எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

கோணம்!!!

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தை சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவர்கள் தங்கியிருந்த ஊரின் தலைவருக்கு அறிஞரைப் பிடிக்காது. அவரை எப்படியாவது பிறர் முன்பு மட்டம் தட்டி தலைகுனிவை ஏற்படுத்த விரும்பினார். 

ஒருநாள் ஊர்த்தலைவர் அறிஞரைப் பார்த்துக் கிண்டலாக, ”ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார்.


அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” எனக் கேட்டார்.
பையன் ”தங்கம்” என சொன்னான். அவர், ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” எனக் கேட்டார்.

பையன், ”தினமும் நான் பள்ளி செல்லும்போது ஊர்த்தலைவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறுகையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். 


இது ஓராண்டாக நடக்கிறது. இதனால் தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான் நான் மதிப்பு வாய்ந்தது வெள்ளி என்று கூறினேன்” என்று விளக்கம் அளித்தான். இதைக் கேட்ட அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். அதை வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

திங்கள், 6 பிப்ரவரி, 2017

சமநிலை !!!

ஒரு ஞானி கடவுளை தேடி நாடுநாடாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவர் பல குருமார்களை சந்தித்தார். ஆனால் எதுவும் அவருக்கு திருப்தியளிக்க வில்லை. இதயத்தை அர்ப்பணிக்க கூடிய இடத்தை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏமாற்றத்தோடும் நிராசையோடும் அவர் வெளியே குருவை தேடுவதை நிறுத்தி விட்டு உள் குரலை கேட்பது என்று முடிவு செய்து, தனித்து இருப்பதற்காக காட்டுக்குச் சென்றார்.

அங்கு அவர் ஒரு மிக அழகான தேக்கு மரக் கூட்டத்தை கண்டார். பழமையான வயதான பல தேக்கு மரங்கள் ஒன்று கூடி ஒரு கூடாரம் போல உருவாகியிருந்தன. அதன் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயற்கையின் மழை, காற்று, வெயில் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாகியிருந்தது. அருகில் ஒரு ஏரி இருந்தது. அந்த கூடாரம் மிகவும் அமைதியானதாக, காட்டின் நடுவில் யாரும் வராத இடத்தில் இருந்தது.



அந்த ஞானி அதனுள் சென்றார். அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்தது. அதற்கே உரிதான அழகுடன் அந்த இடம் இருந்தது. அவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். வாரத்திற்கு ஒருமுறை அவர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பக்கத்து கிராமத்துக்குப் போய் கொஞ்சம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார். ஞானி கடவுளின் பெயரை மாதக்கணக்கில் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். அவர் மிகவும் அமைதியாகவும், சாந்தமானவராகவும், தன்மையானவராகவும், மாறுவதை அவர் உணர ஆரம்பித்தார். ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது போதாது.  முக்தி நிலை, ஞானமடைதல் அதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டும். 

வருடங்கள் கடந்தன. அந்த கூடாரம் ஒரு தூய்மையான இடமாக மாறி விட்டது. தேக்கு மரங்கள் மிகவும் வளமடைந்தன. அவை புதிதாக நிறைய கிளைகள் விட்டு, இலைகள் விட்டு செழிப்படைந்தன. அந்த கூடாரமே அழகால் நிரம்பியிருந்தது. ஆனால் அவரின் இதயம் மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் காத்துக் கொண்டேயிருந்தார். அவர் அவரால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து விட்டார். பதினெட்டு வருடங்கள்  கடந்துவிட்டன. ஆனால் அவர் முக்தி நிலை பெறவேயில்லை. அவர் ஆழ்ந்த மௌனத்திலும் அமைதியிலும் இருந்தார். ஆனாலும் அவர் ஞான நிலை கிட்ட வில்லை. எதுவும் அவருக்கு நிகழவில்லை.

ஒரு நாள் நடு இரவில் திடீரென அவருக்கு ஒரு பயம் எழுந்தது. அவர் சிந்தித்து பார்க்க ஆரம்பித்தார். "இந்த தேக்கு மரக் கூட்டம் எப்படி மழையையும், வெயிலையும் உள்ளே அனுமதிப்பதில்லையோ, அது போல எனது பிரார்த்தனையையும் வெளியே போக அனுமதிப்பதில்லையோ?  இதன் கிளைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் எனது பிரார்த்தனைகள் உள்ளேயே நின்று
விடுகின்றதோ? இறைவனை போய் சேர வில்லையோ? எப்படி சூரிய ஒளி இந்த கூடாரத்துக்குள் ஊடுருவ முடிந்ததில்லையோ, அது போல எனது பிரார்த்தனை இறைவனைப் போய் சேர வில்லையோ?" என நினைத்தார்.


பயந்து போய் நட்ட நடு இரவில் இருளில் உடனே அந்த கூடாரத்தை விட்டு தப்பியோடி விட்டார். ஆனால் அதே சமயத்தில் அந்த அடர்ந்த
மரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஒரு பிச்சைக்காரன் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்க்கு போய் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு காட்டிற்க்குள் போக வேண்டுமென்ற தீவிர வேட்கை எங்கிருந்தோ தோன்றியது. 

"எதற்காக காட்டிற்க்குள் போக வேண்டும்?  அது ஆபத்தானது. அங்கென்ன வேலை?" என நினைத்தான். ஆனால் ஏதோஒன்று அவனை இழுத்தது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் பைத்தியம் பிடித்தாற்போல காட்டிற்க்குள் ஓடலானான். அவன் அந்த மரக்கூடாரத்தை நெருங்கியவுடன் அவனுக்கு புரிந்தது. அந்த மரக்கூடாரத்திலிருந்து "என்னிடம் வா" என ஒரு மெல்லிய குரல் வந்தது. 

அவன் அந்த மரத்தைச் சுற்றி ஒரு அதிர்வலை இருந்ததை உணர்ந்தான். இப்போது அந்த பயம் போய் விட்டது. அவன் அந்த
மரக்கூடாரத்தினுள் நுழைந்தான். நுழைந்த அந்த கணமே அந்த நிலைமாற்றமடைந்தான். ஒரு புதிய மனிதனாக பரிமணித்தான். அவனால் அவனை நம்பவே முடிய வில்லை. உண்மையில் அவன் கடவுளைப்பற்றி எனக் குறிப்பாக எதையும் நினைத்தது கிடையாது. மதத்தைப்பற்றி எந்த கொள்கையும் கிடையாது. என்ன நடக்கிறதென்றே அவனுக்கு புரியவில்லை. நிலைமாற்றமடைந்த அவன் பல்லாயிரம் தடவை அன்றைய இரவில் இறந்து பிறந்தான். பதினெட்டு வருடங்கள் அந்த சாதகன் அங்கே இருந்தான். எதுவும் நடக்கவில்லை. பதினெட்டு மணி நேரங்களில் அந்த பிச்சைக்காரன் புத்தனாகி விட்டான். அவன் எதுவும் செய்யவில்லை. 


பதினட்டு வருடங்கள் முயற்சி செய்தவனுக்கு எதுவும் நிகழ வில்லை, பிரார்த்தனையே செய்யாதவனுக்கு பதினட்டு மணி நேரங்களில் எல்லாமும் கிடைத்து விட்டது. இந்த கதையின் பொருள் என்ன? அந்த சாதகன் அதிகப்படியாக செய்தான். அவன் தன்னை சமமாக நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. அவன் அதிகமாக செய்தது எதுவும் செய்யாதது போன்றதுதான். அடைவதற்கான பேராசையினால், லட்சியத்தினால், அவன் எல்லைக்கே சென்று விட்டான்.

எப்போதெல்லாம் நீங்கள் மிகவும் செயல்படுபவனாக இருக்கிறீர்களோ, அப்போது இந்த உலகின் விஷயங்கள் அனைத்தும் ஒத்துவரும். ஆனால் அக உலகின் விஷயங்கள் நிகழாது போய் விடும். ஏனெனில் நீங்கள் மிகவும் பதற்றத்தோடும், தவிப்போடும் இருப்பதால் ஏற்றுக் கொள்வதற்க்குரிய நிலையில்லாமல் போய்விடுவீர்கள். செயலுக்கும் செயலற்ற நிலைக்கும் இடையில் சமனோடு யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் பெற்றுக் கொள்ள முடியும்.

சனி, 4 பிப்ரவரி, 2017

மனநிலை!!!

ஒரு முறை மாவீரன் நெப்போலியன் ரஷ்ய நாட்டின் மீது படையெடுத்தான். அப்போது தன் படை வீரர்களிடம் இருந்து அவன் பிரிந்துவிட்டான். அச்சமயம், ரஷ்ய போர் வீரர்கள் அந்தப் பக்கமாக வந்தனர். அவர்களை நெப்போலியன் கண்ட உடனே அங்கிருந்த கடைக்குள் புகுந்தான். அது ஒரு தையற்கடை. அந்த தையற்காரனிடம், தன்னை காப்பாற்றும்படி வேண்டினான். கடைக்காரனுக்கு ரஷ்ய வீரர்களைக் கண்டால் பிடிக்காது. எனவே, அவனுக்கு உதவி செய்ய சம்மதித்தான். அவன் நெப்போலியனை பெரிய பாயில் படுக்க வைத்தான். அதை சுருட்டி ஒரு மூலையில் வைத்தான்.

ரஷ்ய வீரர்கள் அவனுடைய கடைக்குள் புகுந்தனர். நெப்போலியன் அங்கு ஒளிந்து கொண்டிருக்கிறானா என்று கேட்டனர். தையற்காரன், "இங்கு யாரும் வரவில்லை'' என்றான். ரஷ்ய வீரரின் பார்வையில் மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாய் பட்டது. உடனே தன் வாளை உருவி பாய்ச் சுருளைக்குள் சொருகினான். நல்லவேளையாக அது நெப்போலியன் உடம்பினுள் பாயவில்லை. பிறகு ரஷ்ய வீரர்கள் வெளியே சென்றனர். அச்சத்துடன் இருந்த நெப்போலியன் பாயிலிருந்து வெளியே வந்தான். தையல்காரனை நன்றி உணர்வோடு பார்த்தான்.


பிறகு தையற்காரனிடம், "நான் பிரான்ஸ் நாட்டின் பேரரசன். என்னைக் காப்பாற்றியதற்காக மூன்று வரங்கள் தருகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றான். தையற்காரன் சரியான முட்டாள். "இக்கட்டடத்தின் கூரைப் பகுதி மழைக் காலத்தில் ஒழுகுகிறது. அதைச் சரி செய்ய வேண்டும்'' என்றான். ஆத்திரம் வந்தது நெப்போலியனுக்கு, "அது சரி செய்யப்படும். நீ நல்ல வரமா கேள்'' என்றான். 

"இந்தச் சாலையின் கீழ்க் கோடியில் இன்னொரு தையற்கடைக்காரன் உள்ளான். அவனால் என் பிழைப்பு கெடுகிறது. அவனை வேறு ஓர் இடத்திற்குப் போகும்படி செய்ய வேண்டும்'' என்றான். நெப்போலியனுக்கு அவனது முட்டாள்தனத்தை எண்ணி ஆத்திரம் பொங்கியது.
"சரி! அது நிறைவேற்றப்படும்! நீ எதைக் கேட்டாலும் என்னால் தர முடியும். நீ ஒரு பேரரசனிடம் கேட்கிறாய் என்பதை அறிந்து மற்றவர்களிடம் கேட்க முடியாததைக் கேள்'' என்றான் நெப்போலியன்.

"ரஷ்ய வீரர்கள் நீங்கள் ஒளிந்து கொண்டிருந்த பாயில் வாளைச் சொருகிய போது நீங்கள் எந்த மன நிலையில் இருந்தீர்கள்?'' என்றான். இதைக் கேட்டதும் கோபம் தலைக்கேறி, "ஏய் நீ ஒரு முட்டாள்! இந்தக் கேள்வியை எப்படி என்னிடம் கேட்கலாம். உன்னை தண்டிக்கப் போகிறேன்!'' என்று கத்தினான் நெப்போலியன்.

அச்சமயம் நெப்போலியனைத் தேடி அங்கு பிரெஞ்சு வீரர்கள் வந்தனர். அவர்களிடம், "இந்தத் தையற்காரனை சுட்டுக் கொல்லுங்கள்'' என்று கட்டளையிட்டான். உடனே வீரர்கள் தையற்காரனை வெளியில் இழுத்துச் சென்று சுவரின் முன்னால் நிற்க வைத்தனர். அப்போது தையற்காரனுக்கு உடல் வெலவெலத்தது. வியர்வைக் கொட்டியது. மனம் படபடத்தது. அவன் மன்னிப்பு கேட்கும் முன்னர் நெப்போலியன் அங்கிருந்து சென்றான்.


தையற்காரனை குறி வைத்து வீர்கள் "ஒன்று, இரண்டு'' என்று சொன்னார்கள். மூன்று சொல்லுவதற்குள், "நிறுத்து!'' என்ற குரல் கேட்டது.
அங்கு நெப்போலியனின் உதவியாளன் வந்தான். "பேரரசர் இவனை மன்னித்துவிட்டார். இவனை விட்டு விடுங்கள்'' என்று கூறி ஒரு துண்டு சீட்டை தையற்காரனிடம் தந்தான். அதில், "நான் எப்படிப்பட்ட மன நிலையில் இருந்தேன் என உனக்கு இப்போது புரிந்திருக்கும்!'' என்று எழுதியிருந்தது.

சந்தர்ப்பம் கிடைக்கும் போது  அதை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள தெரிய வேண்டும்.


வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பாவ கணக்கு!!!

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானம் அளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். அதிலும் குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன். ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அவன் தானம் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது.

 மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது. சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு வெளியூர்காரன் அதனால் இறந்து போனான். இறந்தவன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அவன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! 


பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்த மனிதனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். 

யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் “சித்திரகுப்தா! இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்” என்றான். "சரி" என்று சித்திரகுப்தனும் திரும்பினான். சில நாட்கள் கழித்து, அதே நாட்டிற்கு நான்கு வெளியூர்காரர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். 


அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலை நீட்டிக் காட்டினாள். பின்பு, அவள் அந்த வெளியூர்காரர்களிடம், ”கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் வெளியூர்காரர்கள்களை சாகடிப்பது போலத் தெரிகிறது” என்றும் சொன்னாள். அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நமக்கு சம்பந்தம் இல்லாத, துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் பேசக்கூடாது. சிலருக்கு இது சுவராஸ்யமான விசயமாகும். ஆனால் அது பலருக்கு பல விதமான இன்னல்களை விளைவிக்கிறது என்று புரளி பேசுவோர் உணர்வதில்லை. 


வியாழன், 2 பிப்ரவரி, 2017

பணமும்... வாழ்க்கையும்...

பத்திரிக்கையில் வேலை செய்யும் ஏழை ஒருவன். அவனுக்கு ஒரு மனைவி, உடல் நலக்குறைவுடன் பேச முடியாத ஒரு குழந்தை. தனது  குழந்தைக்கு மருத்துவம் செய்யக்கூட அவனிடம் காசு இல்லை. பத்திரிக்கை அதிபரோ உதவவில்லை. ஒருநாள் அவனுக்கு அவசரமாக நூறு ரூபாயவது தேவைப்படுகிறது. நண்பர் 50 ரூபாய் கொடுக்கிறார். காரணம் ஏற்கனவே நிறைய வாங்கி விட்டான். 

அடுத்த நாள், “ குழந்தையிடம் காசு ஏதாச்சும் கொடுத்தீங்களா? “ என கேட்க்கிறாள் அவன் மனைவி. "என்னிடம் ஏது காசு? நான் கொடுக்கவில்லையே!" என்கிறான் அவன். குழந்தை கையில் நூறு ரூபாய் இருந்ததாக சொல்லி மனைவி பணத்தை அவனிடம் கொடுக்கிறாள். "எப்படி அந்த காசு வந்தது?" என அவர்களுக்கு புரியவில்லை. ஆனாலும், 'எப்படியோ காசு வந்தால் சரி' என நினைத்துக்கொண்டு அதை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.


இன்னொரு முறை 500 ரூபாய் தேவைப்படுவதாக புலம்புகிறான். அடுத்த நாள் பார்த்தால் , குழந்தை கையில் 500 ரூபாய் இருக்கிறது.
"இதெல்லாம் எப்படி வருகிறது?" என இருவருக்கும் புரியவில்லை. பழைய டீவியை மாற்றி எல் சி டி வாங்கினால் நன்றாக இருக்குமே என புலம்புகிறான். அடுத்த நாள் குழந்தை கையில் அதற்கு தேவையான பணக்கட்டு இருக்கிறது. தேவைப்படும்போதெல்லாம் காசு வருகிறது. குழந்தை கையில் யாராவது வைக்கிறார்களா என சோதித்துப் பார்க்கிறார்கள். ஒரு நாள் முழுக்க விழிப்பாக கவனிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை.  

இதற்கிடையில் , குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க கணவன் தாமதம் செய்வதை மனைவி கண்டிக்கிறாள். 'குழந்தை சரியாகி , பேச ஆரம்பித்தால், காசு எப்படி வருகிறது என சொல்லி விடுமோ?' என பயப்படுவதாக குற்றம் சாட்டுகிறாள். அதில் இருக்கும் உண்மை கணவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. 


ஒரு கட்டத்தில் அந்த பத்திரிக்கை அதிபர் பத்திரிக்கை நடத்த முடியாமல் , இவனை நடத்த சொல்கிறார். அவனிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட நிபந்தனை விதிக்கிறான். அது ஏற்கப்படுகிறது. சில நாட்கள் கழித்து, தன் மனைவியின் விருப்பத்திற்காக குழந்தைக்கு வைத்தியம் பார்க்க முடிவு செய்கிறான் அவன். ஆனால், அந்த குழந்தையின் நோய்க்கு சிகிச்சை செய்ய அந்த ஊரில் டாக்டர்கள் இல்லை. கல்கத்தாவிற்கு போக வேண்டும். விமானத்தில் கிளம்ப அவனும், குழந்தையும் தயார் ஆகிறார்கள். வேண்டுமென்றே விமானத்தை தவற விடுகிறான். மனைவி திட்டுகிறாள். கடைசியில் ஒரு வழியாக கல்கத்தா செல்கிறான்.

டாக்டர் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு , வெகு நேரம் கழித்து பேயறைந்த முகபாவத்துடன் வெளியே வருகிறார். "இத்தனை நாள் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாய்? ஏன் முன்பே வரல?" என கடுமையாக திட்டுகிறார். "என்ன ஆச்சு?" பதறுகிறான் அவன். குழந்தை இறந்து வெகு நாட்கள் ஆகின்றன என்கிறார் டாக்டர். அந்த குழந்தை இறந்து ஒரு பண மெஷினாக மாறிவிட்டது. 



நாமும் அப்படித்தான் மாறி விடுகிறோம். வெகு சிலர்தான், சுயநலம் மறந்து பண மெஷினாக மாறாமல் மற்றவர்களுக்காக உழைக்கிறார்கள். வாழ்வதற்கு பணம் சம்பாதிக்கணுமேயன்றி, பணத்தை வாழ்க்கையாக பார்க்கக் கூடாது. பணத்தை விட அன்பு, பாசம், கருணை, மனிதாபிமானம், இரக்கம் போன்ற குணங்களுக்கு மதிப்பு அதிகம்.