எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 27 ஜனவரி, 2017

சிறந்த பாடம் !!!

உளவியல் அறிஞர் ஒருவர் கணினி துறை ஊழியர்களுக்கு மன இறுக்கம் குறித்து பாடம் எடுத்து கொண்டிருக்கிறார். சாதரணமாக அனைவரிடமும் கலந்துரையாடிக் கொண்டே மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஜாடியின் மூடியை திறந்து பக்கத்தில் வைத்திருந்த கண்ணாடி குடுவையில் தண்ணீரை ஊற்றினார்.

குடிப்பதற்கு தான் தண்ணீர் ஊற்றுகிறார் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் அதை குடிக்காமல் கையில் எடுத்து அனைவருக்கும் தெரியும்படி உயர்த்தினார். "என் கையில் வைத்திருக்கும் தண்ணீரின் அளவு எவ்வளவு இருக்கும்?" என வினவினார். எல்லோரும் ஒவ்வொரு அளவை சொன்னார்கள்.


கடைசியில், "நீங்கள் கூறும் அளவுகளில் ஏதேனும் ஒன்றாக தான் நிச்சயம் இருக்கும். ஆனால் நான் இதை எவ்வளவு நேரம் இதை இப்படியே கையில் உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்க இயலும். ஒரு நிமிடம் வைத்திருந்தால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு மணி நேரம் வைத்திருந்தால் என் கை வலிக்கும். ஆனால் நான் இதை நாள் முழுக்க இப்படியே வைத்திருந்தால் என் நிலை என்ன ஆகும் என யோசியுங்கள். 

நம் கவலையும் இப்படி தான். ஒரு சில வினாடிகள் நினைத்து வருந்தினால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு சில மணி நேரம் என்றால் மனதை பாதித்துவிடும். எப்பொழுதுமே நினைத்துக் கொண்டிருத்தால் நமது வாழ்வின் ஏற்றத்தையே அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்" என்று கூறி தன் உரையை முடித்தார். இந்த உரையை கேட்ட அரங்கம் கைதட்டல்களால் நிரம்பியது. 


பல மணி நேர மகிழ்ச்சியை அழிக்கும் திறன் ஒரு நிமிட கவலைக்கு உண்டு. மனதின் கவலையை தூர எறியுங்கள். ஒவ்வொரு வினாடியும் கொண்டாடுங்கள்.