எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 9 ஜனவரி, 2017

தோற்றம்

பலநாட்களாக ஒருவன் குருவை தேடி வந்தான். எங்கு சென்றாலும் அவனுக்கு குரு கிடைக்காத நிலை ஏற்பட்டது. சில ஆசிரமங்களுக்கு சென்றால் அங்கு மடாதிபதியாக இருக்கும் குருவை நெருங்க பல தடைகள் இருந்தது. தனக்கு அருகில் இருந்து கற்று கொடுக்கும் குருவை எதிர்பார்த்து ஏங்கினான்.
ஒரு ஞானி இருப்பதாக கேள்விப்பட்டு அவரிடம் சென்று தனது குருவை பற்றி கேட்போம் என எண்ணினான்.

ஞானியின் இருப்பிடத்திற்கு சென்று அவற்றை சந்திக்கும் பொழுது ஞானியோ கோமணத்தை கட்டிக்கொண்டு , வீட்டிற்கு முன்பு இருந்த சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரின் முழங்கால் வரை சாக்கடையும், சகதியுமாக இருந்தது. சாக்கடையை அவர் கலக்கி சுத்தம் செய்வதால் அந்த இடம் முழுவதும் ஒரே துர்நாற்றம் வீசியது.

ஞானியிடம் சென்றவன், "ஐயா, நீங்கள் மகா ஞானி என கேள்வி பட்டிருக்கிறேன். பல சித்திகள் உங்களிடம் உள்ளதாம். தயவு செய்து எனது குரு எங்கிருக்கிறார் என கூறுங்கள்" என்றான்.

ஞானி அவனைப்பார்த்து புன்னகைத்தவாரே, "எவன் ஒருவனுக்கு உடலை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கிறதோ , அவனை நெருங்கினால் ரோஜா பூவின் மனம் கமழுகிறதோ அவனே உனது குரு" என கூறினார்.



உடனே அங்கிருந்து புறப்பட்டு காடு மலை என அனைத்து இடங்களிலும் குருவை தேடி அலைந்தான். பல வருடங்கள் ஆனது. உடல் இளைத்து துரும்பனது. இதற்கு மேல் தேட முடியாத நிலையில் ஓர் மரத்தடியில் அமர்ந்தான். திடீர் என அவனது நாசியில் ரோஜா பூவின் நறுமணத்தை உணர்ந்தான். மரத்தின் பின்பகுதியில் கண்கள் கூசும் ஒளி வீசுவதை கண்டான்.

"எனது சிஷயனே உனக்காகவே காத்திருக்கிறேன் , வா எனதருகில் ..." என்னும் குரல் கேட்டது. மகிழ்ச்சியான மனமும் உற்சாகமான துள்ளலுடன் அருகில் சென்றான்.
அருகில் சென்று பார்க்கும் பொழுது , அங்கு அவனுக்கு வழி காட்டிய ஞானி உட்கார்ந்திருந்தார்.

கண்களில் நீர் வடிய கைகள் துடிக்க அவரின் கால்களில் விழுந்தான். பின்பு அவரிடம், "குருவே பலவருடத்திற்கு முன்பு உங்களிடம் வரும் பொழுதே ஏன் நீங்கள் தான் எனது குரு என கூறவில்லை? என்னை ஏன் காக்க வைத்தீர்கள்?" என கேட்டான்.

"குழந்தாய் நீ முதல் முறை வரும் பொழுதே என் உடலில் ரோஜாவின் சுகந்தமும் , உடலில் ஒளியும் வீசியது. அப்பொழுது நான் சாக்கடை சுத்தம் செய்து கொண்டிருந்ததால் உனக்கு என் மேல் கவனம் இல்லை. உனது அறியாமையால் அதை உணர முடியவில்லை. எனது குரு எங்கே என கேட்டாயே தவிர , நீங்கள் எனது குருவா ? என கேட்கவில்லை. அதனால் நான் உனக்கு குரு எங்கே என சொன்னேனே தவிர நானே உனது குரு என கூறவில்லை. பல வருட முயற்சியால் இப்பொழுது உனது அறியாமை அகன்றது , என்னை கண்டு கொண்டாய்" என கூறினார் ஞானி. சிஷ்யனின் மனதில் ஒளி வீச தொடங்கியது.

ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து அவரின் திறமையை எடை போடக்கூடாது.