எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 24 நவம்பர், 2021

🐍 பழிவாங்கிய 🐦

  ஒரு ஊரில் 🐦 தம்பதியினர் மிகுந்த ♥️ வாழ்ந்து வந்தனர். அவர்கள் பல 🥚 இட்டு அதனை பாதுகாத்து வந்தனர். அப்போது அந்த 🐦 வாழும் 🌲 கீழ் உள்ள பொந்தில் உள்ள 🐍 ஒன்று  🐦 இடும் 🥚 யாரும் அறியாமல் எடுத்து தன்னுடைய பசியை ஆற்றிக் கொண்டிருந்தது.

இதனால் மனம் வருந்திய 🐦 அங்கு வந்த 🐺 இது பற்றி கூறி புலம்பியது. 🐍 பசியில் இருந்து  🥚 தப்பிக்க வைக்க 🐺 ஒரு 💡 கூறியது.

மறுநாள் 🌅 பொழுதில் 🏰 பறந்தது 🐦. அங்கே 👸 தன்னுடைய 📿💍 கழற்றி வைத்து விட்டு குளித்து கொண்டிருந்தாள். அழகான 💎 பதித்த 💍 ஒன்றை தூக்கி கொண்டு பறந்தது.

👸 அலறி வீரர்களை அழைத்து 🐦 பின் தொடர சொன்னாள். 🐦 அந்த 💍 எடுத்துச் சென்று 🐍 இருந்த பொந்தில்  போட்டு விட்டு வேறொரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டது.

வீரர்கள் 💍 எடுக்க பொந்திற்குள் கைவிட்டபோது அங்கிருந்த 🐍 சீறியது. 🐍 கண்ட வீரர்கள் அதனை தங்கள் 🔪 வெட்டி கொன்றனர். அதன் பின்னர் 💍 எடுத்து சென்று 👸 ஒப்படைத்தனர்.

🐺 யோசனைப்படி செய்த 🐦, 🐍 தொல்லையில் இருந்து விடுபட்டு தன்னுடைய 👨‍👩‍👦‍👦 பல்லாண்டு காலம் 😀 வாழ்ந்தது.


நீதி : பிறருக்கு ☠️ செய்ய நினைப்பவருக்கு அதைப்போல பலமடங்கு ☠️ திரும்ப அவர்களையே வந்துசேரும்.

செவ்வாய், 23 நவம்பர், 2021

உண்மையான அழகு

அக்பர் சக்கரவர்த்திக்கு, அவரது பேரன் குர்ரத்திடம் அளவற்ற பாசம். அவனைக் கொஞ்சும் போது, அரச காரியங்களைக் கூட மறந்து விடுவார். ஒருநாள் அரசவையில், "என் பேரன் குர்ரத்தை விட, அழகான குழந்தை வேறு எங்காவது உண்டா?" என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், "இல்லை அரசே…" என்றனர்.

ஆனால், பீர்பல் மட்டும் பதில் கூற வில்லை. இதை கவனித்த அக்பர், "நீ ஏன், பதில் அளிக்கவில்லை?" என்று பீர்பாலிடம் கேட்டார்.

"அரசே… உங்கள் கேள்வி மிகவும் சிக்கலானது. உண்மையான
அழகை எப்படிக் கண்டு பிடிப்பது?"

"ஏன்... பார்த்தால் தெரியாதா? ஆந்தை அவலட்சணமாக இருக்கிறது. மான் அழகாக இருக்கிறது. இது கூடத் தெரியாதா?"

"அரசே… நாளைய தினம் ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வரச் சொல்வோம். அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்…" என்றார் முல்லா.

"நீங்கள் சொல்வதும் உண்மை தான்; நாளை குழந்தைகளுக்கு அழகுப் போட்டி நடத்துவோம். ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வாருங்கள். அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்…" என்றார், அக்பர்.


மறுநாள் அரசவை கூடியது. அரச பிரதிநிதிகள், ஆளுக்கொரு குழந்தையை
எடுத்து வந்திருந்தனர். அக்பர் சக்கரவர்த்தி எல்லா குழந்தைகளையும் பார்த்தபடியே வந்தார். எதுவுமே, அழகாக தோன்றவில்லை. அவருடைய பேரன் மட்டும் தான் அழகு என தோன்றியது.

வெறுங்கையுடன் நின்ற பீர்பாலைப் பார்த்து, "நீ அழகிய குழந்தை எதையும் எடுத்து வரவில்லையா?" என்று கேட்டார்.

"அரசே… நாட்டிலேயே அதிக அழகுள்ள குழந்தையை பார்த்தேன். அதை அரண்மனைக்குக் கூட்டிச் செல்வதாக, தாயாரிடம் கேட்ட போது, ‘மற்றவர் கண் திருஷ்டி பட்டுவிடும்’ என்று கூறி, மறுத்து
விட்டாள்…" என்றார்.

"அப்படியானால் மாறுவேடம் அணிந்து, அக்குழந்தையை பார்க்கச் செல்வோம்" என்றார் அக்பர்.

அரசருடன், அரசவை பிரதானிகளும், மாறுவேடம் அணிந்து சென்றனர். நகரத்தை விட்டு வெகுதுாரம் அழைத்து வந்தார் பீர்பால். ஒரு குடிசைப் பகுதியை அடைந்தனர்.

"என்ன பீர்பால், நீ சொன்ன அழகான குழந்தை, இந்த அவலட்சணமான
இடத்தில் தான் இருக்கிறதா?" என்று, கேட்டார் அக்பர்.

"சேற்றில் கூட செந்தாமரை பூக்கும். குப்பையில், மாணிக்கமும் இருக்கும். ஒருவேளை, பீர்பால் சொன்ன அழகுக் குழந்தையும், இங்கு இருக்கலாம்…" என்றார் ஒரு அமைச்சர். "அதோ பாருங்கள்… ஒரு குழந்தை விளையாடுகிறதே…" என்று,
துாரத்தில் ஒரு குழந்தையைக் காட்டினார், பீர்பால்.

மிக விகாரமாக ஒரு குழந்தை, புழுதியில்
விளையாடுவதை அக்பரும், மற்றவர்களும் பார்த்தனர். அப்போது, அக்குழந்தை தரையில் தடுக்கி விழுந்து, ‘ஓ…’ என, அழ ஆரம்பித்தது.



உடனே குடிசையில் இருந்து வெளியே வந்த பெண், "என் தங்கக்கட்டி, அழகு செல்லமே… இந்த குப்பை தொட்டி உன்னைத் தள்ளி விட்டதா… அதை அடிப்போம். நீ அழாதே… என் ராஜா…" என, குழந்தையை சமாதானப்படுத்தினாள்.

இதைக் கேட்ட அக்பர், "இவளுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? எவ்வளவு அசிங்கமாக, அவலட்சணமாக குழந்தை இருக்கிறது. இதைப் போய், அழகு என்கிறாளே…" என்றார்.

"யாரு ஐயா நீ? என் அழகு செல்வத்தை, இன்னொரு முறை அசிங்கம்ன்னு சொன்னா நாக்கை அறுத்து விடுவேன். இந்த உலகம் முழுவதும் தேடிப் பார்! என் குழந்தை மாதிரி,
அழகான ஒன்றை பார்க்க முடியாது…" என்று பொரிந்து தள்ளினாள், அக்குழந்தையின் தாய்.

மறுமொழி பேசாமல் திரும்பிய அக்பர் வழியில், "பீர்பால்! நீ கூறியது உண்மை தான். ஒவ்வொரு குழந்தையும், அதன்
பெற்றோருக்கு அழகு தான்…" என்றார்.

"பெற்றோருக்கு மட்டுமல்ல, பாட்டனார்களுக்கும்…" என்றார் பீர்பால்,
ஒரு நக்கல் சிரிப்புடன். அதன் பொருள் உணர்ந்து, சிரித்தார் பாட்டனார் அக்பர்!

அழகு என்பது, நம் பார்வை சார்ந்தது. புற அழகு மட்டும் அழகல்ல. மனதால் யாருக்கும் தீமை விளைவிக்காமல், நல்லதை மட்டுமே எண்ணும் அக அழகே முக்கியமானது. 




திங்கள், 15 நவம்பர், 2021

புத்தரின் போதனை

புத்தர் தன்னுடைய கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடியது. ஒரு சிலர் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர், அவரது கருத்தை ஏற்காததுடன் ஏளனமாக, அவமரியாதையாக பேசவும் செய்தனர். ஆனால் அவற்றை எல்லாம் ஒரு சிறிய புன்னகையுடன் கடந்து சென்றுவிடுவார், புத்தர்.

ஒருநாள் அவர் ஒரு ஊருக்குச் சென்றிருந்தார். அங்கு தன்னுடைய கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபன், புத்தரை கடுமையான வார்த்தைகளால் திட்டினான். சாதாரணமான ஒருவன் அந்த வார்த்தைகளைக் கேட்டால், அங்கு அசம்பாவித சம்பவங்கள்தான் நிகழும். ஆனால் எதிரில் இருப்பவர் புத்தர் ஆயிற்றே.. அவரது முகத்தில் புன்னகையைத் தவிர வேறு எந்த முகபாவனையும் தென்படவில்லை.



புன்னகையோடே தன்னைத் திட்டிய வாலிபரை, தன் அருகில் வரும்படி அழைத்தார், புத்தர். ‘இவர் நம்மை என்ன செய்துவிடப்போகிறார்’ என்று நினைத்த அந்த வாலிபனும் புத்தரின் அருகில் போய் நின்றான்.

அவனை தன் பக்கத்தில் அமரும்படி சொன்னார் புத்தர். பின்னர் அவனிடம், “நண்பரே.. நீங்கள் உங்களுக்கு நெருக்கமானவரைப் பார்க்கச் செல்லும்போது, கையில் ஏதாவது எடுத்துச் செல்வீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த வாலிபன், “ஆமாம்.. பழங்கள் ஏதாவது வாங்கிக்கொண்டு செல்வேன்” என்று பதிலளித்தான்.

“அப்படி நீங்கள் வாங்கிச் செல்லும் பழங்களை, நீங்கள் காணச்சென்றவர் உங்களிடம் இருந்து வாங்கிக்கொள்ளவில்லை என்றால், அந்தப் பழங்களை என்ன செய்வீர்கள்?” என்றார், புத்தர்.

“நான் வாங்கிச் சென்ற பழங்களை, என்னுடனே எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவேன்” என்றான், அந்த வாலிபன்.

அப்போது புத்தர் அதே புன்னகையுடன் கூறினார். “அதைத்தான் இப்போது நீங்கள் செய்யப்போகிறீர்கள். திட்டுவது என்பது உங்கள் சுதந்திரம். அதை ஏற்பதும், ஏற்காததும் என்னுடைய சுதந்திரம். நீங்கள் என்னை அவமதித்துப் பேசிய பேச்சுக்களை நான் ஏற்கவில்லை. எனவே பழங்களை திரும்ப எடுத்துச் செல்வதுபோல, உங்களுடைய வசைபாடலையும் உங்களுடனேயே திரும்ப எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.

அதைக்கேட்ட அந்த வாலிபன் வெட்கித் தலைகுனிந்தான். தன் தவறை உணர்ந்து, உடனடியாக புத்தரின் பாதத்தை வணங்கி, மன்னிப்புக் கேட்டான். பின்னாளில் அவன் புத்தரின் கொள்கைகளை பின்பற்றும் சீடனாகவும் மாறிப்போனான்.

இன்பங்களைப் போலவே துன்பங்களும் வாழ்வில் உண்டாகும். ஆனால் இன்பங்களை மகிழ்வாக வரவேற்கும் நமக்கு, துன்பங்களை ஏற்கும் மனப்பக்குவம் இருப்பதில்லை. ஒரு சிலர் வாழ்க்கையில் ஏராளமான அவமானங் களை சந்திக்கவே செய்வார்கள். அது அவர்களின் மனதை மிகவும் பாதித்து விடுகிறது. அதனால் நிலைகுலைந்து, வாழ்வையே இழந்துவிட்டதாகக் கருதுபவர்களே இங்கு ஏராளம். இன்பங்களையும், துன்பங்களையும், மரியாதையையும், அவமரியாதையையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.




புதன், 1 ஆகஸ்ட், 2018

STANFORD - உருவான கதை


அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வேர்ட் (Harvard) பல்கலைக்கழகத்திற்கு ஒரு தம்பதி வந்தனர். அங்கிருந்த உதவியாளரிடம், "ஹார்வேர்ட் பல்கலைக்கழகத் தலைவரைப் பார்க்க வேண்டும்" என்றனர்.

“தலைவர் உங்களுக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறாரா?” எனக் கேட்டார்.

“இல்லை” என்றனர். அவர்களை  பார்த்தார் உதவியாளர். அந்த பெண் சாயம் போன, அச்சடித்த பூக்கள் கொண்ட பருத்தியாலான உடையை அணிந்து இருந்தாள். கணவனோ நெசவில் நெய்த நூல் இழை இழையாகத் தெரியும் சூட் அணிந்து இருந்தார்.


‘இவர்கள் எல்லாம் இங்கு வரத் தகுதியற்றவர்கள்’  என மனதிற்குள் நினைத்தபடி, “இன்று முழுவதும் அவரை பார்ப்பது கடினம்…” என்றார்.
“பரவாயில்லை. நாங்கள் காத்திருக்கிறோம்” என்றனர்.

பலமணி நேரம் சென்றது. உதவியாளர் அவர்களைக் கவனிக்கவே இல்லை. தனது அலட்சியம் அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்றி விடும் என்று நினைத்தார். ஆனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு அசைவதாகவே தெரியவில்லை.

வேறு வழியில்லாமல் தலைவருக்கு செய்தி அனுப்பினார். தனது தகுதிக்கு அவர்களிடம் பேசுவதை தாழ்ந்தது என்று நினைத்தாலும், சரி என்று அவர்களைப் பார்க்க ஒப்புக்கொண்டார். மிகவும் கர்வத்துடன் ‘என்ன வேண்டும்?’ என்பது போல அவர்களை நோக்கி கேட்டார்.

அந்தப் பெண்மணி, “எங்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு வருடம் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தான். இங்கு அவன் மிகச் சந்தோஷமாக இருந்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக, அவன் ஒரு வருடம் முன்னால் இறந்துவிட்டான். என் கணவருக்கும் எனக்கும் அவன் நினைவாக ஒரு கட்டிடம் அமைக்க விரும்புகிறோம்….” என்றார்.

தலைவர் தனது கண்களை உருட்டினார். “கட்டிடமா? இந்தக் கட்டிடங்களின் மதிப்பு என்ன தெரியுமா? 7½ மில்லியன் டாலர்கள்!”


ஒரு நிமிடம் அந்தப் பெண்மணி பேசவில்லை. தலைவருக்கு தாங்க முடியாத சந்தோஷம். அப்பாடா, இவர்கள் இடத்தைக் காலி செய்து விடுவார்கள் என்று ஆசுவாசப் பட்டார்.

பெண்மணி தனது கணவரைத் திரும்பிப் பார்த்துக் கேட்டார்: “ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்க இவ்வளவு தான் ஆகுமா? அப்படியானால் நாமே ஏன் சொந்தமாக ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கக்கூடாது?”

அவள் கணவர் பெண்மணியின் கூற்றை ஆமோதிப்பது போலத் தலையை அசைத்தார். 
தலைவரின் முகம் அதிர்ச்சியில் சுருங்கியது. அவர் தனது அதிர்ச்சியிலிருந்து விடுபடும் முன் திரு. மற்றும் திருமதி. லேலண்ட் ஸ்டான்போர்ட் எழுந்து நடந்தனர்.


இவர்கள் 1891 ஆம் ஆண்டு, கலிபோர்னியாவில் ஸ்டான்போர்ட் (Stanford) பல்கலைக் கழகத்தை தொடங்கி, ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் தங்கள் மகனுக்குக் கொடுக்கத் தவறிய கௌரவத்தை நிலை நாட்டினார்கள். உலகின் தலைசிறந்த பல்கலைகழகமாக இன்று வரை ஸ்டான்போர்ட் (Stanford) திகழ்கிறது.


மேலும் சில தகவல்கள் :

ஸ்டான்போர்ட் (stanford) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராச்சிக்கான தலைப்பின் முடிவில், லாரி பேஜ்(Larry Page), சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் இணைந்து GOOGLE இணையதளத்தை உருவாக்கினர்.

உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான FACEBOOK யை உருவாக்கிய Mark Zuckerberg ஸ்டான்போர்ட் (stanford) பல்கலைக்கழக மாணவர்.

முதலில் Facebook, ஸ்டான்போர்ட் (stanford) பல்கலைக்கழகத்தில் மட்டுமே பயன்படுத்தும் இணையதளமாக இருந்துள்ளது.


புதன், 25 ஜூலை, 2018

பெண்ணதிகாரம்

"ஒரு பெண்ணுக்கு உண்மையான மகிழ்ச்சியை தருவது எது?" என மகாராணி, ராஜாவிடம் கேட்டாள். ராஜா தனக்கு தெரிந்த எல்லா பதில்களையும் கூறி விட்டார். ஆனால் எந்த பதிலையும் ராணி ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜா, சரியான பதிலை கண்டுபிடித்து வருமாறு தனது அமைச்சர் ஒருவனுக்கு ஆணையிட்டார்.


அமைச்சரும் பல இடங்களுக்குச் சென்று பல்வேறு மனிதர்களை சந்தித்தான். ராணி கேட்ட கேள்வியை அவர்களிடம் கேட்டான். யாராலும் விடை சொல்ல முடியவில்லை. கவலையோடு காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான் அமைச்சர். அந்த வழியே வந்த வயதான கிழவி ஒருத்தி, அமைச்சரிடம் சென்று அவன் கவலைக்கான காரணத்தை கேட்டாள். நடந்தவற்றை கூறினான் அமைச்சர்.

கிழவி, "இந்த கேள்விக்கான விடை என்னிடம் உள்ளது. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீ என்னை இப்போதே திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றாள். அமைச்சரும் அவள் கூறும் விடை சரியானதாக இருந்தால் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்தான்.


"ஒரு பெண் அவள் சம்பந்தபட்ட விஷயங்களை அவளே முடிவு எடுக்கும் அதிகாரத்தை அளிப்பதே மகிழ்ச்சியை தரும்" என பதில் அளித்தாள். இந்த பதிலை ராணியிடம் வந்து தெரிவித்தான் அமைச்சன். ராணியும் அதை சரி என ஒத்துக் கொண்டாள். தான் செய்திருந்த சத்தியத்தை நிறைவேற்ற காட்டிற்கு சென்றான் அமைச்சர்.

கிழவி அவனிடம், "எனக்கு அழகான பெண்ணாக மாறக் கூடிய சக்தி உள்ளது. அதைக் கொண்டு உனக்கு அழகான பெண்ணாகவும், பிறருக்கு வயதானவளாகவும் தெரிவேன். அல்லது பிறருக்கு அழகான பெண்ணாகவும், உனக்கு வயதானவளாகவும் தெரிவேன். நான் எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்" என்றாள்.

சற்று சிந்தித்து விட்டு அவன், "இது உன்னுடைய வாழ்க்கை. முடிவெடுக்கும் அதிகாரம் உனக்கு மட்டுமே உடையது" என்றான். மகிழ்ச்சியடைந்த அவள் வயதான தோற்றத்தை விட்டு விட்டு, இளம் பெண்ணாக மாறி திருமணம் செய்து கொண்டாள்.

பெண்களுக்கென பல உரிமைகள் சட்டத்தில் எழுதப்பட்டு நடைமுறை வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் பெண்ணதிகாரம் என்பது பெரும்பாலும் மறுக்கப்படுகிறது.