எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 1 பிப்ரவரி, 2017

எண்ணங்களின் சக்தி!!!

ஒருநாள் அரசனும், மந்திரியும் நகர்வலம் வந்து கொண்டிருந்தார்கள். நகரின் ஒரு குறிப்பிட்ட கடையின் அருகில் வந்ததுமே, "மந்திரியாரே! ஏனோ தெரியவில்லை. இந்தக் கடைக்காரனை கொன்றுவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது. ஆனால் இவன் எனக்கு யாரென்றுகூடத் தெரியாது; பேரும் அறிய மாட்டேன்!'' என்றான். மந்திரி வியப்புற்று யோசிக்கும்போதே கடையைக் கடந்து விட்டிருந்தனர் இருவரும். மறுநாள், மந்திரி மட்டுமே, மாறுவேடத்தில் அந்தக் குறிப்பிட்ட கடைக்கு வந்தான். 



அந்த கடைக்காரனிடம் சாதாரணமாகப் பேசினான். "எப்படி வியாபாரம் நடக்கிறது?" என்று கடைக்காரனிடம் யதார்த்தமாய் கேட்க, உரிமையாளனும், வருத்தத்துடன், "என் கடையில் வியாபாரமே இல்லை! நிறைய பேர் வருகிறார்கள். என் கடையில் உள்ள சந்தனக் கட்டைகளை முகர்ந்து நல்ல மணம் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் யாரும் வாங்குவது மட்டுமில்லை... 'சந்தனக்கட்டைகளை யார் வாங்க முடியும், அரச குடும்பம் தவிர...' என்கின்றனர். ஒருவேளை இந்த நாட்டின் மன்னன் இறந்தால், இல்லை அரண்மனையில் யாரேனும் மரணித்தால், என் சந்தனக் கட்டைகளை பிணத்தை எரிக்க வேண்டி அதிகம் வாங்குவர். நல்ல விலைக்கு விற்பேன். என் கஷ்டமும் தீரும்'' என்றான். 

இதைக் கேட்டதுமே, அமைச்சருக்கு முதல் நாள் அரசன் தன்னிடம் சொன்னதற்கான காரணத்தை உணர்ந்தான். இந்தக் கடைக்காரனின் தீய எண்ணமே, மன்னனுடைய மனதில் எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தி, அவனை அறியாமலேயே 'கொல்ல' தூண்டியுள்ளது என்று உணர்ந்தான். இதை சுமூகமாகத் தீர்க்க நினைத்த மந்திரி, கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலை கொடுத்து வாங்கினான். 



அவற்றை, அரசனிடம் எடுத்துச் சென்று இதை, அந்தக் கடைக்காரன், பரிசுப் பொருளாகத் தந்தனுப்பியதாகச் சொல்லி அரசனிடம் அந்த மரத்துண்டங்களைத் தந்தான். நல்ல மணம் வீசிய அந்த சந்தன மரத்துண்டுகளைப் பார்த்த அரசன், 'இவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏன்தான் தனக்கு வந்ததோ?' என்று வெட்கப்பட்டான். அரசன் சில பொற்காசுகளை மந்திரி மூலம் அந்தக் கடைக்காரனுக்கு அனுப்பி வைத்தான். 

மந்திரி மூலம் வந்த பொற்காசுகளைப் பெற்றவன், 'இத்தனை நல்ல மன்னனைத் தன் சுயநலத்துக்காக செத்துப் போக வேண்டும். அவன் அரண்மனையில் மரணம் நிகழ வேண்டும் என்று மிகக் கொடூரமாய் எண்ணினோமே' என்று வெட்கி மனம் குன்றினான். இறுதியில் மனந்திருந்தி தீய எண்ணங்களை விட்டொழித்தான். சில நாள்கள் கழித்து அதே கடையருகே உலா வருகையில் அரசர், கடைக்காரன் இருவர் மனத்திலும் நல்ல நட்பான எண்ணமும், புன்னகையும் மலர்ந்தது.

எண்ணங்கள் வலுவானவை. நம்மை வழி நடத்துவையும் அவையே. ஒருவர் கொண்டிருக்கும் எண்ணங்களே, அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என்பதை உறுதி செய்யும். நாம் பேசும் வார்த்தைகளுக்கு மட்டுமில்லை, மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் கூட பிறரை  காயப்படுத்தும் சக்தி உள்ளது.

   

செவ்வாய், 31 ஜனவரி, 2017

அன்பின் வலிமை!!!

ஊரின் ஒதுக்குப்புறத்தில், குடில் அமைத்து தங்கியிருந்தார் ஒரு துறவி. அவரைப் பார்க்க பலர் வருவார்கள். தங்கள் மனக் கவலையைப் போக்கும் அந்த துறவிக்கு, தட்சணையாக சில பொருட்களையோ, பணமோ வழங்கிவிட்டுச் செல்வார்கள். துறவி தன்னுடைய பணிகள் முடிந்ததும், இரவு நேரங்களில் விளக்கொளியில் அமர்ந்து, சிறந்த ஞான நூல்களை வாசிப்பார். அந்த நூல்களில் கூறியிருக்கும் உண்மை நிலையை ஆராய்ந்து பார்ப்பதே அவரது வாடிக்கையாக இருந்தது.

ஒரு நாள் இரவு, அவர் நூல்களை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த குடிலுக்குள் ஒரு திருடன் நுழைந்தான். சப்தம் வராத அளவுக்கு அவன் மிக எச்சரிக்கையாக இருந்தும் கூட, அவனது கால் பட்டு குடிலுக்குள் இருந்த ஒரு பொருள் உருண்டு சப்தத்தை உண்டாக்கியது.

சப்தம் கேட்டு திரும்பிய துறவி, ‘ஓசை எழுப்பாதே! நூலின் மீதான என் கவனம் சிதறுகிறது’ என்று சொல்லி விட்டு, மீண்டும் நூலைப் படிப்பதில் கவனம் செலுத்தினார்.

துறவியின் அந்த வார்த்தையைக் கேட்டு பயந்து போன திருடன், தான் இடுப்பில் வைத்திருந்த கூரான கத்தியை எடுத்தான். அப்போது துறவி அவனைப் பார்க்காமலேயே, ‘உனக்கென்ன வேண்டும்? பணமா? அது அந்த இழுப்பறையில் இருக்கிறது, எடுத்துக்கொள்!’ என்று இழுப்பறை இருந்த திசையை நோக்கி கையைக் காட்டினார்.



சற்றே திகைப்பில் ஆழ்ந்தாலும், கையில் கத்தியைப் பிடித்தபடியே சுதாரிப்புடன், இழுப்பறை இருந்த திசைக்கு நகர்ந்தான் திருடன். பின்னர் அந்த இழுப்பறையில் தன் கையை வைத்தான். அப்போதும் அந்தத் துறவி தலை நிமிராமல், ‘மெதுவாக இழு. இழுப்பறை விழுந்து விடப் போகிறது’ என்று கூறியபடி, மீண்டும் நூலை ஆராயத் தொடங்கினார்.

திருடனுக்கு மேலும் திகைப்பு. மர இழுப்பறையை இழுத்தான். அப்போது துறவி மீண்டும், ‘நாளை அரச காவலர்கள் வருவார்கள். அவர்களுக்கு வரி செலுத்த வேண்டும். வரியை செலுத்தாமல் இருப்பது நல்ல குடிமகனுக்கு அழகல்ல. எனவே அதற்கு மட்டும் கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு, மீதம் இருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொள்!’ என்றார்.

திருட வந்தவனுக்கு கைகால் உதறியது. அந்த துறவி சொன்னது போலவே கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு மீதமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டான். பின்னர் வாசலை நோக்கி நகர்ந்தான். துறவி, ‘கொடுத்தவனுக்கு நன்றி சொல்வது தான் நல்ல பழக்கம். நன்றியில் தான் நல்ல விஷயங்களே ஆரம்பமாகின்றன’ என்றார். ஆனால் இப்போதும் அந்தத் திருடனை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

திருடன் வாய் குளறியபடியே, ‘நன்றி’ என்று சொல்லி விட்டு, வேகமாக செல்ல முயன்றான். 'கதவை சாத்திக் கொண்டு போ. இல்லையெனில் காற்றில் விளக்கு அணைந்து விடும்’ என்றார் துறவி. அவர் கூறியபடியே குடிலின் கதவை சாத்திக் கொண்டு, விட்டால் போதும் என்பது போல் வேகமாக ஓட்டம் பிடித்தான்.



சில நாட்கள் கழித்து அந்த திருடன், அரச காவலர்களிடம் பிடிபட்டான். அவன் எங்கெல்லாம் திருடினான் என்ற உண்மையை காவலர்களிடம் ஒப்புக்கொண்டான். சாட்சியம் சொல்ல காவலர்கள், துறவியையும் அழைத்தனர்.

அரசவைக்கு வந்த துறவி, ‘என்னை எதற்காக அழைத்தீர்கள்?. இவன் எனக்கு எந்த தீமையும் செய்யவில்லையே. இவன் அப்போது கஷ்டத்தின் பிடியில் இருந்தான். அவனுக்கு பணம் தேவையாக இருந்ததால், நான்தான் அவனுக்கு பணம் கொடுத்து உதவி செய்தேன். என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு நன்றி சொல்லிவிட்டு, கதவையும் சாத்திக் கொண்டுதான் சென்றான். இதுபற்றி அவனையே கேளுங்கள்’ என்று காவலர்களிடம் கூறினார். மேலும் அந்த திருடனை நோக்கி, ‘நான் சொல்வது உண்மைதானேயப்பா?’ என்று கேட்டார்.

திருடனின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது. அது அவன் மனம் திருந்தி விட்டதை வெளிப்படுத்தியது. குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்து வெளியில் வந்த திருடன், துறவியிடமே சென்று சீடனாக சேர்ந்தான்.

சந்தர்ப்பம் ஒருவனை குற்றவாளியாக மாற்றலாம். ஆனால் அவர்கள் மனம் மாற சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். அதிகாரமும், சட்டமும் செய்ய முடியாத மனமாற்றத்தை, அன்பு என்னும் வலிமை மிகு ஆயுதம் நொடியில் செய்து விடும்.

சனி, 28 ஜனவரி, 2017

உழைப்பு !!!

ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணிசெய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பிவைத்தார். அவர் மகனோ எந்த வேலையும் செய்ய வில்லை. ஆனாலும் தனது நண்பர் மகன் என்பதால் அவரும் கண்டுகொள்ளாமல் 6 மாதம் கடந்தவுடன் ஒரு தங்க நாணயத்தை கூலியாக கொடுத்து அனுப்பினார். அந்த நாணயத்தை தனது அப்பாவிடம் மகன் கொண்டு வந்து கொடுத்தான். அதனை வாங்கிய அப்பா அதனை தூக்கி தூர எறிந்தார். அதை கண்ட மகனோ ஒன்றும் கண்டு கொள்ளாமல் தனது படுக்கை அறைக்கு சென்று விட்டான்.


மீண்டும் இன்னொரு தெரிந்த நண்பரிடம் 3 மாதத்திற்கு வேலைக்கு அனுப்பினார். அங்கும் இப்படித்தான் எந்த வேலையும் செய்யாமல் 3 மாதம் கடத்தினான். ஆனாலும் தனது நண்பர் மகன் என்பதால் அவரும் 2 தங்க நாணயங்கள் கொடுத்து அனுப்பினார். அதையும் அப்பாவிடமே கொண்டு வந்து கொடுத்தான். முன்பு போலவே அந்த 2 நாணயங்களையும் தூக்கி தூர எறிந்தார். அப்போதும் கண்டு கொள்ளாமல் மாடிக்கு சென்று விட்டான்.

சிறிது காலம் கழித்து அறிமுகம் இல்லாத ஒருவர் இடத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கு 3 மாதம் வேலை செய்து விட்டு 1/2 தங்க நாணயத்தை ஊதியமாக கொண்டு வந்து கொடுத்தான். முன்புபோலவே அதையும் தூர தூக்கி எறிந்தார். ஆனால் இம் முறை அவனுக்கு மிக பெரிய அளவில் கோபம் வந்தது விட்டது. "இது என்ன தெரியுமா?? எனது உழைப்பு. 3 மாதம் தூங்காமல் உழைத்து இருக்கிறேன். அதற்க்கான கூலி !!!! இவளது அலச்சியமாக தூக்கி எறிந்து விட்டாய். நீ எல்லாம் ஒரு மனிதனா??? படுத்து கிடக்கும் உனக்கு உழைப்பின் வலிமை தெரிய வில்லை. தெரிந்தால் இதை எறிந்து இருப்பாயா?" என்று கோபமாக கத்தினான்.


அப்பொழுது அப்பா சொன்னார் "இதைத்தான் உன்னிடம் நான் எதிர்பார்த்தேன். முன்பு நீ உழைக்காமல் கொண்டு வந்து கொடுத்த தங்க நாணயத்தை நான் தூர எறிந்த பொழுது உனக்கு கோபம் வரவில்லை. காரணம், அப்போது உனக்கு உழைப்பின் அருமை தெரியவில்லை. இப்போது நீ உழைத்து கொண்டு வந்த இந்த தங்க நாணயத்தை நான் எறிந்த பொழுது உனக்கு கோபம் வருகிறது. காரணம், நீ கஷ்ட்ட பட்டு உழைத்து பெற்று வந்ததால் உழைப்பின் வலிமை உனக்கு தெரிகிறது. இதைத்தான் நான் உன்னிடம் எதிர்பார்த்தேன்" என்று சொல்லி மகனையும் அந்த 1/2 பவுன் தங்க நாணயத்தையும் மாறி மாறி முத்தம் இட்டார்.

உழைக்காமல் எது கிடைத்தாலும் நிலைக்காது அதனின் அருமை தெரியாது. உழைத்து பெற்ற பொருளை ஒருபோதும் மனம் இழக்க நினைக்காது.


வெள்ளி, 27 ஜனவரி, 2017

சிறந்த பாடம் !!!

உளவியல் அறிஞர் ஒருவர் கணினி துறை ஊழியர்களுக்கு மன இறுக்கம் குறித்து பாடம் எடுத்து கொண்டிருக்கிறார். சாதரணமாக அனைவரிடமும் கலந்துரையாடிக் கொண்டே மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஜாடியின் மூடியை திறந்து பக்கத்தில் வைத்திருந்த கண்ணாடி குடுவையில் தண்ணீரை ஊற்றினார்.

குடிப்பதற்கு தான் தண்ணீர் ஊற்றுகிறார் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் அதை குடிக்காமல் கையில் எடுத்து அனைவருக்கும் தெரியும்படி உயர்த்தினார். "என் கையில் வைத்திருக்கும் தண்ணீரின் அளவு எவ்வளவு இருக்கும்?" என வினவினார். எல்லோரும் ஒவ்வொரு அளவை சொன்னார்கள்.


கடைசியில், "நீங்கள் கூறும் அளவுகளில் ஏதேனும் ஒன்றாக தான் நிச்சயம் இருக்கும். ஆனால் நான் இதை எவ்வளவு நேரம் இதை இப்படியே கையில் உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்க இயலும். ஒரு நிமிடம் வைத்திருந்தால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு மணி நேரம் வைத்திருந்தால் என் கை வலிக்கும். ஆனால் நான் இதை நாள் முழுக்க இப்படியே வைத்திருந்தால் என் நிலை என்ன ஆகும் என யோசியுங்கள். 

நம் கவலையும் இப்படி தான். ஒரு சில வினாடிகள் நினைத்து வருந்தினால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு சில மணி நேரம் என்றால் மனதை பாதித்துவிடும். எப்பொழுதுமே நினைத்துக் கொண்டிருத்தால் நமது வாழ்வின் ஏற்றத்தையே அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்" என்று கூறி தன் உரையை முடித்தார். இந்த உரையை கேட்ட அரங்கம் கைதட்டல்களால் நிரம்பியது. 


பல மணி நேர மகிழ்ச்சியை அழிக்கும் திறன் ஒரு நிமிட கவலைக்கு உண்டு. மனதின் கவலையை தூர எறியுங்கள். ஒவ்வொரு வினாடியும் கொண்டாடுங்கள். 


புதன், 25 ஜனவரி, 2017

தகுதி என்ன???

ஒரு காட்டில் ஒரு துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன், ”ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத்தோடு  கேட்டான். அதற்குத் துறவி, “இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை” என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் வந்து, ” ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான். அதற்கு அத்துறவி, “சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்” என்றார்.


மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவன் “துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்” என்று பணிவோடு வினவினான்.

உடனே துறவி, ”மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்” என்றார்.


மிகவும் வியந்து போனான் அரசன், ”துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்?” என்று கேட்டான்.

“அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும். முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தெரிந்தது. ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்” என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி!

உயர்வுக்குத் துணையாக இருப்பது பணிவும், துணிவும். கேட்பவரின் தன்மை அறிந்து நன்மை தரும் நல்ல சொற்களை மென்மையாகவும் இனிமையாகவும் சிந்தித்துப் பேச வேண்டும். நாவை மடக்கிப் பணிவோடு பழகுபவர்களுக்குப் பாதகம் ஏற்படவே செய்யாது.