ஒரு ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். வசதிகள் பல இருந்தும் மன அமைதி இன்றி தவித்து வந்தார். அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்தித்து தன் மனக் குறையைச் சொன்னார். அந்த துறவி, “நாளை காலை பத்து லட்ச ரூபாய் பணத்துடன் என்னை வந்து பார். உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்” என்று கூறுகிறார்.
மறுநாள் பத்து லட்ச ரூபாயுடன் அந்த துறவியை பணக்காரர் சந்தித்தார். பணத்தை முனிவரிடம் கொடுத்துவிட்டு அவர் முன் அமர்ந்தார். பணக்காரரை அந்த முனிவர் கண்மூடி அமருமாறு கூறிவிட்டு பணப்பையுடன் அங்கிருந்து ஓடுகிறார்.
பணக்காரர், "ஐயோ! போலிச்சாமியாரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டோமே" என்று எண்ணி மனம் துடித்துப் போனார். அந்த பணக்காரர் அந்த முனிவரைத் துரத்தினார். முனிவரை பிடிக்க முடியவில்லை. இரண்டு, மூன்று தெருக்களில் ஓடி அலைந்து விட்டு வேறு வழி தெரியாமல் வெறுங்கையுடன் திரும்பினார்.
நொந்து போன மனதுடன் அந்த முனிவர் முதலில் உட்கார்ந்திருந்த இடத்திற்கே திரும்பி வந்தார். அங்கு அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அவரை ஏமாற்றி விட்டு ஓடிய அந்த முனிவர், அவருக்கு முன்னால் அங்கே திரும்பி வந்து உட்கார்ந்திருந்தார். பணக்காரர் அங்கே போனதும் அவரது பணப்பையை அவரிடம் திரும்ப ஒப்படைத்தார். இப்போது பணக்காரருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்ட்து. நிம்மதிப் பெருமூச்சு அவரிடம் இருந்து வந்தது.
இப்போது முனிவர் பணக்காரரிடம் கேள்வி கேட்கிறார்; “இந்தப் பணத்தை நீ என்னிடம் தருவதற்கு முன்னால் அது உன்னிடம் தான் இருந்தது. இப்போதும் அந்தப் பணம் உன்னிடம் தான் இருக்கிறது. இதே பணம் முதலில் உன்னிடம் இருக்கும்போது நீ மன நிம்மதி இல்லாமல் இருந்தாய். இப்போதும் அதே பணம் தான் உன்னிடம் இருக்கிறது. ஆனால் நீ மன மகிழ்ச்சியோடு இருக்கிறாய். உன்னுடைய இந்த மன மகிழ்ச்சிக்கு இந்தப் பணம் தான் காரணமென்றால், இந்தப் பணம் முதலில் உன்னிடம் இருக்கும்போதே இந்த மகிழ்ச்சியும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இருந்திருக்கவில்லை. இந்த மன மகிழ்ச்சி ஏற்கனவே உனக்குள் தான் எங்கேயோ இருந்திருக்க வேண்டும். உனக்குள்ளே இருந்த மன மகிழ்ச்சி ஏன் இவ்வளவு நேரமும் தெரியாமல் இருந்தது?” என்று கேட்டார்.
அப்போது தான் மகிழ்ச்சி என்பது பொருளில் இல்லை. நம் அகத்தில் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார்.