவழியாய் ஊர்த்தலைவர் தோட்டத்துக்கு வந்துவிட்டார்கள். ஊருக்குள் யாரும் நெருங்க பயப்படும் தோட்டம். பிடிபட்டால், கட்டி வைத்துத் தோலை உறித்து விடுவார்கள். தோட்டத்தில் தானியங்களும், காய் கனிகளும் குவிந்து கிடந்தன. முடவரை வரப்பிலேயே இறக்கிவிட்டு குருடர் தட்டுத் தடுமாறி உள்ளே போய் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டார். யாருக்கும் தெரியாமல் குடிசைக்கும் திரும்பி விட்டனர்.
அவர்கள் கொண்டு வந்தது இரண்டு நாட்களுக்கு போதுமாயிருந்தது. நெடுநாளைக்குப் பிறகு இருவரும் வயிறார உண்டு உறங்கினார்கள். காலையில் எழும்போதே பெருங்கூச்சல் கேட்டது. ஊர் முச்சந்தியில் நின்று தலைவர், “எவண்டா, எந்தோட்டத்தில் எறங்கித் திருடினவன்?” என கத்திக் கொண்டிருந்தார். யாரும் திருட்டை ஒப்புக் கொள்ள முன்வராததால், ஊர்த் தலைவர். ‘நீதி தேவதை’யின் கோயிலுக்குப் போய் மண்டியிட்டு வேண்டி நீதி தேவதையை ஊருக்குள் அழைத்து வந்தார்.
நீதி தேவதையின் முன் ஒவ்வொருவரும் ஆஜராகி உண்மையைச் சொல்ல வேண்டும். திருடியவரைத் தேவதை கண்டு பிடித்துவிடும். ஊர்மக்கள் ஒவ்வொருவராக ஆஜராகி திருடவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தனர். யாரையும் நியாய தேவதை கொல்லவில்லை.
இனி மிச்சம் குருடரும், முடவரும் மட்டுமே. யாருக்கும் அவர்கள் ஞாபகம் வரவில்லை. திடீரென ஊர்த்தலைவர், “அந்தக் குருடனையும், நொண்டியையும் இழுத்துட்டு வாங்கடா” என கத்தினார். இருவரும் சிரமத்தோடு தடுமாறி வந்தார்கள். ஊர் மக்களுக்கு கண்கலங்கியது.
நியாய தேவதை முன் முதலில் குருடர் ஆஜரானார். “தேவதையே! நான் பிறவிக்குருடன். எதையும் கண்கொண்டு பார்க்க முடியாதவன். தலைவர் தோட்டத்தையும் நான் பார்த்ததில்லை” என்றார். குருடரைத் தேவதை ஒன்றும் செய்யவில்லை.
அடுத்து முடவர் ஆஜரானார். “அம்மா! நான் பிறவியிலேயே முடவன். நடக்க மாட்டாதவன். தலைவர் தோட்டத்தில் என் கால் படவேயில்லை” என்றார். முடவரையும் தேவதை எதுவும் செய்யவில்லை. இனி யாரும் மிச்சமில்லை. ஊர் மக்களுக்கு திகைப்பு.
அப்போது யாரும் எதிர்பாராமல் அந்தச் சம்பவம் நடந்தது. கண்ணுக்குத் தெரியாத இரு கைகள் ஊர்த்தலைவரின் கழுத்தை நெறித்தன. ஊர்த்தலைவர் சுருண்டு விழுந்து இறந்தார். ‘ஊர்த்தலைவரா... திருடர்!’ என்று எல்லோருக்கும் ஆச்சரியம்! ஊர்மக்கள் நீதி தேவதையிடம் விளக்கம் கேட்டனர். தேவதை மக்களிடம், "குருடரும், முடவரும் திருடியது உண்மைகளென்றால், ஊர்த்தலைவர் ஊரையேக் கொள்ளையடித்து அவர் மட்டும் வசதியாக இருப்பது பெரிய உண்மையாகும். எனவே இந்த ஊரிலே மிகப் பெரிய திருடன் தலைவன் தான்" என்றது.
நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும். சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் அவன் கடவுளிடமிருந்து விலகியே இருக்கிறான் - சுவாமி விவேகானந்தர்.