எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஏறுதழுவுதல் - போராட்டத்தின் வரலாறு!!!

இன்று நம்மில் பலர் கடந்த இரண்டு வருட காலமாகத்தான் (ஜல்லிக்கட்டு) ஏறுதழுவுதலுக்கு தடை இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில், ஜல்லிக்கட்டிற்கான எதிர்ப்பும், நடத்த வேண்டும் என்கிற போராட்டங்களும் ஆங்கிலேயேரின் ஆட்சிக் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.

19 -ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து ஏறு தழுவுதல் அரசியல் அடக்குமுறையானது. முழுவதுமாக தமிழக காவல் முறையை அகற்ற, ஆங்கில அரசு தனிப்பட்ட காவல் மற்றும் காவல் படைகளுக்கு தடை விதித்தது. காவல் பரம்பரையான போர்மரபினரை, குற்ற பரம்பரையாக முத்திரைக் குத்தியது. இதனால் பாரம்பரிய பெரிய குடும்பங்கள் நிலைத் தடுமாறி திசை மாறினர். இதில் காளைகள் மிகவும் பாதிக்கப்பட்டன. 


ஏறுதழுவுதலுக்காக வளர்க்கப் படும் முரட்டு காளைகள் தனிப்பட்ட கவனத்துடன், தன்னை வளர்ப்பவரைத் தவிர பிறர் கைகளில் இருந்து உணவு கூட உண்ணாது. குற்ற பரம்பரை அடக்குமுறையில் குடும்பங்கள் மட்டுமல்லாது காளைகளும் பிரிக்கப்பட்டன. இருப்பினும் பன்னெடுங்காலமாக காளைகளுக்கும், மனிதனுக்கும் இருந்து வரும் பிணைப்பு மாறவில்லை, மறையவில்லை. தொடர்ந்து ஏறு தழுவுதல் நடைப்பெற்றது.

1935ஆம் ஆண்டு, சுதந்திர வேட்கையும், குற்ற பரம்பரை சட்ட எதிர்ப்பும், தீவிரமான கால கட்டத்தில், ஆங்கில அரசின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு அன்றைய முதல்வர் சி.இராஜகோபாலாச்சாரி அவர்கள் குற்ற பரம்பரை சட்டத்தை ஆதரிக்கும் வகையில் மதுரைக்கு அருகே உள்ள சிந்துபட்டியில் அரசு ஜல்லிக்கட்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு தலைமை ஏற்க அன்றைய மதராஸ் ராஜதானியின் கவர்னர் அவர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்.

இதன் மூலம் முரட்டுக் காளைகளை அடக்கும் முரட்டு மனிதர்கள் காட்டுமிராண்டிகள். அவர்கள் மீது உள்ள குற்ற பரம்பரைச் சட்டம் நியாயமானது என்று வலியுறுத்த ராஜகோபாலச்சாரியின் காங்கிரஸ் அரசு நினைத்தது. இவ்விழாவின் உள்நோக்கத்தை புரிந்துக் கொண்டு, மக்களின் விடுதலைக்காக,  போராடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் மக்களுக்கு ஒரு சிறிய நோட்டீசில் இவ்விழாவில் கலந்துக் கொள்ள கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.


அவரது வேண்டுகோளை கட்டளையாக ஏற்றுக் கொண்ட மக்கள் விழாவினை புறக்கணித்தனர். இந்த செயலால் மக்கள் தங்களது எதிர்ப்பை, ஆங்கில அரசுக்கு மிகத்தெளிவாக தெரியப்படுத்தினர். பிரிட்டிஷ் அரசின் குற்ற பரம்பரை சட்டம் அமுலாக்கப்பட்டவுடன், பரம்பரை காவல் தொழில் தடை செய்யப்பட்டு, பிரிட்டிஷ் போலீஸ் முறை நடைமுறைக்கு வந்தவுடன், சங்ககால ஆநீரை கவர்தல் (ஏறுதழுவுதல்) புதிய பரிமாணம் பெற்றது. 

பரம்பரை காவல் தொழிலை மறுத்து பிரிட்டிஷ் போலீசுக்கு கட்சி மாறியவர்களின் கால்நடைகள் கவரப்பட்டது. மறுபடியும் தங்கள் கால்நடைகள், களவாடப்பட்ட பொருட்களைத் திரும்பப் பெற வேண்டுமானால், துப்புக் கூலி கொடுத்து பெறப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த பிரிட்டிஷ் அரசும், காங்கிரஸ் அரசும் பல அடக்கு முறைகளை கையாண்டும் தோல்வியைத்தான் தழுவியது.
 சுதந்திரத்திற்குப் பிறகு ஏறுதழுவுதல் தென் பாண்டி மண்டலத்தில் (மதுரை பகுதி) தமிழர் வழக்கு முறைப்படி நடந்து வந்தது.


2004 ஆண்டில் மறுபடியும் ஏறுதழுவுதல், பிராணிகள் நல வாரியம் மூலமாக பிரச்சனைகளை சந்தித்தது. தமிழர் பாரம்பரிய விளயாட்டிற்கு தடை உத்தரவு வழங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மதுரையிலிருந்து, தமிழர் வீர விளையாட்டு பேரவை, உச்ச நீதிமன்றதில் பதில் மனுவை தமிழக அரசுடன் இணைந்து போடப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து, தொன்மையான இவ்விளையாட்டிற்கு தடை விதிக்காமல் ,சில பரிந்துரைகளுடன் தொடர்ந்து நடத்த அனுமதியளித்த உச்ச நீதிமன்றம், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு சில பரிந்துரைகள் விதித்தது. அவை :


1. காளைகள் சட்டப் பிரிவின் பரிந்துரைப் படி, அவைகளுக்கேற்ற பிரிவின் கீழ் பிரித்து போட்டிகளில் பங்கு பெற வேண்டும்.
2. போட்டிகளில் பங்கு பெரும் காளைகள் பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்யவேண்டும். பிராணிகள் நல வாரியம் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி போட்டிகளை கண்காணிக்கும், இதனை மாவட்ட ஆட்சியாளர் உறுதி செய்ய வேண்டும்.
3. போட்டிகளுக்கான அனுமதி, நடப்பெறும் இடம், மேற்கொள்ளப் படும் பாதுகாப்பு வழிமுறைகளை ஒரு மாதத்திற்கு முன்பே மாவட்ட ஆட்சியர், மற்றும் பிராணிகள் நல வாரியத்திற்கு தெரியப்படுத்தி அனுமதி பெற வேணடும்.
4. போட்டியினை நடத்துபவர்கள் ரூபாய் 2 இலட்சம் முன் பணமாக, வீரர்களின் காப்பு நிதியாக பணம் கட்ட வேண்டும்.
5. போட்டிகள் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
6.காளைகளைப் பரிசோதிக்கவும், காளைகள் காயம் பட்டால் உடனடியாக மருத்துவம் செய்ய, கால்நடை மருத்துவ குழாம் போட்டிகள் நடக்கும் இடத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பரிந்துரைகளின் படி 2014 ஆண்டு வரை ஏறுதழுவதல் வெற்றிகரமாக நடைப்பெற்றது.


அடுத்து 2014, மே மாதம், ஜல்லிக்கட்டைத் தடை செய்தது உச்ச நீதிமன்றம். இதற்கு மூல காரணம், 2011ம் ஆண்டு, மத்திய அரசு வெளியிட்ட ஒரு அரசு ஆணை. அப்போதைய காங்., அரசு, ஜூலை, 2011ல் வெளியிட்ட, 'மிருகங்களை வதை செய்யக் கூடாது' என்கிற அரசு ஆணையில் உள்ள மிருகங்களின் பட்டியலில், காளையையும் சேர்த்து விட்டது; இதனால், ஜல்லிக்கட்டில் காளைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

இப்படியே ஏறுதழுவுதலுக்கான எதிர்த்தும், ஆதரித்தும் போராட்டங்கள் இன்று வரை தொடர்கிறது. இனி வரும் காலத்திலாவது, இதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவோம்.




(Source : https://theflashpointindia.wordpress.com/
Date : ஜனவரி 26, 2014)