எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

தவறு என்னுடையதல்ல

அந்த நாட்டில் ஒரு ராஜா. அந்த ராஜா, தன் மனம் போன
போக்கில் ஆட்சி செய்தான். திடீர், திடீரென்று மக்களுக்கு
முட்டாள்தனமாக கட்டளை பிறப்பிப்பான்.
நல்லவர்களுக்குத் தண்டனை கொடுப்பான். கொலைகாரனை,
கொள்ளைக்காரனை விடுதலை செய்வான். அவனிடம் இல்லாததால்
திருடினான். தப்பு செய்தவனை கொலை செய்தான். அதில்தவறு ஏதும்
இல்லை என்று சொல்வான், முட்டாள் ராஜா. யாராவது நியாயம் சொல்கிறேன் என்று போனால் அவர்கள் தலையை சீவும்படி உத்திரவிடுவான்.


இதற்குப் பயந்துமுட்டாள் ராஜாவை யாரும் நெருங்குவதில்லை. இந்த முட்டாள் ராஜவை ஒழித்துக் கட்ட யாராவது முன்வரமாட்டார்களா என்று ஏங்கினார்கள்.

அந்தச் சந்தர்ப்பமும்ஒருநாள் வந்தது.
அந்தப் பட்டணத்தில் ஒரு பெரிய பணக்காரர். அந்தப் பணக்காரர் வீட்டில்
திருட நினைத்தான், ஒரு திருடன். ஒருநாள் தன் குடும்பத்தோடு அந்தப்பணக்காரார், வெளியூருக்குக்கிளம்பினார். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று திருடன் பணக்காரர் வீட்டில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தான்.

பணக்காரர் பாதுகாப்பாகத் தங்க நகைகள், காசை எல்லாம் வைத்து இருந்த ஒரு பெரிய இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்தும் விட்டான். ஆனால் என்ன முயன்றும் அந்த இரும்புப் பெட்டியைத் திறக்கமுடியவில்லை. இரும்புப் பெட்டியும்தூக்கிச் செல்லக் கூடியதாக இல்லை. அங்கிருந்த கடப்பாரையின் உதவியால் இரும்புப் பெட்டியைச் சுவர் ஓரமாக நகர்த்தினான். பின்னர் சுவரை இடித்து அந்தத் துவாரம்வழியாக வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு இவனும் குதித்தான்.

அப்போது, மறந்துவைத்து விட்டுப் போன பொருளை எடுக்க வந்த பணக்காரரிடம் திருடன் வசமாக மாட்டிக் கொண்டான். திருடனைக் கொண்டுபோய் ராஜா முன்னால் நிறுத்தினார், பணக்காரர்.  முட்டாள் ராஜா விசாரணையைத் துவக்கினார். பணக்காரர் நடந்ததைச் சொன்னார். திருடனுக்குத் தக்க தண்டனை வழங்க
வேண்டும் என்றும் பணக்காரர் கேட்டுக் கொண்டார்.

உடனே திருடன், " மக்கள் போற்றும் மகாராஜாவே! நான் எனது நகை வைத்திருந்த இரும்புப் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டேன். மாற்றுச் சாவி போடுவதற்காகஎடுத்துப்போனேன். வழியில் பார்த்த இவர் என் பணப்பெட்டியை அபகரிக்க எண்ணி இப்படி நாடகமாடுகிறார், என்று அழகாக ஒரு பொய்யைச் சொன்னான் திருடன்.

பணக்காரர் எதோ சொல்ல வாய் திறந்தார்.
 உடனே முட்டாள் ராஜா, " நீ பேச வேண்டாம். அடுத்தவர் சொத்தை அபகரித்தே நீ பணக்காரனாகிவிட்டாய். யாரங்கே? இந்தப் பணக்காரனைச் சிறையில் தள்ளுங்கள், " என்று உத்திரவிட்டான். பணக்காரர் பார்த்தார். ஆயுள் முழுக்க முட்டாள் ராஜா சிறையில் வைத்துவிடுவானே, என்று சமயோசிதமாக ராஜாவிடம் பேசினார்.

" அண்டைநாடெல்லாம் புகழும் அருமை ராஜாவே! என்னிடம் இருப்பது போன்ற அதே மாதிரி இரும்புப் பெட்டியை செய்து இவரிடம் விற்ற ஆசாரி தான் இதற்கெல்லாம் காரணம். எனவே தண்டிக்கப்பட்வேண்டியது அந்த இரும்புப் பெட்டியைச் செய்த ஆசாரிதான், ராஜாவே " என்றார் பணக்காரர்.
உடனே ராஜா, " பணக்காரர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இரும்புப் பெட்டியைச் செய்த ஆசாரியை கூட்டிவரும்படி உத்திரவிட்டான். 

ஆசாரி வந்ததும்," நீ ஏன் ஒரே மாதிரி இரும்புப் பெட்டியைச் செய்து கொடுத்தாய்? உன்னால் பணக்காரர் ஜெயிலுக்குப் போகவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டாய்.  இந்தக்குற்றத்திற்கு உனக்கு நான் மரண தண்டனை
விதிக்கிறேன்,"என்றார் முட்டாள் ராஜா. ஆசாரி பார்த்தார்.

முட்டாள் ராஜாவிடம் உண்மையைச் சொன்னாலும் எடுபடாது. தான் தப்பித்தால் போதும் என்று, " ஏழுலகம் புகழும் ராஜாவே! இந்தத் தவறுக்கு நான் காரணமல்ல. எனது வேலைக்காரன் செய்த தவறு. எனவே என் வேலைக்காரன்தான் தண்டிக்கப்படவேண்டும்" என்றான் ஆசாரி.
"அடடே! அப்படியா! நல்ல வேளை. நான் உன்னைத் தண்டிக்க மாட்டேன். நீபோகலாம். உன் வேலைக்காரனைத் தண்டிக்கிறேன்," என்றார் ராஜா.

வேலைக்காரன் வந்தான். "உன்னால் அநியாயமாக உன் முதலாளியும், பணக்காரரும் சிறைக்குப் போக இருந்தார்கள். ஒரே மாதிரி இரும்புப் பெட்டி செய்து குழப்பத்துக்கு காரணமான உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன்" என்றர் முட்டாள் ராஜா. வேலைக்காரன் தன் தலையைக் காப்பாற்றிக்கொள்ள அவனும் ஒரு பொய் சொன்னான்.

" ராஜாவுக்கெல்லாம் ராஜாவே! நான் இரும்புப் பெட்டி செய்து கொண்டிருக்கும்போதுஅந்தவழியாக ஒரு இளம்பெண் வந்தாள். அவள் அழகில் மயங்கிவிட்டதால், முதலில்செய்த பெட்டியைப் போலவே
இரண்டாவதையும் செய்ய நேர்ந்தது. அந்தப் பெண் என் வேலை நேரத்தில்
குறுக்கிடாமலிருந்தால் இந்தத் தவறே நடந்திருக்காது. எனவேதாங்கள் அந்தப்
பெண்ணைத்தான் தண்டிக்கவேண்டும்," என்றான் வேலைக்காரன்.

"நல்லவேளை! உன்மையைச் சொன்னாய். உன்மையைச் சொன்னதால்
தப்பினாய். நீபோகலாம். அந்தப் பெண்ணைத் தூக்கிலிடுகிறேன்," என்றான்
முட்டாள் ராஜா.காவலர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்து ராஜா
முன்பாக நிறுத்தினர்.

"ஆசாரியின் வேலையாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது நீ ஏன்?
அந்தப்பக்கம் போனாய். உன்னால் எத்தனை விபரீதம் நடந்துவிட்டது
தெரியுமா? உன்னைத் தூக்கிலிட்டு இந்த விவகாரத்தை முடிக்கப்போகிறேன்,"
என்றார் ராஜா. மதி கெட்ட ராஜாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மதி நுட்பமாக
பதில் சொன்னாள் அந்தப்பெண்.

"உலகம் போற்றும் உத்தம ராஜாவே! நான் நாட்டியம் கற்றுக்கொள்ள அந்தவழியாகத்தான் போயாக வேண்டும். நாட்டியம் சொல்லித்தரும் ஆசிரியர் விரைந்து கற்றுக் கொடுக்காமல் காலை, மாலை என்று அடிக்கடி வரச் சொன்னதால் நான் அந்த வழியாகப் போக வேண்டி வந்தது. என்னை நாட்டியம் கற்க அடிக்கடி வரச் சொன்ன நாட்டிய ஆசிரியரைத்தான் நீங்கள் தண்டிக்கவேண்டும்," என்றாள் அந்தப்பெண்."அப்படியா! நீ போகலாம். நாட்டிய ஆசிரியர் தான் உண்மைக் குற்றவாளி என்று அறிந்து கொண்டேன், என்று சொன்னராஜா நாட்டிய ஆசிரியரை கைது செய்து கொண்டு வரும்படி உத்திரவிட்டான்.

நாட்டிய ஆசிரியரோ அப்பாவி. அவருக்கு புகார், வழக்கு எதுவும் புரியவில்லை.
ராஜாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியலை. மெளனமாக நின்றார். உடனே முட்டாள் ராஜா, "இவன்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட்டேன்" என்று கூறி உரக்கச் சிரித்தான்.

நாளை சூரிய உதயத்தின் போது நடன ஆசிரியர் பொதுமக்கள் முன்னிலையில்
தூக்கிலிட உத்திரவிடுகிறேன். இனிமேல் அவன் காரணம். இவன் காரணம், என்று சொல்லி யாரும் தப்பிக்கமுடியாது; இந்த வழக்கு அதற்கு உதாரணமாகவும் தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும்! இதை நாட்டு மக்களுக்கு சேனாதிபதி அறிவிக்க கட்டளையிடுகிறேன்," என்று முட்டாள் ராஜா மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.
நடன ஆசிரியர் மனைவி பக்கத்துவீட்டில் வசிக்கும் வீரசேணன் என்ற
வாலிபரிடம் சொல்லி எப்படியாவது தன்கணவரைக் காப்பாற்றவேண்டும்
என்று கெஞ்சி அழுதாள்.

வீர சேணன் புத்திசாலி. "அழாதீர்கள். முட்டாள் ராஜாவின் பைத்தியக்காரத்
தனத்துக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு உங்கள் கணவரை நான் மீட்டு வருகிறேன்," என்று தைரியம்சொன்னான். வீர சேணன் தன் நண்பனை அழைத்து தனது திட்டத்தை அவனிடம் சொல்லி,
சரியான நேரத்தில் தூக்கு மேடை மைதானத்துக்கு வந்துவிடவேண்டும் என்று சொல்லி அனுப்பினான்.

தூக்கிலிடும் நேரம் நெருங்க, நெருங்க மக்கள் கூட்டமும் அதிகரித்தது. முட்டாள் ராஜா தனது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தான். "இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா?" என்று பொதுமக்கள் வேதனையோடு பேசிக்கொண்டனர்.

அப்போது முட்டாள் ராஜாவின் மெய்க்காப்பாளரோடு யாரோ உரத்த குரலில் சத்தம் போட்டு பேச
ராஜா, "என்ன சப்தம் அங்கே?" என்று கேட்டான்.

"தங்களைப் பார்த்தே ஆகவேண்டுமென்று இருவர் தகராறு செய்கிறார்கள்.
தூக்குத்தண்டனை நிறைவேற்றிய பிறகு ராஜாவை அவையில் சந்திக்கலாம்
என்று சொன்னோம். ஆனால் நாட்டிய ஆசிரியருக்குப் பதிலாக தாங்கள்
அந்தத் தண்டனையை ஏற்கவேண்டும்.
அதனால் ராஜாவை இப்போதே சந்தித்தாக வேண்டும் என்று பிடிவாதம்
பிடிக்கின்றனர்," என்று மெய்காப்பாளர் ராஜாவிடம் தெரிவித்தார்.
அழைத்து வாருங்கள் என்று வரப்போகும் ஆபத்தை அறியாமல், ராஜ கம்பீரமாகச் சொன்னார். வீரசேணனும் அவனது நண்பனும் ராஜா முன் நிறுத்தப்பட்டனர்.

உடனே சற்றும் தாமதிக்காமல் வீரசேணன், " ராஜனே! நீதி நெறி தவறாது ஆட்சி நடத்தும் மகாராஜாவே! உன் புகழ் ஓங்குக!
நாட்டிய ஆசிரியருக்குப்பதிலாக என்னைத் தூக்கிலிடுங்கள் உங்களுக்குக்
கோடிப்புண்ணியம், " என்றான் வீரசேணன்.
உடனே சற்றும் தாமதிக்காமல் வீரசேணனின் நண்பன், " இல்லை மகாராஜா,
என்னைத்தான் நீங்கள் தூக்கிலிட வேண்டும்" என்றான்.

ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "பைத்தியமா பிடித்திருக்கிறது உங்களுக்கு?
தூக்கில் தொங்க நான், நீ என்று போட்டி போடுகிறீர்களே? சரியான மடையர்களாக இருக்கிறீர்களே! " என்றான் ராஜா.

வீரசேணனின் நண்பன், "எக்காரணம் கொண்டும் இவனைத் தூக்கில் போடாதீர்கள். என்னைத் தூக்கில் போடுங்கள்" என்றான் ராஜாவிடம். " ஆசையைப் பாரு, நீ ராஜா ஆயிடலாம்னு பாக்குறியா? நான் விடமாட்டேன். ராஜா, என்னைத் தூக்கிலிடுங்கள்" என்றான் வீரசேணன் அவசர,அவசரமாக.

ராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. " என்ன உளறுகிறீர்கள்? தூக்கிலிட்டால் ராஜா ஆகி விடுவீர்களா? புரியும்படி சொல்லாவிட்டால் இப்போதே உங்கள் இருவர் தலையையும் சீவிவிடுவேன்" என்றார் ராஜா.

"ராஜா! முக்காலமும் உணர்ந்த மாமுனிவரைச் சந்தித்தோம். அவர்தான் சொன்னார்.
ராஜாவின் கட்டளையால் யார் இந்த நேரத்தில் தூக்கிலிடப்பட்டு மரணமடைகிறாரோ, அவர் இந்த தேசத்துக்கு அடுத்த ராஜா! அதுமட்டுமல்ல, அந்த ராஜாவுக்கு சாவே கிடையாது, என்று சொன்னார். அதனால்தான் ராஜா ஆகும் ஆசையில் நாங்கள் எங்களைத் தூக்கிலிடும்படி கேட்டோம்" என்றான் வீரசேணன்.
வீரசேணனின் நண்பன் வேகமாக," முனிவர் என்னிடம்தான் முதலில் சொன்னார். எனவே, என்னைத்தான் தூக்கிலிட நீங்கள் கட்டளையிட வேண்டும்" என்றான்.

ராஜா கடகடவென சிரித்தான். "இதைக் கேட்டபின்னும் உங்களைத் தூக்கிலிட நான் என்ன முட்டாளா? தளபதியே நாட்டிய ஆசிரியருக்குப் பதிலாக
என்னைக் காலதாமதமின்றி தூக்கிலிடுங்கள். இது ராஜகட்டளை! உடனே நிறைவேறட்டும்"என்றான் முட்டாள் ராஜா.

ராஜாவின் விருப்பப்படியே ராஜா தூக்கிலிடப்பட்டான். முட்டாள் ராஜாவை சமயோசிதமாக தூக்கிலிட வைத்த வீரசேணனை
பொதுமக்கள் அந்த இடத்திலேயே ராஜாவாக்கினர். முட்டாள் ராஜா முட்டாள்தனமாகவே
ஒழிந்ததில் அந்தநாட்டு மக்கள் சந்தோஷமாகக் கொண்டாடினர்.