எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 3 ஜனவரி, 2017

மன அமைதி !!!

ஒரு சக்கரவர்த்தி தன் அன்றாட வேலைகளைச் செய்வதில் முழு கவனத்தோடு ஈடுபட முடியாமல் தவித்தார். உள்நாட்டுப் பிரச்சினைகள், நிர்வாகப் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள், அவ்வப்போது முடிக்க வேண்டியிருந்த அவசர வேலைகள் என பல விஷயங்களை அவர் கவனிக்க வேண்டி இருந்த்து. முழு கவனத்தோடு எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகி தீர்க்க வேண்டி இருந்தது.  அதற்கு மன அமைதி முக்கியத் தேவையாக இருந்தது. மன அமைதி இல்லாத போது எதிலும் முழுக் கவனம் செலுத்துவது முடியாத காரியமாக இருந்தது.

இந்த சிக்கலை எப்படித் தீர்ப்பது என்று ஆலோசித்தவர் தன் மந்திரியை அழைத்துச் சொன்னார். “தினசரி நாலா பக்கங்களில் இருந்தும் நான் கவனிக்க வேண்டிய வேலைகளும், பிரச்சினைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த நேரங்களில் அவற்றைச் சரியாகக் கையாளத் தேவையான  அமைதி இல்லாமல் தவிக்கிறேன். அதனால் அந்த நேரத்தில் பார்த்தவுடன் அமைதி கிடைக்கும் ஏதாவது ஓவியம் என் முன் இருந்தால் அதைப் பார்த்து நான் என் அமைதியை மீட்டுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நம் நாட்டில் உள்ள ஓவியர்களில் சிறந்த ஓவியரைத் தேர்ந்தெடுத்து “உண்மையான அமைதி” என்ற தலைப்பில் எனக்காக ஒரு ஓவியம் வரையச் சொல்லுங்கள்.”

மந்திரி நாட்டில் உள்ள தலை சிறந்த ஓவியர்களைப் பற்றி விசாரித்தார். மூன்று ஓவியர்களைத் தேர்ந்தெடுத்தார். மூவரும் மிக நல்ல ஓவியர்கள் எனப் பேரெடுத்தவர்கள். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது. அரசரிடம் அதைச் சொல்ல அரசர் மூவரிடமும் ஓவியம் வரையச் சொல்லலாம் என்றும் அந்த மூன்று ஓவியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் சொன்னார்.

மூன்று ஒவியர்களும் அரண்மனைக்கு வரவழைக்கப் பட்டார்கள். அரசரின் தேவை அவர்களுக்குச் சொல்லப்பட்டது. மூவரும் அரண்மனையில் இருந்தபடியே ‘உண்மையான அமைதி’ என்ற தலைப்பில் ஓவியம் வரைய ஆரம்பித்தனர். அவர்கள் வரைந்து முடித்த பின் அரசரும் மந்திரியும் ஓவியங்களைப் பார்வையிட வந்தனர்.

முதல் ஓவியம் மலைகள் சூழ இருந்த அமைதியான பெரிய குளத்தினுடையதாக இருந்தது. மிக அமைதியான ஒரு சூழ்நிலையை அந்த ஓவியம் வெளிப்படுத்தியது.


இரண்டாவது ஓவியம் பனி மழை பெய்து முடிந்த பின் அமைதியாக இருந்த பனி மலையினுடையதாக இருந்த்து. சத்தங்களும் உறைந்து போனது போன்ற பேரமைதியான ஒரு சூழ்நிலையை  அந்த ஓவியம் சித்தரித்தது.

மூன்றாவது ஓவியம் ஒரு பெரிய நீர்வீழ்ச்சியுடையதாக இருந்தது. அதைக் கண்டதும் மந்திரி சொன்னார். “நாம் சொன்னதை இந்த ஓவியர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போல இருக்கிறது. இதை விட்டு விட்டு முதல் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்”

“ஒரு நிமிடம் பொறுங்கள்” என்ற சக்கரவர்த்தி அந்த ஓவியத்தை சிறிது ஆராய்ந்து விட்டு ’இந்த ஓவியம் தான் நான் எதிர்பார்த்தது” என்று சொல்ல மந்திரிக்கு குழப்பமாக இருந்தது. “சக்கரவர்த்தியே இதில் அமைதி எங்கே இருக்கிறது. தடதடவென்று சத்தத்துடன் விழுந்து கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சி அமைதிக்கு எதிராக அல்லவா தோன்றுகிறது” என்று தன் அபிப்பிராயத்தைச் சொன்னார்.

சக்கரவர்த்தி சொன்னார். “இந்த ஓவியத்தில் நீர்வீழ்ச்சி பிரதானம் அல்ல. நன்றாகப் பாருங்கள்”

மந்திரி நிதானமாக அந்த ஓவியத்தை ஆராய்ந்தார். அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தின் ஒரு கிளையில் இருந்த கூட்டில் ஒரு பறவை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

சக்கரவர்த்தி, ”குளத்தின் அமைதி கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தான். ஆனால் குளம் மேற்பார்வைக்குத் தான் அமைதியாக உள்ளதே ஒழிய அதன் அடியில் எத்தனையோ நீரோட்டங்களும், அமைதியின்மையும் இருக்க வாய்ப்புண்டு. வெளியே மட்டும் தெரியும் அமைதி அடுத்தவர்க்கு தெரிவது. உள்ளே உள்ள குழப்பங்களையும் கொந்தளிப்புகளையும் மறைப்பது. அந்த புற அமைதி மட்டும் நமக்குப் போதுமானதல்ல என்பதால் அது தேர்ந்தெடுக்கப் படவில்லை.


பனிமலையின் அமைதி குளத்தின் அமைதியை விட உத்தமமானது. அதன் உள்ளேயும் அமைதி தான். ஆனாலும் அந்த அமைதியும் தற்காலிகமானது. எந்த நேரமும் ஒரு பனிப்புயல் வரலாம். அந்த நேரங்களில் அந்த அமைதி காணாமல் போகலாம். இப்போதைய தோற்றம் முழுவதும் பனிப்புயலின் பின் மாறிப் போகலாம். எனவே தற்காலிக அமைதியும் நமக்குப் போதுமானதல்ல என்பதால் அதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.


நீர்வீழ்ச்சி எப்போதும் விழுந்து கொண்டிருப்பது. அதன் சத்தமும் எப்போதும் இருந்து கொண்டிருப்பது. பக்கத்தில் அத்தனை இரைச்சல் இருந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் உறங்கிக் கொண்டிருக்கும் அந்த பறவையிடம் உண்மையான அமைதி இருக்கிறது. இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்” என சொன்னார்.  அந்த ஓவியமே அரசர் பார்வையில் இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது.



கடமைகளும், வேலைகளும், சரி செய்ய வேண்டிய பிரச்சினைகளும் தினமும் நம்மை அணுகிய வண்ணம் இருக்கின்றன. அமைதியுடனும் கவனத்துடனும் செய்தால் வாழ்க்கை சிறப்பாகவும், நிறைவாகவும் இருக்கும். ஆனால் பல சமயங்களில் அப்படிச் செய்ய முடியாமல் தடுமாறிப் போகிறோம்.

நம்மைச் சுற்றி எங்கும் அமைதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண். அது இயற்கையில் சாத்தியமில்லை. அந்த தொடர் நீர்வீழ்ச்சியைப் போல அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருந்து கொண்டே இருக்கிறது. அது ஓய்வதில்லை. அந்த வேலைகளுக்கு இடையேயும், அந்தப் பறவையின் அமைதியான உறக்கம் போல, நம் உள் மனம் அமைதியாக இருக்குமானால் அதை விடப் பெரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது. அந்த அமைதியின் முத்திரை நாம் செய்கின்ற செயலின் சிறப்பில் கண்டிப்பாக வெளிப்படும்.