ஒரு நாள் காட்டில் குட்டி குரங்கு ஒன்று இயற்கை அழகை வரைய விரும்பியது. மலை சார்ந்த இடத்திற்கு சென்று மலை, ஆறு, பறவை என்று அழகாக அனைத்து இயற்கை காட்சியையும் படம் போல் வரைந்தது. முதல் முறையாக வரைந்த படம் என்பதால் தனது நண்பர், உறவினரிடம் படத்தை காட்டி,
"நான் முதல் முறையாக வரைந்த படம். உங்கள் கருத்தை தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்க தவறாக அல்லது நன்றாக இல்லாததை சுட்டிக் காட்டினால், நன்றாக இருக்கும்" என்றது.
ஒவ்வொரு குரங்கும் தங்கள் கண்ணில் பட்ட குறைகளை எடுத்துக் கூறியது. ஒரு கட்டத்தில் குட்டி குரங்குக்கு நம்பிக்கையற்று போனது. இனி நம்மால் எந்த ஓவியமும் வரைய முடியாது என்று நம்பிக்கை இழந்தது. தனியாக அழுதுக் கொண்டு இருந்தது. அப்போது, அதற்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுத்த குருநாதர் வருகிறார். "தாங்கள் கற்றுக் கொடுத்த ஓவியம் பயனில்லாமல் போயிவிட்டது. அனைவருக்கும் பிடித்ததுப் போன்ற ஓவியத்தை என்னால் வரைய முடியவில்லை" என்று வருந்தியது.
குருநாத குரங்கு எவ்வளவு சொல்லியும் அது ஆறுதல் அடையவில்லை. குரு குரங்கு அந்த ஓவியத்தை மீண்டும் நண்பர்கள், உறவினர்களிடம் எடுத்து சென்றது. "இந்த ஓவியத்திற்கு தாங்கள் கூறிய கருத்து உதவியாக இருந்தது. ஆனால், எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் வரைந்து காட்டினால், இந்த ஓவியத்தை சரி செய்துக் கொள்ள உதவியாக இருக்கும்" என்று குரு குரங்கு கூறியது.
குறை கூறிய எந்த குரங்கும் அந்த ஓவியம் எப்படி இருக்க வேண்டும் வரைய முடியவில்லை.
பிறரின் செயல்களையும், திறனையும் குறைக் கூறுவது மிக எளிது. ஆனால், அதற்கான செயல் திட்டம், திறன் நம்மிடம் இல்லாத பட்சத்தில் குறைக் கூறக்கூடாது.