எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 1 அக்டோபர், 2016

இதுவும் ஒரு விளையாட்டு

இக்கூ என்ற ஜென் துறவி சாகும் தருவாயில் தன்னுடைய சீடர்கள் அனைவரையும் அழைத்து, “இறப்பதற்கு புதுமையான ஒரு வழியைச் சொல்லுங்கள். ஏனெனில் மற்றவர்களை பின்பற்றுவதை நான் விரும்பவில்லை. மனிதர்கள் தங்களின் படுக்கையில் சாகிறார்கள் ஆனால் நான் படுக்கையில் சாக விரும்பவில்லை” என்றார்.

அவரது சீடர்கள் இக்கூ ஒரு பைத்தியக்கார மனிதர் என்பதை அறிவார்கள்- தான் எப்படி இறக்கவேண்டும் என்பதைக் குறித்து யார் கவலைப்படப் போகிறார்கள்? மனிதர்கள் இறந்து போகிறார்கள் அவ்வளவுதான்.

இக்கூ, “யாராவது ஒரு யோசனை சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

ஒரு சீடன், “நீங்கள் பத்மாசனத்தில் அமர்ந்து இறக்கலாம்” என்றார். அதற்கு இக்கூ, “அது புதியது ஒன்றுமல்ல. பல ஞானிகள் அந்த நிலையில் இறந்திருக்கிறார்கள். புதியதாக, விநோதமானதாக சொல்லுங்கள்” என்றார்.

ஒரு சீடன், “நீங்கள் நின்றுகொண்டே சாகலாம்” என்றதற்கு இக்கூ, “அது சற்று நல்லதாகத் தெரிகிறது. அது பரவலாக அறியப்படவில்லை எனினும் ஒரு ஜென் துறவி நின்றுகொண்டே இறந்ததை நான் அறிவேன். ஏதாவது புதியதாக இதுவரை யாரும் செய்யாததாக சொல்லுங்கள்” என்றார்.

அவரது சீடர்களில் மற்றொருவர், “அப்படியானால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நீங்கள் தலை கீழ் நின்றபடி, சிரஸாசனத்தில், உயிரை விடுங்கள். இதுவரை யாரும் அப்படி முயற்சித்ததில்லை” என்றார்.

அதைக்கேட்ட இக்கூ, “மிகச் சரி. அதுவே எனக்குப் பொருத்தமானது! நான் உனக்கு மிகவும் கடமைப்பட்டவனாகிறேன்” என்றவர் அவ்வாறே இறந்தும் போகிறார்.

இப்போது சீடர்கள் சிக்கலுக்கு உள்ளானார்கள். யாராவது படுக்கையில் இறந்தால் என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியும்- அவரது உடைகளை மாற்றி, குளிப்பாட்டி, புதிய ஆடைகளை அணிவித்து அடக்கம் செய்ய எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் தலைகீழாக நின்றபடி இருக்கும் மனிதனை என்ன செய்வது? அவர் கீழேயும் விழவில்லை, இறந்துவிட்டார்!


அவர் உயிரோடுதான் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா என்பதை அறிய அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழிகளையெல்லாம் உபயோகித்துப் பார்த்தனர். அவர் இறந்திருந்தார், ஆனால் அப்படி இறந்ததற்கு இதுவரை முன்னோடி யாரும் இல்லை, எனவே என்ன வகையான நடைமுறைகளை மேற்கொள்வது என்று தெரியாது தவித்தார்கள்.

ஒருவர், “நான் அவரது மூத்த சகோதரியை அறிவேன். அவரும் ஒரு ஜென் துறவிதான். அவர் பக்கத்திலுள்ள மடத்தில்தான் வசிக்கிறார். அவரிடம் இக்கூவிற்கு நிறைய மரியாதை உண்டு. நான் அவரை அழைக்கிறேன். அவர் ஏதாவது சொல்லக்கூடும். நாம் தவறாக எதையாவது செய்யும் முன்னர் என்னசெய்வது என்று விசாரணை செய்வது நல்லது” என்றார்.

அங்கே வந்த அவரது சகோதரி மிகவும் கோபமடைந்தார். “இக்கூ, நீ உன்னுடைய வாழ்நாள் முழுவதும் குறும்புக்காரனாகவே இருந்திருக்கிறாய். கடைசியாக இறக்கும் போதாவது ஒழுங்காக படுக்கையில் படுத்து இறக்கவேண்டும்” என்றார்.

இக்கூ குதித்து, கீழே படுக்கையில் படுத்து உயிரை விட்டார்!

அவரது சகோதரி ஏதும் நடக்காதது போல வெளியே சென்றுவிட்டார். அவர் இறந்தனால் அவள் சற்றும் பாதிப்படையவில்லை.

சீடர்கள் வியப்படைந்தார்கள். ஏனெனில் அவர்கள் அனைத்தையும் முயன்று பார்த்தார்கள்-இதயத் துடிப்பு இல்லை, நாடித் துடிப்பு இல்லை, அவர் மூக்கருகே கண்ணாடியை வைத்தபோது அதில் மூச்சுக் காற்று படவும் இல்லை.

என்னதான் நடந்தது?

அவரது சகோதரி சத்தம் போட்டதும் அவர் உடனடியாக துள்ளிக் குதித்து, கீழ்படியும் ஒரு குழந்தையென படுக்கையில் படுத்து இறந்துவிட்டார்! இறப்பும் ஒரு விளையாட்டே.

கிழக்கத்திய நாடுகளில், மூத்தவர்களின் சொற்களை மதிக்காதிருப்பது, அதுவும் அத்தகைய ஒரு சூழலில், தவறானதாக கருதப்பட்டது.

வாழ்க்கை முடிவற்றது என்பதை உணர்ந்தவர்களுக்கு இறப்பு ஒரு பொருட்டல்ல. உங்களின் உடல்தான் அழிகிறது, ஆன்மா அழிவதில்லை.